

Written by London Swaminathan
Post No. 16,187
Date uploaded in London – 11 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செப்டம்பர் 11 பாரதி நினைவு தினம்
பாரதியார் (1882-1921)

வள்ளுவர், இளங்கோ, கம்பன் ஆகியோரைப் பாரதியார் பாடியதை பெரும்பாலோர் அறிவார்கள். ஆனால் அவர் வள்ளுவரின் மனைவி , ராமரின் மனைவி, வசிட்டரின் மனைவி, கண்ணம்மா, பாண்டவர்களின் மனைவி ஆகியோரைப் பாராட்டிப் பாடியதை பலரும் அறியார்; அத்தோடு விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவி பற்றி அவர் பாடியதையும் எத்தனை பேர் அறிவார்கள்? கண்ணம்மா என்ற தலைப்பில் ஏழு பாடல்களை பாடினார் அவற்றில் பல திரைப்படங்களில் வந்தன.
சுருக்கமாகக் காண்போம்.
1
அவ்வையார் பற்றி இரண்டு பாடல்கள்:-
மனைவியும் தெய்வமே !
பெண் விடுதலை
பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
பிறப்பித்தேன்; அதற்குரிய பெற்றி கேளீர்!
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்,
மனையாளும் தெய்வமன்றோ? மதிகெட் டீரே!
விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்,
விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர்,
பெண்ணுக்கு விடுதலைநீரில்லை யென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை. 45
தாய் மாண்பு
பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்
பெண்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?
கண்டார்க்கு நகைப் பென்னும் உலக வாழ்க்கை
காதலெனும் கதையினுடைக் குழப்ப மன்றோ?
உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவளென் றறியீரோ? உணர்ச்சி கெட்டீர்!
பண்டாய்ச்சி ஒளவை: — “அன்னையும் பிதாவும்”
பாரிடை “முன்னறிதெய்வம்” என்றாள் அன்றோ? 46
தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ?
தாய்பெண்ணே யல்லளோ? தமக்கை, தங்கை
வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?
மனைவியொருத் தியையடிமைப் படுத்தவேண்டித்
தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?– பாரதி அறுபத்தாறு
****
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். —பாரத தேசம் – பாரதியார் பாடல்
****

2
அருந்ததி பற்றி இரண்டு பாடல்கள்:–
ராமன் மனைவி வசிட்டன் மனைவி – பாரதி பாடல்
பாரதி சுய சரிதை கவிதையில் ஆயிரம் ஆண்டு தவம் செய்தாலும் அருந்ததி, வாசுகி, சீதா தேவி போன்ற பெண்ணரசிகள் கிடைப்பது அரிது என்கிறார்
வசிட்டருக்கும் இராமருக்கும் பின்னொரு
வள்ளு வர்க்கும்முன் வாய்த்திட்ட மாதர்போல்
பசித்தொ ராயிரம் ஆண்டு தவஞ்செய்து
பார்க்கி நும்பெறல் சால வரிதுகாண்.
(வசிஷ்ட மஹரிஷியின் மனைவி-அருந்ததி ; ராமரின் மனைவி- சீதா தேவி; வல்லஉவரின் மனைவி- வாசுகி )
***
3

