
Glow worms in New Zealand Waitomo Caves
தமிழ் இலக்கியம், காளிதாசனில் மின்மினிப் பூச்சி
கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1110; தேதி 16 ஜூன் 2014.
கம்பனும் காளிதாசனும் புகழ் பெற்ற கவிஞர்கள். வடமொழியில் ஏழு நூல்கள் எழுதிய காளிதாசனின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. எப்படி சங்கத் தமிழ் நூல்களைக் கல்லாதோருக்கு, இந்திய கலாசாரம் பற்றிப் பேச அருகதை இல்லையோ அப்படிக் காளிதாசனைக் கல்லாதோரும் இந்தியப் பண்பாடு பற்றிப் பேச அருகதை இல்லாதோர் ஆகிவிடுகின்றனர். ஆயிரம் உவமைகளுக்கு மேலாக அள்ளித் தெளித்து அறுசுவை உண்டி – செவிக்கு உணவு—படைத்திருக்கிறார் காளிதாசர்!!
கம்பன் புகழைப் பாரதியார் பல இடங்களில் பாடிப் பரவியதில் இருந்து அவனுடைய மேன்மையை நாம் உணரலாம். கம்பனும் காளிதாசனும் ‘’மின்மினிப் பூச்சி’’ பற்றி சில அதிசயச் செய்திகளைக் கூறுகின்றனர். இது தவிர அகநானூற்றுப் புலவர்களும் நற்றிணைப் புலவர்களும் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சில பாடல்கள் காளிதாசன் சொல்லும் ரகசியப் புதிரை விடுவிக்கிறது. இயற்கை வரலாற்று நிபுணரும், பி பி சி டெலிவிஷன் படத் தயாரிப்பாளருமான டேவிட் அட்டன்பரோ காட்டிய சில காட்சிகளைப் பார்த்தோருக்கு காளிதாசன் சொன்னது இதுதானோ என்று வியக்கவும் செய்வர்.

Fireflies in Nagya City, Japan.
கம்பன் சொன்ன செய்தி
இந்திய கிராமப் புறங்களில் இரவு நேரத்தில் பயணம் செய்வோர் மின்மினிப் பூச்சிகளைக் கண்டிருப்பர். இந்த மின்மினிப் பூச்சிகளை, குருவிகள் பிடித்துச் சென்று தனது கூடுகளில் வைத்து மகிழும். கூடுகளுக்கு மின்சார விளக்குப்போடுவது போல இவைகள் வெளிச்சம் தருவதால் அவைகள் இப்படிச் செய்கின்றன போலும். இந்தக் காட்சியை கம்பன் பால காண்டத்தில் வருணிக்கிறான்:–
அயோத்தி மாநகரம் செல்வச் செழிப்பில் மிதக்கிறதாம். அங்கே கோழிகள் குப்பையைக் கிளறினால் கூட ரத்தினக் கற்கள்தான் வருமாம். அவை களைக் கண்ட குருவிகள் , மின்மினிப் பூச்சிகள் என்று எண்ணி அவை களைக் கூடுகளில் கொண்டு வைக்குமாம். இதோ அந்தப் பாடல்:–
சூட்டுடைத் தலைத் தூநிற வாரணம்
தாள் தனைக் குடைய தகைசால் மணி
மேட்டு இமைப்பன மின்மினி ஆம் எனக்
கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம் அரோ
(கம்ப ராமாயணம், பால காண்டம், பாடல் 59)
பொருள்: வாரணம்=கோழி, மணி= ரத்தினக் கற்கள், குரீஇ=குருவி.
Fungi with luminescence. 35 Fungal speecies emit light
காளிதாசன் சொன்ன செய்தி
காளிதாசன் அவனது பாடல்களில் ( குமார சம்பவம் 1-30; ரகு வம்சம் 9-70 ) பல இடங்களில் ஒளிவீசும் தாவரங்கள் (ஜோதிர்லதா) பற்றிப் பகருவான்.
தசரதர் ஒருமுறை வேட்டைக்குச் சென்றபோது காட்டில் தனியே தங்க நேரிட்டது என்றும் அப்பொழுது ஒளிவீசும் தாவரங்களே அவருக்கு விளக்குகளாக இருந்து உதவின என்றும் காளிதாசன் கூறுகிறான். (ரகு வம்சம் 9-70).
உமை அம்மை பற்றி வருணிக்கும் இடத்தில் குமார சம்பவத்தில் (1-30) மூலிகைகள் இரவு நேரத்தில் ஒளிவிடும் என்றும் சொல்கிறான்.
மேகதூத காவியத்தில் (பாடல் 80) மேகத்துக்கு வழங்கும் அறிவுரையில், “நீ மலைச் சிகரத்தில் குட்டி யானை அளவுக்கு உன் வடிவத்தைச் சுருக்கிக் கொள். மின்மினிப் பூச்சிகள் எந்த அளவுக்கு ஒளி சிந்துமோ அந்த அளவுக்கு ஒளி வீசி வீட்டிற்குள் எட்டிப் பார்” என்கிறான்.
