

WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,808
Date uploaded in London – 31 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள ’81 கட்ட’ வரைபடம்!
ச. நாகராஜன்
இதோ ஒரு வரைபடம். இதில் 81 கட்டங்கள் உள்ளன. உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள உதவும் கட்டங்கள் இவை.
இதில் மையமாக உள்ள கட்டத்தில் உங்கள் நீண்ட காலதிட்டமாக உள்ள லட்சியத்தைக் காணலாம். இதைச் சுற்றி எட்டு முக்கியப் பகுதிகள் அமைந்துள்ளன. இது வெற்றியை நோக்கிச் செல்லும் போது உள்ள முக்கியமான எட்டு மைல் கற்கள்.
இதில் முதலில் மையத்தில் உள்ள கட்டத்தில் நீங்கள் எதுவாக ஆக விரும்புகிறீர்கள் என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். பின்னர் இங்கு காட்டியுள்ள எட்டு கட்டங்களில் அதை அடைய உதவும் முக்கியமான எட்டு படிகளைக் குறித்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு எட்டு பகுதியிலும் நீங்கள் அடைய விரும்பும் விஷயங்கள், அதை அடைவதற்காக நீங்களே நிர்ணயித்துக் கொள்ளும் காலம், குறிக்கோள்கள் ஆகியவற்றை நிர்ணயித்துக் குறித்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் வியாபாரத்தில் அல்லது அலுவலகத்தில் வெற்றி பெற விரும்புகிறீர்கள் என்றால் இதை அடைய உதவும் நபர்களிடம் இவற்றை ஒப்படையுங்கள்; அவர்களைக் கண்காணியுங்கள்.
ஒவ்வொரு குழுவையும் அவ்வப்பொழுது மதிப்பீடு செய்யுங்கள். அடைய வேண்டிய இலக்குகளை கடிகார வரிசைப்படி கால நிர்ணயம் செய்து குறித்துக் கொள்ளூங்கள்.
தனக்குக் கொடுக்கப்பட்ட குறிக்கோளை அடைய உங்களுக்கு உதவி புரியும் நபர்களும் கூட இது போல தங்களுக்கு ஒரு வரைபடம், செயல்திட்டம் ஆகியவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக ஒரு வணிகக் குறிக்கோளை அடைய உதவும் முக்கிய எட்டுப் பகுதிகள் என்னென்ன? இதோ பார்க்கலாம்:
1) விற்பனையை அதிகரித்தல்
2) புதிய தயாரிப்புகளைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தல்
3) குழுக்களை அமைத்தல்
4) செயல்பாடுகளில் மிக உயரிய தரத்தை அடைதல்
5) வாடிக்கையாளரின் அனுபவமும், அவர்களின் பின்னூட்டமும்
6) வெற்றிக்கான பங்காளிகளை உருவாக்கல்
7) ப்ராண்ட் ஒன்றை அமைத்து அதை சந்தையில் உயர் நிலைக்கு இட்டுச் செல்லல்
8) நிதி குறித்து ஆலோசித்து குறைந்த செலவைச் செய்து நிறைய லாபத்தை அடைதல்
விற்பனையை அதிகரித்தல் என்ற அம்சத்திற்கு விற்பனையாளரை நியமித்தல், அவர்களுக்கான பயிற்சி, அவர்கள் கவனம் செலுத்த வேண்டிய பகுதி, அவர்களுக்கான விற்பனை இலக்கு, அதிக விற்பனையை சாதித்தால் ஊக்கத்தொகை, வாடிக்கையாளரின் பின்னூட்டம், புதிய தேவைகளை சந்தையில் கண்டுபிடித்தல், அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள், போட்டியாளரின் செயல்பாடுகளை அறிந்து வெற்றி காணல் போன்றவற்றை நிர்ணயித்து செயல்படலாம்.
இதை வணிகம், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மட்டும் தான் செயல்படுத்த முடியும் என்பதில்லை.
உண்மையில் இந்த 81 கட்ட உத்தி விளையாட்டுத் துறையில் ஜப்பானியரான டகாஷி ஹரடா (Takashi Harada) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு வெற்றி கண்ட உத்தியாகும்.
உலகின் மிகப் பெரிய நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்படும் வணிக உத்தியாகவும் இது ஆகி விட்டது.
ஆகவே தனிப்பட்ட சாதனைகள், குடும்ப முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் இந்த 81 கட்ட வரைபடம் உதவும்.
செய்து பாருங்கள்; வெற்றி கண்டு சிறந்து விளங்குகள்!
**