

Written by London Swaminathan
Post No. 16,191
Date uploaded in London – 12 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
U words continued…………….. English version posted yesterday.
ஊர்மிளா
லெட்சுமணனினின் மனைவி; ராமபிரான் சீதையை மணந்த அதே நாளில் ஜனகரின் மகளான ஊர்மிளாவை லெட்சுமணன் மணந்தான்; வால்மீகி ராமாயணத்தில் இல்லாத ஒரு விஷயம் வாய்மொழிக் கதைகளிலும் உள்ளூர்க் கதைகளிலும் உள்ளது: அதாவது லட்சுமணன் காட்டில் 14 ஆண்டுகளும் ராமனையும் சீதையையும் காவல் காத்ததால் தூங்கவே இல்லை என்பது அந்தக் கதை; அந்தக் காலத்தில் அவனுக்குப் பதில் பதிவிரதையான ஊர்மிளை அந்த தூக்கத்தை ஏற்றுக்கொண்டதாகவும் பல செய்திகள் உள்ளன . ஆனால் வால்மீகி ராமாயணத்தில் அவள் ராம லெட்சுமணர்களின் தாய் தந்தையருக்கு நல்ல பணிவிடை செய்ததாக மட்டுமே உள்ளது; சீதைபோல, கானகத்துக்கு வர விரும்பியதையும் லட்சுமணன் மறுப்பு தெரிவித்ததையும் வால்மீகி கூறியுள்ளார்.
***
ஊர்வசி


ஊர்வசி, தேவலோகத்தில் உள்ள நான்கு ஆடல் அழகிகளில் புகழ்ப்பெற்ற ஒருத்தி ஆவாள்.
மித்திரன் -வருணன் சாபம், ராமாயணத்தின் உத்தர காண்டத்தில் வருகிறது. மித்திர தேவனும் வருண தேவனும் ஊர்வசியின் பேரழகைக் கண்டு அவள் பால் ஈர்க்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட கோபமும் முரண்பாடும் காரணமாக, ஊர்வசி பூலோகத்திற்குச் சென்று மனிதனான புரூரவஸை மணந்து வாழுமாறு சாபமிட்டனர். பூமிக்கு வந்த ஊர்வசி, சந்திர வம்சத்து அரசனான புரூரவஸை (Pururavas) சில நிபந்தனைகளுடன் மணக்கிறாள்; தன்னுடைய இரு ஆடுகளைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்; மற்றும் உடலுறவுக் காலத்தைத் தவிர மற்ற நேரங்களில் அரசன் நிர்வாணமாகத் தன் கண்முன்னே தோன்றக் கூடாது என்பவையே அவை. இந்த நிபந்தனைகளைத் தேவேந்திரன் (இந்திரன்) தந்திரமாக முறிக்கச் செய்தான்; இந்திரன் ஆடுகளைத் திருடுகிறான் ; அதை மீட்க அவசரத்தில் புரூரவஸ் ஆடையில்லாமல் ஓடிவருகிறான்., ஊர்வசி மீண்டும் தேவலோகம் திரும்பினாள். இவர்களது காதல் மற்றும் பிரிவின் கதையை காளிதாசரின் விக்ரமோர்வசியம் நாடகம் விளக்குகிறது.சிலப்பதிகார மாதவி, இந்த ஊர்வசியின் வம்சாவளி அல்லது அவளது சாபத்தின் மறுபிறவி என்றும் ஒரு கதை உள்ளது; தேவலோகத்தில் இந்திரன் அவையில் சரியாக ஆடாததால் சாபம் பெற்று, பூமியில் மாதவியாகப் பிறந்தாள் என்பது அக்கதையாகும்.
***
உசனஸ் கவி
உலகிலேயே மிகவும் பழைய கவிஞன் பெயர் உசனா கவி; அவரை உசனஸ் என்றும் அழைப்பர். கிருஷ்ணன், பகவத் கீதையில் காலங்களில் நான் வசந்தம், மாதங்களில் நான் மார்கழி என்று கூறும் விபூதி யோகத்தில் கவிஞர்களுள் நான் உசனா கவி என்கிறார். அவ்வளவு மிகப்பெரிய கவி அவர். ரிக் வேத காலத்திலேயே அவர் மிகவும் பழங்காலக் கவிஞர் ஆகிவிட்டார். அப்படியானால் இற்றைக்கு 6000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருப்பாரென்பது துணிபு. பாலகங்காதர திலகரும் ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் வானியல் ரீதியில் 6000 ஆண்டுக்கு முந்தையது ரிக் வேதம் எனக் கண்டுபிடித்துள்ளனர்.