கம்பனும் கூட “உம்பர் வானத்து நின்ற ஒளிவளர் தருவின்” – என்று தேவலோக ஒளி உமிழும் கற்பக தரு பற்றிப் பாடுகிறான் (பால காண்டம் 793)
விஞ்ஞானிகள் சொல்லும் செய்தி:-
சில வகை மீன்கள், பூச்சிகள், கடல் வாழ் ஜெல்லி மீன்கள், தாவரங்களில் காளான் வகைகள் ஆகியன மட்டுமே ஒளி வீசக்கூடியவை. பெரிய மரங்களோ, செடி கொடிகளோ ஒளி வீசக்கூடியவை அல்ல. தற்காலத்தில் செயற்கை முறையில் புகையிலைத் தாவரத்துக்கு ஒளி ஊட்டி செயற்கையாக ஒளிரச் செய்துள்ளனர். ஆனால் இயற்கையில் உள்ள சில அதிசயங்கள் டெலிவிஷன் மூலம் எல்லோருக்கும் தெரிய வந்துள்ளன. நியூசிலாந்தில் ஒரு குகை முழுதும் மின்மினிப் பூச்சி வகைகள் வாழ்கின்றன. இரவு நேரத்தில் அந்தக் குகை ஜெகஜ் ஜோதியாகச் ஜொலிக்கிறது. விழா நாட்களில் கட்டிடங்களில் அலங்கார விளக்கு போடுவது போல அவை அணைந்தும் ஒளிவீசியும் ஜாலவித்தைகள் செய்கின்றன. பி.பி.சி போன்ற சில இயற்கை பற்றி ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோருக்கு இது தெரியும்.
காளிதாசன் கம்பன், சொல்லும் ஒளிவிடும் தாவரங்கள், இது போல மின்மினிப் பூச்சிகளால் சூழப்பட்ட மரங்களாக இருக்கக்கூடும் அல்லது இபோது நாம் காணும் ஒளிவிடும் மீன்கள் போல அந்தக் காலத்தில் ஒளிவிடும் தாவரங்களும் இருந்திருக்கலாம்.
சங்கப் புலவர்கள் அகநானூற்றிலும் நற்றிணையிலும் (அகம். 67-16, 72-3, 202-7, 291-8; நற் 44-10)) வரும் சில பாடல்கள் மூலம் பலா மரம் முழுதும் மின்மினிப் பூச்சிகள் இருந்ததையும் குறவர்கள் இரவு நேரத்தில் மேகங்களைப் பார்க்க மின்மினிப் பூச்சிகள் விளக்காக இருந்து உதவி செய்வதையும் பாடிவைத்துள்ளனர்.
பாலை நில பருக்கைக் கற்கள், மின்மினிப் பூச்சிகள் போல இருப்பதாக நோய்பாடியார் என்னும் புலவர் கூறுகிறார் (அகம்.67)
எருமை வெளியனார் மகனார் கடலனார் பாடிய பாடலில் ஒரு அரிய உவமை தருகிறார். இரவு நேரத்தில் காட்டில், கரடிகள் பாம்புப் புற்றில் கையை விட்டுக் கறையான்களைப் பிடிக்கப் போகும்போது மின்மினிப் பூச்சிகள் பறக்கும் காட்சி கொல்லன் பட்டறையில் பறக்கும் தீப்பொறிகள் போல இருக்கும் என்கிறார். கரடியை இரும்புவேலை செய்யும் கொல்லனுக்கும் கறையான் புற்றுகளை பட்டறைக்கும் ஒப்பிட்டது ஒரு நல்ல உவமை. (அகம்.72)
ஆவூர்க் கிழார் மகனார் கண்ணகனார் பாடிய பாடலிலும் இதே கொல்லன் உலைக்கள உவமையைத் தருகிறார்.
நற்றிணைப் பாடல் (44) ஒன்றில் பெருங் கௌசிகனார் வேறு ஒரு காட்சியை வருணிக்கிறார்: குறவர்கள் இரவு நேரத்தில் மின்மினிப் பூச்சிகள் தரும் வெளிச்சத்தில் மேகத்தின் செயல்பாட்டைக் கவனிப்பர் என்கிறார்.
குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து….
தமிழ் நிகண்டுகளில் மின்மினிப் பூச்சிக்குப் பல பெயர்கள் உள்ளன அவை:–நிசாமணி, ஞவல், நுளம்பு, கத்தியோதம், அலகு, கசோதம், அலத்தி.
இயற்கையோடியைந்த வாழ்க்கை நடத்திய நம் முன்னோர்கள், மின்மினிப் பூச்சி மூலம் வழங்கும் செய்திகள்தாம் எத்தனை எத்தனை !!
–சுபம் —




































You must be logged in to post a comment.