Written by London Swaminathan
Post No. 16,158
Date uploaded in London – 3 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
English version posted already.
துளசிதாஸ்
கோஸ்வாமி துளசிதாஸ் இயற்றிய Tulsidas (1543?–1623) ஹிந்தி மொழி ராமாயணம் வட இந்தியா முழுதும் பிரபலமான புனித நூலாகும்; அதன் பெயர் ராம சரித மானஸ் (Devanagari: रामचरितमानस rāmacaritamānasa), துளசிதாஸ், உத்தர பிரதேசத்தில் ராஜாப்பூரில் பிறந்து காசியில் முக்தி அடைந்தார் அவர் இயற்றிய ஹனுமான் சாலிசா துதியை வட இந்தியக் குழந்தைகள் மனப்பாடமாகச் சொல்லுவார்கள். எழுத்தறிவு இல்லா தோ ருக்கும் துளசிதாஸரின் இராமாயண வசனங்கள் அத்துபடி. அவர் வாழ்வும் தியாகராஜ சுவாமிகள் வாழ்வினைப்போல அற்புதங்கள் நிறைந்தது ; கம்ப ராமாயணப் பாடல் தெரியாத தமிழர் உண்டு; ஆனால் துளசி ராமாயணம் தெரியாதோர் வடக்கில் இல்லை.
***
தொல்காப்பியர்

(இவரைப் பற்றி இதே பிளாக்கில் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி அதைப் புஸ்தகமாகவும் வெளியிட்டுவிட்டேன்; ஆகையால் புல்லட் பாயிண்டில் சொல்கிறேன் ).
தமிழில் கிடைக்கும் நூல்களில் இவர் எழுதிய தொல்காப்பியமே மிகவும் பழமையானது என்று பெரும்பாலோர் நம்புகிறார்கள். இவரைப் பற்றியோ நூல் பற்றியோ சங்க இலக்கியத்தில் 30,000 வரிகளில் ஒரு வார்த்தையும் இல்லை. ஆனால் இரண்டு தகவல்களை இலக்கிய முன்னோர்கள் விட்டுச் சென்றனர் . இவருடைய வகுப்பறை மாணவர் பனம்பாரனார் ,தொல்காப்பிய நூலுக்கு பாயிரம் (முன்னுரை) வழங்கியுள்ளார்; அதில் இந்த தொல்காப்பியர் அதங்கோடு என்னும் ஊரிலுள்ள நான்கு வேதம் படித்த (பார்ப்பன) ஆசார்யாரிடம் சர்ட்டிபிகேட் வாங்கினார், நிலந்தரு திருவில் பாண்டியன் அவையில் அரங்கேற்றினார் என்று எழுதியுள்ளார் இன்னொரு தகவலை மதுரை பாரத்வாஜக் கோத்திர பார்ப்பான் , உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர், 700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிவைத்துள்ளார் தொல்காப்பியரின் பெயர் த்ருணதூமாக்கினி என்றும் அவர் அகஸ்தியரின் மாணாக்கர் என்றும் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் சாபமிடும் அளவுக்கு மோதல் ஏற்பட்டது என்றும் எழுதியுள்ளார் . இது ஒரு சில்லறை விஷயத்தில் நடந்த தகராறு ! அகஸ்தியரின் மனைவி லோபாமுத்ரா; அவர் மத்தியப்பிரதேச இளவரஸி ; அவரை அழைத்துவரத் தொல்காப்பியரை அனுப்பினார்; மதுரைக்கு அருகில் வந்தபோது வைகை நதி வெள்ளப்பெருக்கோடு ஓடியது. மாற்றான் மனைவியைத் தொடவும் கூடாது, பக்கத்தில் நெருங்கவும் கூடாது என்பதால் ஒரு கம்பினை எடுத்து நீ ஒரு பக்கம் பிடி; நான் எதிர்ப்புறத்தைப் பிடிக்கிறேன் என்று கடந்து வந்தனர். இதை அகஸ்தியர் அறிந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது ; சாபத்தில் முடிந்தது என்பது நச்சினார்க்கினியர் சொல்லும் கதை . இதை நம்புவோருக்கு ஒரு நற்செய்தியும் உள்ளது அகஸ்தியர்- லோபாமுத்ரா தம்பதிகளை ரிக்வேதம் சொல்லுவதால் தமிழும் ரிக்வேதம் போல 6000 ஆண்டுப் பழமை உடைத்து . உண்மையில் அதைப் பார்ப்பான் நச்சினார்க்கினியர் அப்படியே நம்பியது ராவணன் – பாண்டியன் சமாதான உடன்படிக்கைக் கதையிலும் உறுதியாகிறது; ராமன் எவ்வளவு பழமையோ பாண்டியர்களும் அவ்வளவு பழமை உடையவர்கள் என்பது நச்சி. யின் நம்பிக்கை. தொல்காப்பியர் , காப்பியக்குடி என்னும் கோத்திரத்தில் தோன்றியவர்; இவர் பிராமணர் அல்ல என்று காட்டும்வகையில், இந்து விரோத திராவிடர்கள், இவருக்கு மீசை வைத்து 25 ஆண்டுகளுக்கு முன்னர் புதிய படமும் வரைந்து, வெளியிட்டுப் பரப்பி வருகின்றனர் ! காப்பியக்குடி உசனஸ் கவி என்பவர்தான் கவிகளின் மூல கர்த்தா. அதிலிருந்துதான் கவி, கவிதை, காவ்யம் என்ற சொற்கள் பிறந்தன; பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும் கவிகளில் நான் உசனஸ் என்று சொல்கிறார் அந்தக் கவி, ரிக் வேத காலத்தின் மிக மூத்த கவிஞன்.

