
Written by London Swaminathan
Post No. 16,422
Date uploaded in London – 24 November 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
யுத்த காண்டம் வந்தாச்சு!
பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் ஆகியவற்றிலுள்ள முக்கியமான பாடல்களை மட்டும் சுவைத்துவிட்டு இன்று யுத்த காண்டத்தில் நுழைகிறோம் .
இந்தப் படலத்தில் கம்பன், ஜர்னலிஸ்டுகளுக்குப் பயிற்சியும் தருகிறான். ஒரு பத்திரிகைக்காரன் எப்படி செய்தியை வெளியிட வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டு கேள்வி 461-ல் இருக்கிறது.
XXXXXXXXXXXXXXXXXXXXXX

461
FLASH NEWS IN ALL INDIAN NEWSPAPERS; ‘I MET SITA DEVI’– HANUMAN REPORTS TO RAMA.
ராம பிரானைப் பார்த்தவுடனே ராமனுக்கு அனுமன் சொன்ன தலைப்புச் செய்தி என்ன ?
462
அடுத்த பாடலில் சீதையின் கற்பினை கம்பன் எப்படி அழகுபட விளக்கினான் ?
463
கற்பின் சிறப்பினை விளக்கவும் அப்பேற்பட்ட பெண்களின் உயர்வையும் காட்ட கம்பன் எவ்வாறு சீதா தேவியைப் பயன்படுத்துகிறான் ?
464
சீதாதேவி தந்த சூடாமணி என்னும் தலையில் அணியும் ஆபரணத்தை ராமனிடம் அளித்த காட்சி எப்படி இருந்தது?
465
சூடாமணியைக் கைகளில் வாங்கியவுடன் ராமன் என்ன செய்தான்?
466
சுக்ரீவன் கட்டளைப்படி படைகள் திரண்டது எவ்வாறு ?
467
கம்பராமாயணத்தில் இந்தப் படலத்தில் காணப்படும் மிகைப்பாடல்கள் சொல்லும் செய்திகள் என்ன ?
468
யுத்த காண்டம் ஒரு அருமையான கடவுள் வாழ்த்துடன் துவங்குகிறது ; இந்தப்பாடலின் பொருள் புரியாவிட்டால் விடைப்பகுதிக்குச் செல்லுங்கள்:
6059. ‘ஒன்றே’ என்னின், ஒன்றே ஆம்;
‘பல’ என்று உரைக்கின், பலவே ஆம்;
‘அன்றே’ என்னின், அன்றே ஆம்;
‘ஆமே’ என்னின், ஆமே ஆம்;
‘இன்றே’ என்னின், இன்றே ஆம்;
‘உளது’ என்று உரைக்கின், உளதே ஆம்;
நன்றே, நம்பி குடி வாழ்க்கை!
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!
469
ராவணன் மந்திரிகளைக் கூட்டி மந்திராலோசனை செய்கிறான் ; அவர்களில் முக்கியமானவர்கள் சொன்ன கருத்துக்களைக் காண்போம் ; கும்பகர்ணன் கூறியது என்ன ?
470
கும்பகர்ணனை ராவணன் எவ்வாறு பாராட்டினான்?
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


விடைகள்
461.கண்டேன் சீதையை ; பிராட்டியைக்கண்டதை அனுமன் இராமபிரானிடம் கூறுதல்
6031.
‘கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்;
அண்டர் நாயக !இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்‘என்று, அனுமன் பன்னுவான்;
அனுமன் (இராமபிரானை நோக்கி)
தேவர்களுக்குத் தலைவனே!; தெளிவான, சுருளும் அலைகளோடு கூடிய கடல் சூழ்ந்த இலங்கை என்ற தெற்கில் உள்ள நகரத்தில், கற்பிற்கு ஒரு ஆபரணம்
போன்ற பிராட்டியை, என் கண்களாலேயே பார்த்தேன்; இனிமேல், சந்தேகமும் , துன்பமும் இல்லை;
என்று தலைப்புச் செய்திகளை சொல்லி, மேலும் விரித்துக் கூறுவானானான்.
அனுமன், தான் சீதையைக் கண்டதையும், அவன் கற்பின் சிறப்பையும், பிராட்டியிருக்கும் இடத்தையும் இராமபிரானுக்குக் கூறினான்; இன்றைய செய்திப் பத்திரிக்கைகளுக்கு முன்னோடி ஆஞ்சனேயன்(கம்பன்) ! காணப்பட்டவர் யார் ? கண்ட இடம் எது ? கண்ட பெண்மணியின் நிலைமை என்ன ? ஆகிய மூன்று விஷயங்களையும் சில சொற்களில் கம்பன் , மாருதி மூலம் தந்துவிட்டான் .
