சதாசிவ பிரம்மேந்திராள் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,185)

Written by London Swaminathan

Post No. 16,185

Date uploaded in London – 10 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

சதாசிவ பிரம்மேந்திராள் எங்கு பிறந்தார் ? அவருடைய தாய் தந்தையர் யார் ?

2

அவர் பாடிய புகழ்பெற்ற கீர்த்தனைகள் என்ன ?

3

அவர் எத்தனை கீர்த்தனைகளை பாடினார்? அவர் பாட்டிலுள்ள முத்திரை என்ன ?

4

திருவிசை நல்லூரில் ஒரு வீட்டின் கிணற்றில் கங்கை நதி பொங்கி தெருவெல்லாம் ஓடியபோது அவர் என்ன பாடினார் ?

5

அவர் எழுதிய நூல்கள் யாவை ?

6

சதாசிவ பிரம்மேந்திராளுடைய எல்லா கீர்த்தனைகளும் எங்கே கிடைக்கும் ?

7

அவருடைய எந்த நூலினை நாம் மேலும் ஆராய வேண்டும் என்று நமக்கு காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) கட்டளையிட்டுள்ளார் ?

8

அவருடைய சமாதிகள் எங்கெங்கு இருக்கின்றன?

9

அவர் பாடத்துவங்கிய சம்பவம் எது ?

10

முஸ்லீம் பக்தருக்கு அவர் சொன்ன உபதேசத்தின் பொருள் என்ன ?

****

விடைகள்

1. சதாசிவ பிரம்மேந்திராள் மதுரையில் பிறந்தார் மதுரையில் பிறந்த அவருக்கு தாய் தந்தையர் இட்ட பெயர் சிவராமகிருஷ்ணன் . செல்லப்  பெயர் பிச்சுக்குப்பன் ;

தாயார் பெயர் — பார்வதி,  தந்தை பெயர் – சோமநாத யோகி. அவருடைய குரு- காஞ்சி காமகோடி பீடம் 57-ஆவது பீடாதிபதி ஸ்ரீ பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகள். மைசூர் மஹாராஜாவிடம் வித்வானாக வேலை பார்த்தார் .புதுக்கோட்டை மகாராஜாவுக்கு மண்ணில் மந்திரம் எழுதிக் கொடுக்கவே அதை அவரும், பின்னர் அவரது வாரிசுகளும் பேழையில் வைத்து பூஜித்து வருகின்றனர்.

***

2.சதாசிவ பீரம்மேந்திராளின் சம்ஸ்கிருதப் பாடல்கள் மிகவும் சுருக்கமானவை. ஆனால் ஆழ்ந்த கருத்துள்ள அற்புத ரத்தினங்கள்!! கர்நாடக இசைக் கச்சேரிகளில் பெரும்பாலும் இவரது கீர்த்தனைகள் இடம்பெறும். சிந்தா நாஸ்தி கில, மானச சஞ்சரரே, க்ரீடதி வனமாலி, ப்ரூஹி முகுந்தேகி, கேளதி மமஹ்ருதயே, காயதி வனமாலி, பஜரே கோபாலம், பஜரே யதுநாதம், பிபரே ராமரசம் முதலிய பாடல்கள் நினைவில் நிற்கும் பாடல்களாகும். மஹாசக்தி மாரியம்மன் என்ற திரைப்படத்தில் இவரது வாழ்க்கை காட்டப்படுகிறது. பாலகுமாரன் எழுதிய ‘தோழன்’ என்ற நாவல் இவரது வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்டது.

பஜரே கோபாலம், மானஸ…………..

ஸ்மர வாரம் வாரம் சேதஹ…………….

ப்ரூஹி முகுந்தேதி ரஸனே……………..

மானஸ ஸஞ்சரரே ப்ரஹ்மணி………….

க்ரீடதி வனமாலி கோஷ்டே………….

பஜரே யதுநாதம் மானஸ…………..

ப்ரதிவாரம் மானஸ…………..

