பிரகலாதன் கேட்ட வரமும் நரசிம்மர் கொடுத்த வரங்களும்! கம்ப ராமாயணத்தில் 510 கேள்விகள் (Post.16,433)

Written by London Swaminathan

Post No. 16,433

Date uploaded in London – 28 November 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

இரணியன் வதைப்படலத்தில் ஒரு உயிர்த் துடிப்புள்ள காவி யத்தைக் கம்பன் படைத்துள்ளான்;  நாடகத்துக்கும், நாட்டியத்துக்கும் ஏற்ற அருமையான கருத்துக்களும் வசனங்களும் இதில் உள்ளன. பாரதியார் பாடல்களிலும் கம்பனின் தாக்கத்தைக் காண முடிகிறது . இறுதியில் மங்களம் பாடி சுபமாக முடிக்கிறான் ; இதையெல்லாம் ராவணனுக்கு விபீஷணன் ஒரு அறிவுரையாக வழங்கினான் என்பதைக் கடைசி செய்யுளை பார்க்கையில்தான் நமக்கே மீண்டும் நினைவுக்கு வருகிறது ; அதுவரை நாமும் கம் பனின் நரசிம்மாவதாரத்தில் மூழ்கி விடுகிறோம். கம்பனின் ஒரிஜினாலிட்டியை இதில் காண முடிகிறது.

நரசிம்மனுக்கும் இரணியனுக்கும் போர்

501

இப்போதாவது நரசிங்க உருவில் வந்த விஷ்ணுவை வணங்கு என்று பிரகலாதன் வேண்டியதற்கு அவன் தந்தை இரணியன் என்ன சொன்னான்?

502

இரணியனின் மார்பினை சிங்க முகம் கொண்ட விஷ்ணு பிளந்த காட்சி எப்படி இருந்தது ?

503

பயந்து ஒளிந்து கொண்டிருந்த கடவுளர் வெற்றிச் செய்தியைக் கேட்டு திரும்பி வந்தது எங்கனம்?

504

AMERICA & RUSSIA DID NOT KNOW BILLION, TRILLION GALAXIES WERE THERE!

நரசிங்கத்தை பிரம்மா துதித்த பாடலில் அமெரிக்க, ரஷிய விஞ்ஞானிகளும் அக்காலத்தில் அறியாத செய்தியைக் கம்பன் எப்பட்டிப் பாடலில் வடிக்கிறான்?

505

நரசிங்கப் பெருமானின் சீற்றத்தைத் தணிக்க, தேவர்கள் லெட்சுமி தேவியை அனுப்பினார்கள் ; அவளுடைய அருள் சுரக்கும் தோற்றம் எப்படி இருந்தது ?

506

நரசிங்கப்பிரான் தன்பால் அன்புடைய பிரகலாதனை நோக்கி என்ன பகர்ந்தார் ?

507

உனக்கு என்ன வரம் வேண்டும், இயம்பு – என்று நரசிங்க மூர்த்தி கேட்டவுடன் பிரகலாதன் கேட்ட வரம் என்ன ?

508

நரசிங்கப் பெருமான் பிரகலாதன் கேட்டதைக் கொடுத்தாரா?

509

பிரகலாதனை அரசனாக முடிசூட்ட இட்ட கட்டளை என்ன?

510

இரணியன் கதையைச்  சொல்லி முடித்த விபீஷணன் ராவணனுக்கு சொன்ன அறிவுரை என்ன ?

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

விடைகள்

501. பிரகலாதன் சொன்னதை ஏற்காமல் இரணியன் சினந்து சூளுரைத்து நகுதல்

‘ “கேள், இது; நீயும் காண, கிளர்ந்த கோள்

அரியின் கேழ் இல்

தோளொடு தாளும் நீக்கி, நின்னையும் துணித்து,்

பின், என

வாளினைத் தொழுவது அல்லால், வணங்குதல்

மகளிர் ஊடல்

நாளினும் உளதோ ?” என்னா, அண்டங்கள் நடுங்க

நக்கான்.

