நரசிம்மாவதாரம்: கம்பனின் அத்புத வர்ணனை! கம்ப ராமாயணத்தில் 500 கேள்விகள் (Post. 16,430)

Written by London Swaminathan

Post No. 16,430

Date uploaded in London – 27 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

491

உன் கடவுள் இந்தக் கம்பத்தில் தோன்றாவிட்டால் யானையைச் சிங்கம் கொல்வது போல உன்னை நான் கொல்வேன் என்று கூறிய இரணியனுக்கு அவன் மகன் கூறிய பதில் என்ன ?

492

இரணியன் நக்கல் சிரிப்புடன் தூணை எற்றியவுடன் என்ன நடந்தது ?

493

நரசிங்கப் பெருமாள் சிரித்துக் கொண்டே தூணிலிருந்து வெளியே வந்தவுடன் பிரகலாதன் எப்படி மகிழ்ந்தான்?

494

கீழ்கண்ட அருமையான பாடலின் பொருள் விளங்காவிடில் விடைப்பகுதிக்குச் செல்க

‘ “ஆர் அடா சிரித்தாய் ? சொன்ன அரிகொலோ ?

அஞ்சிப் புக்க

நீர், அடா ? போதாது என்று, நெடுந் தறி

நேடினாயோ ?

போர் அடா ? பொருதிஆயின், புறப்படு ! புறப்படு !”

என்றான் –

பேர் அடாநின்ற தாளோடு உலகு எலாம் பெயரப்

பேர்வான்.

495

டேய்,  டா, அடா, புடா என்று இரணியன் தடா புடா என்று ஏக வசனத்தில் பேசியவுடன் தூணில் என்ன நடந்தது?

496

நரசிம்ம உருவம் பிரம்மலோகம் வரை வளர்ந்ததை கம்பன் எப்படி நமக்குச் சொல்கிறான் ?

497

நரசிம்ம அவதாரத்தில் கம்பன் கற்ற / அல்லது கற்பிக்கும் பாடம் என்ன?

498

சிங்க உருவில் தோன்றிய பெருமாள் என்ன என்ன செய்தார் ?

499

நரசிம்மத்துடன் மோதுவதற்கு இரணியன் தயாரான காட்சி எப்படி இருந்தது ?

500

நரசிம்மத்தை இப்போதாவது வணங்கு என்று பிரகலாதன் எப்படிக் கெஞ்சினான் ?

XXXXXXXXXXXXX

விடைகள்

491.இரணியனுக்கு அவன் மகன் பிரகலாதன் கூறிய பதில்

“அறிவின் மிக்கான், ‘நின்னால் கோறற்கு என்னுயிர் எளியதொன்று அன்று; யான்முன்

சொன்னவன் தொட்ட தொட்ட இடங்கள்தோறும் தோன்றானாயின்,

பின்னை இந் நின்ற தூணில் தோன்றானேல், பேசினேனைப்

பின்னை நீ கொன்றுபோடாய்‘ என்று தன் பெற்றி சொன்னான்.”

• பொருள்:

மெய்யறிவில் சிறந்தவனாகிய பிரகலாதன் தன் தந்தையிடம், “உன்னால் கொல்லப்படுவதற்கு எனது உயிர் அத்தனை எளிமையான ஒன்றல்ல (ஏனெனில் என் உயிர் இறைவனின் வசப்பட்டது). நான் முன்னே குறிப்பிட்ட அந்தப் பரம்பொருள், நீ தொட்டுக் காட்டும் இடங்களிலெல்லாம் தோன்றவில்லை என்றால், குறிப்பாக இதோ இந்தத் தூணிலும் அவன் வெளிப்படவில்லை என்றால், சபதம் செய்த என்னை நீ அதன் பிறகு கொன்றுவிடு” என்று தனது உறுதியை வெளிப்படுத்தினான்.

