கம்ப ராமாயணத்தில் 90 கேள்விகள் (Post.16,309)


Written by London Swaminathan

Post No. 16,309

Date uploaded in London – 15 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இதற்கு முன்னர் வெளியிட்ட 80 கேள்விகளும், விடைகளும்  எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.

81

பெண்களை கேடு விளைவிக்கும் தூமகேது என்று கம்பன் வசை பாடியது ஏன்?

82

வள்ளுவர் யானை மீது ஏறி பறை முரசு கொட்டி அறிவித்த செய்தி என்ன ?

83

கொடு மனக் கூனி என்று நமக்கு அறிமுகப்படுத்தும் கூனியின் மனக்கொதிப்பினைக்  கம்பன் எப்படி வருணிக்கிறான்?

84

கூனியை முதலில் திட்டத் துவங்கியபொழுது, மயில்கள் பற்றிய ஒரு இயற்கை அற்புதத்தை, கைகேயி  சொன்னாள்; அது என்ன இயற்கை அற்புதம் ?

85

ராமனை 14 ஆண்டுகள் காட்டுக்கு அனுப்பு என்பது கூனியின் கெட்ட போதனையா ? மை டியர் மந்த்ரா ! உன் ஐடியா என்னா ? என்றாள் கைகேயி

86

கைகேயியை மூதேவி என்று எப்படிக் கம்பன் பகிரங்கமாக வசைபாடுகிறான் ?

87

ராமன் மீது சத்தியம் என்று தசரதன் சொன்ன விஷயம் என்ன ?

88

இரண்டு வரங்களையும் கைகேயி கேட்டவுடன் கீழே விழுந்த தசரதனுக்கு கம்பன் சொன்ன  உவமை என்ன ?

89

பெண்களை கம்பன், மீண்டும் எப்படித் தாக்குகிறான் ? நம்ம ஊர் TV நீலாம்பரிகளைக் கம்பன் எப்படிச் சித்தரிக்கிறான் ?

90

அயோத்தி நகரில் அதிகாலைப் பொழுதில் கேட்ட ஒலிகள் என்ன ?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

விடைகள் 

81. ராமனுக்கு நாலாவது அறிவுரை வழங்கிய வசிட்டன் சொல்கிறான் :

 ‘தூமகேது புவிக்கு எனத் தோன்றிய

வாம மேகலை மங்கையரால் வரும்

காமம் இல்லை எனின், கடுங் கேடு எனும்

நாமம் இல்லை; நரகமும் இல்லையே.’

இந்த உலகில் உள்ளவர்க்குத் (தீமை விளைக்கத் தோன்றும்  தூமகேது  என – வால் நட்சத்திரம் என்று சொல்லும்படி,பிறந்துள்ள, அழகிய மேகலாபரணம் அணிந்த பெண்களால்; -உண்டாகின்ற; காம நோய்மட்டும் இல்லையானால்;  கொடிய; கெடுதி என்னும் சொல்லே இல்லையாகும்; நரகத் துன்பமும் இல்லை.’

பெருங்கேடு விளைதற்கு உற்பாதம் தூமகேது. அதுபோல மங்கையரும்

கேடு விளைப்பர். இதே அறிவுரையை பின்னொரு சமயம் சுக்ரீவனுக்கு ராமனும் சொல்லி எச்சரிக்கிறான் ; அந்தப் பாடல் கிஷ்கிந்தா காண்டத்தில் வருகிறது .

*******

82.ராமனும் வசிட்டனும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வணங்கியதைச் சொன்ன  கம்பன், அடுத்தபடியாக வள்ளுவர் தம் தொழிலைச் செய்ததை உரைக்கிறான்:

ஏவின வள்ளுவர், ‘இராமன், நாளையே

பூமகள் கொழுநனாய், புனையும் மௌலி; இக்

கோ நகர் அணிக!’ என, கொட்டும் பேரி அத்

தேவரும் களி கொள, திரிந்து சாற்றினார்.