தொல்காப்பிய பாயிரம்
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கறை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே.
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களை உடைத்து ; ஒவ்வொன்றிலும் ஒன்பது அத்தியாயங்கள் (இயல்கள்) . சுமார் 1612 சூத்திரங்கள் உள்ளன
இதன் காலமும் நூலாசிரியர் காலமும் பெரும் வாதப்பிரதிவாதங்களில் சிக்கியுள்ளது. தமிழ் வெறியர்கள் இதை 20,000 ஆண்டுப் பழையது என்றும் தமிழ்ப் பிரியர்கள் இது 2000 அல்லது 2300 ஆண்டு பழமையானது என்றும் கருதுகிறார்கள். மொழியியல் ஆய்வின்படி பொருள் அதிகாரம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது தெரிகிறது; மனு தர்மம் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள், பரத முனி சொல்லும் எட்டு வகை ரசங்களை இவர் கிளிப்பிள்ளை போல் சொல்வதும் வேத கால வருணனையும் இந்திரனையும் தமிழர் தெய்வங்கள் என்று சொல்லிவிட்டு சிவ பெருமானை அடியோடு மறந்ததும் (மறைத்ததும்) பலருடைய புருவங்களை உயர்த்துகின்றன . (என்னுடைய கருத்து:– அதிகாரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் இருப்பதால் திருக்குறள், சிலப்பதிகாரம், பொருள் அதிகாரம் ஆகியன ஐந்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவை; தொல்காப்பியத்தில் என்மனார் புலவர் என்ற தொனி 200, 300 இடங்களில் வருவதால் தொல்காப்பியர் காலம் வேறு, நூலின் காலம் வேறு என்பது தெரிகிறது- இது என் கருத்து )
***
திருவாசகம்
நால்வரில் – அதாவது நான்கு பெரியார்களின் ஒருவரான மாணிக்கவாசகர் பாடி அருளிய நூல்; இதைத் தவிர திருக்கோவையார் என்ற நூலினையும் யாத்தார் .திருவாசகம் நூலிலுள்ள சிவபுராணம் பகுதியும் திருவெம்பாவைப் பகுதியும் மிகவும் பயிலப்படுபவை. இவைகளோடு 51 தலைப்புகளில் 658 பாடல்கள் உள்ளன. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது ஆன்றோர் வாக்கு. பன்னிரு திருமுறைகள் என்ற 12 நூல் தொகுப்பில், இது எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது . மாணிக்கவாசகர் என்ற தலைப்பில் மேல் விவரம் காண்க .
***
திருமுறை – தேவாரம் என்ற தலைப்பில் விவரம் காண்க ; முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும் .
பன்னிரு திருமுறைகள் விவரம்
1, 2, 3 திருமுறைகள்: திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள்.
4, 5, 6 திருமுறைகள்: திருநாவுக்கரசர் (அப்பர்) தேவாரப் பாடல்கள்.
7ஆம் திருமுறை: சுந்தரர் தேவாரப் பாடல்கள்.
8ஆம் திருமுறை: மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் திருக்கோவையார்.
9ஆம் திருமுறை: திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு (ஒன்பது புலவர்கள்).
10ஆம் திருமுறை: திருமூலரின் திருமந்திரம்.
11ஆம் திருமுறை: காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பல புலவர்களின் பிரபந்தங்கள்.
12ஆம் திருமுறை: சேக்கிழாரின் பெரியபுராணம்.