இக்கவிதையில் உள்ள எல்லா சொற்களும், உணரும் தொறும்
உணரும் தொறும் கற்பார்க்கு இன்பம் பயப்பனவாகும். ‘கண்டனென்’ என்ற சொல், ‘த்ருஷ்டா ஸீதா’ என்ற முதல் வால்மீகி ராமாயணத் தொடரைத் தழுவியது. ஆனால், அடுத்துள்ள கற்பினுக்கு அணியை என்ற தொடர், ‘ஸீதா’ என்ற சொல்லைக் காட்டிலும் ஆழ்ந்த, சிறந்த, நுணுக்கமான பொருளை உடையதாகும்.
***********************************
462.அடுத்த பாடலில் சீதையின் கற்பினை கம்பன் அழகுபட விளக்கினான்
‘விற் பெருந் தடந் தோள் வீர ! வீங்கு நீர் இலங்கை
வெற்பில்,
நற் பெருந்தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன்
அல்லேன்;
இற் பிறப்புஎன்பது ஒன்றும், இரும் பொறை என்பது
ஒன்றும்,
கற்பு எனும்பெயரது ஒன்றும், களி நடம் புரியக்
கண்டேன்.
வில்லை ஏந்திய, பெரிய தோள்களை உடைய வீரனே ! கடலால்
சூழப்பட்ட திரிகூட மலை மேல் உள்ள இலங்கை நகரில் , நல்ல கற்பொழுக்கத்தை உடைய பிராட்டியை மட்டும் யான் காணவில்லை;
(கண்டது எவை என்றால்) உயர் குடிப் பிறப்பு , சிறந்த பொறுமை, கற்பு (ஆகியவை ஒருங்கு கூடி ) ஆனந்தமாக நடனம் புரியப் பார்த்தேன்.
பெண்டிர்க்குரிய சிறந்த குணங்கள் குலம், பொறுமை, கற்பு என்பவைகள். அக்குணங்கள் மூன்றும் ஒருங்கு கூடி, பிராட்டியிடம் சேர்ந்து, அவை பெருமை பெற்றன. அதனால், அவைகள் களி நடம் புரிந்தன. தவம் என்பது, தன்னைத் தான் கொண்டு ஒழுகும் நெறி. பெரும் தவம் என்பது, கணவனது வாழ்விலும் தாழ்விலும் உடனிருந்து கற்பு நெறி வழுவாதிருத்தல்.
தனது குடிமை, பொறுமை, கற்பு என்பவைகட்குக் குறைவு நேராது
சீதா பிராட்டி, நற்பெருந்தவத்தளாக விளங்குவதை அனுமன் எடுத்துக் கூறினான்.
***********************************
463 கற்பின் சிறப்பும் , பெண்களின் உயர்வும்
‘சோகத்தாள் ஆய நங்கை கற்பினால், தொழுதற்கு
ஒத்த
மாகத்தார்தேவிமாரும், வான் சிறப்பு உற்றார்;
மற்றைப்
பாகத்தாள்,இப்போது ஈசன் மகுடத்தாள்;
பதுமத்தாளும்,
ஆகத்தாள்அல்லள், மாயன் ஆயிரம் மௌலி
மேலாள்.
(உன்னைப் பிரிந்த பெரும்) துக்கத்தை உடையவளான பிராட்டியின்; கற்பின் சிறப்பால், வானில் உள்ள தேவர்களி்ன் மனைவிமார்களும் யாவரும் வணங்குவதற்கு ஏற்ற பெரும்சிறப்பை அடைந்தார்கள் ; சிவபிரானது உடம்பின் ஒரு பாகத்தில் இருக்கும் உமாதேவி, இந்த சமயத்தில் அப்பெருமானது தலைமேல் இருக்கும் சிறப்பினை உடையவளானாள்; தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளும் இனித் திருமாலின் திருமார்பில் வீற்றிருக்கத் தக்கவள் அல்லள் (அப்பெருமானது) ஆயிரம்திருமுடிகளின் மேலிருக்கத் தக்கவளாவாள்.