என்உயிர்  யானே  மாய்ப்பல்-

எனது  உயிரை  நானே மாய்த்துக் கொள்வேன்;  பின்னும் வாழ்வு

உகப்பல்  என்னின் –   அதற்குப்   பிறகும்   உயிர்  வாழ்வதை

விரும்புவேனாயின்;    அன்னவற்கு    அடியேன்    அல்லேன்

என்றனன்  –   அந்தத்   திருமாலுக்குரிய   நல்ல  தொண்டனாக மாட்டேன்.– என்றும் பாடல் உள்ளது.

*******************************

492

நசை திறந்து இலங்கப் பொங்கி, “நன்று, நன்று !” என்ன நக்கு,

விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன ஓர் தூணின், வென்றி

இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும்,

திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, அச் செங்கண் சீயம்.

பொருள்

• நசை திறந்து இலங்கப் பொங்கி: போர்க்கோல விருப்பம் உள்ளத்தில் பொங்கி வெளிப்பட.

• “நன்று, நன்று !” என்ன நக்கு: “நல்லது, நல்லது” என்று ஏளனமாகச் சிரித்து.

• விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன: பெருவேகத்துடன் இடி விழுந்தது போல.

• ஓர் தூணின், வென்றி இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்: வெற்றிப் புகழ் கொண்ட தனது உயர்ந்த கையால் ஒரு தூணில் ஓங்கி அறைந்தான் இரணியன்.

• எற்றலோடும், திசை திறந்து, அண்டம் கீறச் சிரித்தது, அச் செங்கண் சீயம்: அவன் அறைந்தவுடனேயே, எட்டுத் திசைகளும் திறந்து அண்டம் பிளக்குமாறு, சிவந்த கண்களைக் கொண்ட நரசிங்க வடிவத் திருமால் ஆர்ப்பரித்துச் சிரித்தான்.

**************************

493.நரசிங்கப் பெருமாள் சிரித்துக் கொண்டே தூணிலிருந்து வெளியே வந்தவுடன் பிரகலாதன் கொண்ட பெருமகிழ்ச்சி

6316.

‘ “நாடி நான் தருவென் என்ற நல் அறிவாளன்,

நாளும்

தேடி நான்முகனும் காணாச் சேயவன்

சிரித்தலோடும்,

ஆடினான்; அழுதான்; பாடி அரற்றினான்; சிரத்தில்

செங்கை

சூடினான்; தொழுதான்; ஓடி, உலகு எலாம்

துகைத்தான், துள்ளி.

பரமனை நானே தேடி,  உனக்குக்  காட்டித்  தருவேன் என்று   கூறிய  சிறந்த அறிவுடையவனாகிய பிரகலாதன் நாள்தோறும்  தேடியும்  பிரமன்முதலான  தேவர்களும் காண முடியாதபடி நெடும்  தொலைவில் உள்ளவ பெருமான் சிரித்தவுடனே ,மிகவும் மகிழ்ந்து  ஆடினான், அழுதான், பாடி அலறலானான்; உச்சியின் மீது கைகளைக் கூப்பி வணங்கினான்;    உலகெங்கும் துள்ளிக் குதித்தான்.

*******************************

494. டேய் நரசிம்மா! வாடா போருக்கு! – இரணியன் கொக்கரிப்பு

‘ “ஆர் அடா சிரித்தாய் ? சொன்ன அரிகொலோ ?

அஞ்சிப் புக்க

நீர், அடா ? போதாது என்று, நெடுந் தறி

நேடினாயோ ?

போர் அடா ? பொருதிஆயின், புறப்படு ! புறப்படு !”

என்றான் –

பேர் அடாநின்ற தாளோடு உலகு எலாம் பெயரப்

பேர்வான்.

இரணியன்  (சிரிப்பொலி கேட்டு)   தூணில்   இருந்து   சிரித்தவன்    யாரடா இச்சிறுவன் சொன்ன  அரிதானோ?  எனக்குப்  பயந்து  போய்  ஒளிந்து கொண்டிருந்த கடல் போதாதென்று இந்தப்  பெரிய  தூணையும் ஒளிந்து  கொள்ளத் தேடினாயோ? என்னுடன் போர்  செய்ய தயாரானால் புறப்படு புறப்படு என்றான். விரைவில் புறப்பட்டு வா என்று கொக்கரித்தான்

*********************************

495.டேய்,  டா, அடா, புடா என்று இரணியன் தடா புடா என்று ஏக வசனத்தில் பேசியவுடன் நரசிங்க மூர்த்தி வெளிப்பட்டுப் பெரிய உருவம் எடுத்தான்

6318.

