
written by London Swaminathan
Post No. 16,361
Date uploaded in London – 31 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கம்ப ராமாயணத்தில் சுமார் 10,000 பாடல்கள் உள்ளன; அவ்வளவையும் படிப்பதற்கு எல்லோருக்கும் நேரம் கிடைக்காது; முழுக்க படிக்க வேண்டாம்; சுவையான பகுதிகளை மட்டும் படியுங்க!! மேலும் கம்பன் ஒவ்வொரு விஷயத்துக்கும் 10 அல்லது 15 பாடல்களைச் சொல்வதால் அவைகளைப் படிக்கும் பொழுது தெவிட்டிவிடுகிறது ; ஆகையால்தான் முக்கிய பகுதிகளை மட்டும் கேள்வி – பதில் வடிவில் தருகிறேன்; பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டங்களை முடித்து இப்பொழுது கிஷ்கிந்தா காண்டத்தில் இருக்கிறோம் ; இதிலும் இதற்கடுத்த சுந்தர காண்டத்திலும் ஆஞ்சனேயரின் பெருமையைக் காண்கிறோம்; சுவையான பகுதிகள் என்பதைச் சொல்லத்தேவை இல்லை.
இதற்கு முன்னர் வெளியிட்ட 240 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும். கம்ப ராமாயணம் பற்றி நான் எழுதிய இரண்டு நூல்களையும் வாங்கிப் படிக்க முடிந்தால் படியுங்கள்.

241
கிருஷ்ண பரமாத்மா எடுத்த விஸ்வரூபத்தைக் கண்டு அர்ஜுனன் வியந்தான் ; இங்கு கிருஷ்ணனுக்கு முந்தைய அவதாரமான ராமன் வியக்கும் அளவுக்கு அனுமன் எடுத்த விஸ்வரூபம் எப்படிக் காட்சி அளித்தது ?
242
விஸ்வரூபத்தைக் கண்டு அதிசயித்த ராமன் , தம்பி இலக்குவனிடம் என்ன விமர்சனம் செய்தான் ?
243
Flash news! Headline!
வாலிக்கு காலன் (யமன்) வந்தான் – என்ற தலைப்புச் செய்தியுடன் மகிழ்ச்சி பொங்க, சுக்ரீவனிடம் அனுமன் சொன்னது என்ன ?
244
Rama + Sugreeva = New moon Day! அமாவாசை!
ராமனின் பெருமையை அனுமன் விரிவாகக் கூறியவுடன் சுக்ரீவன் ராமனைச் சந்தித்தான் ; அதை அம்மாவாசை (New moon Day) என்று கம்பன் வருணித்தது ஏன்?
245
சரண் உனைப் புகுந்தேன்; என்னைத்
தாங்குதல் தருமம்’ – என்று சுக்ரீவன் சரணடைந்தது எவ்வாறு ?
246
Your Friend is My Friend; Your Enemy is my Enemy too!
ராமன்- சுக்ரீவன் நட்புறவு ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்துக்கள் / விதிகள் என்ன ?
247
Long Live Rama, Long Live Sugreeva- Slogans!
நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் ராமனுக்கு ஜே; சுக்ரீவனுக்கு ஜே; ராமா ஜிந்தாபாத்! சுக்ரீவன் ஜிந்தாபாத்! என்று அனுமன் டான்ஸ் ஆடிய பின்னர் என்ன நடந்தது?
248
நட்புறவு ஒப்பந்தத்தைக் கொண்டாட குரங்குகள் பட்டாசு வெடித்தார்களா? லட்டு விநியோகித்தார்களா? எப்படிக் கொண்டாடினார்கள் ?
249
Where is your wife, Sugreeva? சுக்ரீவன் அரண்மனையில் தட புடலான விருந்து நடந்தது ! உணவு பிரமாதம் !உன் மனைவி எங்கே ? – என்று ராமன் ஏன் கேட்டான்?
250
சுக்ரீவனுக்குப் பதிலாக அனுமன் சொன்ன பதில் என்ன ?
XXXXXXXXXXXXXXXX


விடைகள்
241.அனுமன் எடுத்த விஸ்வரூபம்
மின்உருக் கொண்ட வில்லோர்
வியப்புற, வேத நல் நூல்
பின் உருக்கொண்டது என்னும் பெருமை
ஆம் பொருளும் தாழ,
பொன் உருக் கொண்ட மேரு,
புயத்திற்கும் உவமை போதாத்
தன் உருக்கொண்டு நின்றான்,
தருமத்தின் தனிமை தீர்ப்பான்.
