ஏ. ஐ. செய்ய முடியாத வேலைகளைத் தேர்ந்தெடுங்கள்! (Post.16,205)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,205

Date uploaded in London – 17 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

9-8-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

ஏ. ஐ. செய்ய முடியாத வேலைகளைத் தேர்ந்தெடுங்கள்! 

ச. நாகராஜன் 

உலகெங்கும் இளைஞர்களை பயமுறுத்தும் நவீன தொழில்நுட்பமாகி விட்டது செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ. ஐ. (ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ்) 

நொடியில் ஆயிரக்கணக்கான தரவுகளை அலசி ஆராயும் திறனைப் படைத்த இந்த ஏஐயால் உலகெங்கும் லக்ஷக்கணக்கான நபர்கள் வேலையை இழந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் ஏஐ செய்ய முடியாத ஐந்து வேலைகளை அறிஞர் குழுக்கள் இப்போது கண்டுபிடித்துள்ளன.

கீழே தரப்பட்டுள்ள ஐந்து வேலைகளை ஏஐ செய்ய முடியாது என்பது ஒரு நல்ல செய்தி தான்.

உணவைத் தயாரிக்கும் வேலையில் ஈடுபடுபவர்களுக்கு ஏஐயால் ஆபத்தே கிடையாது. மெஷினால் ஆர்டரை எடுக்க முடியும், டெலிவரி செய்ய முடியும் ஆனால் தனிப்பட்ட முறையில் கைமணம் மணக்க சுவையுள்ள உணவு வகைகளைத் தயாரிக்கவே முடியாது. அதிலும் பெண்களுக்கே உரித்தான படைப்பாற்றல் திறனும், வேகமும், வெவ்வேறு விதமாக உணவு வகைகளைத் தயாரிப்பதும் ஒருபோதும் ஏஐக்கு வராது.

அடுத்து பாதுகாப்பு வேலையில் ஈடுபட்டிருக்கும் செக்யூரிடி வேலையை ஏஐயால் திறம்பட மனிதர்கள் போலச் செய்ய முடியாது. நேரடியாக களத்தில் இருக்க வேண்டும், அந்தந்த கணத்தில் உடனடியாக முடிவெடுக்க வேண்டும், திறம்பட நிலைமையை சமாளிக்க வேண்டும். இது ஏஐயால் முடியாத காரியம். நிலைமைக்குத் தக மனிதனின் மதிப்பீட்டுத் திறனை ஏஐ கொள்ளவே முடியாது. வீடியோவால் ஆங்காங்கே நடப்பதைத் திறம்பட கண்காணிக்க ஏஐயால் முடியும். ஆனால் அச்சுறுத்தல்களை சமாளித்து உடனுக்குடன் முடிவுகளை எடுக்க திறமையான பாதுகாவலர்களாலேயே முடியும்.

குழாய் ரிப்பேர்காரர்கள் பிரச்சினையுள்ள  ஒவ்வொரு இடத்திற்கும் நேரில் சென்று விதவிதமான பிரச்சினைகளை ஆராய்ந்து இடத்திற்கும் பிரச்சினைக்கும் தக முடிவெடுக்கிறார்கள். பெரிய பைப்புகள் உடைந்து நீர் பீறிட்டு வெள்ளமாக வெளி வரும் காலத்தில் குழாய் ரிப்பேர் செய்வதில் நிபுணர்களாக உள்ளவர்கள் செயல்படும் அபார வேகமும் திறமையும் ஏஐக்கு வராது. என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுமே தவிர எப்படிச் செய்வது என்பது ஏஐக்குத் தெரியாது.

இறந்து போன ஒரு சவத்தை தைலமிட்டுத் தடவி பாதுகாப்பாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் வேலை ஒரு உன்னதமான வேலை. அதில் உணர்ச்சி, வேகம், திறன், கலை உணர்வு, சடங்குகளை அனுசரித்தல், மரியாதை உள்ளிட்ட அனைத்தும் பல்வேறு விகிதத்தில் கலந்திருக்கும்.

இதை ஏஐயால் செய்ய முடியாது. துக்கப்படும் குடும்பத்தினருக்கு மெஷின் பாஷையில் செயற்கையாக ஆறுதலை அது தர முடியுமே தவிர மனித உணர்ச்சியில் பங்கு கொள்ள முடியாது.

அடுத்து திடீரென்று ஏற்படும் தீ விபத்தைத் தடுக்க விரைந்தோடும் தீயணைப்பு வீரர்களின் சாகஸமே தனி தான். மிக மிக அதிக உயரத்தில் சர்ரென்று ஏணி மூலம் ஏறிச் சென்று புகைக்கு நடுவே நுழைந்து பச்சிளம் குழந்தைகளை அலாக்காகத் தூக்கி மீண்டும் ஏணி வழியே அல்லது கயிறு வழியே இறங்கும் அவர்களின் திறனை ஏஐ கொள்ள முடியுமா? முடியாது.

ஆக இப்போதைக்கு இந்த ஐந்து வேலைகளை ஏஐ செய்ய முடியாது என்பதை நிபுணர் குழு சொல்லியுள்ளது.

இந்த ஐந்து வேலைகளையும் எவர் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்!

இன்னும் மனித உணர்வுகள் சம்பந்தப்பட்ட வேலைகளையும் கண நேரத்தில் முடிவெடுக்க வேண்டிய பணிகளையும் ஆராய்ந்தால் இன்னும் பல காரியங்களையும் ஏஐயால் செய்ய முடியாது என்பதை அறிய முடியும். அவற்றையும் மனிதர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

மனித மூளை நுட்பமானது, செயல்திறம் மிக்கது, நிலைமைக்குத் தக அனுசரித்து முடிவெடுக்க வல்லது, உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்குத் தக பணியைச் செய்யத் தூண்டும் அற்புத ஆற்றலைக் கொண்டதாகும். மனித மூளையின் இப்படிப்பட்ட பல குணாதிசயங்களை அறிந்தோமானால் ஏஐ பற்றிய பயமே வேண்டாம்! செயற்கை நுண்ணறிவை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடலாம்!

என்றும் மெஷினை மனிதனே வெல்வான்!

***

Leave a comment

Leave a comment