பல்லவர் செப்பேடுகளில் இரண்டாவது 10 கேள்விகள் (Post No.16,192)

Written by London Swaminathan

Post No. 16,192

Date uploaded in London – 12 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பல்லவர் செப்பேடுகளில் இரண்டாவது 10 கேள்விகள்

பல்லவர் செப்பேடுகளில் முதல் 10 கேள்விகள் – என்ற தலைப்பில் நேற்று பத்து கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டோம் ; அதன் தொடர்ச்சியாக மேலும் 10 கேள்விகள் இதோ:

11

முப்பது செப்பேடுகள் Copper Plates பெயர்ப் பட்டியலைக் கண்டோம்; அவைகளில் பழைய செப்பேடு எது ?

12

மஹாபாரதம் பற்றி எந்த செப்பேடு, என்ன கூறுகிறது ?

13

செப்பேடுகளுக்கு தமிழில் வேறு என்ன பெயர்கள் பயிலப்படுகின்றன ?

14

பல்லவர் பெயர்களைக் கொண்ட ஊர்களோ அல்லது கோவில்களோ எவை ?

15

பல்லவருடன் தொடர்புடைய ஆழ்வார் யார் ?

16

நந்திக் கலம்பகம் என்னும் நூல் எந்த மன்னனைப் புகழ்கிறது?

17

காடவர்கோன் என்று சைவத்திருமுறைகள் போற்றும் பல்லவ மன்னன் யார் ?

18

கழற்சிங்க நாயனார் யார் ?

19

காடவர் கோன், கழற்சிங்க நாயனார் பற்றி  பல்லவர் செப்பேடுகள் புஸ்தம் தரும் தகவல் என்ன?

20

கசாக்குடி சாசனம் தெரிவிக்கும் புள்ளலூர் போர்ச் செய்தி என்ன ?

****

விடைகள்

11.மயிதவோலு செப்பேடு கண்டுபிடிக்கப்பட்ட இடம்: ஆந்திரப் பிரதேசம், குண்டூர் மாவட்டம், மயிதவோலு சிற்றூர்.காலம்: கி.பி. நான்காம் நூற்றாண்டு CEபல்லவ அரசன் சிவஸ்கந்தவர்மன் இளவரசராக (யுவமகாராஜா) இருந்தபோது வெளியிடப்பட்டது.பிராகிருத மொழி மற்றும் முற்கால பல்லவ பிராமி எழுத்துக்கள். ஆந்திரபதா பகுதியில் உள்ள ‘விரிபரா’ என்ற கிராமத்தை பிராமணர்களுக்கு தானமாக வழங்கியதை இது குறிக்கிறது.

***

12.கூரம் செப்பேடு மஹாபாரதம் பற்றிக் கூறுகிறது கூரம் செப்பேடு பல்லவர் காலத்தில் பொது மக்கள் மத்தியில் மகாபாரதம் வாசிக்கப்பட்டதற்கான மிக முக்கிய வரலாற்று ஆதாரமாகத் திகழ்கிறது. ஏழாம் நூற்றாண்டில், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவ மன்னனான முதலாம் பரமேஸ்வரவர்மன் (670-695 CE) என்பவரால் இந்தச் செப்பேடு வெளியிடப்பட்டது.  பல்லவ மன்னன் கூரம் என்ற சிற்றூரில் (இன்றைய காஞ்சிபுரம் அருகில்) ஒரு சிவன் கோவிலைக் கற்றளியாகக் கட்டினான். அக்கோவிலில் வழிபாடுகள் மற்றும் பராமரிப்புக்காக ‘பரமேஸ்வரமங்கலம்’ என்ற ஊரின் நிலங்களை இருபத்தைந்து பங்குகளாகப் பிரித்து மானியமாக வழங்கினான்.  அந்த நிலப் பகிர்வில், கோவிலின் அருகே அமைக்கப்பட்ட பொது மண்டபத்தில் மகாபாரதம் வாசிப்பதற்காக ஒரு பங்கு நிலம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டதாக இச்செப்பேட்டின் தமிழ்ப் பகுதியில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில், “. இம்மண்டகத்தே பாரதம் வாசிப்பதற்கு ஒரு பங்காகவும்…” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், பல்லவர் காலத்தில் தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் பொது மண்டபங்களிலும் மகாபாரதக் கதைகளை மக்கள் முன்னிலையில் வாசித்து, சொற்பொழிவு நிகழ்த்தும் வழக்கம் அரசு ஆதரவோடு மிகச் சிறப்பாக நடைமுறையில் இருந்தது என்பது உறுதியாகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூரம் செப்பேடு தற்போது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

****

13.செப்புப் பட்டயம், தாமிர பட்டயம், சாசனம் முதலிய பெயர்கள்.