 (அரசனால்) ஏவப்பட்ட வள்ளுவர்;  இராமன் நாளைக்கே;  நிலமகள் கணவனாய்; மகுடம் சூடுவான்;  (ஆதலால்) இந்த நகரத்தை; அலங்கரிக்க; என்று சொல்லி, முரசத்தை  விண்ணுலகத்துத் தேவரும் மகிழ்ச்சிகொள்ள;  நகர் எங்கும் சுற்றி, அடித்து முழக்கினார்.

*******

83.தோன்றிய கூனியும், துடிக்கும் நெஞ்சினாள்;

ஊன்றிய வெகுளியாள்; உளைக்கும் உள்ளத்தாள்;

கான்று எரி நயனத்தாள்; கதிக்கும் சொல்லினாள்;

மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள்.

அவ்வாறு வெளியில் வந்த கூனியும்;  (நகர் அணிசெயப் பெறுவருகண்டு ஆத்திரம் அடைந்து) கோபத்தால் துடிக்கின்ற மனமுடையவளாய்;

கோபம் உடையவனாய்; வேதனைப்படும் மனம் உடையவளாய்;

நெருப்புக் கக்கி எரிகின்ற கண்ணுடையளாய்; படபடப்பாகத் தோன்றும் சொல்லுடையவளாய்; மூவுலகங்களுக்கும்;  ஓர்  (தீர்க்க முடியாத) துன்பத்தை; செய்யத் தொடங்குகிறவளாய் (ஆயினள்)

****

84.சந்திரனை பாம்பு விழுங்கி கிரகணம் ஏற்படும் நேரத்தில் திங்கள் ஒளி வீசுவது போல தூங்கிக் கொண்டிருக்கிறாயே என்று கைகேயியைத் தட்டி எழுப்பிய கூனியான மந்தரை விஷபோதனை ஏற்றினாள்; கைகேயி, கூனியைத்திட்டி கீழ்வரும் பாடலை, கைகேயி சொன்னாள்  :

1470.  ‘வெயில் முறைக் குலக் கதிரவன்

     முதலிய மேலோர்,

உயிர் முதல் பொருள் திறம்பினும்,

     உரை திறம்பாதோர்;

மயில் முறைக் குலத்து உரிமையை,

     மனு முதல் மரபை;

செயிர் உற, புலைச் சிந்தையால்,

     என் சொனாய்? – தீயோய்!

  கொடியவளே!; ஒளி உடைய சிறந்த சூரியன் முதலாகிய

உயர்ந்தோர்கள், உயிர் போவதாயினும்சத்தியத்தினின்றும்

மாறுபடார்; (அத்தகைய) -மயிலினது

முறைமையைக் கொண்ட அரசகுலத்து உரிமையைஉடைய; 

வைவச்சுத மனுவின் வழித் தோன்றல்களாக உள்ள

அயோத்தியின் அரச பரம்பரையை, குற்றம் பொருந்தும்படி;

கீழ்மைப் புத்தியால்  யாது பேசினாய்?’

     குலத்தின் முதல்வன் சூரியன்; அவன் மகனாய் இருந்து  முதலில் அயோத்தியில் அரசாண்டவன் மனு.  ஆதலால் இரண்டையும் கூறினார்.

மயில்முறைக் குலத்து உரிமையாவது – மயிலின் குஞ்சுகளுள்  முதற் குஞ்சின் தோகை மட்டுமே பொன்னிறம் பெறும்.