நான்  சொல்லும் இதனைக்  கேள்; நீயும்

(மற்றவர்களுடன்) நேரில் பார்த்துக் கொண்டிருக்க

சினம் கொண்டெழுந்த, கொலைத் தொழில் வல்ல

இந்தச்   சிங்கத்தின் தோள்களையும்,  கால்களையும் வெட்டிக்   களைந்து, உன்னையும் வாளால் துண்டித்து    பிறகு எனது வாளை பணிந்து  வணங்குவதென்பது மகளிர் ஊடல் நாளினும்உளதோ  என்றான் எல்லா அண்டங்களும் அஞ்சி நடுங்கும்படி சிரித்தான்.

ஊடலைத் தீர்க்க, தலைவியைத் தலைவன் வணங்குதல்

அகப்  பொருளில்  கூறப்படும்.  அத்தகைய  ஊடல்  காலத்திலும்

வணங்காதவன்  என்பது கருத்து. “மாதர்  புலவியினும்  வணங்காத

மகுடம்” (3069) என இராவணனைக் கம்பர் கூறுவார்.

*************************

502. இரணியனின் மார்பினை சிங்க முகம் கொண்ட விஷ்ணு பிளந்த காட்சி:

மார்பை வகிர்ந்தவுடன் ரத்த வெள்ளம் பெருகியது

‘ “போன்றன இனைய தன்மை; பொருவியது

இனையது” என்று

தான் தனி ஒருவன், தன்னை உரைசெயும்

தரத்தினானோ ?

வான் தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர

மார்பின்

ஊன்றலும், உதிர வெள்ளம் பரந்துளது, உலகம்

எங்கும்.

இப்பெருமானுடைய இவ்வியல்புகள்  இன்னாருடைய   தன்மையை  ஒத்தன;  இன்னது ஒரு பொருள் இவனை ஒத்தது என வெல்லாம் ஒப்பற்ற தனிப் பெரும் தலைவனான  எவரும்  எடுத்துக் கூறும் தரம் உடையவனோ பரமன்; தன்னடியவர்க்கு வைகுந்த வாழ்வைத்  தந்தருளும் வள்ளலான  பெருமானது வெண்மை நிறமான கூரிய நகங்கள் இரணியனது உறுதி வாய்ந்த மார்பிலே ஊன்றியவுடனே  அவன் உடலிலிருந்து பெருகிய ரத்த வெள்ளம்  உலகம் எங்கும் பரந்தது.

‘ஆயவன்தன்னை, மாயன், அந்தியின், அவன் பொன்

கோயில்

வாயிலில், மணிக் கவான்மேல், வயிர வாள் உகிரின்

வாயின்,

மீ எழு குருதி பொங்க, வெயில் விரி வயிர மார்பு

தீ எழப் பிளந்து நீக்கி, தேவர்கள் இடுக்கண்

தீர்த்தான்.

அந்த இரணியனை, மாலைப் பொழுதிலே, அந்த

இரணியனுடைய அரண்மனையின் வாயிலிலே,

தனது அழகிய மடியின் மீது (கிடத்தி    ), வயிர வாள்   போன்ற தனது கை நகத்தின் முனையாலே   வைரம் பாய்ந்த  மார்பினை இருபிளவாகப் பிளந்து தேவர்கள் அதுவரை பட்ட துன்பத்தை  திருமால் போக்கினான்.

இரவிலும்பகலிலும் சாகக் கூடாது வீட்டுக்குள்ளும் வெளியேயும் சாகக் கூடாது. விண்ணிலும் மண்ணிலும் சாகக்கூடாது பறவை, விலங்கு, மனிதர்,   தேவர்,   அரக்கர்களால் சாகக்கூடாது,  எந்தப்டைக் கலத்தாலும் சாகக் கூடாது என்று பிரமனிடம் வரம் கேட்டுப் பெற்றவன் இரணியன் எனவே, மாலைப்  போதில், வாயிற்  படியில் கிடத்தி    நரசிங்கப்    பெருமான்   நகத்தால்  உடலைப் பிளந்து இரணியனைக் கொன்று, தேவர்களின் துன்பத்தைத் தீர்த்தார் .