***

14.பல்லவர் பெயர்களைக் கொண்ட ஊர்களும் அல்லது கோவில்களும் :

பரமேஸ்வரவிண்ணகரம், ராஜசிம்மேஸ்வரம் , பல்லாவரம் (சென்னை), மஹேந்திரவாடி,  மாமல்லபுரம் .

கோவில்கள் : காஞ்சி கைலாசநாதர் கோவில்,    காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயில்

****

15.திருமங்கை ஆழ்வார் பரமேஸ்வர வர்மனைப் போற்றியுள்ளார்.

ஆழ்வார்களில் இறுதியானவரான திருமங்கை ஆழ்வார், கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதற்கு அவர் பாடிய பல்லவர் காலப் பாசுரங்களே முக்கிய வரலாற்றுச் சான்றுகளாக விளங்குகின்றன. அவர் பல்லவ மன்னனான இரண்டாம் நந்திவர்மன் (பல்லவமல்லன் – கி.பி. 731–796) மற்றும் இரண்டாம் பரமேசுவரவர்மன் ஆகியோரின் சமகாலத்தவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளத. இரண்டாம் நந்திவர்ம பல்லவனால் காஞ்சீபுரத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற தலம் பரமேசுவர விண்ணகரம் (வைகுண்ட பெருமாள் கோவில்) ஆகும். இத்தலத்து இறைவனை மங்களாசாசனம் செய்து திருமங்கை ஆழ்வார் பத்து பாசுரங்கள் பாடியுள்ளார்.தன் பாடல்களில், பல்லவ மன்னனின் போர்த்திறமையையும், அவன் வடநாட்டு அரசர்களான சாளுக்கியர்களையும் ஏனைய எதிரிகளையும் வென்றதையும் விரிவாகப் பாடியுள்ளார். பல்லவ அரசன் கடல் போன்ற முழக்கமிடும் பறை வாத்தியங்களை (கடுவாய் பறை) உடையவன் என்பதை, “கடல் போல முழங்கும் குரல்கடுவாய் பறையுடைப் பல்லவர் கோன்” என ஆழ்வார் வர்ணிக்கிறார். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நந்திபுர விண்ணகரம் என்னும் வைணவத் தலம் இரண்டாம் நந்திவர்ம பல்லவனால் புதுப்பிக்கப்பட்டு, அவனது பெயராலேயே அழைக்கப்பட்டது.இக்கோட்டையின் மதில் சுவர்கள் மற்றும் பல்லவர்களின் காவல் சிறப்பை ஆழ்வார் போற்றிப் பாடியுள்ளார்.பல்லவ மன்னனை, “நென்மலியில் வெருவச் செருவேல் வலக்கைப் பிடித்த படைத்திறல் பல்லவர்கோன்” என்று போற்றி, அவன் நென்மலி என்ற இடத்தில் பெற்ற போர் வெற்றியைக் குறிப்பிடுகிறார். காஞ்சியில் உள்ள அட்டபுயகரம் (அஷ்டபுஜ பெருமாள் கோவில்) உள்ளிட்ட பிற பல்லவர் காலத்துத் தலங்களையும் ஆழ்வார் பாடியுள்ளார். காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்கள் கலைக்கும் வைணவத்திற்கும் ஆற்றிய தொண்டுகளைத் தன் பாசுரங்களில் பதிவு செய்துள்ளார்.

***

16.நந்திக் கலம்பகம் தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று. இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் (846-869 CE) குறித்துப் பாடப்பட்டது.

