Written by London Swaminathan
Post No. 16,195
Date uploaded in London – 13 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கடந்த இரண்டு நாட்களில் இருபது கேள்விகளையும், பதில்களையும் கண்டோம் ; இதோ மேலும் பத்து கேள்விகள்
21
கும்பகோணத்துக்கு அருகில் தண்டம்தோட்டம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட செப்பேடுகள் பிராமணர்கள் பற்றி சொல்லும் செய்திகள் என்ன ?
22
எத்தனை கோத்திரங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன ?
23
பட்டத்தாள்மங்கலம் அல்லது கொற்றங்குடி செப்பேடுகள் சொல்லும் அதிசயச் செய்திகள் என்ன ?
24
பல்லவர் செப்பேடுகளில் காணப்படும் ஆணி எழுத்தின் பொருள் என்ன ?
25
உருவப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் எழுத்துக்களுக்கு பெட்டித் தலை எழுத்து என்ற பெயர் ஏன் வந்தது?
26
சோழனுக்குப் புலி, பாண்டியனுக்கு மீன், சேரனுக்கு வில், பல்லவனுக்கு என்ன சின்னம் ?
27
வாதாபி கொண்டான் என்ற பல்லவ மன்னன் யார் ?அவருக்கு படைத்தைவராக இருந்து புகழ்பெற்றவர் யார் ?
28
பல்லவரின் கொடி என்ன கொடி?
29
பல்லவர்களைத் திட்டும், வசை பாடும் நிகண்டு எது?
30
அஸ்வமேத யாகம் செய்த பல்லவ மன்னன் யார் ?
***********************
21.தண்டம்தோட்டம் (அல்லது தண்டந்தோட்டம்) என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட செப்பேடுகள் பல்லவ மன்னனான இரண்டாம் நந்திவர்ம பல்லவ மல்லனின் (கி.பி. 731–796) ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். கும்பகோணம் அருகே உள்ள ஒரு சிவன் கோயிலில் இந்தச் செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன. சாசனத்தில் உள்ள 222 வரிகளில் முதல் 26 வரிகள் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளன ; இடையிடையே சில ஏடுகள் காணவில்லை .308 பிராமணர்களுக்கு அந்தக் கிராம ம் தானமாக வழங்கப்பட்டது.அதில் 244 பேரின் பெயர்களும் அவர்களின்கோத்திரங்களும் சூத்திரங்களும் சொல்லப்பட்டுள்ளன . பிராமணர் வரலாற்றினை அறிய முக்கியத் தகவல்களை அளிக்கும் செப்பேடு இது.
***
22.செப்பேட்டில் வரும் பிராமண கோத்திரங்கள் :- காஸ்யப , கெளதம, ஆத்ரேய, அக்நிவேசியா, பாரத்வாஜ, வத்ச, முதுகல, ரத்தீதர, காமிக, வாதூல, லோஹிதா, கெளசிக, சாலவாத, குத்ச, வசிஷ்ட, சாவர்ணி , பராசர, வாராகிய, கபி, தூம்ராயான, பவுருகுத்ச, சாம்க்ரிஷி , ஹரித, மாத்தர, கார்க , பாதரணி கோத்திரங்கள் .
சூத்ரங்களைப் பொருத்த மட்டில் ஆபஸ்தம்ப சூத்ரமே அதிகம் . பிரவச்சன, ஹிரண்யகேசி, சந்தோக சூத்திரங்களும் கூறப்பட்டுள்ளன . இவைகளை விட அதிசயமான தகவல்கள் அவர்களுடைய ஊர்களும் பிராமணர்களின் பெயர்களும் ஆகும் .
***
23.கரிகாலனும் நெடுஞ்செழியனும் திருவிளையாடல் புராணம் சொல்லும் ஒரு பாண்டியனும் சிறுவயதில் மன்னர் பதவியை ஏற்று வெற்றி வாகை சூடியதை அறிவோம். நந்தி வர்ம பல்லவன் 12 வயதில் முடி சூட்டினான் என்ற அதிசயச்செய்தி இந்த செப்பேட்டில் உள்ளது, அவன் 61 ஆவது ஆண்டில் இந்த சாசனத்தை வெளியிட்டான்! இது மன்னரின் வயதானால் ஆச் ச ரியப்பட்ட எதுவும் இல்லை; ஆனால் அவனது 61 ஆவது ஆட்சி ஆண்டு என்றால் அது பெரிய அதிசயமே. தண்டம்தோட்டம் செப்பேடுகள் நந்திவர்மனின் 58-வது ஆட்சியாண்டில் (சுமார் கி.பி. 790 இல்) வெளியிடப்பட்டவை. அவனும் 58 ஆண்டுகள் ஆண்டது குறிப்பிடத்தக்கது . இது போல நீண்ட ஆண்டுகள், பதிற்றுப்பத்தின் பதிகங்களிலும் உள்ளது. இவை ஆராயப்படவேண்டிய விஷயம் சில நேரங்களில் தந்தை உயிருடன் உள்ள போதே மகனுக்கும் பட்டாபிஷேகம் செய்வதால் இப்படி நிகழவும் வாய்ப்பு உள்ளது. பரத்வாஜ முனிவரிடமிருந்து துரோணர் தோன்றினார்; அவருடைய மகனான அச்வத்தாமனிடமிருந்து பல்லவன் தோன்றினான் என்ற செய்திஇந்த செப்பேட்டில் உள்ளது மிக முக்கியமானது. அப்படியானால் பல்லவ மன்னர்கள் பிராமணர்ககள்! பிற்கால பல்லவர் கல்வெட்டுகள் பல்லவர்களின் கோத்ரம் பாரத்வாஜ கோத்ரம் என்று செப்புவதும் ஆராய்ச்சிக்குரிய விஷயம் ஆகும் !