*************************

503

முன்பு இரணியனுக்கு அஞ்சியோடி ஒளிந்திருந்த தேவர்கள் அங்கு வந்து குழுமி நிற்றல்

‘முக்கணான், எண்கணானும், முளரி ஆயிரம்

கணானும்,

திக்கண் ஆம் தேவரோடு முனிவரும், பிறரும், தேடிப்

புக்க நாடு அறிகுறாமல் திரிகின்றார் புகுந்து

மொய்த்தார்,

“எக் கணால் காண்டும், எந்தை உருவம்” என்று,

இரங்கி நின்றார்.

முக்கணான்  எண்கணானும்  –  மூன்று  கண்களை உடைய

சிவபிரானும்   எட்டுக்   கண்களை   உடையபிரமதேவனும்; முளரி

ஆயிரம்  கணானும்  –  தாமரை  போன்ற  ஆயிரம்   கண்களை

உடையவனான   தேவேந்திரனும்; திக்கண்  ஆம்   தேவரோடு

முனிவரும்  பிறரும்  –   திசைகள்   தோறும்  சென்று திரிகின்ற

தேவர்களும் முனிவரும்  மற்றும்  உள்ளவர்களும்;  தேடிப்  புக்க

நாடு  அறிகுறாமல்  திரிகின்றார்- இரணியனுக்குப் பயந்து, தேடி

வந்தாலும்   அவர்கள் இருக்கும்   நாடு   எவருக்கும் தெரியாதபடி

திரிந்தவர்கள்; புகுந்து   மொய்த்தார் – (நரசிங்கத்தால் இரணியன்

மாய்ந்தது  தெரிந்து) வந்து திரண்டார்கள்; எந்தை  உருவம்- எம்

பெருமான் கொண்ட  நரசிங்க வடிவத்தை; எக்கணால் காண்டும் –

எந்தக்  கண்களால் காண  இயலும்?; என்று  இரங்கி நின்றார் –

என்று கூறி இரங்கி நின்றார்கள்.

**********************

504. இந்தப் பிரபஞ்சத்தில் பல்லாயிரம் கோடி கோடி கோடி அண்டங்கள் உள்ளன என்ற செய்தி நரசிங்கத்தை பிரம்மா துதித்த பாடலில் வருகிறது; அமெரிக்க ரஷிய விஞ்ஞானிகளும் அக்காலத்தில் அறியாத  செய்தியாகும்; பாரதியாரும் 1921 ஆம் ஆண்டுக்கு முன்னரே நக்கபிரான் அருளால் இங்கே நடை பெறும் உலகங்கள் …….. என்ற பாடலில் பாடியுள்ளார்

6346.

‘ “பல் ஆயிர கோடி அண்டம், பனிக் கடலுள்

நில்லாத மொக்குள் என, தோன்றுமால்,

நின்னுழையே;

எல்லா உருவமுமாய் நின்றக்கால், இவ் உருவம்

வல்லே படைத்தால், வரம்பு இன்மை வாராதோ?

பல ஆயிரம் கோடி என்று கூறும் அண்டங்கள் அனைத்தும் குளிர்ந்த  கடலிலே  தோன்றிய நீர்க்குமிழிகளைப் போல உன்னிடத்திலிருந்தே  தோன்றும்; இவ்வண்டத்திலுள்ள எல்லா வடிவாகவும் நீயே இருக்கும்போது இந்த நரசிங்க வடிவத்தை (புதியதொன்றாக)    விரைந்து படைத்தாயென்றால் உனது படைப்புத் தொழிலில் வரம்பின்மை என்ற குற்றம் வராதோ.?

“நூற்றொரு கோடியின் மேற்படவிரிவன”   என்பது திருவாசகம்.

