
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,151
Date uploaded in London – 1 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தினமணி கதிர் 30-8-26 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
விண்வெளியில் துணி வெளுக்க துப்பாக்கி!
(துணிகளை விண்வெளியில் சுத்தப்படுத்த விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!)
ச. நாகராஜன்
ஒரு சின்ன விஷயம் – பேயிங் கெஸ்டாக பலருடன் ஒரு அறையில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஒருவருக்கு ஏற்பட்டதாக வைத்துக் கொள்வோம். அங்கு நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலையில் சில நாட்களிலேயே அந்த அறையின் – “நறுமணம்” – துர்நாற்றம் அனைவரையும் துரத்தி அடிக்கும். தோய்க்காத துணிகள், கண்ட இடங்களில் சுற்றி வந்து அறையில் அனைவரும் இருத்தல் ஆகியவற்றால் ஏற்படும் நாற்றம் சகிக்க முடியாது!
இதே நிலை தான் விண்வெளியில் விண்கலத்தில் இருக்கின்ற குட்டி அறையிலும் ஏற்படுகிறது!
அதை விட மோசம், பூமியிலாவது சடக்கென்று எல்லாத் துணிகளையும் ஒரு வாஷிங் மெஷினில் போட்டு எடுத்து விடலாம், ஆனால் விண்வெளியிலோ தண்ணீருக்கு எப்போதும் தட்டுப்பாடு தான். அளவோடு கவனமாக நீரை அங்கு உபயோகிக்க வேண்டும். அங்கு துணியைத் துவைப்பது என்பது எண்ணிக்கூட பார்க்க முடியாத ஒரு விஷயம்!
உடல் நாற்றத்தை விட மோசமான துணிகளின் நாற்றம் தொற்றுநோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்களால் உருவாகிறது. விண்வெளிவீரர்கள் ஒரே ஆடையை பலநாட்கள் அணிந்திருக்க வேண்டிய கட்டாயம் விண்வெளியில் விண்கலத்தில் உண்டு. பல வாரங்கள் தாங்கள் உபயோகித்த துணிகளை காற்று புகமுடியாத ஏர்-டைட் பைகளில் போட்டு வைத்து விடுவது அவர்களின் வழக்கம். பூமிக்குத் திரும்பி வந்து தங்களின் பழைய துணிகளைத் தோய்ப்பார்கள் அல்லது எரித்து விடுவார்கள், இதுவே அவர்களின் பழக்கம்.
சரி, இப்போது செவ்வாய் கிரகத்திற்கு தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் போது இந்த துணி பிரச்சினையை எப்படி சமாளிப்பது?
விஞ்ஞானிகள் இந்த தீராத பிரச்சினைக்கு இப்போது ஒரு தீர்வைக் கண்டுபிடித்து விட்டார்கள். தங்கள் லாண்ட்ரி பிரச்சினையைப் பற்றி இனி அவர்கள் கவலைப்பட வேண்டாம். துணிகளைச் சுத்தம் செய்ய ஒரு லாண்ட்ரி கன் (Laundry Gun) இனி அவர்களுக்குத் தரப்படும்!
அது அவர்களின் அழுக்குத் துணியைச் சுத்தமாக்கி விடும். அந்த லாண்ட்ரி துப்பாக்கியை வைத்து துணிகளின் மீது ‘சுட்டால்’ போதும் அது வயலட் நிறமுள்ள பிளாஸ்மாக்களை துணிகளில் செலுத்தி பாக்டீரியாக்களை அழித்து துணிகளை நன்கு சுத்தமாக்கி விடும்.
இந்த ‘கன்’, நுண்ணுயிரிகள் எனப்படும் மைக்ரோபியல் லோடை (Microbial Load) சுத்தப்படுத்தி விண்வெளி வீரர்களின் உடல்நலத்தைக் காப்பாற்றும்.
ஹண்ட்ஸ்வில்லியில் உள்ள அலபாமா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரான கபே ஸு (Gabe Xu) தான் இந்த துணி துவைக்கும் துப்பாக்கியை உருவாக்கியவர்.
“இந்த துப்பாக்கி அவர்கள் துணிகளைச் சுத்தப்படுத்துவதோடு அவர்களின் கருவிகளையும் அவர்கள் செவ்வாய் கிரகத்தில் காலடி பதிக்கும் முன்னர் சுத்தமாக்கி விடும்” என்கிறார் அவர்.
பிளாஸ்மா என்பது ஆற்றல் ஊட்டப்பட்ட அணுத்துகள்கள், ஐயான்கள், எலக்ட்ரான்களால் ஆக்கப்பட்ட ஒரு சூப் ஆகும்.
பொதுவாக பிளாஸ்மாக்கள் சூரிய வெளிச்சத்தில் காணப்படும் உஷ்ணத்துடன் இருக்கும், ஆனால் இந்த கன்னில் உள்ள பிளாஸ்மாக்கள் குளிர்ச்சியுடன் இருக்கும். கிட்டதட்ட அறையில் இருக்கும் உஷ்ணநிலையில் இருக்கும்.
இது பார்க்கவும் அழகாக இருக்கும் என்று இதை அணியும் ஆர்டிமிஸ் விண்கலத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள் தங்கள் பாராட்டைத் தெரிவித்து விட்டார்கள்.
இனி என்ன, விண்வெளி வீரர்களும் வீராங்கனைகளும் அழகுடன் சுத்தமான ஆடைகளை அணிந்து விண்வெளியில் பயமின்றி பயணிப்பார்கள்!
வாழ்த்துக்கள் விண்வெளி அழகர்களுக்கும், அழகிகளுக்கும்!
***