***
திருமூலர் – திருமந்திரம்
திருமூலர் என்ற பெரிய சித்தர் எழுதிய நூல் திருமந்திரம். பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களில் ஒருவராகவும் 18 சித்தர்களில் ஒருவராகவும் இடம்பெறுகிறார் இவர் காஷ்மீர் மாநிலத்திலிருந்து வந்த சைவர் என்று கருதப்படுகிறது . இவருடைய தமிழ் நடையும் 3000 பாடல்களில் உள்ள விஷயங்களும் இவரை வெளி மாநிலத்தவர் என்பதையும் காலத்தால் பிந்தியவர் என்றும் சைவ – சாக்த- வேதாந்த கலப்பட நம்பிக்கையை உள்ளவர் என்பதையும் காட்டுகிறது . திருவாவடுதுறை என்ற ஊருக்கு வந்த பொழுது ஒரு பசுமாட்டு இடையன் திடீரென்று இறந்தவுடன், அஷ்ட மா சித்திகளில் பரகாயப்ரவேசம் என்ற சித்தியைப் பயன்படுத்தி இடையன் உடலில் புகுந்து பசுக்களை மகிழ்வித்தார் . பின்னர் அந்த ஊரிலேயே சமாதி அடைந்தார் . திருவாவடுதுறை சிவன் கோவிலில் அவருடைய சமாதி உள்ளது .
திருமந்திரப் பாடல்களில் சக்தி வழிபாடு, அஹம் பிராம்மாஸ்மி போன்ற வேதாந்தக் கருத்துக்கள், பசு-பதி- பாசம் என்ற சைவ சித்தாந்த கருத்துக்கள் , மந்திரம், தந்திரம், யந்திரம் என்ற சுவையான அவியலைக் காணலாம் ( என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இதே பிளாக்கில் உள்ளன ; புஸ்தகமாகவும் கிடைக்கும்). யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது இவருடைய பாலிசி . தேவாரம் திருவாசகம் சொல்லாத சிவலிங்கம் போன்ற விஷயங்கள் இருப்பதால் இவரை எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாராண்டில் வைக்கலாம்.
***
திரு வள்ளுவர் – திருக்குறள்
திரு வள்ளுவர் எழுதிய திருக்குறள் பாரத நாடு உலகிற்கு வழங்கிய நன்கொடைகளில் ஒன்றாகும் . இரண்டே வரிகளில் அரிய, பெரிய இந்து மதக் கருத்துக்களை ஜூஸ் பிழிந்து தருகிறார். இந்து மத நூல்களில் அடிக்கடி கூறப்படும் தர்ம அர்த்த காமம் என்பதையே தன் நூலுக்கும் பெயர் சூட்டினார் அறம், பொருள், இன்பம் என்று அவற்றை மொழிபெயர்த்து மூன்று பிரிவுகளில் 1330 குறட்பாக்களாக உலகத்துக்கு வழங்கினார் .
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு — என்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடியது எவ்வளவு பெரிய உண்மை என்பது திருக்குறளை படிப்போருக்கு விளங்கும்
இந்திரன், கிருஷ்ணன், வாமனாவதாரம், லெட்சுமி, யமன், பிரம்மா, சிவபெருமான் விஷம் குடித்தது முதலிய இந்து தெய்வங்களை மட்டும் பயன்படுத்துகிறார். பஞ்ச தந்திரக்கதைகள் , மனு ஸ்ம்ருதி, பகவத் கீதை அர்த்த சாஸ்திரம் முதலிய நூல்களின் முக்கிய பாக்களைக் கையாண்டுள்ளார் முதல் பத்து கடவுள் வாழ்த்துப் பாடல்களிலேயே ஏழு குறள்களில் இறைவனின் உருவத்தைக் குறிப்பிடுவதாலும் கொல்லாமையை அழுத்தம் திருத்தமாகவும் வலியுறுத்துவதாலும் இந்துக்களைத் தவிர வேறு எவருக்கும் பயன்படாத நூல் இது . நாஸ்தீகர்களை பேய் என்று திட்டுவதும், கஞ்சப்பயல்களின் கையை முறுக்கி குத்து, கரும்பு போலப் பிழி என்று சொல்வதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்தில் இந்த நூலின் காமத்துப் பால் பகுதியைக் கண்டு கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர்கள் பயந்து போய்விட்டனர் அதை வெளிப்படுத்தினால் வள்ளுவன் பெயர் ரிப்ப்பேர் ஆகி விடும், மானம் விமானத்தில் பறந்துவிடும், திருக்குறளின் கதி சகதி ஆகிவிடும் என்று எண்ணி அதை மொழிபெயர்க்கவில்லை ; உலகில் இந்து மதம் ஒன்று மட்டுமே காமத்தையும் தர்ம -அர்த்த- காம- மோட்சம் என்ற