வில்லேந்திய இராமலக்குவர் வியப்படையுமாறு தருமத்தின் தனிமையைப் போக்க வந்தவனாகிய அனுமன் மின்னல் ஒளிவீசும் வடிவம் எடுத்தான் ;வேதம் முதலான சாத்திரங்களே ஒரு வடிவம் எடுத்து வந்தது என்று சொல்லும் பாராட்டுரையும் பொருந்தாது! பொன் மயமான வடிவங் கொண்டமேருமலையும் அனுமனின் தோள்களுக்கு உவமையில் ஒப்பாகாது! அப்பேற்பட்ட பேருருவத்தைக் கொண்டு நின்றான்.
(இராமலக்குவர்களின் தனிமை தீர்ப்பவன் ஆதலின், அனுமன் தருமத்தின் தனிமை தீர்ப்பான் ஆயினான். அனுமன் தருமத்திற்குத் துணையாவன் என்பதை ‘மெய்ம்மையின் வேலி போல்வான்” (3775), அறத்துக்கு ஆங்கொருதனித்துணையென நின்ற அனுமன். (5804) என்ற அடிகளாலும் உணரலாம். அவன் வேத நன்னூல்களே ஓர் உருக்கொண்டு வந்தது போன்றவன் என்றால், அவ்வுரை தாழ்வுடைத்து என்பதாம். இதனால் அவன் வேத சாத்திரங்களிலும் மேம்பட்ட ஞானி ஆவான் என்க. இவையெல்லாம் துளசிதாஸரின் ஹனுமான் சாலீஸாவிலும் வருகிறது!)
கண்டிலன்,உலகம் மூன்றும்
காலினால் கடந்து கொண்ட
புண்டரீகக் கண் ஆழிப் புரவலன்,
பொலன் கொள் சோதிக்
குண்டல வதனம் என்றால்,
கூறலாம் தகைமைத்து ஒன்றோ,
பண்டை நூல் கதிரோன் சொல்ல,
படித்தவன் படிவம்? அம்மா!
முன்பு திரிவிக்கிரமனாக வடிவங்கொண்ட திருமாலான இராமபிரானே அனுமானின் முகத்தைக் காண இயலவில்லை யெனில், அப்பேருருவத்தின் பெருமையைக் கூற எங்ஙனம் இயலும்? திரிவிக்கிரமனாக உலகளந்த திருமாலே இராமனாக வந்துள்ளமையால் ‘உலக மூன்றும் காலினால் கடந்து கொண்ட புண்டரிகக் கண் ஆழிப் புரவலன்’ என்றார். ”மூவுலகும்
ஈரடியால் முறை நிரம்பா வகை முடியத் தாவிய சேவடி” எனச் சிலப்பதிகாரம் (ஆய்ச்சியர் குரவை) உலகளந்த செய்தியைக் கூறுகிறது. கதிரவனின் மாணவனாய், அவனை நெருங்கிப் பாடம் கேட்கும் பெரும் வடிவுடையனாய் விளங்கிய தன்மை புலப்படக் ‘கதிரோன் சொல்லப் படித்தவன் படிமம்’ என்றார்.
அம்மா – வியப்பிடைச்சொல். அனுமனின் பேருருவ (விசுவரூப) வர்ணனையைச் சுந்தர காண்டத்தும் (5326 – 5332) காணலாம்.
*******
242.அனுமனைப் பற்றி இலக்குவனிடம் இராமன் வியந்து பேசுதல்!
தாள்படாக்கமலம் அன்ன தடங்
கணான், தம்பிக்கு, ‘அம்மா!
கீழ்ப் படாநின்ற நீக்கி, கிளர்
படாது ஆகி, என்றும்
நாட்படா மறைகளாலும், நவை
படா ஞானத்தாலும்,
கோட்படாப் பதமே, ஐய!
குரக்கு உருக்கொண்டது’ என்றான்.
