
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,297
Date uploaded in London – 12 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
8-10-26 கல்கி ஆன் லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
மனிதன் இறைவனை அடைவதற்கான வழி! – ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!
ச. நாகராஜன்
இறைவனின் எல்லா வடிவங்களிலும் மனித வடிவமே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தெய்வம் மனுஷ்ய ரூபேண – தெய்வம் மனித வடிவத்தில் இருக்கிறது -. இதில் நீங்கள் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும்.
உங்களின் புலன்களை சரியான விதத்தில் பயன்படுத்துங்கள். அப்போது தான் நீங்கள் உண்மையான மனிதராக ஆவீர்கள்.
மனிதன் என்பவன் யார்?
மனிதகுலத்தைச் சரியாகப் படிப்பவனே மனிதன்.
இதன் அர்த்தம் என்னவெனில், எண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகிய அனைத்தும் ஒன்று இன்னொன்றுடன் லயத்துடன் பொருந்தி இருக்க வேண்டும் என்பது தான்.
எண்ணம், சொல், செயல் ஆகியவை இணைந்திருப்பதே மனிதத்தன்மை ஆகும்.
த்ரிதளம், த்ரிகுணகரம், த்ரிநேத்ரம்ச த்ரியாயுதம்;
த்ரிஜன்ம பாப சம்ஹாரம் ஏக பில்வம் சிவார்ப்பணம்
திரிதளமுள்ள வில்வத்தை மூன்று ஜென்ம பாவத்தைப் போக்கும் திரிசூலம் ஏந்தியுள்ள முக்கண்ணனான சிவபிரானுக்கு அர்ப்பணம் செய்யுங்கள்.
உங்கள் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யுங்கள்.
இறைவன் உங்களுடனேயே இருந்தாலும் கூட, உங்களுக்குள்ளேயே இருந்தாலும் கூட,, உங்களைச் சுற்றியே இருந்தாலும் கூட நீங்கள் அவனை வெளியிலே தேடி உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள். நேரத்தை விணடிக்காதீர்கள். ஏனெனில் காலமே இறைவன். ஆகவே தான் அவன் கால ஸ்வரூபாய நமஹ என்று துதிக்கப்படுகிறான்.
நீங்கள் இறைவனுடன் எல்லா சமயத்திலும் நெருக்கமாக இருக்கும்போது, நீங்கள் ஏன் கவலைக்கு இடம் கொடுக்க வேண்டும்? கடவுள் உங்களைத் தவிர வேறேங்கும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள புனிதமான பணிகளை மேற்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
ஹஸ்தஸ்ய பூஷணம் தானம்
சத்யம் கண்டஸ்ய பூஷணம்
ஸ்ரோத்ரஸ்ய பூஷணம் சாஸ்த்ரம்
கைகளுக்கு அணி தானம் செய்வது
கழுத்திற்கு அணி சத்தியமே
புனிதமான சாஸ்த்ரமே காதுக்கு அணி
இவையே நீங்கள் உங்களை அலங்காரம் செய்து கொள்ள இறைவன் விரும்பும் ஆபரணங்களாகும்.
ஆனால் மனிதனோ உலகியல் ஆபரணங்களுக்காக ஏங்குகிறான்; அதனால் தன்னை தூஷணத்திற்கு (கெட்ட விமரிசனத்திற்கு) உட்படுத்திக் கொள்கிறான்.
உங்கள் அனைவரிடமும் அன்பே அடிப்படையான அம்சமாகும். அது புனிதமானது; மாறாதது. ஆனால் அந்த புனிதமான அன்பை நீங்கள் லோகாயத உலகில் திசை திருப்பி உங்களை வசைக்கும் கண்டனத்திற்கும் உள்ளாக்கிக் கொள்கிறீர்கள். புனிதமான பணிகளை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கென நற்பெயரை சம்பாதியுங்கள். உங்கள் உடல் நீடித்திருப்பது இறைவனாலேயே தான். ஆகவே அதை உன்னதமான செயல்களுக்காகப் பயன்படுத்துங்கள்.
தீயதைப் பார்க்காதே, நல்லதையே பார்,
தீயதைக் கேட்காதே, நல்லதையே கேள்,
தீயதைப் பேசாதே, நல்லதையே பேசு,
தீயதை எண்ணாதே, நல்லதையே எண்ணு,
தீயதைச் செய்யாதே, நல்லதையே செய்,
இதுவே இறைவனை அடைவதற்கான வழி!
உங்கள் உடலில் உள்ள எல்லா அங்கங்களையும் சுயநலமற்ற செயல்களில் ஈடுபடுத்தி அவற்றைப் புனிதமாக்குங்கள். ஆனால் இதை செயல் படுத்துவது சுலபமல்ல. மனிதன் எதைச் செய்தாலும் அதில் கொஞ்சம் சுயநலம் இருக்கவே செய்கிறது. சுயநலம் என்பது தேவை தான், ஆனால் அது ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும்.
கடவுள் அருள் கடல். உங்கள் கையில் இருக்கும் பாத்திரத்தின் அளவே தான், அதில் நீங்கள் எவ்வளவு கடல்நீரை எடுக்க முடியும் என்பது. நீங்கள் அதிகமாக இறைவனின் அருளைப் பெற வேண்டுமெனில், நீங்கள் உங்கள் பாத்திரத்தின் அளவைப் பெரிதாக்க வேண்டும். அதாவது உங்கள் அன்பை அதிகரிக்க வேண்டும். அன்பை விஸ்தரிப்பது வாழ்க்கையாகும். அன்பைச் சுருக்குவது மரணமடைவதாகும்.
அன்பைப் பெருக்குங்கள், அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதுவே உண்மையான தியாகமாகும்.
ந கர்மணா ந ப்ரஜயா, தனேன
த்யாகேனைகேன அம்ருதத்வமானஸு
(அமரத்தன்மை செயலினாலோ, ப்ரஜைகளாலோ, செல்வத்தினாலோ அடைய முடியாது; தியாகம் ஒன்றினாலேயே மட்டுமே அடையப்படுவதாகும்)
ஓ, கடவுளே, நீ எனக்குத் தந்த இதயத்தை நான் உன்னிடம் அர்ப்பணிக்கிறேன். உனது தாமரைப் பாதங்களுக்கு இதை விட வேறெதை என்னால் அர்ப்பணிக்க முடியும்? தயவு செய்து எனது பிரார்த்தனையை ஏற்றுக் கொள். – (ஒரு தெலுங்கு கவிதை)
இதுவே கடவுளுக்கு ஒருவன் செய்யும் உண்மையான அர்ப்பணமாகும்.
9-10-2001 அன்று பிரசாந்தி நிலையத்தில் நடந்த பாதுகா மஹோத்ஸவத்தில் பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரை!