
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,223
Date uploaded in London – 22 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
20-9-26 தினமணி இதழில் கொண்டாட்டம் பகுதியில் வெளியாகியுள்ள கட்டுரை!
பலமொழி கற்பதால் மறதி நோய் வராதா? அறிவியல் ஆலோசனை என்ன?
ச. நாகராஜன்
மறதி நோய் என்பது வயதானவர்களுக்கு சாதாரணமாக வரும் ஒரு நோய். மூளை திசுக்களின் ஒன்றுடன் ஒன்றான தொடர்பு பலவீனப்படுவதால் இது ஏற்படுகிறது. DEMENTIA எனப்படும் இதைத் தவிர்ப்பது எப்படி?
சமீபத்தில் அறிவியல் அறிஞர்கள் 39000 பேர்களை தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
மூளையின் வயதை ஒருவரின் நிஜ வயதுடன் ஒப்பிட்டுப் பார்க்க அவர்கள் முனைந்தனர். மூளை வயதிற்கும் நிஜ வயதிற்கும் இடையில் உள்ள இடைவெளி ப்ரெயின் கேப் (Brain Gap) எனப்படும். இதை ஆராய்ந்தால் மறதி நோய் வருவதைச் சொல்லி விடலாம்.
வாழ்க்கை முறை மாற்றத்தால் இதைத் தவிர்க்கலாம் என்பதே நிபுணர்களின் கருத்து. புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும் நிறுத்துவது, உடல் பயிற்சியை அன்றாடம் மேற்கொள்வது இவையெல்லாம் நிச்சயமாக மறதி நோய் வருவதை தாமதப்படுத்தும்.
புதிய மொழி ஒன்றைக் கற்பது மறதி நோய் அபாயத்தைத் தடுக்குமா?
சமீபத்தில் நடந்த விஞ்ஞானிகளின் மாநாடு அதிக மொழிகளைத் தெரிந்து கொள்வோர் இளமையான மூளையைக் கொண்டுள்ளனர் என்பதைத் தெரிவித்துள்ளது.
இரண்டு மொழிகள் பேசுவோர் மூளை வயதாவதை ஆறு வருடம் தாமதப் படுத்துகின்றனர் என்றும் நான்கு மொழிகளை அறிந்திருப்போர் 13 வருடங்கள் மூளை வயதாவதைத் தாமதப்படுத்துகின்றனர் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
27 ஐரோப்பிய நாடுகளில் 86000 பேர்களை ஆராய்ந்ததில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழியைப் பேசுவோர் மறதி நோய் வருவதை 30 சதவிகிதம் தவிர்க்கின்றனர் என்பது ஆய்வின் முடிவு.
இதிலுள்ள உண்மை என்ன? ப்ரெயின் ரிசர்வ் எனப்படும் நரம்பு திசுக்களின் அதிகப்படியான தொடர்பு இந்த மறதி நோய் அபாயத்தைத் தடுக்கிறது என்பதேயாகும்.
ஆனால் இதற்கு எதிரான கருத்துக்களையும் சில அறிஞர்கள் முன் வைக்கின்றனர்.
புதிய மொழி ஒன்று கற்பதானது சொல்வளத்தை அதிகப்படுத்துவதோடு பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது. ஆனால் இது மறதி நோயை இருப்பதை காலதாமதமாகவே தெரியப்படுத்தும் என்று இவர்கள் தங்கள் கருத்தைச் சொல்கின்றனர். இவர்கள் எடுத்துக் காட்டுவது இந்தோனேஷியாவைத் தான். அங்கு 20 கோடி மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் இரண்டு மொழிகளுக்கும் மேலாக பல மொழிகளைப் பேசுபவர்கள். ஆனால் இங்குள்ள சில பகுதிகளில் மறதி நோய் அதிகமாக உள்ளது என்பதை இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ப்ரெய்ன் ரிஸர்வ் கொள்கையை முன் வைப்பவர்கள் மூளை புதிய தொடர்புகளை செல்களில் பெறுவதால் வயதாகும் போது தனது திறமையைத் தக்க வைத்துக் கொள்கிறது என்றும் இது இரத்த ஓட்டத்தை அதிகமாக்குவதோடு ஆக்ஸிஜனையும் உணவுச்சத்துக்களையும் மூளையின் தேவையான பகுதிகளுக்கு விநியோக்கிறது என்றும் கூறுகின்றனர்.
இன்னும் ஆராய்ச்சி தீவிரப்படுத்தப்படுவதால் மறதி நோயைக் கட்டுப்படுத்த உள்ள இதர வழிகளும் கண்டுபிடிக்கப்படும் – விரைவில்!
பல்மொழி வல்லுநராக கின்னஸ் ரிகார்டில் பதிவு பெற்ற சாதனையாளர் யார் தெரியுமா?
கனடாவைச் சேர்ந்த பவல் அலெக்ஸாண்டர் ஜனுலுஸ் (Powell Alexander Janulus) என்பவர் தான் பல்மொழி வித்தகர்! 1939ம் ஆண்டு பிறந்த இவர், 42 மொழிகளைக் கற்றவர். இந்த மொழிகள் அனைத்திலும் இவரால் பேச முடியும்.
லைபீரியாவில் பிறந்த ஜியாத் ஃபாஸா (பிறப்பு 1954) 59 மொழிகள் அறிந்தவர். இப்போது பிரேஜிலில் வாழும் இவர் பல்வேறு நேரடி நிகழ்ச்சிகளில் அந்தந்த மொழிகள் பேசுவோருடன் அதே மொழியில் பேசி அசத்தியவர். இன்னொரு பிரமிக்க வைக்கும் செய்தியும் உண்டு. ஹாங் காங் கவர்னராக 1854 முதல் 1859 முடிய இருந்த சர் ஜான் பௌரிங் (Sir John Bowring, Governor of Hong Kong from 1854 to 1859) 200 மொழிகள் அறிந்தவராம். இவற்றில் நூறு மொழிகளில் இவர் பேசி இருக்கிறார்.
எது எப்படி இருந்தாலும் தன் தாய்மொழியைத் தவிர இன்னும் ஒன்றோ அல்லது இரண்டோ எத்தனை மொழிகளைக் கற்றாலும் அது வரவேற்கத்தக்க ஒன்று தானே! அவர்களின் வாழ்க்கை திறம்பட அமைவது நிச்சயமே!
**