தாமரை மலர்போன்ற பெரிய கண்களை உடைய இராமன் தம்பியாகிய இலக்குவனிடம் ஐயனே! இராஜச, தாமச குணங்கள் நீங்கப் பெற்று ஞான ஒளி கெடாமல் எப்பொழுதும் காலவரையறைக்கு உட்படாத வேதங்களாலும், தத்துவ ஞானத்தாலும் கூட அறியப்படாத பரம்பொருள் தத்துவமே குரங்கின் வடிவத்தைக் கொண்டது என்றான்/
(நாட்படா மறைகள் என்றதற்கு – அழியாது நிலைத்து நிற்கும் வேதங்கள் என்பது பொருள். வேதங்களுக்கும்
ஞானத்திற்கும் அப்பாற்பட்டு நிற்பது பரம்பொருள். ஆதலின்
‘மறைகளாலும் நவைபடா ஞானத்தாலும் கோட்படாப் பதம்’ என்றார். இதனால் பரம்பொருள் தத்துவமே குரங்கின் வடிவத்தைக் கொண்டது என, இராமனே அனுமனைப் பரம்பொருள் எனக் குறிப்பது ஆழ்ந்த கருத்துடையது.;தமிழச்சாதி அமரத்துவம் வாய்ந்தது என்றிருந்தேன் என்ற மகாகவி பாரதியார் கூற்றினை ஒப்பிட்டு ஆழம் உணர்க.
அடுத்த பாடலில் நல்ல சகுனம் இது; இனி துன்பம் இல்லை என்று முடிக்கிறான் ராமன்
நல்லன நிமித்தம் பெற்றேம்;
நம்பியைப் பெற்றேம்; நம்பால்
இல்லையே துன்பம் ஆனது;
இன்பமும் எய்திற்று;
****
243. அனுமன் டான்ஸ் ஆட்டிக்கொண்டே சந்தோஷமாகச் சொன்னான் :
மேலவன்,திருமகற்கு உரை
செய்தான், ‘விரை செய் தார்
வாலி என்ற அளவு இலா
வலியினான் உயிர் தெறக்
காலன் வந்தனன்; இடர்க்
கடல் கடந்தனம்’ எனா,
ஆலம் உண்டவனின் நின்று,
அரு நடம் புரிகுவான்.
(அனுமன்) ஆலகால நஞ்சு உண்ட சிவபெருமானைப்போல நடனம் ஆடிக்கொண்டே பேசினான்: வாசனை மிக்க மாலையை உடைய வாலி என்று சொல்லப்படும் அளவில்லாத வலிமை உடையவனின் உயிரை அழிக்க யமன் வந்துவிட்டான்; (ஆதலால்) நாம் துன்பக்கடலைக் கடந்து விட்டோம் என்று சூரியனின் மகனான சுக்கிரீவனுக்கு உரைத்தான்.
வாலியைக் கொல்லும் யமன் போன்று இராமலக்குவர் வந்துள்ள செய்தியை மகிழ்ச்சியால்ஆடிக் கொண்டே அனுமன் சொன்னான் . அவன் சிவபெருமான் அம்சமாய் அவதரித்தவன் ஆதலின் ‘ஆலம் உண்டவனின் நின்று’ என்றார். முன்னரும் அனுமனைத் ‘தனி அருளும் தாழ்சடைக் கடவுள்’ (3753) எனக் கூறியது காண்க.
வாலியின் பெருமை :–
வாலி இதுவரை போரில் வென்று வெற்றிமாலைக்கு உரியவன் ஆதலின் ‘விரை செய் தார் வாலி’ என்றான். சுக்கிரீவன் முதலானாரோடு போர்செய்யத் தும்பை சூடி வருதலின் ‘விரை செய் தார் வாலி’ எனவும் கொள்ளலாம். தன்னோடு போர்செய்வாரின் வலிமையில் பாதியைத் தன் வலிமையோடு பெற்றுவிடுவான் ஆதலின் ‘அளவிலா வலியினான்’ எனப்பட்டான். வாலி பிறந்தபோது, இந்திரன் வந்து பொன்மாலையை அணிவித்து, யார் எதிர்த்தாலும் எதிர்த்தார். வலிமையில் பாதி வாலிக்கு வருவதாக என வரம் அளித்தான் .
****
244.Rama + Sugreeva = New moon Day! அமாவாசை சூரிய சந்திரன்
தவாவலி அரக்கர் என்னும்
தகா இருள் பகையைத் தள்ளி,
குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற
காலத்தின் கூட்டம் ஒத்தார்;
அவா முதல் அறுத்த சிந்தை
அனகனும், அரியின் வேந்தும்,
உவா உற வந்து கூடும்,
உடுபதி, இரவி, ஒத்தார்.