***

17. காடவர் கோன்

பதினொன்றாம் திருமுறைஇத்திருமுறையில் ஐந்தாவது பிரபந்தமாகிய சேத்திரத் திருவெண்பாவை அருளியவர் ஐயடிகள் காடவர்கோன் நாயனார். இவர் திருத்தொண்டத் தொகையில் சுந்தரரால் `ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்` எனப் போற்றப் பெறுபவராவார். சேக்கிழார் பெரிய புராணத்தில் இந்நாயனாரின் வரலாற்றை விளங்க விரித்துரைத்துள்ளார்.மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம் மாமன்னர் அரசுரிமை தன் சிவனடித் தொண்டுக்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துத் தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவ தலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார். அவ்வெண்பாக்களில் இருபத்து நான்கு பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப் பெறுகிறது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் விளங்கக் காணலாம்.காஞ்சியில் கைலாசநாதர் கோயிலைக் கட்டிய இராஜசிம்மப் பல்வனாவான் என்றும் அம்மன்னனது தந்தையாகிய முதலாம் பரமேசுவரவர்மனே ஐயடிகள் காடவர்கோன் ஆவார்முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தில் பெரும் போர் ஒன்று நிகழ்ந்தது. சாளுக்கிய வேந்தனாகிய இரண்டாம் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தன் என்பான் தமிழ் மாநிலத்தைக் கைப்பற்றக் கருதி தமிழகம் வந்து இம் மன்னனோடு பெரும் போர் புரிந்து வென்று பாண்டி நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது பாண்டியன் நெடுமாறன் மகனாகிய கோச்சடையன் என்பானிடம் தோல்வியுற்றுத் திரும்பநேர்ந்தது. இவ்வேளையில் அவனிடம் தோற்ற பல்லவனாகிய முதலாம் பரமேசுவரவர்மன் தன் படைகளுடன் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள பெருவளநல்லூரில் விக்கிரமாதித்தனோடு போரிட்டு வெற்றி கொண்டான். தோற்ற விக்ரமாதித்தன் ஒரு கந்தையைப் போர்த்திக்கொண்டு தன் நாடு திரும்பினான்.

விக்கிரமாதித்தனைப் பரமேசுவரவர்மன் வெற்றி கொண்டதைக் கைலாசநாதர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. சேக்கிழார் ஐயடிகள் காடவர்கோனின் பெருவீரத்தைக் குறிப்பிடும் பாடல் இப்போரைக் குறித்ததாகலாம். ஆதலின் அம்மன்னனே ஐயடிகள் என்பதையும் அறியலாம்.

பரமேசுவரவர்மன் கூரம் என்ற ஊருக்குப் பரமேசுவர மங்கலம் எனப் பெயர் சூட்டி அவ்வூரில் விச்சாவிநீத பல்லவ மன்ன பரமேசுவரக்கிருகம் என்ற சிவாலயத்தை முதன் முதல் கற்றளியாகக் கட்டிய பெருமைக்கு உரியவன். மாமல்லபுரத்தில் இவன் பாட்ட னாகிய நரசிம்மவர்மன் காலத்தில் தொடங்கி இம்மன்னனால் முற்று விக்கப்பட்ட ஆலயத்தில் காணும் கல்வெட்டால் இவன் வடமொழி தென்மொழிகளில் வல்லவன் என்பதை உணரலாம்.

இவ்வாறு பெருவீரனாகவும், சிவநெறியாளனாகவும் புலமையாள னாகவும் விளங்கிய பரமேசுவரவர்மன் தன் ஆட்சியைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துவிட்டு, தலங்கள் தோறும் சென்று வழிபட்டு வெண்பா மாலைகளால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்ததால் அவன் மகனாலும் குடிமக்களாலும் இம்மன்னன் `ஐயடிகள்` எனப் போற்றப் பெற்றான் என்று கொள்ளலாம். இவர் காலம் கி.பி. 670 முதல் 685 வரையாகும்.

***

18.கழற்சிங்க நாயனார்:

இவர் பல்லவ அரச குலத்தில் வந்த பல்லவ மன்னன். கழற்சிங்கன் என்பது இவருடைய சிறப்புப் பெயர். இவரே தெள்ளாறெறிந்த நந்திவர்மன் ஆவர்..

