ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் படைப்புகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,177)

Written by London Swaminathan

Post No. 16,177

Date uploaded in London – 8 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இவருடைய 471 கீர்த்தனைகளை கர்னாடிக்.காம் வெளியிட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் கிளிக் செய்து படிக்கலாம்

https://www.karnatik.com/co1024.shtml

1

ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் எங்கு பிறந்தார்? எங்கு கற்றார் ?

2

இவர் எழுதிய நூலின் பெயர் என்ன ? அதில் என்ன எழுதியுள்ளார் ?

3

சங்கீத உலகத்துக்கு இவர் அளித்த கொடை என்ன ? இவருடைய புதிய இசைக் கண்டுபிடிப்புகள் என்ன ?

4

இவருக்கு ஆதரவளித்த மகாராஜாக்கள் யார் யார் ?

5

இவருக்கு பரிசாக அளித்த குட்டியானை என்ன செய்தது ?

6

திரைப்படத்தில் முத்தையா பாகவதரின் கீர்த்தனைகள் இடம்பெற்றதுண்டா ?

7

இவருக்கு டாக்டர் பட்டம் அளித்தது யார் ?

8

இவருடைய சீடர்கள் யார் ?

9

மைசூர் சாமுண்டீச்வரியுடன் மேல் பக்தி ஏற்பட்டு என்ன செய்தார் ?

10

இவரால் பாராட்டப்பட்ட இன்னொரு புகழ்பெற்ற இசைக்க கலைஞர் யார்?

********************

விடைகள்

1.ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் (நவம்பர் 15, 1877 – ஜூன் 30, 1945) புகழ்பெற்ற கருநாடக இசைக் கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஹரிகேசவ நல்லூரில் பிறந்தார். தந்தையின் பெயர் லிங்கம் அய்யர்; தாயாரின் பெயர் ஆனந்த வல்லி.திண்ணைப்பள்ளிக்கூடத்தில் பயின்ற இவருக்கு மாமா உறவுமுறையில் வந்த லட்சுமணசூரி பல சாஸ்த்திரங்களை சொல்லிக்கொடுத்து திருவையாறு முத்து கனபாடிகள் நடத்திவந்த வேத பாடசாலையில் சேர்த்தார் அங்கே  தியாகராஜர் சிஷ்ய பரம்பரையில் வந்த சாம்பசிவம் அய்யரிடம் இசையும் கற்றார் . மாமன் மகளான சிவகாமியை திருமணம் செய்தார். ஹரிகேசவநல்லூர் (அரிகேசவநல்லூர்), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில், அம்பாசமுத்திரம் வட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் கிராமம் ஆகும்.  இவர் தன் ஊரின் பெயரையே இவர், ‘ஹரிகேச’ (Harikesa) என்ற முத்திரையுடன்பயன்படுத்தினார் இவ்வூரில் இருக்கும் அரியநாதசுவாமி – பெரியநாயகி அம்பாள் விஸ்வநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவத்தலமாகும்.

***

2.இவர் எழுதிய நூலின் பெயர் ஸங்கீத கல்பத்ருமம் . நூல் முழுதையும் கேரள கவர்ட்மெ ண்டார் வெளியிட்டுள்ளனர் தமிழ் விக்கிப்பீடியாவின் அடிக்குறிப்பில் இந்த நூலின் பெயரை கிளிக் செய்தால் முழு நூலையும் படிக்கலாம் . அதன் முன்னுரையில் அவரே சொல்கிறார் : பதினைந்து ஸங்கீத நூல்களின் பெயரை எழுதிவிட்டு  அவைகளை பலமுறை ஆராய்ச்சி செய்து தற் கால ஸங்கீதத்துக்கு  வேண்டிய விஷ்யங்களைத் தமிழ்பாஷையில் எழுதியுள்ளேன்  . ஸங்கீதஉற்பத்தி ஸங்கீத மஹிமை என்ற தலைப்புகளில் துவங்கி வர்ணங்கள் கீர்த்தனங்கள், ஜாவளிகள், தில்லானா என்று 82 தலைப்புகளில் அரிய விஷயங்களை எழுதியுள்ளார். (முதலில் அவர் குறிப்பிட்ட 15 நூல்களின் பெயரைப் படிக்கும்போதே சங்கீத விற்பன்னர்களுக்கு வியப்பு மேலிடும்; இத்தனை நூல்களா ? அவைகளைக் கேட்டதும் பார்த்தும் இல்லையே! என்று கவலை வேண்டாம்; அவைகளின் சாரத்தை நமக்கு பாகவதர் கொடுத்துவிட்டார் அதை இலவசமாகவம் கேரள கவர்மெண்டார் 1977 ஆம் ஆண்டில் நமக்கு அளித்துவிட்டனர்.

