
Written by London Swaminathan
Post No. 16,204
Date uploaded in London – 16 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கடந்த 5 நாட்களில் 50 கேள்விகளையும், பதில்களையும் கண்டோம் ; இதோ மேலும் பத்து கேள்விகள்
51
காணாமற் போன 300 ஆண்டு பல்லவர்களின் பெயர்கள் என்ன ?
52
திராவிட நாடு எது ?
53
கண்ணாடிக் கொடி பற்றிய அதிசயச் செய்தி எங்கே உள்ளது ?
54
இலங்கை மானவர்மனுக்கு பல்லவ மன்னன் இளநீர் கொடுத்த சுவையான சம்பவம் எப்படி நிகழ்ந்தது?
55
ராமபிரானைவிட, அகஸ்தியனை விட பல்லவ மன்னன் மேல் என்று சொல்லும் சாசனம் எது ?
56
முருகனுக்குச் சமமாகப் பல்லவரை ஒப்பிடும் சாசனம் எது?
57
விபீஷணன் போல பல்லவனிடம் அடைக்கலம் புகுந்த இலங்கை மான வர்மன் பல்லவனுக்குத் தெரியாமல் என்ன செய்தான் ?
58
புள்ளூர்ச் செப்பேடுகளில் காணப்படும் பிராமணர்களின் விநோதப் பெயர்கள் என்ன ?
59
முக்கண்டிக் காடுவெட்டி யார் பல்லவர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு ?
.60
பல்லவர்களைப் பற்றி வைகுண்டப்பெருமாள் கோயில் சிற்பங்கள் காட்டுவது என்ன ?
*************************************
விடைகள்
51.சிம்ம விஷ்ணு முதல் அபராஜித பல்லவன் வரை 300 ஆண்டுப் பல்லவர்களுக்குச் செப்பேடு மற்றும் கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன . ஏனையோரை சாசனங்களில் வரும் பெயர்களிலிருந்து அறிகிறோம் அவர்களில் ஒருவருக்கு மட்டும் சமுத்திர குப்தன் கல்வெட்டில் சான்று கிடைத்துள்ளது
சான்று கிடைக்காத முற்கால பல்லவர்கள் –
கந்த வர்மன்
கலந்த வர்மன்
காணகோபன்
விஷ்ணுகோபன் – சமுத்திர குப்தன் கல்வெட்டிலும் உள்ளது
வீர கூர்ச்சன்
வீர சிம்மன்
சிம்ம வர்மன்
ஆகியோர் எதிரிகளுக்கு தூமகேதுவாக விளங்கினர் என்று கசாக்குடி செப்பேடுகள் கூறுகிறது . இவை தவிர சித்திரமாயன், ஸ்கந்த சிஷ்யன் போன்ற பெயர்களை நாமாக தெரிந்த பல்லவர்களுடன் தொடர் புபடுத்த வேண்டியுள்ளது..
அசோக வர்மன் -கசாக்குடி செப்பேடு தகவல்
அவனி சிம்மன் கசாக்குடி செப்பேடு தகவல்
***
52.சேர சோழ பாண்டிய நாடுகளுக்குத் தொடர்பில்லாத வகையிலேயே திராவிட நாடு குறிப்பிடப்படுகிறது வரைபடங்களில் தமிழ் நாட்டின் வடபகுதி அல்லது அதற்கு மேலே உள்ளது . இது பல்லவர் ஆண்டபகுதிதான் என்பதைக் காட்டும் வாசக வரிகள் சாசனங்களில் கிடைக்கின்றன .
திராவிட அல்லது த்ரமிள என்ற சொல் காஞ்சீபுரத்தை தலைநகராகக் கொண்ட தொண்டை மண்டலத்தையே குறித்து வந்திருக்கிறது; வாதாபிக்குக் கிழக்கே மஹா கூடம் என்னுமிடத்திலுள்ள மகுடேச்வரர் ஆலயத்தின் கல் தூணிலுள்ள கல்வெட்டில் அவன் அண்ணனான முதலாம் கீர்த்தி வர்மனின் புகழைக் கூறுமிடத்தில் அவன் வங்க, அங்க, கலிங்க, வட்டூர மகத , மத்ரக, கேரள, கங்க, மூஷக, பாண்டிய, த்ரமிள , சோளிய, ஆளுக, வைஜயந்தி, ஆகியவற்றையும் வேறு நாடுகளையும் வெற்றி கொண்டான் என்று உள்ளது . பல்லவர்களைக் குறிப்பிடும் சாளுக்கிய சாசனங்கள் த்ரைராஜ்ய பல்லவர் என்று குறிப்பிடுகின்றன. முக்காவல் நாடு என்ற தமிழ்ச் சொல்லை முவுவட்டிய மார்க்கம் என்று தெலுங்கில் பொறித்துள்ளனர் . புறநானூற்றுப் பாடல் 90 சாத்தந்தையார் பாடியது . முக்காவல் நாடு வருகிறது ; இதுவே த்ரைராஜ்ய பல்லவரைக் குறிக்கும் சொல்லாகும். நிறைய சாசனங்களில் பல்லவ மன்னருடன் வரும் இச்சொல் தொண்டை மண்டலம் அல்லது அதற்கு மேலுள்ள பகுதியைக் குறிக்கும். மாமூலனார் எழுதிய அகநானூற்றுப் பாடலிலும் தமிழ் கெழு மூவர் காக்கும் மொழிபெயர்தேயம் என்று வருகிறது . இதன் பொருள் தமிழ் பேசாத ஆனால் தமிழர்களின் ஆளுகைக்கு அல்லது பாதுகாப்புக்கு உட்பட்டது என்பதாகும் . பாடல்கள் 67, 211, 295 ஆகியவற்றிலும் வேங்கடத்துக்கு அப்பால் வடுகர் போர் புரியும் இடம் என்று வருகிறது .