கழற்சிங்க நாயனார் ஒரு சமயம் மாதேவியோடு திருவாரூர் திருக்கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கினார். அவருடன் சென்ற அரசியார் அங்கிருந்த பூவொன்றைக் கையிலெடுத்து மோந்தார். அதனைக் கண்டு, அங்கிருந்த செருத்துணை நாயனார் சினங் கொண்டு, சிவபெருமானுடைய பூவை மோந்த மூக்கை அரிவேன் என்று கூறி, தம் கையிலிருந்த கத்தியினால் அவர் மூக்கை அரிந்தார். மாதேவியார் கூச்சலிட்டு அலறினார். உடனே கழற்சிங்கர் வந்து “இப்படிச் செய்தவர் யார்” என்று சினந்து கேட்டார். செருந்துணை நாயனார் தாமே இப்படிச் செய்ததாகவும் அதன் காரணத்தையும் கூறினார். அப்போது, கழற்சிங்கர், “மூக்கை அரிந்ததுமட்டும் போதாது; புவை எடுத்த கையையும் துண்டிக்க வேண்டும்” என்று கூறி வாளை எடுத்துத் தமது மனைவியாரின் கையைத் துண்டித்தார். இக் கதையைப் பெரியபுராணம் கழற்சிங்க நாயனார் புராணத்தில் காண்க.

சுந்தரமூர்த்தி நாயனார், இந்த நாயனாரைத் திருத்தொண்டத் தொகைப் பதிகத்தில்,

“கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்

காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” என்று சிறப்பித்திருக்கிறார்.

***

19.காடவர் கோன்கழற்சிங்க நாயனார் பற்றி பல்லவர் செப்பேடுகள் புஸ்தம் தரும் தகவல் :

பள்ளங்கோயில் செப்பேடு மிகப்பழைய செப்பேடு ஆகும். இது கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மூன்றாம் சிம்மவர்மன் காலத்தில் வெளியிடப்பட்டது. காலம்: கி.பி. 550 (6-ஆம் நூற்றாண்டு) இடம்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள பள்ளங்கோயில்அமைப்பு: என்ற ஊரில் கிடைத்தது . மொத்தம் 5 ஏடுகளும், 8 பக்கங்களும் கொண்டவை. இதில் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.பல்லவ மன்னன் சிம்மவர்மன், பருத்திக்குன்று ஜைன முனிவர் வஜ்ரநந்தி என்பவருக்கு அமண்சேர்க்கை நிலத்தைப் பள்ளிச்சந்தமாகத் (தானமாக) வழங்கியதை இச்செப்பேடு விளக்குகிறது. இந்த செப்ப்பே ட்டினை வழங்கிய சிம்மவர்மன் பெரிய சிவபக்தன் . இவன்தான்  63 நண்பார்களில் ஒருவராக காடவர் கோன் ஐயடிகள்.

இரண்டாம் நரசிம்மவர்மனின் இன்னுமொரு பெயர் ராஜசிம்மன். காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவன்; கழற்சிங்க நாயனார்க்கேன்ற பெயர் கொண்ட இவன் சுந்தர மூர்த்தி நாயனார் கால  மன்னன். இவன் வெளியிட்ட செப்பேடுகள் ரேய்ரு செப்பேடுகள் ஆகும் .

***

20.கசாக்குடி சாசனம் தெரிவிக்கும் புள்ளலூர் போர்ச் செய்தி :

இரண்டாம் புலிகேசியை காஞ்சிபுரம் அருகிலுள்ள புள்ளலூர் என்னுமிடத்தில் மஹேந்திர வர்ம பல்லவன் தோற்கடித்தான் ஆனால் குண்டூர் பகுதியில் உள்ள சிலப்பகுதிகளை புலிகேசி கைப்பாற்றி கர்நாடகத்திலுள்ள மங்களூரிலிருந்து ஆளுப்பா அரசன் ஒருவனை ஆட்சியாளராக நியமித்தான் என்று புலிகேசியின் ம்ருட்டூர்ச் செப்பேடுகளிலிருந்து தெரிகிறது.

Tags- பல்லவர் செப்பேடு, இரண்டாவது, 10 கேள்விகள், காடவர் கோன், கழற்சிங்க நாயனார், திருமங்கை ஆழ்வார், காஞ்சிபுரம் , கைலாசநாதர் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், நந்திக் கலம்பகம்

—Subham—

Leave a comment

Leave a comment