ஆசையை வேரோடு களைந்த மனத்தையுடைய இராமனும் குரங்கினத்து அரசனாகிய சுக்கிரீவனும் (ஒன்று கூடியவராய்), அழியாத வலிமையை உடைய அரக்கர் என்கின்ற தகுதியில்லாத இருளாகிய பகைவர்களை ஒழித்து தர்மத்தை நிலைபெறச் செய்வதற்கு வந்த காலத்தின் சேர்க்கையை ஒத்திருந்தார்கள்; அவர்கள் அமாவாசை நேர ஒன்றாக வந்து சேர்கின்ற சந்திரனையும் சூரியனையும் ஒத்து விளங்கினர்.
தவாவலி அரக்கர் என்னும்
தகா இருள் பகையைத் தள்ளி,
குவால் அறம் நிறுத்தற்கு என்ற வரிகளில்
“பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |
தர்ம-ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே || என்ற பகவத் கீதை கருத்தும் எதிரொலிப்பதை காண்க!
இங்கு இராமனுக்கு உவமை. ‘கரு நாயிறு போல்பவர்’ (1163) என்றனள் சீதை. ‘இருளுடைவைகலெம் இரவி தோன்றினாய்’ (2646) எனத் தண்டகவனத்து முனிவர் இராமனைச் சூரியனாகக் கூறினர். உடுபதி – சந்திரன். குரங்குகளை நட்சத்திரங்களாகவும், சுக்கிரீவனை நட்சத்திரக் கூட்டத் தலைவன் சந்திரனாகவும் கொள்க. தன் கலைகளை இழந்த சந்திரன் சூரியனை அடைந்து அவனால் கலைகளாகிய ஒளி வளரப்பெறுவது போல, சுக்கிரீவனும் இராமபிரானை அடைந்ததால் அரசியல் செல்வம் முதலிய நலன்கள் பெறுவது உறுதியாதலின் ‘உவா வுற வந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார்’ என்றார்.
வெண்ணிறத்தாலும் சந்திரனுக்குச் சுக்கிரீவன் ஒப்பாவான். ‘அரியின் வேந்தும் அனகனும் உடுபதி இரவி ஒத்தார்’ என மாற்றிப் பொருள் காண்க.
இராம சுக்கிரீவர் நட்பைக் காலத்தின் சேர்க்கையாகத் தத்துவப்படுத்தியும், சூரிய சந்திர சேர்க்கையாகக் காட்சிப் பொருளாக்கியும் கம்பர் காட்டியுள்ள நயம் சிறப்புடையது. இஃது உவமை அணி பொருந்தியபாடல். முதல் இரண்டு அடிகளில், அரக்கரை இருளாக உருவகித்ததற்கு ஏற்ப, அறத்தை வெளிச்சமாக உருவகம் செய்கிறார்.
*************
245.சுக்ரீவன் சரணாகதி
3810. ‘முரணுடைத் தடக் கை ஓச்சி,
முன்னவன், பின்வந்தேனை,
இருள்நிலைப் புறத்தின்காறும், உலகு
எங்கும், தொடர இக் குன்று
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்;
ஆர் உயிர் துறக்கலாற்றேன்;
சரண் உனைப் புகுந்தேன்; என்னைத்
தாங்குதல் தருமம்’ என்றான்.
எனக்கு அண்ணனாகிய வாலி, பின்
பிறந்த தம்பியாகிய என்னை (அடிக்க வலிமையுள்ள
பெரிய கையை ஓங்கிக்
இருட்டுக்கு இருப்பிடமாகிய இவ்வுலகத்திற்கு அப்புறம்
எல்லா உலகங்களிலும் பின்தொடர்ந்து துரத்த
இம்மலையையே
பாதுகாவலாகக்கொண்டு உயிர் பிழைத்தேன்;
அரிய உயிரை விடுவதற்கும் முடியாதவனாகிய நான்
சரண் உனைப் புகுந்தேன் – உன்னை அடைக்கலமாக அடைந்தேன்; என்னைத் தாங்குதல் – என்னைக் காப்பாற்றுதல்; தருமம் என்றான்- நினக்குரிய தருமமாகும் என்றான்.
தம்பி என்ற உறவும் பாராது, வலிமை குறைந்தவன் என்ற போர் முறையையும் நோக்காது, அஞ்சி ஓடியவனைத் துரத்தி ஓடுதல்
போர்முறைக்குப் பழியாகும் என்பதையும் உணராது வாலி, சுக்கிரீவனை வருந்தினான் என அவ்வாலியின் முறையற்ற செயலைச் சுக்கிரீவன் உணர்த்தினான்.