அதுபோல் மூத்தமகன் அரசுரிமை பெறுதலும் ஆம். அவ்வுரிமையை

உடையமரபு ‘மனுமுதல் மரபு’ என்றார். எனவே, மூத்த மகனாகிய இராமன் அரசுரிமை பெறுதலும்,  பரதன்,  இலக்குவன்,  சத்துருக்கனன் முதலியோர் பெறாதொழிதலும் அம்மரபின் செய்தியே என்றாளாம். இனி, கேகயம் என்பது மயிலைக் குறிக்கும்சொல் ஆதலின், ‘கேகய குலத்து உரிமையை’ என்று பொருள்கூறி,  கைகேயி தான் பிறந்த குலத்தைச்சுட்டினாள் என்றும் பொருள் கொள்ளலாம்.

கம்பனுக்கு இயற்கை பற்றியிருந்த  அறிவினை அறிய இது உதவுகிறது அத்தோடு கேகய என்பதைச் சிலேடைப் பொருளில் பயன்படுத்தியதால் அவனுடைய சம்ஸ்க்ருத மொழி அறிவினையும் அறிய முடிகிறது  மயில் குலத்தில் முதல் குஞ்சசுக்கே தலைமை உரிமை !

*******

85.ஆமாம் அவள்தான் இதை ஐடியா வைச் சொல்லிக்கொடுத்தது.

MY DEAR MANTHRAA? WHAT’S UR IDEAA , PLEASE?

மை டியர் மந்த்ரா ! உன் ஐடியா என்னா ? என்றாள் கைகேயி

சம்பரன் என்ற அசுரனுடன் தசரதன் போர் புரிந்த காலத்தில்   தயரதனுக்குத் தேர்ச்சாரதியாக இருந்தவள் கைகேயி. அப்போது ஓர் அபாயத்தில் தயரதனை மீட்டதற்கு அவன் உவந்து அவளுக்கு இரு வரம் பெறுக எனக் கொடுத்தான். அவள் வேண்டும்போது பெறுவதாகச் சொல்லி  விட்டாள்; அவற்றை இப்போது  கேட்டுப் பெறுக என்றாள் மந்தரை.

இரு வரத்தினில், ஒன்றினால்

     அரசு கொண்டு, இராமன்

பெரு வனத்திடை ஏழ் – இரு

     பருவங்கள் பெயர்ந்து

திரிதரச் செய்தி, ஒன்றினால்;

     செழு நிலம் எல்லாம்.

ஒருவழிப்படும் உன் மகற்கு;

     உபாயம் ஈது’ என்றாள்.

 அவ்விரண்டு வரங்களுள்; ஒன்றினால் அரசாட்சியை  உன் மகனதாக ஆக்கிக்கொண்டு;  மற்றொன்றினால்;இராமன் -;

 பெரிய காட்டின்கண்; பதினான்கு ஆண்டுகள்(அயோத்தியிலிருந்து)நீங்கி ஓரிடத்தில் இல்லாமல் சுற்றியலையச் செய்வாயாக;  (செய்தால்) உன் மகனாகிய  பரதனுக்கு வளப்பமான உலகமுழுதும்

அடங்கி நேர்படும்;   இதுவே உபாயமாகும் என்றாள்

*******

86.மந்தரை என்னும் கூனி போன பின்னர், கைகேயி எல்லா ஆபரணங்களையும் கழற்றி வீசி எறிந்து விட்டு தலை விரி கோலம் ஆனாள்; கம்பன் கண்ட காட்சி இதோ :

நவ்வி வீழ்ந்தென, நாடக மயில்

     துயின்றென்ன,

‘கவ்வை கூர்தரச் சனகி ஆம்

     கடி கமழ் கமலத்து

அவ்வை நீங்கும்’ என்று அயோத்தி வந்து

     அடைந்த அம் மடந்தை

தவ்வை ஆம் என, கிடந்தனள்,

     கேகயன் தனையை.

கேகயன் மகளாகிய கைகேயி, மான் விழுந்தாற் போலவும்,

ஆடும் மயில், ஆடல் ஒழிந்து தூங்கினாற் போலவும், துன்பம் மிக , செந்தாமரையில்  வீற்றிருக்கும் திருமகள் அயோத்தியை விட்டு நீங்குவாள்’ என்று கருதி, அயோத்தி நகரத்த்துக்கு வந்த லட்சுமியின் அக்காள் ஆகிய மூதேவி போலக்  கிடந்தாள்.