என்னுடைய கருத்து
தொல்காப்பியமும் வேங்கட மலை வரைதா ன் தமிழ் மொழி வழங்கும் இடம் என்று கூறியுள்ளது ; ஆக, சேர சோழ பாண்டிய நாடுகளுக்கு வடக்கே இருந்த இடம்தான் 56 தேசங்களில் வரும் திராவிட நாடு என்று துணியலாம்
***
53.உதயேந்திரம் செப்பேடுகள் பல்லவ மன்னன் நந்தி வர்மனின் 21-ஆவது ஆட்சியாண்டில் அவனுடைய படைத்தலைவன் உதய சந்திரனின் விண்ணப்பத்தால் பாலாற்றங்கரையில் அமைந்த ஒரு கிராமத்தை உதயசந்திரமங்கலம் என்ற பெயரில் 108 பிராமணர்களுக்குத் தானம் கொடுத்த செய்தியை கூறுகிறது . அதிலுள்ள எழுத்துக்கள் அதற்கு 200 ஆண்டுகளுக்குப்பின்னர் வழங்கிய எழுத்தாக உள்ளது. உதய சந்திரன் சபர மன்னனான உதயணனுடன் போரிட்டு மயில் தொகையால் அலங்கரிக்கப்பெற்ற அவனுடைய கண்ணடித் த்வஜத்தைக் கைப்பற்றினான் என்பது கூறப்பட்டுள்ளது. சபரர்கள் யார் என்று தெரியாவில்லை. தீவு தேசங்களில் அத்தகைய கொடி இருந்தது சீன தேசத்து வரலாற்றில் உள்ளது . டாலமி எழுதிய நூலில் பர்மாவில் அரக்கன் பகுதியில் சபரர்கள் வாழ்ந்ததைக் குறிப்பிடுகிறார் . இது பல வித ஊகங்களுக்கு வழிசெய்கிறது
***
54.மானவர்மன் என்ற இலங்கை மன்னன் இரண்டாம் காஸ்யபனுடைய மகன் ; தந்தை இறந்தவுடன் அவனுக்கு அரசு கிடைக்காமல் வேறு ஒருவன் கைப்பற்றிவிட்டான் ; சிறிது காலம் இலங்கையின் வடபகுதியில் தங்கிவிட்டு இந்தியாவுக்கு வந்து காஞ் சீபுரத்தில் அரசுபுரிந்த நரசிங்க வர்மனை அடைந்து உதவி கேட்டான் ; பல்லவ மன்னன் ஆதரவு கிடைத்தவுடன் மனைவியையும் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துக்கொண்டான்.
