WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,985
Date uploaded in London – 16 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுபாஷிதச் செல்வம்
வசுதைவ குடும்பகம்!
ச. நாகராஜன்
ஒருவன் உலகில் எப்படி இருக்க வேண்டும்?
நாதிக்ரௌர்யம் நாதிஷாட்யம் தாரயேன்னாதிமார்தவம் |
நாதிவாதம் நாதிகார்யாசக்திமத்யாக்ரஹம் ததா ||
ஒருவன் இரக்கமற்ற அரக்கனாகவும் இருக்கக் கூடாது; மூர்க்கனாகவும் இருக்கக்கூடாது, மிகவும் சாந்தமாகவும் இருக்கக் கூடாது; விவாதங்களில் அதிக விருப்பமுடையவனாகவும் இருக்கக் கூடாது. அனைத்தையும் பெறுவதில் ஆர்வமுள்ளவனாகவும் இருக்கக் கூடாது. அதிக பற்று கொண்டவனாகவும் இருக்கக் கூடாது.
ஆசாரத்தை எப்படி அனுஷ்டிக்க வேண்டும்?
ஸ்வக்ருஹே பூர்ண ஆசார: பரரோஹே ததர்தக: |
ததர்கக: பரக்ராமே பதி சூத்ரவதாசரேத் ||
சொந்த வீட்டில் ஆசாரத்தை பூரணமாக அனுஷ்டிக்க வேண்டும். அடுத்தவர் வீட்டில் அதில் பாதியை அனுஷ்டிக்க வேண்டும். அடுத்த கிராமத்திலோ அதிலும் பாதியை அனுஷ்டிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் போதோ மிகச் சுருக்கமான முறையில் அனுஷ்டிக்க வேண்டும்.
பித்தளை பித்தளை தான்; தங்கம் தங்கம் தான்!
நிஸ்ஸாரஸ்ய பதார்தஸ்ய ப்ராயேணாடம்பரோ மஹான் |
ந சுவர்ணே த்வனிஸ்தாதுத்ருக் யாதுக் காந்ஸ்யே ப்ரஜாயதே ||
மதிப்பே இல்லாத ஒரு பொருள் மிகுந்த ஆடம்பரத்தைக் காட்டும். ஆனால் தங்கமோ பித்தளை ஓசை எழுப்பும் அளவிற்கு ஓசை எழுப்பாது.
உற்சாகத்தால் எதையும் அடைய முடியும்!
உத்ஸாஹோ பலவானார்ய நாஸ்த்யுஸாஹாத்பரம் பலம் |
ஸோத்ஸாஹஸ்ய ஹி லோகேஷு ந கிஞ்சிதபி துர்லபம் ||
ஓ, பிரபுவே! உற்சாகமே மிக மதிப்பு வாய்ந்தது. உற்சாகத்தைத் தவிர பலமுடையது வேறு எதுவும் இல்லை. உற்சாகம் உள்ளவர்களுக்கு இந்த உலகத்தில் அடைய முடியாதது எதுவும் இல்லை!
வசுதைவ குடும்பகம்!
அயம் நிஜ: பரோ வேதி கணனா லகுசேதசாம் |
உதாரசரிதாணாம் து வசுதைவ குடும்பகம் ||
இது என்னுடையது, இது இன்னொருவருடையது – இப்படிப்பட்ட வேறுபாடுகள் சாமான்யர்களுக்கே உண்டாகும். பெரிய மனது உள்ளவர்களுக்கு உலகமே குடும்பம் (வசுதைவ குடும்பகம்)
என்றாகும்
தூங்கும் சிங்கத்தின் வாயில் தானாக மான்குட்டி நுழையாது!
உத்தமேன ஹி சிந்தயந்தி கார்யாணி ந மனோரதை: |
நஹி சுப்தஸ்ய சிம்ஹஸ்ய ப்ரவிஷந்தி முகே ம்ருகா: ||
உற்சாகத்தினாலேயே ஒருவன் அனைத்தையும் அடைவான். வெறும் மனோரதத்தால் அடைய முடியாது. தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தின் வாயில் தானாக மான்குட்டி நுழையாது.
**