வேலூருக்கு பெயர் வந்தது எப்படி? சங்க இலக்கியம் தரும் அற்புதத் தகவல் (Post No.16,184)

Written by London Swaminathan

Post No. 16,184

Date uploaded in London – 10 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சங்க கால இலக்கியமான சிறுபாணாற்றுப்படையில், நல்லியக்கோடன் என்ற மன்னன் தன் பகைவர்கள் மீது குளத்திலிருந்த மலரைப் பறித்து எறிய, அது வேலாக மாறி பகைவர்களை வென்றது என்றும், இதனால் இவ்வூர் ‘வேலூர்’ எனப் பெயர் பெற்றது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

விடர் கால் அருவி வியன் மலை மூழ்கிச்   170

சுடர் கால் மாறிய செவ்வி நோக்கித்

திறல் வேல் நுதியின் பூத்த கேணி

விறல் வேல் வென்றி வேலூர் எய்தின், (170-173)-சிறுபாணாற்றுப்படை

உ வே சாமிநாதைய்யர் வெளியிட்ட பத்துப்பாட்டுமூலமும் நச்சினார்க்கினியருரையும்   என்ற நூலில் பக்கம் 166  இல் இந்தச் செய்தி காணப்படுகிறது:

திறல்வேல் நுதி யின் கேணிபூத்த விறல்வேல் வென்றி வேலூரெய்தின் = முருகன் கையில் வலியினை யுடைத்தாகிய  வேலின் நுதி போல பூக்கப்பட்ட  வெற்றியுடைய வேலாலே  வெற்றியுடைய வேலூரைச் சேரின் 

என்றது : நல்லியக்கோடன் தன் பகைமிகுதிக்கு அஞ்சி  முருகனை வழிபட்ட வழி அவன் இக்கேணியிற் பூவை வாங்கிப் பகைவரை  எறியென்று  கனவிற் கூறி அதில் பூவைத்து தன் வேலாக நிருமித்ததொரு  கதை கூறிற்று . இதனானே வேலூரென்று பெயராயிற்று” .

கனவு பற்றிய இந்துக்களின் நம்பிக்கை மேலை நாட்டு உளவியில் நிபுணர்களின் கருத்துக்கு மிகவும் மாறு பட்டுள்ளது . மகாபாரத, ராமாயண இதிஹாசம் முதல் அதற்குப் பின்னர் வந்த சமண, புத்த மத இலக்கியங்கள் வரை, தேவார, திருவாசக, பெரிய புராண, திருவிளையாடல் புராணங்கள் வரை பெரியோர்கள் கண்ட கனவுகள்  ஆயிரம் ஆயிரம் ஆகும் .

மனிதன் கனவுகளைக் காணாமல் தூங்க முடியாதென்று தற்கால விஞ்ஞானக் கட்டுரைகளில் காண்கிறோம் ; இதை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் அறிந்ததால் எல்லா துதிகள் பலச்ருதியிலும் கெட்ட கனவுகள்/ துஸ் ஸ்வப்னம்   வரக்கூடாது  என்று வேண்டியதைக் காணலாம் ; அதிலும் குறிப்பாக பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் செய்யும் சந்தியாவந்தனத்தில், கடைசி மந்திரம் கெட்ட கனவுகளை அழிக்கும் மந்திரமாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இறந்தவர்கள் வாழும் நிலையும் பேசும் முறையும் என்ற நூலினை எழுதிய மதுரை திருஞான சம்பந்தர் மடத்தின் ஆதீன கர்த்தர், இறந்தவர்கள் கனவில் வந்து, வரப்போகும் ஆபத்துக்களை எச்சரித்து,  காப்பாற்றிய நிகழ்ச்சிகளின் பட்டியலையும் கொடுத்துள்ளார் . நான் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் அடிக்கடி சந்தித்த பழைய ஆதீனகர்த்தர் இவர் ; பேரறிஞர்; சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் மடத்தின் தலைமைப் பொறுப்பை வகித்தவர் ; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்.

–subham-

Tags- வேலூர்,  பெயர் வந்தது எப்படி? சங்க இலக்கியம், அற்புதத் தகவல், கனவில் முருகன், நல்லியக்கோடன் , சிறுபாணாற்றுப்படை

Leave a comment

Leave a comment