உயர்ந்தோர்ஒருவரால், மற்றையோரும் சிறப்படைவர் என்பதற்கிணங்க, பிராட்டியின் கற்புச் சிறப்பால், மற்றைத் தெய்வ மகளிர், உமாதேவி, திருமகள் முதலியோரும் சிறப்படைந்தனர். மாதர் குல ஏற்றம் சொல்லுகிறது இச்செய்யுள்! கற்புடைய பெண்கள் தெய்வத்துக்குச் சமமானவர்கள் என்பது கம்பனின் துணிபு.
***********************************
464. சீதாபிராட்டி தந்த சூடாமணியை அனுமன் இராமனிடம் சேர்த்தல்
‘வைத்தபின், துகிலின் வைத்த மா மணிக்கு அரசை
வாங்கி,
கைத்தலத்துஇனிதின் ஈந்தாள்; தாமரைக் கண்கள்
ஆர,
வித்தக ! காண்டி!’ என்று, கொடுத்தனன்-வேத
நல் நூல்
உய்த்துள காலம்எல்லாம் புகழொடும் ஒக்க நிற்பான்.
சீதாதேவி தந்த சூடாமணி என்னும் தலையில் அணியும் ஆபரணத்தை ராமனிடம் அளித்த காட்சி :–
வேதங்களும் சாத்திர நூல்களும் உள்ள காலத்துக்குப் புகழோடு விளங்கப்போகும் அனுமன், தன் ஆடையில் முடித்து வைத்திருந்த இரத்தினங்களுக்கெல்லாம் தலைமை பெற்று உயர்ந்த சூடாமணியை அவிழ்த்து எடுத்து எனது கையில்( சீதாதேவி )கொடுத்தாள்; அறிவிற் சிறந்த பெரியோய்! செந்தாமரை மலர் போன்ற உனது திருக்கண்கள் மகிழும்படி பார்த்தருளுக என்று கூறி (அச்சூடாமணியை இராமபிரானிடம்) மாருதி கொடுத்தான்.
அனுமன் எப்படி, வேத நூல் உலகில் இருக்கும் காலம் வரை புகழோடு இருப்பானோ, அது போன்று, அவன் இப்போது, செய்த இந்த நற்செயலும் என்றும் நிற்கும் என்பது கருத்து.
***********************************
465. சூடாமணியைக் கைகளில் வாங்கியவுடன் ராமன் செய்தன
6054.
பொடித்தனஉரோமம்; போந்து பொழிந்தன கண்ணீர்;
பொங்கித்
துடித்தன,மார்பும் தோளும்; தோன்றின வியர்வின்
துள்ளி;
மடித்தது, மணிவாய்; ஆவி வருவது போவது ஆகித்
தடித்தது, மேனி;என்னே, யார் உளர் தன்மை
தேர்வார் ?
(இராமபிரானுக்கு)மயிர்கள் சிலிர்த்தன; கண்ணீர் வழிந்து பெருகின; மார்பும் தோள்களும்பூரித்துத் துடித்தன; வியர்வையின் துளிகள் உண்டாயின; அழகிய வாய் இதழ் மடிப்புண்டது; உயிர்வருவதும் போவதும் ஆகப் பெற்று உடல் பூரித்தது; என்ன வியப்பு? அப்போது இராமபிரான் அடைந்த நிலையை அறியவல்லார் யாரே உள்ளார் ? (ஒருவரும் இல்லை என்பதாம்)
இராமபிரானுக்குஅப்பொழுது நேர்ந்த மெய்ப்பாடுகளைத் தெரிந்து உணர்த்துவது எம்மனோர்க்கு இயலாது .
***********************************
466. சுக்ரீவன் கட்டளைப்படி படைகள் திரண்டது
அனுமன் இலங்கையை எரியூட்டி அழித்த பிறகு, சீதா பிராட்டியைக் மீட்கும் பொருட்டு சுக்ரீவன் தனது வானரப் படைகளுடன் இலங்கையை நோக்கிப் புறப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க காட்சியை இப்பாடல் விவரிக்கிறது.
எழுக எம் படைகள் என்றான்;
ஏ எனும் அளவின், எங்கும்
முழு முரசு எற்றி, கொற்ற
வள்ளுவன் முடுக்க, முந்திப்
பொழி திரை அன்ன வேலை
புடை பரந்து என்னப் பொங்கி
வழுவல் இல் வெள்ளத் தானை
தனெ் திசை வளர்ந்தது அன்றே
• “எழுக எம் படைகள்” என்றான்: “நம்முடைய படைகள் யாவும் உடனே போருக்குக் கிளம்பட்டும்!” என்று கட்டளையிட்டான்.