மதங்க முனிவர் சாபத்தால் ருசியமுக மலையில் வாலி வந்தால்
அவன் தலை வெடித்து இறப்பான் ஆதலால் ‘இக்குன்று அரண் உடைத்து ஆகி உய்ந்தேன்’ என்றான்.
********************
246.IMPORTANT CLAUSES IN THE FRIENDSHIP TREATY
246 ‘மற்று,இனி உரைப்பது என்னே?
வானிடை, மண்ணில், நின்னைச்
செற்றவர் என்னைச் செற்றார்;
தீயரே எனினும், உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன்
கிளை எனது; என் காதல்
சுற்றம், உன்சுற்றம்; நீ என்
இன் உயிர்த் துணைவன்’ என்றான்.
மேலும் நான் இனிச் சொல் லக்கூடியது யாது உளது? விண்ணுலகிலும், மண்ணுலகிலும் நின்னை என்னை வருத்தியவராவர்; தீயவராகவே இருந்தாலும் உன்னோடு நட்புக்
கொண்டவர்கள் எனக்கும் நண்பராவர்; உன் உறவினர்; என் உறவினராவர்; என் அன்புள்ள சுற்றத்தினர்; உன் சுற்றத்தினராவர்; நீ என் இன் உயிர்த்துணைவன் – நீ எனது இனிய உயிர் நண்பன்’ என்றான் இராமன்.
‘தீயரே எனினும் உன்னோடு உற்றவர் எனக்கும்
உற்றார்’ என்று மேலும் தன் நட்பின் வலிமையை உரைத்தான்.
. ”என் உயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்’ என்று
இராமன் குகனிடம் கூறியதை (1994) ஒப்பு நோக்கலாம்.
**********
248 குரங்குப் படையின் கொண்டாட்டம்
3813. ஆர்த்ததுகுரக்குச் சேனை;
அஞ்சனை சிறுவன் மேனி,
போர்த்தன, பொடித்து உரோமப்
புளகங்கள்; பூவின் மாரி
தூர்த்தனர், விண்ணோர், மேகம்
சொரிந்தென, அனகன் சொன்ன
வார்த்தை, எக் குலத்துளோர்க்கும், மறையினும்
மெய் என்று உன்னா.
இராமன் சொன்ன சொல், எல்லாக் குலத்தில் தோன்றியவர்க்கும்
வேதவாக்கைக் காட்டிலும் உண்மையானதாகும் என்று எண்ணி குரங்குக் கூட்டம் ஆரவாரம் செய்தது; அஞ்சனையின்
புதல்வனான அனுமன் மேனியை அரும்பி மறைத்து விட்டன;
(தேவர்கள் மலர் மழையால் பூமியை நிரப்பினர்; மேகங்கள் மழையைப் பொழிந்தன. இந்த நட்பால் நல்ல பயன் என்பதற்கு நன்னிமித்தமாக மேகம் மழை பொழிந்தது).
****
249.நீயும் மனைவியைப் பிரிந்துள்ளாயோ?’ என இராமன் சுக்கிரீவனை வினாவுதல்
3820. விருந்தும் ஆகி, அம்
மெய்ம்மை அன்பினோடு
இருந்து, நோக்கி, நொந்து,
இறைவன், சிந்தியா,
‘பொருந்து நன் மனைக்கு
உரிய பூவையைப்
பிரிந்துளாய்கொலோ நீயும்
பின்?’ என்றான்.
சுக்ரீவன் அரண்மனையில் ராம இலக்குவர்க்குச் சுக்ரீவன் விருந்து அளித்தான்; இராமன் அவர்கள் விருந்து கொடுத்த போது (சுக்கிரீவன் மனைவியைக் காணாமையால்) மனம் வருந்தி, ஆலோசித்து,
(சுக்கிரீவனைப் பார்த்து) நல்ல இல்லற வாழ்க்கைக்கு உரிய பூவையை / மனைவியை நீயும் பிரிந்துள்ளாயோ என்று
வினவினான்.
