
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,307
Date uploaded in London – 15 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
14-10-26 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
எல் நினோ தரும் எச்சரிக்கை!
ச. நாகராஜன்
எல் நினோ என்றால் என்ன? எப்படி இந்தச் சொல் வழக்கிற்கு வந்தது என்பதை அறிய சாமானியரும் விரும்புவர்.
பசிபிக் பெருங்கடலில் உள்ள சூடான நீருடன் சம்பந்தப்பட்டது இந்தச் சொல். சாதாரணமாக பூமியின் மத்தியகோட்டிற்கும் கிழக்கு பசிபிக் பிரதேசத்திலும் உள்ள நீரின் உஷ்ணத்தை விட அதிக உஷ்ணமானது பசிபிக் பெருங்கடலில் உள்ள நீர். இந்த உஷ்ணம் விளைவிக்கும் தட்பவெப்ப வேறுபாடே எல் நினோ என்று சொல்லப்படுகிறது.
எல் நினோ என்ற வார்த்தை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள பெருவில், முதன்முதலாக மீனவர்கள் பயன்படுத்தி வந்த வார்த்தையாகும். இதற்கான உண்மையான அர்த்தம் சின்னப் பையன் என்பதாகும். எல் நினோவை கிறிஸ்துமஸ் பையன் என்றும் சொல்வர். ஏனெனில் உஷ்ணமான கடல் நீரானது குளிர்காலத்தில் மிக அதிகமாகி அதிகமாகி டிசம்பரில் கிறிஸ்துமஸ் சமயம் உச்ச கட்டத்தை அடையும். இந்த அதி உஷ்ண நீரானது மீனவர்களை வெகுவாகப் பாதிக்கும். அவர்கள் பிடிக்கும் மீன்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்.
இது இப்போது உலகையே அச்சுறுத்தும் தட்பவெப்ப நிலை மாற்றத்தைச் சுட்டிக்காட்ட பயன்படுத்தப்படுகிறது.
இந்த எல் நினோ El Nino Southern Oscillation ENSO என்று அறியப்படுகிறது. இது உலகின் கால நிலையையே மாற்றவல்லது. உலகின் பல பகுதிகளில் வெள்ள அபாயத்தை உருவாக்க வல்லது. பஞ்சம் ஏற்படும். புயல் அடிக்கும். எங்கு பார்த்தாலும் வெப்ப அலைகள் உருவாகி மக்களை வருத்தும்,
இதனால் பிராணிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். அதிக வெள்ளத்தால் விவசாயம் வெகுவாகப் பாதிக்கப்படும். அதனால் உணவு பற்றாக்குறை உலகின் பல பகுதிகளிலும் ஏற்படும். ஆகவே சந்தையில் பொருள்களின் வரத்துக் குறைவதால் விலைவாசி ஏறும். நாட்டின் பொருளாதாரமே வெகுவாக பாதிக்கப்படும்.
இந்த எல் நினோவிற்கு எதிராக இன்னொன்றும் இருக்கிறது. அது தான் லா நினா! எல் நினோ வெப்பத்தை தரும் என்றால் லா நினா உஷ்ணத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை அதிகரிக்கும். இதுவும் தட்பவெப்ப நிலையை மாற்றும்.
இந்த 2026ம் ஆண்டு எல் நினோ மிகுந்த அபாய எச்சரிக்கையைத் தருகிறது.
டிசம்பர் 2026இல் இது உச்ச கட்ட அபாயத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதை சூபர் எல் நினோ என்று சமூக ஊடகங்கள் வர்ணிக்க ஆரம்பித்து விட்டன.
45 நாடுகளில் உள்ள 27 கோடி பேர்கள் உணவுப் பற்றாக்குறையால் திண்டாடப் போகிறார்கள் என்பது எச்சரிக்கை. ஏற்கனவே உள்ள பற்றாக்குறையை விட இது ஐந்து கோடி அதிகம்!
இந்த எச்சரிக்கை முன்பேயே விடுவிக்கப்பட்டு விட்டதால் ஐ.நாவின் உலக உணவுத் திட்டம் (WFP – World Food Programme) வெள்ளம், பஞ்சம் ஆகியவற்றை எதிர்கொள்ளத் தயாராகி விட்டது.
எந்த நாடுகளில் எல் நினோ ஏற்படும்? இதையும் நிபுணர்கள் கூறி விட்டனர். ஏற்கனவே வறுமையால் வாடும் நாடுகள் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படப் போகின்றன.