பாஞ்சாலி சபதத்தில் சபையில் திரெளபதி நீதி கேட்டழுதல் என்ற தலைப்பிலுள்ள கண்ணியில்
விம்மியழுதாள் – விதியோ கணவரே !
அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டியெனை
வேதகி சுடர்த் தீமுன் வேண்டி மணஞ்செய்து
பாதகர்முன் இந்நாளில் பரிசழிதல் காண்பீரோ
இந்துக்கள்தான் உலகத்தில் விண்வெளியை ஆராய்ந்து முதலில் ரிக்கார்ட் செய்த மாபெரும் விஞ்ஞானிகள் ! இதை பால கங்காதர திலகரும் ஜெர்மன் சம்ஸ்க்ருத அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் ஒருவர் ஒருவர் அறியாமல் தனித்தனியே ஆராய்ந்து ரிக்வேதம் 6000 ஆண்டுப் பமையானது என்று பறைசாற்றினார்கள் என்பதிலிருந்து நாம் அறிகிறோம் ; வானத்தில் உள்ள விண்மீண்களுக்கு துருவன், அகஸ்தியன், திரிசங்கு , சப்தரிஷிகள் கார்த்திகை ,ரோகிணி என்றெல்லாம் பெயர் சூட்டினார்கள் ; இதில் என்ன அதிசயம் என்னவென்றால் வேதகாலம் முதல் 6000 ஆண்டுகளாக இந்துக்கள் இதை இன்றும் பின்பற்றிவருவதே! பாணினி குறிப்பிடும் ,சங்க இலக்கியம் குறிப்பிடும், ஏழு நட்சத்திரங்களை பிராமணர்கள் தினமும் 3 முறை வணங்குகின்றனர்; அம்மி மிதித்தல் அருந்ததி காட்டல் — இந்துக்களின் திருமணச் சடங்கில் இன்றும் உளது . கார்த்திகை நட்சத்திரத்தைக் கொண்டாடாத முருக பக்தன் உண்டோ! வானவியலில் இந்துக்களை மிஞ்சிய பழங்கால சமுதாயம் உலகில் இல்லை . வேதங்களுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான் கிரேக்க நாட்டில் ஹோமர் எழுதவே தொடங்கினார்! பாபிலோனிய, எகிப்திய நாகரீகங்களில் உள்ள குறிப்புகளும் நம்மிடையே கடன் வாங்கியதைக் காட்டுகின்றன.
****

4
முஸ்லீம் பெண்கள் பற்றி ஒரு பாடல்:–
‘பர்தா’ ஒழிக – பாரதியார் முழக்கம்
தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! – பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் – இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பிரண்டையும் – துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை – முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ? 1
ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் – பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் – வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் – வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண் பசப்பிலே – கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ? 2- பாரதியார்
தற்காலத்து தமிழ் உலகின் மிகப் பெரிய கவிஞன் பாரதியார் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அவர் மாபெரும் தமிழ் அபிமானி, தேச பக்தர், சர்வ சமய புரவலர், இந்து மத போற்றுநர் என்பதிலும் எவருக்கும் ஐயமில்லை. ஏசுவையும், புத்தரையும், முகமது நபியையும் பாராட்டிப் பாடல்களும் இயற்றினார் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அவருக்கு பர்தா , முகத்திரை பிடிக்காது. ஏனெனில் இது வேத காலப் பெண்களிடத்தில் கிடையாது. இது அவர் சொல்லும் செய்தி; நான் செய்யும் விமர்சனம் அல்ல.
****

5
நிவேதிதா தேவி
அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
டாம்பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும்பொருளாய்ப் புன்பைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய
தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.
நிவேதிதா தேவியைச் சந்தித்த பின்னர் அவருக்கு பெண்ணுரிமைப் பாடல்களைப் பாடும் உத்துவேகம் பிறந்தது. ஏன் உங்கள் மனைவியை அழைத்து வரவில்லை என்ற அவருடைய கேள்வி பாரதியாரின் உள்ளத்தில் இருந்த அறியாமை என்னும் இருளை அகற்றியது . கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்கு (1905-1906) மனைவியையும் அழைத்து வராத பிழையை உணர்ந்தார் ; பின்னர் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக என்ற ஒளிபடைத்த வார்த்தைகளை உதிர்க்கத் தொடங்கினார் .
NIVEDITA STATUE WIITH LONDON SWAMINATHAN IN WIMBLEDON, LONDON.
–subham—
Tags- வள்ளுவர் மனைவி, பாரதியார், பாரதியார் பாடல்களில் , அருந்ததி, சீதா தேவி, வாசுகி , நிவேதிதா, வசிட்டன்