     ஓடும் மானையும் ஆடும்  மயிலையும் கேகயன் மகளுக்கு உவமை கூறுவது இந்நாள் வரை அவளிடம் இருந்த இனிய தோற்றத்தைக் காட்டியது.

திருமகள் இருந்த இடத்தைக் கைப்பற்றுவோம் என்று கருதிமூதேவி அங்கு வந்து குடிபுகுந்ததுபோலக் கிடந்தாள் என்பது கைகேயியைக் குறித்தது ; தவ்வை = மூதேவி.

***********

87.கைகேயி இருந்த அலங்கோலத்தைக் கண்ட தசரதன் அதிர்ச்சி அடைந்து அன்பே ! ஆருயிரே! என்ன வேண்டும் உனக்கு ; எது கேட்டாலும் தருவேன் ; ராமன் மீது சத்தியம் என்கிறான் :

கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன்,

வெள்ள நெடுஞ் சுடர் மின்னின் மின்ன நக்கான்;

‘உள்ளம் உவந்துள செய்வென்; ஒன்றும் லோபேன்;

வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை’ என்றான்.

தேன் வழியும் கூந்தலையுடைய கைகேயியினது   எண்ணத்தை அறியாத தயரதன், மின்னல்போல,  சிரித்து,உன் மனம் விழைந்தனவற்றைச் செய்வேன்;  அதில் சிறிதும் கருமித்தனம் கிடையாது; நினக்கு மகனும் பெருவள்ளுலுமான இராமன்மேல்

சத்தியம்;’ என்றான்( கைகேயி இந்நாள்வரை இராமனிடம்

பேரன்புடையவன் என்னும் உறுதியால் ‘ உன் மைந்தன்இராமன்’ என்றான்.)

**************

88.காட்டில் பாம்பு கடித்த யானை விழுந்ததைக் கண்ட கம்பன் அந்த உவமையை இங்கே பயன்படுத்துகிறான் :

நாகம் எனும் கொடியாள், தன் நாவின் ஈந்த

சோக விடம் தொடர, துணுக்கம் எய்தா,

ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து, அராவின்

வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்.

பாம்பு போன்ற கொடியவளாகிய கைகேயி, தனது நாக்கினின்றும் விஷம் போன்ற சொல்லை வெளியிட்டவுடனே   நடுக்கம் அடைந்து, விஷம் ஏறிய யானை போல  (தயரதன்) கீழே விழுந்தான்.

************

89.கைகேயியின் காலில் விழுந்து கெஞ்சினான் தசரதன்; அவள் மனம் மாறவில்லை என்று தெரிந்தவுடன் எல்லாப் பெண்களையும் கொல்ல வேண்டும் என்று எண்ணுகிறான் ; பின்னர் கைகேயியை கொடிய விஷமே எல்லோரையும் அழிக்கும் நெருப்பே என்று வசைபாடுகிறான் ; இதோ இரண்டு பாடல்கள்:

நாரியர் இல்லை இஞ் ஞாலம் எங்கும்” என்ன,

கூரிய வாள்கொடு கொன்று நீக்கி, யானும்,

பூரியர் எண்ணிடை வீழ்வென்’ என்று, பொங்கும் –

வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான். 

     கைகேயியின் மேல் எழுந்த சீற்றத்தால் தயரதன் பெண்கள்

கூட்டத்தையே அழித்துவிட எண்ணினான்.ஆனால், அச்செயல் தகாது என்று அடங்கினான். இதனால் அவன் கடுங்கோபம்  வெளிப்படுகிறது.    

