அம்பாளின் தலைநகரம்! – 3 (Post No.16,381)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,381

Date uploaded in London –7 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

அம்பாளின் தலைநகரம்! – 3

ச. நாகராஜன்

இரத்தினப் பிராகாரங்கள் மொத்தம் 11.

9. புஷ்பராகக் கோட்டை

இந்தக் கோட்டைக்கும் கோபுரங்களும், துவஜங்களும், மணிப் பதுமைகளும் உண்டு. இதற்கும் எட்டாவது கோட்டைக்கும் இடையில் உள்ள புஷ்பராக மணிமயமான பூமியின்கண் பல சித்த கணங்கள் இராஜ ராஜேஸ்வரியைத் தியானித்துக் கொண்டு வசிப்பார்கள்.

10. பத்மராக மணிக் கோட்டை

இக்கோட்டை தனது ஒளியால் பத்து திக்குகளையும் பிரகாசித்துக்கொண்டு மணிமயங்களான துவஜங்களையும், கோபுரங்களையும், அரண்மனைகளையும், தோரணங்களையும் கொண்டதாய் இருக்கும். இதற்கும் ஒன்பதாவது கோட்டைக்கும் இடையில் பதுமராக மணிமயமான பிரதேசமானது, பராசக்தியைப் பூஜிக்கும் சாரணர்களோடு கூடியிருக்கும்.

11. கோமேதக இரத்தினக் கோட்டை

இதுவும் பேரொளியோடும், கூட கோபுரங்களோடும், மாட மாளிகைகளோடும் விளங்குவதாகும். இதற்கும் பத்தாவது கோட்டைக்கும் இடையில் யோகினிக் கூட்டங்களோடு கூடி வடுக தேவக் கூட்டம் வசித்துக் கொண்டு திரிபுராம்பிகையை ஆராதித்துக் கொண்டு விளங்கும்.

12. வஜ்ஜிர ரத்தினக் கோட்டை

பல சிறப்புகளை உடைய இக்கோட்டைக்கும் பதினோராவ்து கோட்டைக்கும் நடுவில் பல உத்தியானங்கள், தடாகங்கள், வாவிகள், மணி மாளிகைகள் முதலியன பல உள்ளன. இப்பிரதேசத்தில் அரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை முதலிய தேவதாசிகள் பராசக்தியாகிய காமேச்வரியை அர்ச்சித்துக் கொண்டு பரமானந்த பரிதர்களாய் வசிப்பர்.

13. வைடூரியக் கோட்டை

இதற்கும் பன்னிரண்டாவது கோட்டைக்கும் மத்தியில், சிருங்கார வனங்கள், மண்டபங்கள், மாளிகைகள் முதலியன சிறந்து விளங்கும். அங்கே பரதேவதையை உபாசிக்கும் அநந்தன், வாசுகி, தக்ஷகன், கார்க்கோடகன், சங்கன், குளிகன், பத்மன், மகாபத்மன் என்னு அஷ்ட நாக (ஸர்ப்ப)ங்களும், பலிச் சக்கரவர்த்தி முதலிய அசுரர்களும் வாசம் செய்வர்.

14. இந்திர நீலக் கோட்டை

தனது காந்தியினால் ஆகாயத்தை நீல நிறமாகச் செய்யும் இந்திர நீல மணிகளிழைத்த பல உயர்ந்த கோபுரங்களையும் மற்றுமுள்ள பல சிறப்புகளையுடையும் உடையது இந்தக் கோட்டை. இதற்கும் பதிமூன்றாவதாகிய வைடூர்யக் கோட்டைக்கும் இடையில், நீலமணிப் படிகங்களமர்ந்த தடாகங்களும், நடை வாவிகளும், மாடங்களும், மண்டபங்களும் பல இருக்கின்றன. இங்கே மநு, மாந்தாதை, பகீரதன், கயன், சசிபிந்து, ப்ருது, பரதன் முதலிய சக்கரவர்த்திகள் பரதேவதையை நமஸ்கரித்துக் கொண்டு வசிப்பார்கள்.

