மகாகவியின் கவித்திறம்! (Post No.16,186)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,186

Date uploaded in London – 11 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

செப்டம்பர் 11 – மகாகவி பாரதியார் நினைவு தினம்!

மகாகவியின் கவித்திறம்!

ச. நாகராஜன்

மகாகவி பாரதியாரின் கவித்திறத்தை எப்படி வியந்து சொல்வது?

இதற்கு அவரே தன்னை எப்படிப் பாராட்டிக் கூறியுள்ளனர் என்று ஒரு கவிதையில் கூறி விடுகிறார்.

பிரான்ஸ் என்னும் நாட்டைச் சேர்ந்த உயர் புலவோரும் பிற ஆங்கில கவியரசர் தாமும் கூறுவதை அப்படியே அவர் எட்டயபுரம் மஹாராவுக்கு எழுதி அனுப்பிய சீட்டுக் கவியில் கூறி விடுகிறார்:

“சுவை புதிது, நயம் புதிது, வளம் புதிது

  சொற்புதிது ஜோதி கொண்ட

நவகவிதை எந்நாளும் அழியாத

   மஹாகவிதை”

இதற்கு மேல் அவரது கவித்திறத்தை நயம்பட எப்படிக் கூற முடியும்!

சங்க காலத் தமிழ் புலவர்தம் ஆற்றலும், மேற்கில் உயர் ஆங்கிலக் கவிஞர் தம் திறமும், வெவ்வேறு மொழியில் கவிதை இயற்றிய பாரதக் கவிஞர்களின் நுணுக்கங்களையும் திறன்களையும் ஒருங்கே சேர்த்து காலத்திற்கேற்ப புதுப் பாடல்களை தமிழில் பாடி புதுமை படைத்த மகாகவி அவர்.

தெய்வீக திரௌபதியை அவன் வர்ணிக்கும் அழகே அழகு!

“புகழ்ப் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை

ஆவியில் இனியவளை – உயிர்த்

தணி சுமந்து உலவிடு செய்யமுதை

ஓவியம் நிகர்த்தவளை – அருள்

ஒளியினைக் கற்பனைக்கு உயிரதனைத்

தேவியை, நிலத்திருவை – எங்குத்

தேடினும் கிடைப்பருந் திரவியத்தை

படிமிசை யிசையுறவே – நடை

பயின்றிடுந் தெய்விக மலர்க்கொடியைக்

கடிகமழ் மின்னுருவை – ஒரு

கமனியக் கனவினைக் காதலினை

வடிவுறு பேரழகை – இன்ப

வளத்தினை” –“

இது தான் பாரதியின் தெய்விக திரௌபதி!

கண்ணனை அவன் காணும் பாங்கே தனி.

பாகவதத்தை மீறி, நாலாயிர திவ்யபிரபந்தத்தை மீறி அவன் கண்ணனைப் புகழும் அழகே அழகு!

கண்ணனின் செயல்திறத்தை அவன் வர்ணிக்கிறான்:-

“சக்கரத்தை எடுப்பது ஒரு கணம்;

தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்;

இக்கணத்தில் இடைக் கணம் ஒன்றுண்டோ

இதன் உள்ளே பகை மாய்த்திட வல்லான்காண்!”

பகவத் கீதையின் எழுநூறு ஸ்லோகங்களையும் வில்லிப்புத்தூரார் தனது வில்லி பாரதத்தில் ஆறு பாடல்களில் சுருக்கி அனைவரையும் வியக்க வைத்தார். ஆனால் பாரதியோ பகவத் கீதையை இரண்டே அடிகளில் சுருக்கிப் பாடி பிரமிக்க வைக்கிறான்”

பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்

பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்.

அவ்வளவு தான்! பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் மூன்றையும்  எட்டே சொற்களில் அடக்கி விட்டான்!

“வேண்டிய கொடுத்திடுவான்; – அவை

விரும்புமுன் கொடுத்திட விரைந்திடுவான்

ஆண்டருள் புரிந்திடுவான்; – அண்ணன்

அருச்சனன் போல் எனை ஆக்கிடுவான்”

அர்ஜுனன் தம்பிகளாக மாற ஆசைப்படுவோர் கண்ணன் என்னும் அருள் தாயை உரிமையுடன் வேண்டலாம்! – இதுவே பாரதியின் பார்வை!

பாரதியின் உவமைகள் எல்லையற்ற பரவசத்தை கணம்தோறும் உருவாக்கும் அற்புத உவமைகளாகும். இவற்றை வேறெந்த இலக்கியத்திலும் காண முடியாது.

சுட்டும் விழிச்சுடர் தான் – சூரிய சந்திரரோ

வட்டக் கரியவிழி – வானக் கருமை கொல்லோ?

பட்டுக் கருநீலப் – புடவை பதித்த நல் வயிரம்

நட்ட நடுநிசியில் – தெரியும் நட்சத்திரங்களடீ

சோலை மலர் ஒளி – சுந்தரப் புன்னகை!

நீலக் கடல் அலையே – நெஞ்சின் அலைகள்!

கோலக் குயிலோசை – குரல் இனிமை

இப்படி ஒரு வர்ணணையை எளிய சொற்களில் பாரதியிடம் மட்டுமே பார்க்க முடியும்!

“பெண்டிர் தமக்கெல்லாம் கண்ணன் பேச அருந்தெய்வமடீ” என்று உறுதி கூறும் பாரதி, அவன் தரும் குங்குமத்தை குழைத்து மார்பெழுத, மங்களம் ஆகுமடீ – பின்னோர் வருத்தம் இல்லையடீ என்று முடிக்கிறான்.

தேசபக்திப் பாடல்கள், தமிழைப் போற்றும் பாடல்கள், தெய்வபக்திப் பாடல்கள், வாழ்க்கை நடைமுறைப் பாடல்கள், பெண்ணுரிமைப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், இயற்கை அழகுப் பாடல்கள், காவியப் பாடல்கள், வேதாந்தப் பாடல்கள் என பாரதி தொடாத துறை இல்லை; வியக்க வைக்காத முறை இல்லை!

பாரதியைப் பயில்வோம்; ஊக்கம் கொள்வோம்; உயர்வோம்!

***

Leave a comment

Leave a comment