விருந்தினனாகிய தன்னைச் சுக்கிரீவன் மனைவி இல்லாமல்
உபசரிப்பதைக் கண்டு ‘நன்மனைக்குரிய பூவையைப் பிரிந்துளாய் கொல்’ என இராமன் வினவினான். மனையாள் இல்லாத இடத்து விருந்தோம்புதல் சிறக்காது என்பர். மகளிரும் விருந்தோம்புதலைத் தலையாய கடனாகக் கொண்டனர் என்பதை ”விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (சிலம்பு – 2 – 16 – 73) என்ற கண்ணகியின் வருத்தமும் விருந்தோம்பலில் மகளிர் பங்கை உணர்த்தும்.
**************
250.சுக்ரீவன் பதில் சொல்வதற்குப் பதிலாக அனுமனை நீண்ட பதிலை அளித்தான் ; அதில் கண்ட முக்கியச் செய்திகள்
3825. ‘கிட்டுவார்பொரக் கிடைக்கின், அன்னவர்
பட்ட நல் வலம் பாகம் எய்துவான்;
எட்டு மாதிரத்து இறுதி, நாளும் உற்று,
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்;
சுக்ரீவனின் அண்ணனான வாலி , யாராவது போருக்கு வந்தால் அவர்களிடம் உள்ள நல்ல வலிமையில் பாதியைத் தான் அடைவான்;
எட்டுத் திக்கு எல்லையிலும் நாள்தோறும் சென்றுஅட்டமூர்த்தியாய் விளங்கும் சிவபிரானின் திருவடிகளை வணங்குகிற; ஆற்றலான் –
ஆற்றலையுடைவன்.
அட்டமூர்த்திகள் – பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன்,
இயமானன் என்பன. இவ்வெட்டையும் திருமேனியாய்க் கொண்டவனாதலின்; சிவபிரான் ‘அட்ட மூர்த்தி’ எனப்பட்டான். நாளும் எட்டுத் திசைகளுக்குச் சென்று சிவன்தான் பணிந்து வரும் ஆற்றலை உடையவனாதலின் ‘ஆற்றலான்’ என்றார். வாலிக்குள்ள வரபலமும், தெய்வபக்தியும் இப்பாடலால் உணர்த்தப்படுகின்றன. 40
3826. ‘கால்செலாது அவன் முன்னர்;
கந்த வேள்
வேல் செலாது அவன்
மார்பில்; வென்றியான்
வால் செலாத வாய்
அலது, இராவணன்
கோல் செலாது; அவன்
குடை செலாது அரோ.
அந்த வாலியின் வேகத்திற்கு முன்னதாக
காற்றுச் செல்லாது; அவ்வாலியின்
முருகப்பிரானின் வேலும் நுழையாது;
வெற்றியை உடையவனான அவ்வாலியின்
(வால் சென்ற இடத்தில்) இராவணனது ஆட்சி செல்லாது,
அவ்விராவணனது வெற்றிக் குடையும் செல்லாது.
சுக்ரீவன் மனைவியை வாலி கவர்ந்தான் ; அவள் பெயர் ருமா .
3852. ‘உருமை என்று இவற்கு
உரிய தாரம் ஆம்
அரு மருந்தையும்,
அவன் விரும்பினான்;
இருமையும் துறந்து,
இவன் இருந்தனன்;
கருமம் இங்கு இது; எம்
கடவுள்!’ என்றனன்.
எம் தெய்வமே! உருமை என்று பெயர்பெற்று இச்சுக்கிரீவனுக்கு உரிய மனைவியாய் இருந்த கிடைத்தற்கரிய தேவாமிர்தம்
போன்றவளையும் அவ்வாலி விரும்பிக் கவர்ந்து
கொண்டான்; சுக்கிரீவன் அரசச் செல்வத்தையும் மனைவியையும் இழந்து, இம்மலையில் இருந்தான்; இதுவே நடந்த
செய்தியாகும் என்று அனுமன் உரைத்தான்.
உருமை – சுக்கிரீவன் மனைவி. வாலி சுக்கிரீவர்களுக்கு மாமனும், தேவகுருவாகிய பிரகஸ்பதியின் மகனுமான தாரன் என்னும் வானர வீரனின் மகள். ருமா என்னும் ஸம்ஸ்க்ருதப் பெயர் தமிழில் உருமை ஆனது.
-சுபம்—
TAGS- கம்பராமாயணம், 250 கேள்விகள், அனுமனின் விஸ்வரூபம், ராமன் வியப்பு, சுக்ரீவன், நட்புறவு ஒப்பந்தம், வாலி, மனைவியைக் கவர்ந்தான், ருமா, உருமை