

WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,208
Date uploaded in London – 18 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நவீன ராமரும் நவீன சீதையும்! ஒரு உண்மைச் சம்பவம்!!
ச. நாகராஜன்
12, ஜூன் 2020.
மஹராஷ்டிராவில் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ளது சிறிய நகரான கோபர்கோன். அந்த ஊரின் நெடுஞ்சாலையில் கடுமையான கோடைகால வெப்பத்தில் ஒரு தம்பதியினர் கஷ்டப்பட்டு நடந்து சென்று கொண்டிருப்பதை உள்ளூர்வாசி ஒருவர் பார்த்தார்.
வழக்கமாகச் செய்யும் விருந்தினர் உபசாரமாக அவர் அந்த தம்பதியினருக்கு உணவு அளிக்க முன் வந்தார். ஆனால் தம்பதியினர் மறுத்து விட்டனர். உடனே சிறிது பணம் தருவதாக அவர் சொன்னார். அதையும் வாங்க அவர்கள் மறுத்து விட்டனர். எதற்காக அந்தக் கடும் பகலில் அவர்கள் நடக்க வேண்டும் என்று பின்னர் அவர் கேட்டார்.
உடனே பிறந்தது அவர்களின் கதை!
அவர்கள் இதுவரை சுமார் 2200 கிலோமீட்டர் நடந்து விட்டதாகவும் தங்கள் ஊரான குஜராத்தில் உள்ள
த்வாரகாவிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
ஒரு வருடத்திற்கு முன்னால் அவர் கண்ணில் ஏற்பட்ட கோளாறினால் முழுப் பார்வையும் போய் குருடாக இருந்ததாகத் தெரிவித்தார். டாக்டர்களில் கண்பார்வை நிபுணர்களும் சர்ஜன்களும் நம்பிக்கை இழந்து அவரது பார்வையை மீட்க முடியாது என்று தெரிவித்து விட்டனர். என்றாலும் கூட அவரது தாயார் ஒரே ஒரு ஆபரேஷன் மட்டும் செய்து பார்க்குமாறு டாக்டரை வேண்ட அவரும் ஒத்துக் கொண்டார். அறுவை சிகிச்சையும் முடிந்தது.
ஆபரேஷன் நடந்த சமயத்தில் அவரது தாயார் ஶ்ரீ கிருஷ்ணர் ஆலயம் சென்று ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தால் தனது மகன் பாதயாத்திரையாக சென்று திருப்பதி பாலாஜியைத் தரிசித்து விட்டு அங்கிருந்து பண்டர்பூர் சென்று அங்கும் தரிசனத்தை முடித்து விட்டு த்வாரகா திரும்புவார் என்று ப்ரதிக்ஞை செய்தார். ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது.
ஆகவே தனது தாயாரின் வேண்டுதலை நிறைவேற்ற தான் பாதயாத்திரை மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
சரி, கூடவே அவரது மனைவி ஏன் வருகிறார் என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அப்போது அவர், தானும் கூட வந்தே ஆவேன் என்று தன் மனைவி கூறியதாகவும் அவருக்கு வேண்டிய உணவை சமைத்துத் தருவதோடு அவர் உடல்நலத்தையும் நன்கு பாதுகாப்பதாகவும் அவர் உறுதி கூறியதாகவும் அதனாலேயே அவர் கூட வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மிக நளினமாக ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அவர்கள் மாறி மாறிப் பேசினர்.
அவர்களது பேச்சைக் கேட்ட உள்ளூர்வாசி அவர்கள் எதுவரை படித்திருக்கிறார்கள் என்று கேட்டார்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் வானியல் படிப்பை முடித்து தான் டாக்டரேட் பட்டம் பெற்றிருப்பதாகவும் அதே பல்கலைக் கழகத்தில் அவரது மனைவியும் சைக்காலஜி துறையில் டாக்டரேட் பட்டம் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்கள் பேச்சில் துளிக்கூட கர்வம் இல்லை. ரிஸர்வ் பேங்க் கவர்னராக இருந்த டாக்டர் சி. ரங்கராஜனுக்கும் துரதிர்ஷ்டவசமாக விண்வெளிப் பயணத்தில் உயிரிழந்த கல்பானா சாவ்லாவுக்கும் அவர்கள் மிக நெருக்கமானவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இந்த தம்பதிகள் தங்கள் மாதாந்திர பென்ஷனை கண்பார்வையற்றவர் நலத்திற்காக ஒரு என் ஜி வோவுக்கு நன்கொடையாக அளித்து வருகின்றனராம்.
சமூக ஊடகங்களிலிருந்து விலகியே இருக்கின்றனர் இந்த தம்பதியினர்.
தனது தாயாரின் வேண்டுதலுக்காக ராமராக ஒருவர் மாற கலியுக சீதையாக அவர் மனைவி அவரைப் பின் தொடர்ந்து வந்தது நிஜமான ஒரு சம்பவம் தான். மூன்று மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் அவர்கள் இன்னும் மூன்று மாதங்கள் நடந்து தங்கள் சொந்த ஊரான த்வாரகாவுக்குத் திரும்புவர்.
அது சரி அந்த தம்பதியினரின் பெயர் என்ன?
டாக்டர் தேவ் உபாத்யாய மற்றும் அவர் மனைவி டாக்டர் சரோஜ் உபாத்யாய!
**