
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,374
Date uploaded in London –5 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அம்பாளின் தலைநகரம்! – 1
ச. நாகராஜன்
அம்பாளின் பக்தர்கள் பக்தியுடனும் ஆர்வத்துடனும் தெரிந்து கொள்ள வேண்டிய இடம் அம்பாளின் தலைநகரமாகும்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அவள் எத்தனை கோடி பிரபஞ்சங்களையும் எத்தனை கோடானு கொடி கிரகங்களையும் நட்சத்திரங்களையும் படைத்துக் காத்து பரிபாலித்து வருகிறாள் என்பதை அறிந்தவர் யாருமில்லை.
ஶ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் 996வது நாமமாக அமைவது ஶ்ரீ சக்ரராஜ நிலயா என்னும் நாமம்.
ஶ்ரீ சக்ரத்தைத் தன்னுடைய இருப்பிடமாக உடையவள் என்பது இதன் அர்த்தம்.
இந்த ஶ்ரீ நகரமே அம்பாளின் தலைநகரம். தலமையகம்.
ஶ்ரீ சக்ரம் சிவயோர் வபு: என்று ஶ்ரீ லலிதா த்ரிசதியில் சொல்லியபடி சரீரமானது ஜீவனுக்கு எப்படி அவதானமாக இருக்கிறதோ அதே போல ஶ்ரீ சக்ரமானது சிவன், சக்தி இருவர்களுக்கும் இருப்பிடமாகத் திகழ்கிறது என்று சொல்லப்படுகிறது.
சக்ரங்களுக்கெல்லாம் ச்ரேஷ்டமானது என்பதால் பிந்து திரிகோணங்களாகிய நவயோன்யாத்மகமான அம்பாளுடைய சக்ரத்தை ஶ்ரீ சக்ரமென்றும்,
சக்ரராஜம் என்றும் ஶ்ரீ சக்ரராஜம் என்றும் சொல்லப்படுகிறது.
அம்பாளின் அணுக்க பக்தரான துர்வாஸ மஹரிஷி அம்பாளின் ஶ்ரீ நகரத்தை நன்கு வர்ணித்தும், அந்நகரத்தைச் சுற்றியுள்ள 25 கோட்டைகளை விவரித்தும், கோட்டைகளுக்குள் இருக்கும் சிந்தாமணி கிரகத்தைப் புகழ்ந்தும், அதற்குள் தேஜோமயமாக விளங்கும் ஶ்ரீ மஹா சக்ரத்தை விவரித்தும், அந்த சக்ரத்தின் நடுவே பிந்து பீடத்தில் விளங்கும் பரபிரம்மமாகிய காமேஸ்வரரையும் பிரம்ம சக்தியாகிய காமெஸ்வரியை ஸ்தோத்திரத்தும் வடமொழியில் ஒரு நூலை இயற்றியுள்ளார். அந்த நூலின் பெயர் ‘ஶ்ரீ லலிதா ஸ்தவ ரத்தினம்’ அல்லது ‘ஆர்யா த்விசதி’ என்பதாகும். இது 213 திருவிருத்தங்களைக் கொண்டது.
இந்த நூலின் அருமையைக் கருதி 1937ம் வருடம் திருவேட்டீச்சுரத்தைச் சேர்ந்த திரு ந. சுப்பிரமணிய ஐயர் இதைத் தமிழினில் அழகுற மொழிபெயர்த்து ‘ஶ்ரீ நகர விமர்சம்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.
அதில் ஶ்ரீ நகரத்திற்கு உள்ள இருபத்தைந்து கோட்டைகளை விளக்கியுள்ளார்.
அதைக் கீழே பார்ப்போம்:
25 கோட்டைகளின் விவரம்:
முதலில் உலோகக் கோட்டைகள்
1. இரும்புக் கோட்டை
2. எஃகுக் கோட்டை
3. செப்புக் கோட்டை
4. வெள்ளீயக் கோட்டை
5. பித்தளைக் கோட்டை
6. பஞ்சலோகக் கோட்டை
7. வெள்ளிக் கோட்டை
8. தங்கக் கோட்டை
இரத்தினப் பிரகாரங்கள்
9. புஷ்பராகக் கோட்டை
10. பத்மராகக் கோட்டை
11. கோமேதகக் கோட்டை
12. வஜ்ஜிரக் கோட்டை
13. வைடூரியக் கோட்டை
14. இந்திர நீலக் கோட்டை
15. முத்துக் கோட்டை
16. பச்சைக் கோட்டை
17. பவழக் கோட்டை
18. நவரத்தினக் கோட்டை
19. நானா ரத்தினக் கோட்டை
மஹாபத்மாடவீ பிரகாரங்கள்
20. மனோமயக் கோட்டை
21. புத்திமயக் கோட்டை
22. அகங்காரமயக் கோட்டை
23. சூரியப் பிராகாரம்
24. சந்திரப் பிராகாரம்
25. சிருங்காரக் கோட்டை
இவற்றின் விவரங்களை அடுத்துப் பார்ப்போம்.
** தொடரும்