நான்கில் வை த்திருப்பது அவர்களுக்குப் புரியாது; சுமார் 600 குறள்களில் ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள் இருப்பதால் இவர் தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும் இரண்டு கண்களாகப் போற்றிய பேரறிஞர் என்பதும் தெரிகிறது; நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான எல்லா புஸ்தகங்களிலும் இவர் உயர் வகுப்பு- கீழ்ஜாதி தம்பதியருக்கு அவ்வையாரோடு ஏழு சகோததர சகோதரிகளுடன் அவதரித்த கதை சுவையாக வருணிக்கப்பட்டுள்ளது இவருடைய காலம் மொழி இயல் ரீதியில் ஐந்தாம் நூற்றாண்டு என்று தெரியவருகிறது; ஆனால் தமிழ் நாடு அரசு கி.மு 31 என்பதை ஒப்புக்கொண்டுள்ளது கிறிஸ்துவுடன் இவரைத் தொடர்பு படுத்தி கிறிஸ்தவப் பிரச்சாரகர்கள் பேசத் துவங்கியவுடன் அவர்களுக்கு ஆப்புவைக்க இந்த புதிய ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்து விரோத திராவிடர்கள் , வள்ளுவர் முகத்தில் இருந்த விபூதியை அழித்துப் புதிய படம் வெளியிட்டுள்ளனர் ; குறள்களுக்குப் புதிய வியாக்கியானமும் செய்துவருகின்றனர் ; பழங்காலத்தில் பத்துப் பேர் எழுதிய உரையில் ஐந்து உரைகள் மட்டுமே இப்பொழுது கிடைக்கிறது; அவர்களில் காஞ்சிபுர விஷ்ணு கோவில் பட்டர் பரிமேல் அழகர், 800 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய உரையே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது .

***
திரயம்பகேஸ்வரர்
சிவபெருமானின் பெயர்களில் ஒன்று; முக்கண்ணன் என்பது இதன் பொருள். புறநானூறு முதலிய நூல்களில் முக்கண்ணன் பற்றிய குறிப்புகள் உள்ளன . இதே பெயரில் சிவபெருமான், மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் கோயில் கொண்டுள்ளார். அந்தத் தலம், ராமேஸ்வரம் முதல் இமயமலை வரை இடம்பெற்றுள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று .
***
துருக்கி – துரகம்
சம்ஸ்க்ருத மொழியில் துரகம் என்றால் குதிரை. இது நிறைந்த நாடு என்பதால் அந்த நாட்டுக்குத் துருக்கி என்ற பெயர் ஏற்பட்டது . 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்துக்கள் நல்ல ஜாதிக் குதிரைகளைக் கொண்டுவந்து அந்த நாட்டில் பயிற்சி அளித்தனர். இபோது துலுக்க நாடாகத் திகழும் அந்த இடம் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் ஹிந்து பூமியாகத் திகழ்ந்தது. துருக்கியிலுள்ள போகஸ்கொய் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கியூனிபார்ம் எழுத்துள்ள கல்வெட்டுகள் சம்ஸ்க்ருத மொழியில் உள்ள கட்டளைகளைக் குறிப்பிடுகிறது; அதை எழுதியவர் கிக்கூலி என்பவர் ஆவார் ; கல்வெட்டின் தேதி கி.மு.BCE 1350 . அவன், அருகிலுள்ள மிட்டன்னி சாம்ராஜ்யத்திலிருந்து வந்தவன் ; இராக், சிரியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் உள்ளடக்கிய பகுதிகளை மிட்டன்னி அரசர்கள் ஆண்டார்கள். தசரதன், பிரதஸ்தனன் முதலிய இந்து மன்னர்கள் ஆண்டதையும் கல்வெட்டு காட்டுகிறது. அத்தோடு வேதகாலத் தெய்வங்களை சொல்லி உடன்படிக்கை செய்த கல்வெட்டும் கிடைத்தது. இவையெல்லாம் மாக்ஸ்முல்லர் (1823-1900) செத்துப்போன பின்னர் கிடைத்தது. அவர் சொன்ன வேத காலம் தப்பு என்பதையும் நிரூபித்தது.
To be continued…………………
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 108; இந்து மத கலைச்சொல் அகராதி-108, துருக்கி, துரகம், துளசிதாஸ் திரு வள்ளுவர் ,திருக்குறள், தொல்காப்பியம் , தொல்காப்பியர்