நாளடைவில் அவன் நரசிங்கனுக்கு நெருங்கிய நண்பன் ஆனான்; ஒரு சமயம் இருவரும் யானை மீது போய்க்கொண்டிருந்த்தார்கள் ; ஓரிடத்தில் பல்லவன் ஒரு இளநீரைச் சீவி பாதி குடித்துவிட்டு ஏதோ ஞாபகத்தில் பின்னால் நீட்டினான்; பின்னால்உட்கார்ந்திருந்த மானவர்மன் அதைக் கையில் வாங்கி ஒரு கணம் திகைத்தான் ; நண்பன் தானே என்று அதைக்குடிக்க முற்பட்டான்; சட்டென்று நரசிம்ம வர்மன், பின்னால் திரும்பி, தான் செய்த தவற்றை உணர்ந்து அதை வாங்கி மீதி இளநீரையும் தானே குடித்தான்; இந்த சம்பவம் அவர்களிடையே இருந்த நட்பினை அதிகரித்து . அதற்குப்பிறகு தனக்கு கிடைக்கும் அத்தனை கெளரவங்களும் மரியாதையும் மானவர்மனுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்தான்– பக்கம் 149, பல்லவர் செப்பேடுகள் முப்பது
***
55.கசாக்குடி செப்பேடு 22 ஆவது ஸ்லோகத்தில் இலங்கையை வென்ற ராமனின் பராக்ரமத்தைத் தாழ்த்தும்படியான வீரம் கொண்டவனும் எதிரி அரசர்களை நாசம் செய்யும் தூமகேது/ வால் நடபத்திரம் ஆனவனும் வாதாபி என்ற நகரத்தை வென்று அதே பேர் கொண்ட அசுரனை ஜெயித்த, கும்பத்தில் தோன்றிய , அகஸ்தியனைவிட வேகமுள்ளவனும் வெற்றி வீரனுமான நரசிம்மன் தோன்றினான் . இது ஸ்லோகம் கூறும் புகழ்ச்சி உரை . (வாதாபி என்ற அரக்கனை அகஸ்தியர் வாதாபி ஜீர்ணோ பவ என்று வயிற்றைத் தடவி அழித்தார்; நரசிம்ம வர்மன் வாதாபி என்றந கரினை அழித்தான்
***
56.கசாக்குடி செப்பேடு பல்லவர்களை குமாரக் கடவுளுடன் பலவாறாக ஒப்பிடுகிறது . சங்க காலப் பாடல்களில் முருகனின் சீற்றத்தை தமிழ் மன்னர்களுடன் புலவர்கள் ஒப்பிவிட்டனர். அதற்கு முன்னர் காளிதாசன் அப்படிச் செய்தான். அதைக் காப்பியடித்த அஷ்வகோஷர் புத்த சரித நூலின் முதல் பத்து ஸ்லோகங்களுக்குள் புத்தரை ஷண்முகனுடன் ஒப்பிட்டது நகைப்புக்குரியது ! புத்தருக்கும் முருகனின் சீற்றத்துக்கும் சம்பந்தம் வர வாய்ப்பே இல்லை .
***
57.ஒரு சமயம் சாளுக்கிய அரசன் பல்லவ சாம்ராஜ்யத்தை நோக்கி படை எடுத்து வந்தான் ; அடைக்கலம் புகுந்த மான வர்மனை இந்தப் போரில் ஈடுபடுத்துவது நியாயம் ஆகாது என்று எண்ணி நரசிம்ம வர்மன் புறப்பட்டுச் சென்று விட்டான் . மான வர்மன் நண்பனுக்கு உதவாமல் இருப்பது முறையல்ல என்று எண்ணி தானும் ஒரு படையைத் திரட்டி பல்லவ மன்னனை அடைந்தான் . இது நரசிங்க வர்மனின் மனதை நெகிழவைத்த ஒரு சம்புபவம் ஆகும் – இதற்குப்பின்னர் மானவர்மனை பெரிய கடற்படையுடன் இலங்கைக்கு அனுப்பி பதவியில் அமர்த்தினான்; ஆனால் மானவர்மன் சிறிது காலத்திற்குள் ஒடி வந்துவிட்டான். அடுத்த முறை பெரிய கடற்படையுடன் அவனை அனுப்பி, இதோ பார் நானும் உன்னுடன் வருகிறேன் என்று பாவலா/ போக்கு காட்டினான நரசிம்ம வர்மன் . ஆனால் உண்மையில் போகவில்லை; இந்த முறை மான வர்மன் வெற்றி பெற்று நிலையாக ஆட்சியில் அமர்ந்தான் (காண்க பக்கம் 140, பல்லவர் செப்பேடுகள் முப்பது).
***
58.கூள சர்மன், சின்னக்கல்லா சர்மன், தாழி சர்மன், உழுதமண்டை சர்மன், கந்தமண்டசர்மன் , திண்டசர்மன், சட்டிசர்மன், நாகசர்மன், பத்ரகாளிசர்மன், வடுக சர்மன், சூலமண்டைசர்மன் சொப்பறி தூக்கசர்மன் மோதில சர்மன் — இப்படி நிறைய பொருள் சொல்ல முடியாத பெயர்கள் தானம் வாங்கிய பிராமணர் பட்டியலில் உள்ளன .
