

Post No. 14,263
Date uploaded in Sydney, Australia – –3 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
26-2-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை1
இந்திய சரித்திரம்!
கில்ஜியை அடித்து விரட்டிக் காமரூபத்தைக் காத்த வீரமன்னன் பிருது!.
ச. நாகராஜன்

அன்னியரின் படையெடுப்பைத் தடுத்து ஆக்கிரமிப்பு எண்ணத்தைத் தூள் தூளாக்கி அவர்களை விரட்டியடித்த இந்திய மன்னர்களின் வீரம் வர்ணனைக்கு அப்பாற்பட்டது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரது வீரமும் தீரமும் திறமையும் சாதுரியமும் சரியாக இந்திய வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை – இன்னும்!
அப்படிப்பட்ட ஒரு சரித்திரம் தான் பண்டையகாலத்தில் ப்ராக்ஜோதிஷ்புரம் என்று பிரசித்தமான பெயரைப் பெற்ற இன்றைய ராஜதுர் என்ற வட கௌஹாத்தி நகரை ஆண்ட மன்னன் பிருதுவின் வரலாறு! காமரூபம் என்று அனைவராலும் அறியப்படும் இடம் இது.
ஆண்டு கி.பி. 1206.
இந்து மற்றும் புத்தமத கல்வி நிலையங்களையும் கோவில்களையும் தரைமட்டமாக்கும் வெறியுடன் பத்தாயிரம் வீரர்களுடன் வந்த பக்தியார் கில்ஜியின் கண்கள் திபெத்தின் மீது பதிந்தன.
கி.பி. 1197ம் ஆண்டு நாலந்தாவை தரைமட்டமாக்கினான் கில்ஜி. ஹிந்து மற்றும் புத்தமத அறிவு சால் நிலையங்கள் மற்றும் நூல்களை அழிப்பது அவனது குறிக்கோள்களில் தலையாய ஒன்றாக இருந்தது.
வங்காளத்தை வென்ற பக்தியார் கில்ஜி தன் மதத்திற்கு மாறி தன்னிடம் பணியாற்றிய அலி மெக் என்பவனின் உதவியைப் பெரிதும் நாடினான்.
காமரூபத்தின் வழியாக திபெத்திற்குச் செல்வது அவன் எண்ணம்.
ஆனால் காமரூபத்தை ஆண்ட மன்னன் பிருது இதற்குச் சற்றும் உடன்படவில்லை.
கில்ஜியின் வேண்டுகோளை நிராகரித்த அவன் அதை விட்டுவிடுமாறு பதில் அனுப்பினான்.
ஆனாலும் கில்ஜியின் ஆசை விடவில்லை. தன் படைவீரர்களுடன் முன்னேறலானான்.
பிரம்மபுத்ராவின் கிளை நதியான பாக்மதி ஆறு வெள்ளப் பெருக்கோடு பாயும் ஜீவ நதி. அதைக் கடக்க ஆங்காங்கே பாலங்கள் உண்டு.
காமரூபத்திற்கு வரும் கல்பாலத்தை உடைக்க ஆணையிட்டான் பிருது. வழியில் எங்கும் உணவு கிடைக்கக்கூடாது என்றும் அங்கு வாழும் பழங்குடியினருக்கு ஆணையிட்டான்.
அவர்கள் அனைவரும் தங்கள் நிலப்பரப்பை நன்கு உணர்ந்தவர்கள்.
விளைவு – படைவீரர்களுக்கு. உணவே இல்லை. கில்ஜி திகைத்தான்
தங்களது குதிரைகளைக் கொன்று தின்ன வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள் அவனது படைவீரர்கள்.
திருப்பிச் செல்ல முயன்ற போது அவன் செல்லும் வழியில் இருந்த பாலங்கள் உடைந்திருந்தன.
என்ன செய்வது? வீரர்கள் அனைவரும் ஆற்றை நீந்திக் கடந்தனர். சேனையில் வீரர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது.
ஓட்டம் பிடிப்பவர்கள் மீது ஆங்காங்கே இருந்த பழங்குடியினர் தங்கள் மூங்கில் வித்தைகளைக் காண்பித்தனர். மூங்கிலினால் ஆன வில் மற்றும் இதர ஆயுதங்களுடன் அவர்கள் கொரில்லா தாக்குதலை மேற்கொண்டனர். கில்ஜியை செயலிழக்கச் செய்தனர்.
இறுதியாக காமரூபம் காம்தேவ் ஆலயத்தில் அடைக்கலம் புகுந்தான் கில்ஜி.
ஆனால் அங்கும் மூங்கிலினால் ஆன ஒரு வேலியைச் சுற்றி அமைத்தான் பிருது.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று பின்வாங்கி ஓடினான் கில்ஜி. அவனது கூடப் பிழைத்தவர்கள் சில நூறு பேர்கள் மட்டுமே தான்.
அந்த படையெடுப்புக்குப் பின் எந்த ஒரு படையெடுப்பிலும் ஈடுபட அவனுக்குத் துணிவு ஏற்படவில்லை.
ஆனால் அதே ஆண்டிலேயே அவனது படைத்தலைவனான அலி மர்தான் என்பவனால் அவன் தேவ்கோட்டில் கொல்லப்பட்டான்.
இந்திய சரித்திரத்தில் முக்கியமான ஒரு காலகட்டத்தில் கில்ஜி போன்ற ஒரு வெறிபிடித்தவனைத் துரத்தி அடித்த மன்னன் பிருதுவைப் பற்றி மூன்று கல்வெட்டுகள் அனைத்து விவரங்களையும் தருகின்றன.
இவற்றில் இரண்டு கல்வெட்டுக்கள் நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒன்று சற்று சிதைந்துள்ளது.
நமது வரலாற்றில் ஆர்வமுள்ளோர் இப்படிப்பட்ட இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு மறைந்திருக்கும் வீரதீர சாகஸங்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்துகின்றனர்.
அப்படி ஒரு அன்பரான நாபாருன் பரூவா என்பவர் சமீபத்தில் இங்கு சென்று அனைத்தையும் கண்டு விவரங்களை வெளியிட்டுள்ளார்.
மாமன்னன் பிருது போற்றுதற்குரிய பெரும் வீரன் என்பதில் ஐயமில்லை, அல்லவா!
***




















