தேசமும் தமிழுமே தெய்வம் – பாரதியின் மூன்றடுக்கு வழிபாடு! (Post.16,190)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,190

Date uploaded in London – 12 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பாரதியார் நினைவு தினம் – 11-9-26 கல்கி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

தேசமும் தமிழுமே தெய்வம் – பாரதியின் மூன்றடுக்கு வழிபாடு! 

ச. நாகராஜன்                    

 தமிழ் தந்த உலக மகாகவி பாரதியாரின் சொற்கள் மிகவும் நுட்பமானவை.

மகாகவியைப் புரிந்து கொள்ள ஆழ்ந்த மனதுடன் அவன் சொற்களை மீண்டும் மீண்டும் படித்து உண்மைப் பொருளை உணர்தல் வேண்டும்.

‘அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்’ என்று அவனே குறிப்பிட்டிருப்பதை இங்கு நினைவு கூரலாம்.

 பாரதிக்கு தேசமும் தெய்வமும் ஒன்றே தான்.

“காளியும் நமது கனக நன்னாட்டுத்

தேவியும் ஒன்றெனத் தேர்ந்த நல் அன்பர்காள்’

என்று குரு கோவிந்த ஸிம்ஹ விஜயம் பாடலில் இதை பாரதி எடுத்துக் காட்டுகிறான்.

 இராமர் லட்சுமணனிடம் பொன் மயமாக ஒளிரும் லங்கையைப் பார்த்து அதன் வனப்பில் கவரப்படாமல் தாய்நாட்டையும் தாயையும் உயர்வாகப் பேசியதை ராமாயணத்திலிருந்து “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே” என்று இப்படி மொழி பெயர்த்துச் சுட்டிக் காட்டுகிறான்.

(அபி ஸ்வர்ணமயி லங்கா ந மே ரோசதே லக்ஷ்மணா! ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரியஸி! – லக்ஷ்மணா இந்த ஸ்வர்ணமயமான இலங்கை என்னைக் கவரவில்லை. என் தாயும் தாய்நாடும் ஸ்வர்க்கத்தை விட மேலானவையாகும்.)

 தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு

   சூழ்கலை வாணர்களும் – இவள்

என்று பிறந்தவ ளென்றுணராத

   இயல்பினலாமெங்கள் தாய் ( எங்கள் தாய் பாடலில்)

என்று தாயின் தொன்மையைச் சுட்டிக் காட்டும் பாரதி அண்டங்களைப் படைத்தவனைப் பற்றிக் கூறுகிறான் இப்படி:

“நக்க பிரானருளால் – இங்கு

      நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்

தொக்கன அண்டங்கள் – வளர்

     தொகை பல்கோடி பல் கோடிகளாம்:

என்று சிவபிரானைக் கூறிய பாரதி “ஆதி சிவனின் சோதியே சக்தி” என்று இன்னொரு பாடலில் கூறி, காளியும் சிவனும் ஒன்றே தான் என்று தெளிவு படுத்துகிறான்.

இப்படி ஆதிசிவனையும் காளியையும் பல்வேறு பாடல்களில் துதித்துக் கொண்டாடிய பாரதி தமிழின் தோற்றத்தை மிகத் தெளிவாகக் கூறுகிறான் ‘தமிழ்த் தாய்’ பாடலில் இப்படி:

“ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை

    ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

     மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்”

சிவன் பெற்ற தெய்வமே தமிழ்!

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” என்று பாப்பாவிடம் உறுதி சொல்லும் பாரதி,

“தமிழ்த்திரு நாடு தன்னைப் – பெற்ற

   தாயென்று கும்பிடடி – பாப்பா

அமிழ்தில் இனியதடி பாப்பா – எங்கள்

    ஆன்றோர்கள் தேசமடி பாப்பா”

என்று கூறுகிறான்.

தொடர்ந்து,

வேதம் உடையதிந்த நாடு – நல்ல

 வீரர் பிறந்ததிந்த நாடு

சேதமில்லாத ஹிந்துஸ்தானம் – இதைத்’ 

  தெய்வமென்று கும்பிடடி பாப்பா”

என்று கூறுகிறான்.

தேசமே தெய்வம்; அந்த ஆதிசிவன் பெற்றதே தமிழ்; அதுவே தெய்வம்” என்று கூறி தனது மூன்றடுக்கு வழிபாட்டு மர்மத்தை பாரதி விளக்குகிறான்.

தேசமே தெய்வம்

தமிழே தெய்வம்

தெய்வமே ஆதிசிவன்; அதில் ஜோதியே சக்தி.

இப்படி கூறும் பாரதி, மனிதர்களை நன்கு வகைப்படுத்துகிறான்.

மூடர் யார் என்பதை வரையறுத்துக் கூறுகிறான்:

தெய்வம் பலபல சொல்லி – பகைத்

  தீயை வளர்ப்பவர் மூடர்: (முரசு பாடலில்)

மேலோர் யார் என்ற கேள்விக்கு அவனது பதில் இது:

வையகம் காப்பவ ரேனும்-சிறு
வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்,
பொய்யக லத்தொழில் செய்தே-பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.

புண்ணியம் செய்பவர் யார்? யோகி யார்?

பக்கத் திருப்பவர் துன்பம்-தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி;
ஒக்கத் திருந்தி உலகோர்-நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி.

அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் (தேசமுத்துமாரி பாடல்) என்று அறிவுறுத்தும் பாரதி யோகசித்தி பாடலில் தனக்கு வேண்டிய சில வரங்களைக் கேட்கிறான்:

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை

   நேரே இன்றெனக்குத் தருவாய்” என்று ஆரம்பிக்கும் பாரதி தன்னை புதிய உயிர் ஆக்க வேண்டும் என்று வேண்டுகிறான்.

“முன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும்

    மூளா தழிந்திடுதல் வேண்டும் – இனி

என்னைப் புதிய உயிர் ஆக்கி – எனக்கு

    ஏதும் கவலையறச் செய்து – மதி

தன்னை மிகத் தெளிவு செய்து – என்றும் 

    ஸந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்”

பின்னர் தொடர்ந்து தனது பட்டியலை முன் வைக்கிறான்.

“கல்லை வயிரமணி ஆக்கல் – செம்பைக் கட்டித் தங்கமெனச் செய்தல், வெறும் புல்லை நெல்லெனப் புரிதல்” என்று ஒரு நீண்ட பட்டியலை விண்ணப்பம் செய்யும் பாரதி,

“இந்த நாட்டோர் கீர்த்தியெங்கும் ஓங்கக்  – கலி

    சாடும் திறன் எனக்குத் தருவாய்:

என்று முடிக்கிறான்.

அற்புதமான மூன்றடுக்கு வழிபாட்டை மேற்கொண்டு தேசம், தமிழ், ஆதிசிவன், காளி ஆகிய மூன்றையும் தெய்வமாக்கும் ஒரே வழிபாட்டு வித்தையை அவனிடம் கண்டு வியக்கிறோம்.

அவன் வேண்டியபடியே தெய்வம் அவனுக்கு புதிய உயிர் ஒன்று தந்து மீண்டும் தமிழகத்திற்கு அவனை அனுப்பி அவன் வரங்களைச் சாதிக்கச் செய்யும் என்பதில் ஐயம் உண்டா என்ன?

வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்

வாழிய பாரத மணித் திருநாடு.

 மகாகவியைப் போற்றுவோம் ;தேசத்தை உயர்த்துவோம்!

***

Leave a comment

Leave a comment