***
59.பிற்காலத்தில் தோன்றிய பல்லவ மன்னர்கள் தங்களை முக்கண்டிக் காடுவெட்டி அல்லது த்ரிநயன பல்லவர் வழிவந்தவர்களாகவே கூறிக்கொள்வார்கள் ; அதனால் முதல் அரசன் மூன்று கண்களையுடையவன் என்று அர்த்தம்; அதாவது முக்கண்ணன் சிவபெருமான் . பல்லவர்களின் ஒரு கிளையினர் நாங்கள் என்று சொல்லிக்கொண்டு எட்டாம் நூற்றாண்டிலிருந்து சுமார் 300 ஆண்டுகளுக்கு கர்நாடக தேசத்தை நுளம்பர்கள் ஆண்டார்கள்; தங்களைக் காஞ்சீபுர திரிநயனன் வழிவந்த ஈச்வர வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டனர் ; ஆனால் காஞ்சிப் பல்லவர்கள் யாரும் சிவபெருமான் வழிவந்தவர்கள் என்று கூறவில்லை
***
60.இதோ காஞ்சிப் பெரியவர் சங்கராச்சாரியார் (1894-1994) சொன்னது :
ராஜஸிம்ஹன் கைலாஸநாதர் கோவில் கட்டினமாதிரியே, அவனுக்குப் பின் இரண்டாவது பட்டமாக வந்த நந்திவர்மா வைகுண்டப் பெருமாள் கோவில் கட்டினான். அதற்குப் ‘பரமேச்வர விஷ்ணுக்ருஹம்’ என்றே பழைய பெயர். விஷ்ணுவின் க்ருஹம், ஆனால் பரமேச்வரனின் பேரில் இருக்கிறது என்கிறபோதே நான் இத்தனை நேரம் சொன்ன சைவ-வைஷ்ணவ ஒற்றுமை தெரிகிறது. ஆனால் இங்கே ‘பரமேச்வரன்’ என்பது கோயில் கட்டிய நந்திவர்மாவின் இன்னொரு பெயரை வைத்துத்தான்! ராஜராஜன் கட்டியது ராஜராஜேச்சுரம், கங்கைகொண்ட சோழன் கட்டியது கங்கைகொண்ட சோழீச்சுரம் என்கிற மாதிரி பரமேச்வரப் பல்லவமல்லனான நந்திவர்மா கட்டிய வைகுண்டப் பெருமாள் கோவில் அவன் பெயரிலேயே பரமேச்வர விண்ணகரம் ஆயிற்று.
கைலாஸநாதர் கோவில் சிற்பங்கள் புராண ஸம்பந்தமானவையாகப் பிரஸித்தி பெற்றிருக்கின்றன. வைகுண்டப் பெருமாள் கோவில் சிற்பங்களோ சரித்ர ஸம்பந்தத்தினால் முக்யத்வம் பெற்றிருக்கின்றன.முக்யமாக இந்தக் கோவிலுக்கு என்ன சரித்ர ப்ரஸித்தி என்றால், மஹாவிஷ்ணுவிலிருந்து ஆரம்பித்து ப்ரம்மா வழியாகப் பல்லவ ராஜாக்கள் அத்தனை பேரின் வம்சாவளிக் கதைகளையும் – இந்தக் கோவிலைக் கட்டினவர் வரையில் – சிற்ப வரிசைகளில் வடித்துக் காட்டியுள்ள ஒரு மண்டபம் அங்கே இருப்பதுதான்..
சரித்ர முக்யத்வம் மட்டும்தானென்றில்லாமல் மத ஸம்பந்தமான விசேஷமும் அந்தக் கோவிலுக்கு உண்டு. இங்கே மூன்று அடுக்குகளாக ஸந்நிதிகளை அமைத்து, பெருமாளின் நின்ற திருக்கோலத்தைக் கீழ் தளத்திலும், இருந்த (உட்கார்ந்த) திருக்கோலத்தை நடு தளத்திலும், கிடந்த (சயனித்த) திருக்கோலத்தை மேல்தளத்திலும் அமைத்திருக்கிறது. ‘அஷ்டாங்க விமானம்’ என்பதாகப் பொதுவாகச் சொல்லப்படுகிற ஆகம விதிகளின்படி இப்படிப் பல அடுக்குகளில் ஆலயம் நிர்மாணிப்பது ரொம்பவும் அபூர்வமே. பாண்டி நாட்டில் திருக்கோட்டியூரிலுள்ள பெருமாள் கோவில், மதுரையிலேயே கூடலழகர் கோவில், காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவில், இதைக்கட்டிய நந்திவர்மனின் பிள்ளையான தந்திவர்மன் காஞ்சிக்கு ஸமீபத்திலுள்ள உத்திரமேரூரில் கட்டிய ஸுந்தர வரதப்பெருமாள் கோவில் ஆகிய நாலில்தான் இந்த அமைப்பு இருப்பதாகத் தெரிகிறது.
Tags –பல்லவர் செப்பேடுகள் ,ஆறாவது 10 கேள்விகள், வைகுண்டப்பெருமாள் கோயில் சிற்பங்கள்
–subham—