
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,365
Date uploaded in London –2 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லலிதா சஹஸ்ர நாமத்தில் பக்தி சம்பந்தமான நாமாக்கள்! – 2
ச. நாகராஜன்
பக்தி நாமாக்களின் மஹிமை தொடர்கிறது.
நாமம் 120 பக்தி வச்யா
பக்திக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பக்தியின் மூலமாக வசமாகக் கூடியவள்
உண்மையான பக்தி யாரிடம் இருக்கிறதோ அவரிடம் எந்தக் குறை இருந்தாலும் அதை கவனியாது அவருக்கு லலிதாம்பிகை அனுக்ரஹம் செய்வாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நாமம் 117
பக்த சௌபாக்யதாயினி
பக்தர்களுக்கு சகல விதமான சௌபாக்கியத்தைக் கொடுப்பவள்.
சௌபாக்யம் பற்றி ஏற்கனவே ‘சௌபாக்யவதி பவ! என்ற எனது கட்டுரையில் விளக்கப்பட்டிருப்பதால் இங்கு மீண்டும் விரிவாக அது பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
நாமம் 118 பக்தி ப்ரியா
பக்தியில் பிரியமுள்ளவள்.
அதாவது பக்தி உபாஸனை செய்பவர்களிடம் ப்ரீதி உள்ளவள்.
பக்தி முக்யம், ஸாமான்யம் என இருவகைப்படும். முக்ய பக்தி என்பது ஈஸ்வரனிடத்தில் அனுராகம் என்ற சித்த விருத்தியோடு கூடியிருப்பதாகும். இதைப் பற்றி சிவானந்த லஹரியில் ஆதி சங்கரர் கூறுவது இது:
அழிஞ்சில் மரத்தின் விதையானது தாய் மரத்தையும், ஊசியானது காந்தத்தையும், பதிவிரதையானவள் தன் பதியையும், கொடியானது மரத்தையும், நதியானது சமுத்திரத்தையும் சுபாவமாகவே வந்தடைவது போல மனமானது பரமாத்மாவை அடைவது தான் பக்தி.
(அங்கோலம் நிஜ….. ஸா பக்திரித்யுச்யதே என்ற ஸ்லோகத்தைப் பார்க்கவும்)
ஸாமான்ய பக்தி என்பது சேவாரூபமான பக்தியாகும். இது ஸ்மரணம், கீர்த்தனம் முதலிய பலவகைப்பட்டது. எட்டு விதம் என்று கருட புராணத்திலும், ஒன்பது விதம் என்று பாகவதத்திலும், பத்து விதம் என்று ப்ருகன்னாரதீயத்திலும் இம்மாதிரியாக பலவகையாகச் சொல்லப்படும்.
நாரத பக்திசூத்ரத்தில் பக்தியைப் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
நாமம் 747
பக்த சித்த கேகி கனாகனா
பக்தர்களுடைய சித்தங்களாகிற மயில்களுக்கு உல்லாசத்தைக் கொடுக்கும் மேக ஸ்வரூபமாக இருப்பவள்
மயில்கள் நீருண்ட மேகத்தைப் பார்த்தால் ஆனந்தமடைந்து நடனமாடத் தொடங்கி விடும்.
கனம் என்பது மேகத்தின் பெயர். அம்பாளுடைய லீலா விசேஷங்கள் பக்தர்களின் மனதிற்கு உல்லாசத்தைக் கொடுப்பதால் அந்த சித்தங்களாகிற மயில்களுக்கு உல்லாசத்தைக் கொடுக்கும் மேகங்களாக இருக்கின்றன.
பக்த சித்த கேகி ககனா – இவ்விதமான சரித்திரங்களை (கனமாக) நிரம்ப உடையவளாகையால் அம்பாளுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லலாம்.
நாமம் 647
லோபாமுத்ரார்ச்சிதா
லோபாமுத்ரையினால் பூஜிக்கப்பட்டவள்
லோபாமுத்ரை என்பவள் அகத்தியருடைய மனைவி. அம்பாளுடைய உபாஸகச்ரேஷ்டர்களில் ஒருவள் என்றும், ஶ்ரீ வித்யையின் பேதங்களில் ஒன்றான ஹாதி வித்யை என்பதன் ரிஷி (மந்த்ரத்ருஷ்டா) என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
தனது பக்தர்களில் முக்கியமானவர் என்பதாக அம்பாளாலேயே சொல்லப்பட்டதாக ஶ்ரீ லலிதா
த்ரிசதியில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் அம்பாளுக்கே லோபாமுத்ரா என்ற பெயர் உண்டு என்பதாக த்ரிபுராஸித்தாந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகவே இந்த நாமத்தை இந்த அர்த்தத்தில் லோபாமுத்ரா, அர்ச்சிதா என்று இரண்டாகப் பிரித்துச் சொல்வதும் பொருத்தமாகவே இருக்கிறது.
அல்லது லோபாமுத்ரை எனப்படும் வித்யையின் மூலமாக உபாஸிக்கப்படுபவள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் சில நாமங்களைப் பார்ப்போம்.
*** தொடரும்