***
24. ஆந்திராவில் குண்டூர் ஜில்லா நெலட்டூர் கிராமத்தில் ஒரு பைராகியிடமிருந்த செப்பேடு அவர் இறந்த பின்னர் அது சென்னை மியூசியத்துக்கு வந்து சேர்ந்தது; இதை சிம்மவர்மனுடைய பீகிரச் செப்பேடுகள் என்று சொல்லுவார்கள்; சாசனம் ஆணித் தலையெழுத்து என்று சொல்லப்படும் ஒருவகை எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது ; ஒவ்வொரு எழுத்தின் தலையிலும் வட்டமாகச் சிறிய குண்டு போன்ற தலைக்கட்டு காணப்படுகிறது . உருவப்பள்ளி, மங்களூர்ச் சாசனங்கள் எழுத்துக்களோடு இந்த எழுத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம் . பல்லவ வம்சத்து மஹாராஜா சிம்மவர்மன் பீகிர என்னும் கிராமத்தை காசியப கோத்திர தைத்ரீய சாகை விலாச சர்மனுக்கு தானம் செய்ததைத் தெரிவிக்கும் சாசனம் இது.
***
25.உருவப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் எழுத்துக்கள் பீகிரம், மங்களூர்ச் சாசன எழுத்துக்களையே ஒத்திருக்கிறது; ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம் எழுத்தின் தலைக்கட்டு நான்கு கோடுகளால் ஆன மிகச் சிறிய உருவில் ஆன ஒரு சதுரமாக உள்ளது ; அதன் நடுப்பாகம் தோண்டி எடுக்கப்பட வில்லை இந்த வகை எழுத்துக்களைப் பெட்டித் தலை எழுத்து என்று சொல்வார்கள் ; யுவ மகாராஜன் விஷ்ணுகோப வர்மன் அளித்த தானத்தைச் சொல்லும் சாசனம் இது.
***
26.பல்லவர்கள் நந்தியைக் காளை/ ரிஷப மாட்டினைச் சின்னமாக வைத்துக்கொண்டதை நாணயங்கள் முத்திரைகளை மூலம் அறிகிறோம்.
***
27.மகேந்திர வர்ம பல்லவனின் மகன் முதலாம் நரசிம்ம வர்மன்—630 CE– வாதாபி நகரை வெற்றிகொண்டதால் இந்தப் பட்டம் உடையவன் என்பதைக் கூரம் செப்பேடுகளால் அறியலாம்
பரஞ்சோதி முனிவர் அவனுடைய படைத்த தலைவர் ஆவார் ; இவரே பிற்காலத்தில் முழுநேர ஆன்மீகத்தில் ஈடுபட்டு சிறுத்தொண்ட நாயனார் ஆனார் . வாதாபியிலுருந்து இவர் கணபதி சிலையைக் கொண்டுவந்ததாகவும் சொல்வார்கள்; வாதாபி / பாதாமி என்னும் நகரம் சாளுக்கிய மன்னர்களின் தலை நகரம் ஆகும் .
***
28.திருமங்கை ஆழ்வாரின் பாசுரப்படி பல்லவர்களின் கொடியில் பாம்பு இருந்ததை அறிகிறோம்.ஒரு நாக கன்னிகையை பல்லவர்களின் மூதாதையர் மணந்தது குறிப்பிடத் தக்கது; துரியோதனனுக்கும் பாம்புக்கொடிதான். பாரதியார் பாடிய பாஞ்சாலி சபதத்திலும், துரியோதனனைப் பாம்புக் கொடியுடையன் என்று குறிப்பிடுகிறார் .
தேம்பொழில் குன்றையில் தென்னவனைத்
திசைப்பதிச் செருமேல் வியந்து அன்று சென்ற
பாம்புடைப் பல்லவர்கோன் பணிந்த
பரமேச்சுர விண்ணகரம் அதுவே – திருமங்கை ஆழ்வார்
***
29.பிங்கலந்தை நிகண்டு, பல்லவர்களை கயவர், படகர், நீசர் என்று வசைபாடுகிறது
***
30.சிவஸ்கந்த வர்மன் என்ற பல்லவ மன்னன் வழங்கிய ஹீரஹட கள்ளிச் செப்பேடுகள் , அவன் செய்த அஸ்வமேதம் வாஜபேயம், அக்னிஷ்டோமம் ஆகிய யாகங்களைக் குறிப்பிடுகிறது.
Tags- பல்லவர் செப்பேடுகள், மூன்றாவது 10 கேள்விகள்
–Subham-