இதுகாறும் படைப்பிலே இல்லா ஓர் உருவத்தை (நரசிம்மத்தை)   படைத்தது நியதியிலிருந்து  மாறுகிறது. எனவே, இது வரம்பின்மை ஆகாதோ? என்பது கருத்து.

**************************

505 நரசிங்கப் பெருமானின் சீற்றத்தைத் தணிக்க, தேவர்கள் லெட்சுமி தேவியை அனுப்பினார்கள்; அவளுடைய அருள் சுரக்கும் தோற்றம்:

‘பூவில் திருவை, அழகின் புனை கலத்தை,

யாவர்க்கும் செல்வத்தை, வீடு என்னும் இன்பத்தை,

ஆவித் துணையை, அமுதின் பிறந்தாளை,

தேவர்க்கும் தம் மோயை, ஏவினார், பாற் செல்ல.

செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளை,அணிகலன்  போன்றவளை, எல்லோருக்கும் செல்வத்தை வழங்கும் செல்வியாகத் திகழ்பவளை, பரமபதம் என்ற பேரின்ப வீட்டைத் தந்தருள்பவளை, திருமாலின் உயிர்த்துணையாகப் பிரியாது இருப்பவளை அமுதம் பிறந்த பாற்கடலில் பிறந்தவளை  தேவர்களுக்கெல்லாம் தாயாக விளங்குபவளை    (சீற்றம் கொண்டு நின்ற சிங்கப்பிரான்) பக்கத்திலே சென்றருளப் பிரார்த்தித்து அனுப்பினர்.

‘செந் தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும்

நந்தா விளக்கை, நறுந் தாள் இளங் கொழுந்தை,

முந்தா உலகும் உயிரும் முறை முறையே

தந்தாளை, நோக்கினான், தன் ஒப்பு ஒன்று

இல்லாதான்.

தனக்கு உவமையில்லாத செந்தாமரைமலரில் மன மகிழ்வோடு அமர்ந்தருளும் நந்தா(அழியாத) விளக்கை நறுமணம் கமழும் இளங்கொழுந்து போன்றவளை, இவ்வுலகையும் உயிர்களையும்  வழி வழியாகத் தந்தருள்பவளை (கருணை நிறைந்த கண்களால்) பார்த்தருளினான்.

********************

506 

நரசிங்கப்பிரான் தன்பால் அன்புடைய பிரகலாதனை நோக்கி

‘ “உந்தையை உன்முன் கொன்று; உடலைப் பிளந்து

அளைய,

சிந்தை தளராது, அறம் பிழையாச் செய்கையாய் !

அந்தம் இலா அன்பு என்மேல் வைத்தாய் !

அளியத்தாய் !

எந்தை ! இனி இதற்குக் கைம்மாறு யாது ?” என்றான்.

உனது தந்தையான இரணியனை உன்கண் எதிரே

அவனுடலை எனது கை நகங்களால் பிளந்து சிறிதும் மனம் தளராமல்  அற நெறியில் நின்று தவறாத செயலை உடையவனே!

என்மீது  முடிவில்லாத பேரன்புடையனாயிருந்தாய். என் அப்பனே  உனக்கு செய்யக்கூடிய கைம்மாறு ஏது?  என்று பெருமாள் கேட்டார்

‘ “கொல்லேம், இனி உன் குலத்தோரை, குற்றங்கள்

எல்லை இலாதன செய்தாரே என்றாலும்;

நல்லேம், உனக்கு எம்மை; நாணாமல், நாம் செய்வது

ஒல்லை உளதேல், இயம்புதியால்” என்று உரைத்தான்.

இனி மேல் உனது அசுரர் குலத்த்தில் பிறந்தவர்களை குற்றங்களைச் செய்தவர்கள் என்று தெரிந்தாலும் கொல்ல மாட்டேன்;   உனக்கு  எந்தப் பிறப்பிலும் நல்லவனாவேன்; நான் உனக்கு ஏதேனும் செய்ய வேண்டியது இருந்தால் நாணப்படாது கூறுவாயாக என்று பரமன் பணித்தான்.