அச் சொல் கேளா, ஆவி புழுங்கா,

     அயர்கின்றான்,

பொய்ச் சொல் பேணா வாய்மொழி மன்னன்,

     பொறை கூர,

‘நச்சுத் தீயே பெண் உரு அன்றோ?’

     என, நாணா,

முச்சு அற்றார்போல், பின்னும் இரந்தே

     மொழிகின்றான்;

நச்சுத் தீயே பெண் உரு அன்றோ’ என -‘(கொல்லும் தன்மையுள்ள) நஞ்சும், தீயுமே இப்பெண்ணின் தோற்றமாக வந்துள்ளனவன்றோ’ என்று பேசுகின்றான்.

****************

90.அயோத்தியில் காலை நேரத்தில் கேட்ட ஓசைகள்

தழை ஒலித்தன; வண்டு ஒலித்தன;

     தார் ஒலித்தன; பேரி ஆம்

முழவு ஒலித்தன; தேர் ஒலித்தன;

     முத்து ஒலித்து எழும் அல்குலார்

இழை ஒலித்தன; புள் ஒலித்தன;

     யாழ் ஒலித்தன; – எங்கணும் –

மழை ஒலித்தனபோல் கலித்த,

     மனத்தின் முந்துறு வாசியே.

     எங்கணும் – நகரின் எல்லா இடங்களிலும்;  தழை ஒலித்தன –

பீலிக்குஞ்சங்கள்விளங்கின;  வண்டு ஒலித்தன – வண்டுகள் ஆரவாரம்

செய்தன; தார் ஒலித்தன -மலர்மாலைகள் விளங்கின; பேரி ஆம் முழவு ஒலித்தன – மலர்மாலைகள் விளங்கின; பேரிஆம் முழவு ஒலித்தன -பேரிகை ஆகிய வாத்தியங்கள் ஒலித்தன;  தேர் ஒலித்தன -தேர்கள் தெருவில் ஓடும்போது  ஒலி எழுப்பின;  முத்து  ஒலித்து  எழும் அல்குலார் – முத்துவடங்கள்உராய்ந்து ஒலி யெழுப்பும் இடையினையுடைய  பெண்களுடைய;  இழை ஒலித்தன – அணிகலன்கள் ஒலித்தன; புள் ஒலித்தன – பறவைகள் கூவின;  யாழ் ஒலித்தன – வீணைகள் இசைத்தன;

மனத்தின் முந்துறு வாசி – மனத்தின் வேகத்தைக் காட்டிலும் விரைந்து ஓடும் குதிரைகள்; மழை ஒலித்தன போல் – மேகங்கள் முழங்கினாற்போல  ஒலித்தன.

XXX                        

வங்கியல் பல தேன் விளம்பின.;

     வாணி முந்தின பாணியின்

பங்கி அம்பரம் எங்கும் விம்மின;

     பம்பை பம்பின; பல் வகைப்

பொங்கு இயம் பலவும் கறங்கின;

     நூபுரங்கள் புலம்ப, வெண்

சங்கு இயம்பின; கொம்பு அலம்பின,

     சாம கீதம் நிரந்தவே.

இசைக் குழல்கள் பலவும் தேன்போலும்  இனிய இசையை ஒலித்தன;  இசைப்பாட்டின் வகைகள் வானம் எங்கும் நிறைந்தன; பம்பை என்னும் வாத்தியங்கள் பேரொலி  செய்தன;  பலவகையான;

மகளிரின் காற்சிலம்புகள் ஒலிக்க;  வெள்ளிய வளையல்கள் அவற்றிற்கேற்ப ஒலித்தன;  ஊது கொம்புகள் ஒலித்தன;  சாமவேத இசை நிரம்பின. அயோத்தி நகரில் காலையில் எழுந்த பல்வேறு ஒலிகள்குறிக்கப்பட்டன. 

—subham—

Tags – கம்ப ராமாயணத்தில், 90 கேள்விகள்

Leave a comment

Leave a Reply