***

3.சுமார் 470-க்கும் மேற்பட்ட புதிய கீர்த்தனைகள் மற்றும் இசை வடிவங்களை இயற்றினார்.நிரோஷ்டா(உதடு ஒட்டாத ) போன்ற புதிய ராகங்களை இசையுலகிற்கு வழங்கினார்.ஹரிகதா காலட்சேபம் செய்வதில் வல்லவர் என்பதால் ‘ஹரிகதா சக்ரவர்த்தி’ என அழைக்கப்பட்டார்.வானொலிக்கான சிக்னல் ட்யூன் (Signature Tune) உருவாக்கத்தில் உதவினார். முருக பக்தர் ஆனதால் ஹரிகேசவ நல்லூரில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி உற்சவத்தை நடத்தினார் ; வள்ளி நாயகனே என்ற கீர்த்தனையை இயற்றறி னார் ; இவர் பாடிய ஹிமகிரிதனயே ஹேமலதே என்ற கீர்த்தனையை பலரும் பாடிப் பிரபலம் அடைந்தனர் ; மதுரை மணி அய்யர் பாடிய இங்க்லிஷ் நோட்டுகள் இவர் உருவாக்கியவையே. பசுபதிப்பிரியா புதமனோகரி நிரோஷ்ட்டா முதலிய ராகங்களை உருவாக்கினார். மராட்டி மொழி உள்பட ஏழு மொழிகளில் கீர்த்தனைகளை இயற்றினார். இவரது தியாகராஜ ராமாயணம்,  வள்ளி பரிணயம் என்ற ஹரிகதையை எல்லோரும் கேட்டு மகிழ்ந்தனர். சித்தி விநாயகம் கீர்த்தனை புவனேஸ்வரியா  கீர்த்தனை ஆகிய இரண்டும் மோகன கல்யாணி ராகத்தில் அமைந்தவை. 20 புதிய ராகங்களை உருவாக்கிருக்கிறார்.

முத்தையா பாகவதர் முத்திரை பாடலின் இறுதியில் ‘ஹரிகேஷ’ என்று வரும்.

இவருடைய 471 கீர்த்தனைகளை கர்னாடிக்.காம் வெளியிட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் கிளிக் செய்து படிக்கலாம்

https://www.karnatik.com/co1024.shtml

***

4.எட்டையபுரம் ஜமீன்தார் , திருவாங்கூர் மஹாராஜா பலராம வர்மா, சுவாதித்திருநாள் மஹாராஜா ,மைசூர் மஹாராஜா கிருஷ்ணராஜ உடையார் முதலியோரின் பேராதரவைப் பெற்றார் .

***

5.மைசூர் மஹாராஜா இவரு டைய கீர்த்தனைகளைக்கேட்டு மனம் மகிழ்ந்து ஒரு குட்டி யானையைப் பரிசளித்தார் ; அது இவருடைய சங்கீதக் கருவிகளை பதம் பார்த்தது! உடைத்துத் தள்ளியது . பாகவதரும் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்ற பழமொழிக்கு ஏற்ப யானையைத் திருப்பி அனுப்பிவிட்டார் அங்கே ஆஸ்த்தான வித்வானாக இருந்த காலத்தில் இது நடந்தது.

***

6. முத்தையா பாகவதர் 1934-ஆம் ஆண்டு வெளியான ‘சங்கீத லவகுசா’ (Sangeetha Lavakusa) என்ற தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைத்து, மொத்தம் 63 பாடல்களைப் பதிவு செய்தார். 