**********************

507.உனக்கு என்ன வரம் வேண்டும், இயம்பு – என்று நரசிங்க மூர்த்தி கேட்டவுடன் பிரகலாதன் அன்பே பெரும்பேறென வேண்டுதல்

‘ “முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவு இல்லை;

பின்பு பெறும் பேறும் உண்டோ ? பெறுகுவெனேல்,

என்பு பெறாத இழி பிறவி எய்தினும், நின்

அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள்” என்றான்.

எம்பெருமானே ! உனக்கு அடியவனாகி யான் முன்பு பெற்ற பேறுகளுக்கு எல்லையே இல்லை;   இனி மேலும் நான் பெற  வேண்டிய  பேறுகள்  ஏதேனும்  உண்டோ; அப்படி ஏதேனும் வேண்டிப் பெறுவதென்றால் எலும்பில்லாத இழிந்த

புழுவாகப்  பிறந்தேன்  என்றாலும் உனது அன்பைப்  பெற்று  வாழும் பெரிய  பேற்றினை    உனது தொண்டனாகிய எனக்கு அருள்வாயாக என்றான்.

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே

வழுவாது இருக்க வரந்தர வேண்டும் இவ்வையகத்தே

தொழுவார்க்கு இரங்கி யிருந்து அருள் செய்பாதிரிப்புலியூர்ச்

செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே- என்று அப்பர் பாடியது நினைவு கூறத்தக்கது .

பிறவாமை வேண்டும் பிறந்தாலும் மறவாமை வேண்டும் -என்று காரைக்கால் அம்மையார் வேண்டியதையும் கம்பர் அறிந்திருப்பார் போலும் .

இறவாத இன்ப அன்பு

வேண்டிப்பின் வேண்டு கின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும்

பிறப்புண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும்

வேண்டும்நான் மகிழ்ந்து பாடி

அறவாநீ ஆடும் போதுன்

அடியின்கீழ் இருக்க என்றார்.

**********************

508. நரசிங்கப்பிரான் அருள்புரிதல்

‘அன்னானை நோக்கி, அருள் சுரந்த நெஞ்சினன்

ஆய்,

“என் ஆனை வல்லன்” என மகிழ்ந்த பேர் ஈசன்,

“முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும்,

உன் நாள் உலவாய், நீ, என் போல் உளை” என்றான்.

பிரகலாதனை இறைவன் பார்த்து,  எல்லாவற்றுக்கும்  முன்னதாக என்னால் படைக்கப்பட்ட மண் முதலான பூதங்கள் எல்லாம்  அழிந்தாலும் என்னைப் போல நீயும் என்றும் வாழ்வாய் என்றான்.

‘ “மின்னைத் தொழு வளைத்தது என்ன மிளிர்

ஒளியாய்!

முன்னைத் தொழும்புக்கே ஆம் அன்றோ, மூஉலகும் ?

என்னைத் தொழுது ஏத்தி எய்தும் பயன் எய்தி,

உன்னைத் தொழுது ஏத்தி, உய்க, உலகு எல்லாம்.

என்னைத் தொழுது பக்தர்கள் பெரும் பலன்கள் எல்லாம் இனிமேல் உன்னைத் தொழுதாலும் கிடைக்கும் என்றும் பெருமாள் அருளினார்

‘ “ஏனவர்க்கு வேண்டின், எளிது ஒன்றோ ?-எற்கு

அன்பர்

ஆன வர்க்கம் எல்லாம் நினக்கு அன்பர் ஆயினார்;

தானவர்க்கு வேந்தன் நீ என்னும் தரத்தாயோ ?

வானவர்க்கும் நீயே இறை-தொல் மறை வல்லோய் !

