
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,676
Date uploaded in London – 30 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
25-4-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
உலகின் அதிசயமான கின்னஸ் ரிகார்ட் சாதனையாளர்கள்!
ச. நாகராஜன்
அதிசயிக்க வைக்கும் கின்னஸ் உலக ரிகார்டுகள் அவ்வப்பொழுது பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றைப் படித்துப் பார்த்தால் வியப்பை அடைவோம். மனிதனின் ஆற்றலுக்கும் சாதனைகளுக்கும் ஒரு எல்லையே இல்லை என்பதை உணர்வோம்.
உலகின் நீளமான நகங்கள் 42 அடி 10.4 அங்குலம்!
அயன்னா வில்லியம்ஸ் என்ற பெண்மணி உலகிலேயே அதிக நீளமுள்ள நகங்களைக் கொண்டிருந்தார். இரு கைகளிலும் உள்ள விரல் நகங்களின் மொத்த நீளம் 18 அடி. இதை பாலிஷ் செய்து நெயில் பாலிஷ் போட அவருக்கு 20 மணி நேரம் ஆகிறதாம். இருபது வருடங்களாக இந்த நகங்களை வளர்த்தார் இவர்.
ஆனால் இவரது சாதனையை அமெரிக்காவில் மின்னபோலிஸைச் சேர்ந்த பெண்மணியான டயானா ஆர்ம்ஸ்ட்ராங் முறியடித்து விட்டார். இவரது நகங்களின் நீளம் 42 அடி 10.4 அங்குலமாகும் (1305.58 செண்டிமீட்டர்) இப்படி ஒரு கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார் டயானா!
உடம்பில் 99.98 சதவிகிதம் பச்சை குத்திக் கொண்ட பெண்மணி!

அமெரிக்காவில் உள்ள பிரிட்ஜ்போர்ட் நகரைச் சேர்ந்த நெஸ்கா ஃப்யூயர்ஜினா தனது உடலில் 89 மாற்றங்களைச் செய்து கொண்டதோடு உடலின் 99.98 சதவிகிதம் பகுதியில் பச்சை குத்திக் கொண்டவர் என்ற சாதனைப் பெண்மணி ஆகிறார். 36 வயதான இவர் நடமாடும் வண்ண கான்வாஸ் துணியாக உடலை ஆக்கிக் கொண்டவர் என்ற பெயரைப் பெறுகிறார். கைகள், கால்கள், மண்டை ஓடு, நாக்கு,
ஈறுகள், கண்களில் உள்ள கண்மணிகளின் வெளிப்புறம் உள்ள வெண்மையான பகுதிகள், பெண்ணின் ஜனன உறுப்பு என்று இவர் பச்சை குத்திக் கொள்ளாத இடமே இல்லை.
அமெரிக்காவைச் சேர்ந்த சக் ஹெல்ம்கே தனது உடலில் 93.75 சதவிகிதம் பகுதியில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். அவரது வயது 75.
கின்னஸ் ரிகார்டில் இதைப் பார்த்தவர்கள் எப்படி பிரமிக்கவைக்கும் ஒரு சாதனையை ஆர்வத்துடன் இவர்கள் படைத்துள்ளனர் என்று வியக்கின்றனர்.
28 முறை எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறியவர்!
நேபாள தேசத்தைச் சேர்ந்த கமி ரீடா ஷெர்பா என்பவர் 28 முறை உலகின் அதி உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்திருக்கிறார். இவர் தோப்கே என்ற பெயரால் அறியப்படுகிறார். 2023 மே மாதம் இந்த அரிய சாதனையை இவர் படைத்தார். 1970ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதியன்று பிறந்த தோப்கே முதல் தடவையாக 1994ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதியன்று எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறினார். பிறகு ஒவ்வொரு ஆண்டும் 29032 அடி உயரமுள்ள இந்த மலைச் சிகரத்தில் ஏறுவதை வழக்கமாகக் கொண்டார். 2023, மே மாதம் 17ம் தேதி இருபத்தேழாவது முறையாக ஏறினார். பின்னர் ஆறு நாட்கள் கழித்து எவரெஸ்ட் மீது மீண்டும் ஏறி உலக சாதனையை நிகழ்த்தினார்.
எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய பெண்மணி என்ற பெயரைத் தட்டிச் செல்பவர் லக்பா ஷெர்பா என்பவர். இவர் 2022ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி பத்தாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி சாதனையைப் படைத்துள்ளார்.
3000 டூத் பேஸ்ட் டியூப்களைச் சேர்த்தவர்!
உலகில் அதிகமான டூத் பேஸ்ட் டியூப்களை சேகரித்தவர் என்ற பெயரைத் தட்டிச் செல்பவர் ஜார்ஜியாவில் உள்ள அல்பரெட்டா என்ற நகரைச் சேர்ந்த வால் கோல்பகாவ் என்பவர். 2012ம் ஆண்டு முடிய இவர் உலகெங்கிலுமிருந்து 2037 டூத் பேஸ்ட் டியூப்களைச் சேர்த்தார். 2020ம் ஆண்டு இவரது சேகரிப்பு மொத்தம் 3000 டியூப்கள் ஆனது.
இப்படி கின்னஸ் சாதனைகளைத் தொடர்ந்து படைத்துக் கொண்டே இருக்கும் சாதனையாளர்கள் உணர்த்துவது ஒன்றைத் தான்! மனித கற்பனைக்கும், ஆற்றலுக்கும் ஒரு எல்லையே இல்லை; சாதிக்க நினைத்தால் எதையும் எப்படியும் சாதிக்கலாம் என்பதைத் தான்!
**