• “ஏ!” எனும் அளவின், எங்கும் முழு முரசு எற்றி: அந்தக் கட்டளை பிறந்து, “ஏ” என்று ஒரு நொடிப் பொழுது கூறுவதற்குள், வானரச் சேனையின் எல்லாப் பக்கங்களிலும் முரசுகள் அதிர முழங்கின.
• கொற்ற வள்ளுவன் முடுக்க: வெற்றியை அறிவிக்கும் முரசு கொட்டும் அறிவிப்பாளர்கள் படைகளை விரைந்து செல்லுமாறு முடுக்கினர்.
• முந்திப் பொழி திரை அன்ன வேலை புடை பரந்து என்னப் பொங்கி: அலைகள் கரையை நோக்கிப் பொங்கி வரும் கடல், உலகெங்கும் பரவி எழுந்தது போல வானரச் சேனை எழுந்தது.
• வழுவல் இல் வெள்ளத் தானை தென் திசை வளர்ந்தது அன்றே: எவ்விதக் குறைபாடும் இல்லாத, வெள்ளம் போன்ற அந்தப் பெரும் படைகள் யாவும் இலங்கையை நோக்கி தெற்குத் திசையை நோக்கிப் புறப்பட்டுச் சென்றன.
***********************************
467.ராம லெட்சுமணர்களைத் தோளில் ஏற்றிக்கொண்டு சென்றதாகக் கூறும் பாடல்கள் பிற்காலத்தவர் எழுதிச் சேர்த்த பாடல்கள் என்று கருதப்படுகின்றன.
இராமன் அனுமன் மேல்வீற்றிருத்தல். (49-2)
‘நீ இனிஎன்தன் தோள்மேல் ஏறுதி, நிமல !’ என்ன,
வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை
நோக்கி,
நாயகற்கு இளையகோவும். ‘நன்று’ என அவன்தன்
தோள்மேல்,
பாய்தலும், தகைப்பு இல் தானை படர் நெறிப் பரந்தது
அன்றே.
இலக்குவன்அங்கதன் தோள் மேல் ஏறுதல். (49-3)
கருடனில் விடையில் தோன்றும் இருவரும் கடுப்ப,
காலின்
அருள் தரு குமரன்தோள்மேல், அங்கதன் அலங்கல்
தோள்மேல்,
பொருள் தரும் வீரர் போத, பொங்கு ஒளி விசும்பில்
தங்கும்
தெருள் தகு புலவர்வாழ்த்திச் சிந்தினர், தெய்வப்
பொற் பூ.
திருமாலும்,சிவபெருமானும் போல இராமலக்குவர்; கருடனும், விடையும் போல அனும அங்கதர் தோள் மேல் ஏறிப் புறப்படுதல்.
நாடு வழியாகச்சென்றால் மக்கள் மயங்கி வருந்துவர் என்று கருதிய இராமன் ஏவ, வானர சேனை கனி, கிழங்கு, தேன் பெறுவதற்கு ஒத்த மலை வழியாகத் தெற்கு நோக்கிச் சென்றார்கள்.
***********************************
468. யுத்த காண்ட கடவுள் வாழ்த்து; இறைவனை யாராலும் வருணிக்க முடியாது ; சிலர் உண்டு என்பர்; சிலர் இல்லை என்பர் ; சிலை இப்படிப்பட்டவர் என்றும் அப்படிப்பட்டவர் என்றும் வருணிப்பார்கள்; பகவத்கீதையிலும் கிருஷ்ண பரமாத்மா எவரெவர் எப்படி விரும்புகின்றனரோ அவரவர் விரும்பும் வடிவத்தில் நான் தோன்றுகிறேன் என்று கூறியுள்ளார்.
6059. ‘ஒன்றே’ என்னின், ஒன்றே ஆம்;
‘பல’ என்று உரைக்கின், பலவே ஆம்;
‘அன்றே’ என்னின், அன்றே ஆம்;
‘ஆமே’ என்னின், ஆமே ஆம்;
‘இன்றே’ என்னின், இன்றே ஆம்;
‘உளது’ என்று உரைக்கின், உளதே ஆம்;
நன்றே, நம்பி குடி வாழ்க்கை!
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!