லத்தீன் அமெரிக்காவும் கரிபியனும் உணவுப் பற்றாக்குறையால் தவிக்கப் போகின்றன. 160 லட்சம் பேர்கள் பாதிக்கப்பட போகின்றனர்.
அடுத்து கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்காவில் 180 லட்சம் பேர்கள் பாதிக்கப்பட போகின்றனர்.
ஆசியாவிலும் பசிபிக் பிராந்தியத்திலும் எல் நினோவினால் எட்டு லட்சம் பேர்கள் பசியால் வாடப் போகின்றனர்.
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் பஞ்சம் ஏற்படப் போகிறது. இதனால் 60 லட்சம் பேர்கள் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படப் போகின்றனர்.
மத்திய கிழக்கு மற்று வட ஆப்பிரிக்காவில் எல் நினோவின் தாக்கம் இன்னும் அதிகமாகப் போகிறது. இன்னும் 330 லட்சம் பேர்கள் அதிகமாகப் பாதிக்கப்படப்போகின்றனர்.
இந்தியாவை இந்த எல் நினோ எப்படி பாதிக்கப் போகிறது?
நம் நாடு பெரும்பாலும் தென்மேற்குப் பருவக் காற்றை நம்பியே உள்ளது. 64 சதவிகிதம் உணவு உற்பத்தி இந்தப் பருவக் காற்றை நம்பித்தான் உள்ளது.
இதனால் தான் நமது விவசாயிகள் விவசாயத்தைச் செய்து உணவு உற்பத்தியைப் பெருக்குகின்றனர். எல் நினோ மழை வருவதைத் தடுத்தாலோ அல்லது தாமதப்படுத்தினாலோ நமது உணவு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும். அத்துடன் வெப்ப அலைகள் மனிதரைத் தாக்க ஆரம்பித்தால் சொல்லவொண்ணா விளைவுகள் ஏற்படும். மனிதர்கள் வெளியில் செல்வது பாதிக்கப்படுவதோடு வெளியில் வேலை பார்க்கும் பலரின் உயிருக்கு இது, ஆபத்தை விளைவிக்கும்.
ஆகவே இந்த எல் நினோ அபாயத்தைத் தடுக்க, டபிள்யூ எஃப் பி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை “எதிர்பார்த்து செயல்படுதல்” என்ற திட்டத்தின் கீழ் வரப்போகும் அபாயத்தை எதிர்பார்த்து நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது. பாதிக்கப்படவிருக்கும் பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு தரப்பட்டுள்ளது. அங்குள்ள நீர் அமைப்புகளை வலுப்படுத்த வற்புறுத்தியுள்ளது. நீர்பாசன, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறது. அத்துடன் மட்டுமல்லாமல் அழிவுக்காலத் தடுப்பு நடவடிக்கையாக நிதி உதவியை அளிக்க முன்வந்துள்ளது. சேமிப்புத் திட்டங்கள், கடனுதவி, இன்ஷூரன்ஸ் ஆகியவை இதில் அடங்கும்.
மே 2026 முதல் சாட், எல் சால்வேடார், கௌதமாலாம் மௌரிடேனியா, தென் சூடான், உகாண்டா ஆகிய நாடுகளில் டபிள்யூ எஃப் பி, 140 லட்சம் அமெரிக்க டாலர்களை உதவித் தொகையாக அளித்துள்ளது. இதனால் ஐந்து லட்சம் பேர்கள் பயனடைந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஏராளமான உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. விலைவாசி திடுதிப்பென்று ஏறாமல் தடுக்கப்படுகிறது.
இதில் செலவழிக்கப்படும் ஒவ்வொரு அமெரிக்க டாலரும் ஏழு டாலர் சேதத்தைத் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2023-2024ம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் எல் நினோவை ஒட்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை நல்ல பயனைத் தந்துள்ளதை அனைவரும் அறிவர்.
உலகில் உள்ள மனிதாபிமானம் மிக்க செல்வந்தர்கள் இந்த உலக நிறுவனத்திற்குப் பெருமளவில் நன்கொடை அளிக்கின்றனர். சேவை மனப்பான்மை உடைய மக்களும் நிதி உதவி அளிக்கின்றனர்.
என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்பதை விட எல் நினோ அபாயத்தை எதிர்காலத்தில் எப்படித் தடுப்பது என்று உலகளாவிய விதத்தில் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. செய்வோமா?
***