‘பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை

வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல

மற்றும்

அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்து

அறையகிற்பார் ?

கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்.

இரணியன் திருமாலைப் போருக்கு அழைத்தவுடன், அந்தத் தூண் இரண்டாகப் பிளந்தது; அங்கே  நரசிங்கம்  தோன்றியது; பின்பு  வளர்ந்தது;  எட்டுத்  திசைகளையும்  பேரண்டம் முதலிய  அனைத்தையும் அளந்தது;   அதற்கப்பாலும் வளர்ந்ததை யார்தான்  அறிந்து  சொல்வதற்கு  வல்லவர்! மேலும் ஓங்கி வளர்ந்தது;   (அதனால்) உலக உருண்டையாகிய முட்டை கீழேயும் கிழிந்தது மேலேயும் கிழிந்தது.

அந்தக் காலத்திலேயே உலகம் உருண்டை என்பதை இந்துக்கள் அறிந்து இருந்ததால் வேதத்திலுள்ள பூமி சூக்தம் முதல் பாரதி பாடல் வரை காண்கிறோம் !

சீயம் –  சிங்கம்.   ககனம்  –   உலகம்.; அறையகிற்பார் – கூறவல்லார்.

*******************************

496. நரசிம்ம உருவம் பிரம்மலோகம் வரை வளர்ந்ததை கம்பன் நமக்குச் சொல்லலும் அழகு

6319.

‘மன்றல் அம் துளப மாலை மானுட மடங்கல் வானில்

சென்றது தெரிதல் தேற்றாம்; சேவடி படியில் தீண்ட

நின்றது ஓர் பொழுதின், அண்ட நெடு முகட்டு

இருந்த முன்னோன்

வானுற  ஓங்கி  வளர்ந்த நரசிங்கத்தின் உந்தி சத்தியலோகம் அளவும் உயர்ந்திருந்தமையால் பிரமன் உந்தியில் தோன்றியது போலக்  காணப்பட்டான்.

மணம் கமழும் அழகிய துழாய் மாலை  அணிந்த நரசிங்கமாகிய   திருமால் ஆகாயத்தே வளர்ந்து சென்றதனை இவ்வளவென்று   தெரிந்து தெளியமாட்டோம். திருவடிகள் நிலத்திலே தீண்ட ,அண்டத்தின் உயர்ந்த சிகரத்திலே (சத்திய  லோகத்திலே) இருந்த பிரமதேவன்  அப்பெருமானது நாபியில் வந்தானெனும்படி காணப்பட்டான்.

******************************

497. நரசிம்ம அவதாரத்தில் கம்பன் கற்ற / அல்லது கற்பிக்கும் பாடம் : நல்லாருக்கு எக்காலத்தும் துன்பம் வராது

6324.

‘நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ, கேடு ?

நான்முகத்தோன் ஆதி

தொன்மையின் தொடர்ந்த வாய்மை அறத்தொடும்

துறந்திலோரை,

அன்வயித்து, ஓரும் தீய அவுணர் அல்லாரை,

அந் நாள்,

தன் வயிற்றகத்து வைத்துத் தந்தது, அச் சீயம்,

தாயின்.

நல்ல  செயல்களையே தொடர்ந்து செய்து வந்தவர்களுக்கு, எதனாலும் தீங்கு  நேருவதுண்டோ? பிரமதேவன் முதலாக பழைய  காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற வாய்மை,   அறம்   ஆகிய பண்புகளை விடாத மேலோர்களை /  தீயராகிய  அரக்கர்கள் அல்லாத மற்ற நல்லவர்களை, தாயைப் போன்று அந்த நரசிங்க மூர்த்தி தனது வயிற்றுள்ளே வைத்து காப்பாற்றுகிறான்

பிரமன் முதலானோரைக் காத்தும், தீய அவுணரை மாய்த்தும் பரமன் உயிர்களைத் தொடர்ந்து வயிற்றில் வைத்துக் காத்த செயலைக் கூறி ‘நல்லோர் கேடு  அடைதலுண்டோ’ என்ற  பொதுப்  பொருளைச்  சிறப்பித்துக் கூறுகிறான் கம்பன்.