பழமையான வேதங்களை எல்லாம் ஓதாதுணர்ந்த  வித்தகனே!எனக்கு  அடியவர்களாக  இருக்கும்  அன்பர்  கூட்ட மெல்லாம் உனது தொண்டர்கள் ஆவார்;  நீ அசுரர் இனத்துக்கு மட்டும்  அரசன் அல்ல, தேவர்களுக்கும் நீயே தெய்வம்;   நீயடைந்த  பெருவாழ்வை  அடைவதென்பது  ஏனையோருக்கு எளிதல்ல

‘ “நல் அறமும் மெய்ம்மையும், நான்மறையும், நல்

அருளும்,

எல்லை இலா ஞானமும், ஈறு இலா எப் பொருளும்,

தொல்லை சால் எண் குணனும், நின் சொல்

தொழில் செய்ய,

மல்லல் உரு ஒளியாய் ! நாளும் வளர்க, நீ !”

என்றும் நன்மை தரும் அறமும் வாய்மையும், நான்கு வேதங்களும், நலம் பயக்கும் திருவருளும்  , நல்ல அழிவில்லாத  எவ்விதமான பொருள்களும்  பழமை வாய்ந்த எட்டுக் குணங்களும் (ஆகிய இவையெல்லாம்) உனது சொல்கேட்டுத் தொழில் செய்ய நாளும் நாளும் நீ வளர்ந்து விளங்குவாயாக.

******************************

509

பிரகலாதனை அரசன் ஆக்க நரசிம்மன் கட்டளை!

எல்லா உலகத்தினரும் இவனை வணங்குமாறு மூவுலகுக்கும் மன்னன் என்று முடிசூட்டுக என்று நரசிம்மன் கட்டளை பிறப்பித்தார்

‘தே மன், உரிமை புரிய திசை முகத்தோன்

ஓமம் இயற்ற, உடையான் முடி சூட்ட,

கோ மன்னவன் ஆகி, மூஉலகும்

கைக்கொண்டான்-

நாம மறை ஓதாது ஓதி, நனி உணர்ந்தான்.

நான்கு வேதங்களையும் முறையாக ஆசிரியரிடம் பயிலாது, இறையருளால் தானே உணர்ந்தவனான பிரகலாதனுக்கு இந்திரன் முடி சூட்டு விழாவுக்குரிய  ஏற்பாடுகளைச் செய்தான்.  நான்கு  முகங்களை உடைய பிரமன், விழாவுக்கான வேள்வியைச் செய்தான். எல்லா உலகங்களையும் உடைய  சிங்கப்பிரான்  (திருமால்)  தனது  திருக்கரத்தால் மணிமுடி  சூட்டினான்;  பிரகலாதன் மூன்றுலகங்களும் சக்கரவர்த்தியாகி ஆட்சி செய்தான்.

*******************************

510.இரணியன் கதையைச் சொல்லி முடித்த விபீஷணன் ராவணனுக்கு சொன்ன அறிவுரை:–

6491.  “‘ஈது ஆகும், முன் நிகழ்ந்தது;

எம் பெருமான்! என் மாற்றம்

யாதானும் ஆக

நினையாது, இகழ்தியேல்,

தீது ஆய் விளைதல் நனி

திண்ணம் ‘‘ எனச் செப்பினான்,

மேதாவிகட்கு எல்லாம்

மேலாய மேன்மையான்.

முன்பு நிகழ்ந்த இரணியன் கதை இதுவாகும் என்று அறிஞர்களு க்கெல்லாம் மேலான வீடணன் சொல்லி முடித்தான். எமது தலைவனே! என்னுடைய பேச்சு எதுவாயினும் உனது நன்மைக்காவது என்று நினைக்காமல் இகழ்வாயானால் தீமை உண்டாவது நிச்சயம் என்றும் செப்பினான்.

–சுபம்—

TAGS- பிரகலாதன் கேட்ட வரம், நரசிம்மர் கொடுத்த வரங்கள்! கம்ப ராமாயணத்தில் 510 கேள்விகள்

Leave a comment

Leave a Reply