 அடுத்த ஆண்டு, பாகவதர் இசையில், ‘ராதா கல்யாணம்’ வந்தது..ஹம்சானந்தி ராகம், அப்போது பிரபலம் ஆகாத காலம். பஞ்சமம் இல்லாத ராகம். பாடுவது கஷ்டம். இரண்டு மூன்று சங்கதிகளை அடுக்கியிருந்தார் பாகவதர்.கேமராவின் முன்னே நின்று, பாடி நடிக்க வேண்டிய காலம் என்பதால், பாடும்போது நடிகர் முகம் கோணக் கூடாது. 15 நாட்கள் ஒத்திகை நடந்தது. ஒரே ‘டேக்’கில் பாட்டும் காட்சியும் பதிவாகின. பாடி நடித்த எஸ்.ராஜத்திற்கு, தன்னுடைய பரிசாக, தங்க மெடல் அளித்தார், பாகவதர்.பாகவதரின், புவனேஸ்வரியா, சாரஸமுகி போன்ற பல பாடல்கள், கர்நாடக இசை மேடைகளில், இன்று அழகாக ஒலிக்கின்றன. ‘ஆண்டவன் தெரிசனமே’ என்று எஸ்.ஜி.கிட்டப்பாவிற்காக, பாகவதர் அமைத்த பாடலைத் தான், சில வரி மாற்றங்களுடன், ‘அகத்தியர்’ படத்தில், டி.ஆர். மகாலிங்கம் இசைத்தார்.

***

7.திருவாங்கூர் சர்வகலாசாலை இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது . கர்நாடக சங்கீதத்தில் முதல் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்தான்.

***

8..மதுரையில் இவர் இசைப்பள்ளியைத் துவக்கி சங்கர சேர்வையை முதல்வர் ஆக்கினார். மதுரை மணி அய்யர், டி என்,. சேஷ கோபாலன் முதலிய பல இசைக்கலைஞர்கள் அங்கே சங்கீதம் பயின்றனர் . கே ஏ ஸ்ரீனிவாசன் , அவருடைய சீடர்களில் ஒருவர் ; மாயா பஜார் மாயா மச்சேந்திரா திரைப்படங்களில் சீனிவாசன் நடித்துள்ளார் .

***

9.மைசூர் மகாராஜா இவரிடம் “ சாகித்தியங்கள் செய்வதில் நீர் சமர்த்தரானால் ஒரே இரவிற்குள் நூறு கீர்த்தனைகள் செய்து காட்டும்” எனக்கேட்க, அம்பாள் அருளால் அவற்றை பாடி முடித்தார். அவையே “சாமுண்டாம்பா அஷ்டோத்ர கீர்த்தனைகள்”.

இதைக்கண்ட மகாராஜா இவருக்கு “காயகசிகாமணி” எனும் பட்டத்தை வழங்கினார். சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச் சென்று மனம் உருகி பல கீர்த்தனைகளைப்  பாடுவார் ; ஒரு சமயம் மைசூர் மஹாராஜா உடல் நலம் குன்றியதை அறிந்து சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து கீர்த்தனைகளை இசைத்தவுடன் மஹாராஜா குணம் அடைந்தார்.

***

10.பாகவதரின் துவக்க காலத்தில் இசைத்தட்டுகளை வெளியிட்டு வந்தார்; அதில் ஒரு கீர்த்தனை எவரளி என்பதாகும் . எதேச்சையாக பிறர் பாடியதையும் கேட்டுக்கொண்டிருந்த போது, இவரைவிட அதே கீர்த்தனையை இன்னும் ஒருவர் அழகாகப் பாடியதைக்கேட்டு வியந்தார்; அத்தோடு நில்லாமல் அதனது இசைத்தட்டினை  வெளியிட வேண்டாம் என்று அந்தக் கம்பெனிக்கும் தகவலனுப்பிவிட்டு எவரளி கீர்த்தனையை அற்புதமாகப் பாடிய கலைஞரைச் சந்தித்து பாராட்டும் தெரிவித்தார்; அப்படி பாராட்டுப்பெற்ற இசைக் கலைஞர் புகழ் பெற்ற எஸ்.ஜி கிட்டப்பா ஆவார் 

.

–subham—

Tags- ஹரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதர், படைப்புகள், 10 கேள்விகள், பாடல்கள் , கீர்த்தனைகள்

Leave a comment

Leave a comment