*********************************

498 சிங்கவேள் செய்த செயல்கள்

6325.

‘பேருடை அவுணர்தம்மைப் பிறை எயிற்று அடக்கும்;

பேரா,

பாரிடைத் தேய்க்கும்; மீளப் பகிரண்டத்து அடிக்கும்;

பற்றி,

மேருவில் புடைக்கும்; மாள, விரல்களின் பிசையும்;

வேலை

நீரிடைக் குமிழி ஊட்டும்; நெருப்பிடைச் சுரிக்க

நீட்டும்;

அரக்கர் என்ற பெயர் உள்ளவரையெல்லாம், (அந்த  நரசிங்கம்)

தனது பிறைச் சந்திரனைப் போன்ற பற்களால் சிதைத்து அடக்கும்;

பெயராத நிலத்திலே சிலரைத் தேய்த்து அழிக்கும்; மீண்டும் சிலரைப்  பேரண்டத்திலே தூக்கி  அடிக்கும்;  சிலரைப்  பிடித்து  மேரு மலையில் மோதும் படி அடிக்கும்;    சிலரை விரல்களாலேயே  பிசைந்து கொல்லும் சிலரைக் கடல் நீரிலே மூழ்கடித்துக் குமிழி

எழச்செய்யும்; சிலரைத் தீயிலே சுருண்டு தீயும்படி நீட்டும்.

‘வகிர்ப் படுத்து, உரக்கும்; பற்றி வாய்களைப்

பிளக்கும்; வன் தோல்

துகிற் படுத்து உரிக்கும்; செந் தீக் கண்களைச்

சூலும்; சுற்றிப்

பகிர்ப் படக் குடரைக் கொய்யும்; பசை அறப்

பிசையும், பல் கால்;

உகிர்ப் புரைப் புக்கோர்தம்மை உகிர்களால் உறக்கும்,

ஊன்றி;

சிலர் உடல்களைப்  பிளந்து கிழிக்கும்;  சிலரைப்  பிடித்து வாய்களைப்  பிளக்கும்;  சிலரது  உடல்களின் வன்மையான  தோலை  உரிக்கும் தீப்பொறி பறக்கும் அரக்கர் தம் கண்களைத் தோண்டி  எடுக்கும்;  சுற்றிலும் துண்டுபடுமாறு சிலர் குடல்களைக் கொய்யும்; சிலர்  உடல்களை  ஈரப்பசை நீங்கப் பல தடவை  பிசையும்;  நகத்தால் ஊன்றிச் சிதைக்கும்.

‘யானையும், தேரும், மாவும், யாவையும், உயிர்

இராமை,

ஊனொடும் தின்னும்; பின்னை, ஒலி திரைப் பரவை

ஏழும்

மீனொடும் குடிக்கும்; மேகத்து உருமொடும்

விழுங்கும், விண்ணில்;

தான் ஒடுங்காது என்று, அஞ்சி, தருமமும் சலித்தது

அம்மா !

நாற்படைகளில் உள்ள யானை, குதிரை ஆகியவற்றை உண்ணும்; மேகத்தை இடியோடும், ஏழ்கடல்களில் உள்ள மீன்களோடும் விழுங்கும்; இதற்கு முடிவே இராதோ என்று  தர்மத்திற்கே அச்சம் ஏற்பட்டுவிட்டது!