பிபரே ராம ரஸம்…………………

சிந்தா நாஸ்திகில தேஷாம்…………………..

ஸர்வம் ப்ரஹ்ம மயம் ரே ரே

காயதி வனமாலி மதுரம்………………..

பஜரே  யது நாதம்,  பஜரே ரகு வீரம்

***

3. சதாசிவ பிரம்மேந்திராள் 23 கீர்த்தனைகளை இயற்றினார்; அவருடைய முத்திரை பரமஹம்ச. மிகவும் சுருக்கமானவை இனிமையும் அர்த்த புஷ்டியும் நிறைந்தவை; எல்லாம் சம்ஸ்க்ருதத்தில் உள்ளவை. புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் அனைவரும் பாடியுள்ளனர்.

***

4.திருவிசை நல்லூரில் ‘அமாவாசை கிணறு புகழ்’ ஸ்ரீதர ஐயாவாள் இவருடைய கிளாஸ்மேட்Classmate . கிணற்றில் தோன்றிய கங்கையைப் பார்த்து ஆனந்தம் எய்திய சதாசிவர் , துங்கதரங்கே கங்கே ஜெய துங்கதரங்கே கங்கே  என்ற பாடலைப் பாடினார்.

***

5. சதாசிவ பிரம்மேந்திராள் எழுதிய நூல்கள்

தக்ஷிணாமூர்த்தி தியான ஸ்தோத்திரம், நவமணி மாலா, ஸ்வப்னோ திதம், அத்வைத ரஸ மஞ்சரி, அத்வைத தாராவளி, சிவாநுபூதி, ப்ராகாஷிகா, ஆத்மானு சந்தானம், பிரணவ சஹஸ்ர நாமாவளி ,ஆத்ம வித்யா விலாசம்,மநோ நியமனம் மற்றும் சில நூல்கள் .

***

6.கர்னாடிக். காம் சைட்டில் ஒரே கிளிக்கில் அதனை பாடல்களையும் இலவசமாகப் பெறலாம்.

https://www.karnatik.com/co1045.shtml

***

7.குருரத்தினமாலிகை (Guru Ratna Malika) என்பது புகழ்பெற்ற அத்வைத ஞானியான ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரரால் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட ஒரு முக்கியமான வரலாற்று மற்றும் ஆன்மீக நூலாகும். இந்த நூல் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சாரியர்களின் வரலாற்றையும், அவர்களின் குரு பரம்பரை வரிசையையும் விரிவாக விளக்குகிறது.  சதாசிவ பிரமேந்திரர் தனது குருநாதரான ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதியின் மீது கொண்ட பக்தியினால் இந்நூலை 87 ஸ்லோகங்களில் அமைத்துள்ளார். இதில் காஞ்சி பீடத்தின் ஆச்சாரியர்கள் மட்டுமன்றி, அந்தந்த காலகட்டங்களில் பாரத நாட்டை ஆண்ட மன்னர்கள் மற்றும் அவர்களின் அரசவைகளில் இருந்த புலவர்கள், கவிகள் பற்றிய வரலாற்றுத் தகவல்களும் விவரிக்கப்பட்டுள்ளன.ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரரின் சக-சீடரும், காஞ்சி பீடத்தின் ஆச்சாரியராக விளங்கியவருமான ஸ்ரீ ஆத்மபோதேந்திர சரஸ்வதி கொடுத்த தூண்டுதலின் பேரில் தான் பிரமேந்திரர் இந்நூலை இயற்றினார். பிற்காலத்தில், இந்த குருரத்தினமாலிகை நூலுக்கு ஆத்மபோதேந்திரரே ‘சுஷமா’ (Sushama) என்ற பெயரில் மிக விரிவானதொரு விளக்கவுரையையும் எழுதியுள்ளார் இந்த நூலை ஆராய்ந்து வெளியிட வேண்டியது மடத்தின் சீடர்களின் பொறுப்பாகும்.