15. முத்துக் கோட்டை

மற்ற கோட்டைகளுக்குள்ளது போலவே இதற்கும் கோபுரங்களும், துவஜங்களும், பொற்பதுமைகளும், தோரணங்களும், மாடங்களும் உள்ளன.

இதற்கும் பதினான்காவது கோட்டைக்கும் இடையே உள்ள

இடமானது பல தோட்டந்துறவுகளாலும், மாட மாளிகைகளாலும் சூழப்பெற்றுள்ளதாகும். இங்கே கிழக்குத் திக்கில் தேவேந்திரன் ஐராவதத்தில் ஆரோகணித்து வஜ்ஜிராயுதத்தைப் பூண்டு, சசீ தேவியுடன் கூடி ராஜராஜேஸ்வரியை ஆராதித்துக் கொண்டிருப்பான்.

தென்கிழக்கே அக்னி மூலையில் ஹவ்ய கவ்ய வாகனனாய், அக்னி தேவன் செம்மறி ஆட்டின் மேல் ஏறிக் கொண்டு, ஸ்ருக், ஸ்ருவம், விசிறி, அன்ன பாத்திரம், சக்தி ஆயுதம், துறட்டுக்கோல் முதலிய ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு ஸ்வாஹா, ஸ்வதா என்னும் மனைவிகளோடு கூடி திரிபுரசுந்தரியைத் தியானம் செய்து கொண்டிருப்பான்.

தென் திசையில் யமன் மகிஷ வாகனத்தின் மேலேறிக் கொண்டு தண்டாயுதத்தைப் பூண்டு சியாமளா தேவியோடு திரிபுராம்பாளைத் தியானித்துக் கொண்டு வசிப்பான்.

தென்மேற்கு மூலையில் நிருதி நரவாகனத்தின் மேலேறி, ஈட்டி, இரும்புத் தடி, கட்கம், கேடகம், முதலிய ஆயுதங்களைத் தரித்து, தீர்க்கா தேவி சமேதனாய் திரிபுரசுந்தரியை அர்ச்சித்துக் கொண்டு வாழ்வான்.

மேற்குத் திக்கில் வருணன், முதலையின் மேல் வீற்றிருந்து சிக்கக் கயிற்றைக் கையில் தாங்கி காளி என்னும் சக்தியோடு மஹா திரிபுர சுந்தரியைத் தியானித்துக் கொண்டிருப்பான்.

வடமேற்கு அதாவது வாயு மூலையில் வாயு பகவான் மான் வாகனத்தை ஆரோகணித்து துவஜமென்னும் ஆயுதத்தைப் பூண்டு, அஞ்சனா தேவி சமேதனாய் கோரக்கன் முதலிய பல சித்தர்கள் புடைசூழப் பராசக்தியைப் பூஜித்துக் கொண்டு விளங்குவான்.

வடக்குத் திக்கில் குபேரன் குதிரை வாகனத்தின் மேலேறிக் கத்தியைக் கையில் தாங்கி சித்திர ரேகை என்னும் மனைவியோடு சேர்ந்து மாணிபத்திரன் முதலிய யக்ஷர்கள் புடை சூழ மஹா திரிபுரசுந்தரி தியான தற்பரனாய் வீற்றிருப்பான்.

வடகிழக்கில் அதாவது ஈசான மூலையில் ருத்திரன் விருஷப வாகனத்தின் மேல் ஆரோகணித்து, திரிசூலம்  முதலிய பல் திவ்ய ஆயுதங்களைப் பூண்டு பார்வதி தேவியோடு திரிபுரசுந்தரி சேவாபரனாய் பிரகாசித்துக் கொண்டிருப்பான்.

மேற்கூறிய அஷ்ட திக் பாலகர்கள் முத்துக் கோட்டைக்கும் இந்திர நீலமணிக் கோட்டைக்கும் இடையே வாசம் செய்து கொண்டிருப்பார்கள்.

              **                   தொடரும்

Leave a comment

Leave a Reply