அம்மா – கம்பன் பயன்படுத்தும் ஆச்சர்யக் குறி

*********************************

499.நரசிம்மத்துடன் மோதுவதற்கு இரணியன் தயாரான காட்சி

அந்த இரணியனும் அவனுக்கு மகனாக வந்து பிறந்த தேவர்களுக்கெல்லாம்  பாதுகாவலனான குற்றமற்ற பிரகலாதனும் நீங்கலாக மற்ற பல்வேறு வகைப்பட்ட அரக்கர்கள் எல்லோரையும் நரசிங்கப் பெருமான் நினைக்கும்  நேரத்துக்குகுள் கொன்று தீர்த்தது     அழகிய  வீரக்  கழல்களை  அணிந்தவனான  அந்த இரணியனும் நரசிம்மத்துடன் மோதுவதற்கு தயாரானான்.

‘வயிர வாள் உறையின் வாங்கி, வானகம் மறைக்கும்

வட்டச்

செயிர் அறு கிடுகும் பற்றி, வானவர் உள்ளம் தீய,

அயிர் படர் வேலை ஏழும் மலைகளும் அஞ்ச,

ஆர்த்து, அங்கு

உயிருடை மேரு என்ன வாய் மடித்து, உருத்து

நின்றான்.

(நரசிம்மத்தின் வருகையைப் பார்த்த இரணியன்) உறுதியான  வாளை உறையிலிருந்து வெளியே உருவி ஒரு கையில் பிடித்து, வானத்தையே மறைக்கும் வட்ட வடிவ கேடயத்தை ஒரு கையில் பிடித்து, தேவர்கள் மனம் தீய்ந்து ஏழுகடல்களும்   மலைகளும்  அஞ்சி நடுங்க ஆரவாரம் செய்து மேருமலை என்று கூறுமாறு, வாயை  மடித்து சினம் கொண்டு நின்றான்.

*********************************

500.நரசிம்மத்தை இப்போதாவது வணங்கு என்று பிரகலாதன் கெஞ்சினான். இரணியன் தூணை உதைக்க , அதிலிருந்து நரசிம்ம மூர்த்தி வெளிப்பட்டது .அந்த அச்சமூட்டும் நிலையைக்  கண்டும் மாறாமல் நிற்பதால், அவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் பிரகலாதன் அவனுக்குக் கூறும் இறுதி அறிவுரையாக கம்பநாட்டாழ்வார் இதனை வடித்துள்ளார்.

‘நின்றவன் தன்னை நோக்கி, “நிலை இது கண்டு, நீயும்,

ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே;

வன்தொழில் ஆழி வேந்தை வணங்குதி; வணங்கவே, உன்

புன்தொழில் பொறுக்கும்” என்றான் – உலகு எலாம் புகழ நின்றான்.

பாடலின் பொருள்

• நின்றவன் தன்னை நோக்கி: அங்கே (மகாவிஷ்ணுவின் / நரசிம்மரின் தோற்றத்தின் அறிகுறிகளைக் கண்டும்) ஆணவத்தோடு நிமிர்ந்து நின்ற தன் தந்தை இரணியனைப் பார்த்து,

• “நிலை இது கண்டு, நீயும்… உணர்ந்திலை போலும் அன்றே: “இங்குள்ள சூழ்நிலையையும், பேரழிவின் அறிகுறிகளையும் நேரில் கண்டும், நீ உன்னுடைய உள்ளத்தில் இன்னும் எதையும் உணர்ந்து கொள்ளவில்லை போலும்!

• வன்தொழில் ஆழி வேந்தை வணங்குதி: பேராற்றல் கொண்ட, சக்கரப்படையை உடைய அந்தப் பரம்பொருளை (இப்போதாவது) பணிந்து வணங்குவாயாக.

• வணங்கவே, உன் புன்தொழில் பொறுக்கும்” என்றான்: நீ அப்படி அவரிடம் சரணடைந்தால், இதுவரை நீ செய்த தீய செயல்களையும், குற்றங்களையும் அந்தப் பெருமான் பொறுத்து உன்னை மன்னித்தருள்வார்” என்று உலகமெல்லாம் புகழும்படி நின்ற பிரகலாதன் கூறினான்.

–சுபம்—

TAGS-

நரசிம்மாவதாரம்: கம்பனின் அத்புத வர்ணனை! கம்ப ராமாயணத்தில் 500 கேள்விகள்

Leave a comment

Leave a Reply