***

8.நெரூரில் உள்ள அவருடைய சமாதி மிகவும் புகழ்பெற்றது அதற்கு காஞ்சி சிருங்கேரி சங்கராசார்யார்களா விஜயம் செய்துள்ளனர் ; காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அங்கே  பத்து நாட்கள் தங்கி தியானம் செய்தார் ; மிகவும் சக்தி வாய்ந்த சமாதி . மானாமதுரை, பாகிஸ்தானிலுள்ள கராச்சியிலும் நர்மதா நதியின் கரையிலுள்ள ஒம்மகாரிலும், காசியிலும் இவர் சமாதி அடைந்ததாகச் சொல்லுவார்கள் .மானாமதுரையிலும் நெரூர் போல சமாதி இருக்கிறது . ஒரே நேரத்தில் பல இடங்களில் வாழ்ந்து அற்புதம் நடத்திய சித்தர் அவர்.

***

9.எங்கள் ‘சைட்’டின் வாசகர் ஆர் நஞ்சப்பா எழுதிய தகவல்:

ப்ரஹ்மேந்திரரின் கீர்த்தனைகள் அத்வைத ஞானத்துடன் தெய்வ பக்தியையும் போற்றுவதாக இருக்கும். இவை சம்ப்ரதாய பஜனைகளில் தவராமல் இடம்பெறும். இவற்றில் சாமா ராகத்தில் அமைந்த “மானஸ சஞ்சரரே” பாடலும் சுருட்டி ராகத்தில் அமைந்த “ப்ருஹி முகுந்தேதி” பாடலும் மிகவும் ப்ரசித்தமானவை. ( இதை குறிஞ்சி ராகம் என்பவர்களும் உண்டு). இந்தப்பாடல் “சாவித்ரி” திரைப்படத்தில் எம்.எஸ். ஸுப்புலக்ஷ்மி பாடி மிகவும் பிரபலமானது. ( நாரதர் பாடுவதாக வரும்)

இந்தப் பாடலின் பின் ஒரு ரசமான நிகழ்ச்சியைச் சொல்வார்கள். பாடசாலையில் படிக்கும் நாட்களில் சதாசிவப் ப்ரம்மேந்திரர் சிவராமக்ருஷ்ணன் என்ற பெயர் தாங்கியிருந்தார். ஸ்ரீதர ஐயாவாள் எனப் புகழ்பெற்ற பெரியவரும் இவருடன் படித்தவரே. சிவராமக்ருஷ்ணனுக்கு தர்க்கத்தில் அதிக ஈடுபாடு, குருவின் இடத்திற்கு வருபவர்களையெல்லாம் தர்க்க வாதத்திற்கு இழுத்து பேசிக்கொண்டே இருப்பார். ஒரு நாள் குரு சற்றுப் பொறுமை இழந்து , ‘சிவராம க்ருஷ்ணா, நீ பேசமலே இருக்கமாட்டாயா’ என்றாராம். இந்த வார்த்தைகள் சட்டென்று உறைத்தன, அன்றிலிருந்து மௌனம் பூண்டார். பிறகு வித்யாப்பியாசம் எல்லாம் முடிந்து துறவியாகிச் சஞ்சரித்துவந்தார். ஒருமுறை சொந்த வூருருக்கு வந்தார். அங்கு பழைய சகபாடி ஸ்ரீதர ஐயாவாளையும் சந்தித்தார், ஆனால் ஏதும் பேசவில்லை. ” உன்னை வீண்பேச்சு பேசவேண்டாம் என்றுதானே குரு சொன்னார், நீ ஏன் தெய்வவிஷயமாகப் பேசக்கூடாது, அதை யார் தடைசெய்தது” என்று ஐயாவாள் கேட்டாராம். இதன் நியாயத்தை உணர்ந்த சதாசிவர் உடனே “ப்ரூஹி முகுந்தேதிரசனே ப்ரூஹி முகுந்தேதி” [ முகுந்தனே என்று சொல்,

நாவேமுகுந்தனே என்று சொல்” எனத் தொடங்கிப்பாடினார். பின்னர் வேறு பல கீர்த்தனங்களையும் பாடினார். பரம ஞானியின் அனுபவத்தில் எழுந்த கீர்த்தனைகளாதலால் இவை விசேஷ சக்தியுடன் அமைந்திருக்கின்றன.பாடுபவர்களுக்கும் ஶ்ரேயஸ், கேட்பவர்களுக்கும் ஆனந்தம்.