ஒன்றே என்னின் ஒன்றேயாம் – ஒன்று என்று
கூறினால் ஒன்றேயாகும்;பல என்று உரைக்கின் பலவே
ஆம் – பல என்று கூறின் பலவாகும்;அன்றே என்னின்
அன்றே ஆம் – இத்தன்மை உடையதல்ல என்று கூறினால்
அவ்வாறே ஆகும்;ஆமே என்னின் ஆமே யாம் –
இன்ன தன்மை உடையது என்று கூறினால் அந்தத்தன்மை
உடையதாயிருக்கும்; இன்றே என்னின் இன்றே யாம் –
இல்லை என்று சொன்னால் இல்லாததாகும்;உளது என்று
உரைக்கில் உளதேயாம் – உள்ளது என்று கூறினால்
உள்ளதே ஆகும்; நன்றே நம்பி குடி வாழ்க்கை –
இப்படிப்பட்ட இறைவனது நிலை பெரிதாயுள்ளது;நமக்கு
இங்கு என்னோ பிழைப்பு அம்மா – அற்ப அறிவுடைய
சிற்றறிவினராகிய நாம் இவ்வுலகில் இறை நிலையை அறிந்து
உய்வு பெறும் வழி யாது?
***********************************
469.ராவணன் மந்திரிகளைக் கூட்டி மந்திராலோசனை செய்கிறான் ;; கும்பகர்ணன் கூறியது:
‘சிட்டர் செயல் செய்திலை; குலச் சிறுமை செய்தாய்;
மட்டு அவிழ் மலர்க் குழலினாளை இனி, மன்னா!
விட்டிடுதுமேல், எளியம் ஆதும்; அவர் வெல்ல,
பட்டிடுதுமேல், அதுவும் நன்று; பழி அன்றால்.
மன்னர் பெருமானே! நீ பெரியவர்கள் செய்யும் நல்ல
காரியத்தைச் செய்தாயில்லை; – நமது குலமாகிய புலத்திய மரபுக்கே சிறுமை உண்டாக்கும் செயலைச் செய்து விட்டாய்; தேன் சிந்தும் மலர்களை அணிந்த கூந்தலை உடைய சீதையை
இனிமேல் இராமனிடம் செல்ல விட்டு விடுவோமானால் நாம்
வலிமையற்ற எளியவர்கள் என்றாகி விடும் ; அந்த மானிடர்கள் போரில் நம்மை வெல்ல, நாம் இறந்து படுவோமாயின் அதுவும் நல்லதே, நமக்குப் பழி உண்டாகாது.
(பிறன் மனைவியைச் சிறை கொண்ட பழி போரில் வீரமரணம் எய்துவதால் நீங்கும் என கும்பன் கருதினான் என எண்ணத் தோன்றுகிறது.)
‘ஊறு படை ஊறுவதன் முன்னம், ஒரு நாளே,
ஏறு கடல் ஏறி, நரர் வானரரை எல்லாம்
வேறு பெயராதவகை, வேரொடும் அடங்க
நூறுவதுவே கருமம்’ என்பது நுவன்றான்.
அந்தப் பகைவர்களின் மிகுந்த படை இங்கு வருவதற்கு முன்பே ஒரே நாளில் இப்பெரிய கடலைக் கடந்து சென்று அந்த மனிதர்களையும், குரங்குப் படைகள் எல்லாவற்றையும் வேருடன் ழுவதையும் அழித்தொழிப்பதே நாம் செய்ய வேண்டிய செயலாகும் எனக் கூறினான்.
*******************
470 கும்பகர்ணன் பேச்சுக்கு இராவணன் இசைதல்
‘நன்று உரை செய்தாய் !-குமர-!-நான் அது
நினைந்தேன்;
ஒன்றும் இனி ஆய்தல் பழுது; ஒன்னலரை எல்லாம்
கொன்று பெயர்வோம்; நமர் கொடிப் படையை
எல்லாம்,
“இன்று எழுக” என்க !’ என இராவணன்
இசைத்தான்.
குமர ! நன்று உரை செய்தாய் –
(இராவணன் கும்பகர்ணனைப் பார்த்து) தம்பி ! நல்லதே சொன்னாய்;
நானும் அதைத்தான் நினைத்தேன்; இனி ஆராய்வது தீமையாகும்; நமது பகைவர்கள் எல்லோரையும் அடியோடு அழித்து மீள்வோம்;
நம் அரக்கர்களின் கொடிகளைத் தாங்கிய படையை எல்லாம் – இன்றே போருக்கு எழுக என ஆணை இடுவாயாக என்று இராவணன் கூறினான்;
–SUBHAM—
TAGS- கண்டேன் சீதையை, நியூஸ்பேப்பர்களின், முன்னோடி, கம்பன்-வால்மீகி, கம்ப ராமாயணத்தில் 470 கேள்விகள் கும்பகர்ணன் , யுத்த காண்டம், கடவுள் வாழ்த்து, ராவணன்