ஸ்ரீ ப்ரஹ்மேந்த்ரர் இயற்றிய சிவ மானஸிக பூஜா கீர்த்தனங்களும் ஆத்ம வித்யா விலாசம் என்னும் 65 ஶ்லோகங்கள் கொண்ட சிறு நூலும் ஆஸ்திகர்களிடையே மிகவும் செல்வாக்கு பெற்றவை, இவற்றை 1958ம் வருஷம் காஞ்சி மடத்தில் ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம் வெளியிட்டது. பின்னர் பிற பதிப்புக்கள் பற்றித் தெரியவில்லை. சம்ஸ்க்ருதத்தில் இருப்பதாலும் சில க்ரந்த அக்ஷரங்களைக் கொண்டிருப்பதாலும் இவற்றைப் புரிந்துகொள்ள சரியான விளக்கம் தேவைப்படுகிறது. ஆனால் இவருடைய கீர்த்தனங்கள் எளியவையே. பக்தியும் ஞானமும் சங்கமித்தவை.

***

10. சதாசிவ பிரம்மேந்திராள் அவதூதர் என்னும் நிர்வாண சாமியார் அணியைச் சேர்ந்த சித்தர்; ஒரு முறை பெண்களுடன் இருந்த ஒரு முஸ்லீம் படைத் தலைவரின்  கூடாரத்தில் நுழைந்தவுடன் அவன் ஆத்திரப்பட்டு கையை வாளை வாளால் வெட்டினான்; இவர் ஒன்றுமே நடவாதது போல சாதாரணமாகக் நடந்து சென்றார்; பின்னர் இவருடைய மஹிமையை உணர்ந்து அவன் அடிபணிந்தான். அவரை அந்த முஸ்லீம் தொடர்ந்து வரலானான் நெடுநாட்களுக்குப் பின் இவனைக் கண்ட யோகியர் பின்பற்றக் காரணம் வினவ, நடந்தது அறிவித்துப் பிழைபொறுக்க வேண்ட, மற்றொரு கரத்தால், அக்கையைத் தடவ அக்கை வளர்ந்தது. மகமதியன் அருள் பெற்று நீங்கினன்.பிரம்மேந்திராளுக்கு முஸ்லீம் சீடர்களும் உண்டு ; அவர்களில் புகழ்பெற்றவர்கள் இரட்டை மஸ்தான்கள் ; அவர்களுடைய சமாதி தஞ்சாவூரில் உள்ளது.

பரமஹம்ச யோகானந்தா மற்றொரு விஷயத்தைக் கூறுகிறார். இவரைப் பின் தொடர்ந்த முஸ்லீம் , இவரது சீடராகி, உபதேசம் செய்யுமாறு வேண்ட, ‘’ நீ உனக்கு வேண்டுவதைச் செய்யாதே, அதற்குப் பின்னால் நீ விரும்புவதைச் செய்யலாம்’’ என்றாராம். (அதாவது மனம்போன போக்கில் போக வேண்டாம்; சுய கட்டுப்பாடு வந்துவிட்டால் பின்னர் நம்முடைய செயல்கள் நம்மைப் பாதிக்காது என்று அர்த்தம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த உபதேசம் ஒரு விடுகதை போன்றது. ஆழமான அர்த்தமுடையது(“Do not do what you want, and then you may do what you like”).

-subham—

Tags-சதாசிவ பிரம்மேந்திராள், பாடல், 10 கேள்விகள். கீர்த்தனைகள் , நெரூர் சமாதி, அவதூத சந்நியாசி

Leave a comment

Leave a comment