மனிதன் தெய்வமாகலாம் என்று வள்ளுவரின் திருக்குறளும் ரிக்வேதமும் செப்புகின்றன.பல கவிஞர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுவதை நாம் அறிவோம். ‘தெய்வப் புலவர்’ திருவள்ளுவர் என்பது ஆன்றோர் வாக்கு. ‘பகவான் பாணினி’ என்று இலக்கணப் பேருரை (மஹாபாஷ்யம்) எழுதிய பதஞ்சலி முனிவர், பாணியைப் புகழ்கிறார். கிரேக்க நாட்டிலும் ஹோமர் என்னும் மஹா கவியை Divine Homer ‘டிவைன் ஹோமர்’ என்று கிரேக்கர்கள் போற்றினர். பகவத் கீதையில் கண்ணபிரானும் கவிகளுள் ‘நான் உசனஸ் கவி’ என்று ரிக்வேத கவிஞரை தன நிலைக்கு உயர்த்துகிறார்.
वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनञ्जय: ।
मुनीनामप्यहं व्यास: कवीनामुशना कवि: ॥ ३७ ॥
vṛṣṇīnāṁ vāsudevo ’smi
pāṇḍavānāṁ dhanañ-jayaḥ
munīnām apy ahaṁ vyāsaḥ
kavīnām uśanā kaviḥ 10-37 Bhagavad Gita
எப்படித் தமிழில் பல கபிலர்கள், பல நக்கீரர்கள், பல அவ்வையார்கள் இருந்தனரோ அதே போல பிற்காலத்தில் வந்த சுக்ராச்சார்யாரையும் உசனா கவி என்றனர். ஆயினும் அவருக்கு முந்தி வாழ்ந்த முதல் உசனஸ் பற்றி மனு ஸ்மிருதி ஒரு ஸ்லோகத்தில் குறிப்பிடுகிறார். அதற்கு உரை எழுதியோர் மஹாபாரதத்திலும் (9-50), பஞ்சவிம்ச பிராமணத்திலும் உள்ள ஒரு சுவையான கதையைச் சொல்லுகின்றனர். இதோ அந்தக் கதை:
ஆங்கிரஸின் புதல்வரான உசனஸ், வயதில் மிகவும் சிறியவர். ஆனால் வேதத்தைக் கரை கண்டவர். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. அவர் தன்னைவிட வயதானவர்க ளுக்குப் பாடம் நடத்துகையில், “ஓ! சின்னப் பிள்ளைகளே! நன்றாகக் கவனியுங்கள்” என்று அடிக்கடி சொல்லுவார். வயதானவர்களுக்கோ கோபமும் ஆத்திரமும் வந்தது. இவனே பொடிப்பயல்; இவன் நம்மைப் பார்த்து, சின்னப் பையன்களே (புத்ரஹா) என்று சொல்லுவதாவது என்று முறைத்துப் பார்த்தனர். முகக்குறிப்பால அதிருப்தியைக் காட்டினர். ஆனால் உசனா கவி தன் வழக்கத்தை மாற்றிக்கொள்ளவிலை. எல்லா ரிஷிகளும் ஒரு மஹஜரை எடுத்துக்கொண்டு, கடவுளிடம் போனார்கள். அவரும் சொல்லிவிட்டார், அவன் உங்களை சின்னப் பையன்களே என்று சொல்லுவது சரிதான் என்று! அவன் அறிவினால் தந்தைக்குச் சமமானவன் என்றும் கடவுள் தீர்ப்பு சொல்லி விடுகிறார்! இக்கதையில் மிகப்பெரிய கருத்து உள்ளது. வேதங்களைக் கரைத்துக் குடித்தவனே அறிவாளி; மூத்தவன். மேலும் கவிஞன் என்பவன் தந்தைக்கு சமமானவன்; அவன் முக்காலமும் உணர்ந்தவன்.
இந்தச் சின்னப் பையன் கதையுள்ள பிராமணம் என்னும் இலக்கியம், சம்ஹிதைக்குப் பிறகு வந்தது. அதை கி.மு 1000 என்று மாக்ஸ்முல்லர் முதலியோரும் ஏனையோர் அதற்கும் முந்தையது என்றும் செப்புவர். எப்படிப் பார்த்தாலும் கிரேக்க நாட்டு ஹோமர் போன்றோர் தோன்றுவதற்கு நீண்ட நெடுங்காலம் முன்னரே உசனா கவி வாழ்ந்தார். ஆக அவரே உலகின் மிகப் பெரிய கவி; உலகின் மிக மூத்த கவி. மேலும் கவி, கவிஞன், கவிதை என்ற சொல்லெல்லாம் அவர் முதற்றே பிறந்தது எனின் மிகையாகாது.
சுமேரியாவிலுள்ள ஜில்காமேஷ் கவிதை போன்றவை வேதத்திற்குப் பிற்காலத்தில் வந்தவை. மேலும் மிகவும் நாகரீகத்தில் பின் தங்கியோரால் எழுதப்பட்டவை. ஆனால் வேத காலக் கவிதைகளோ நாகரீகத்தின் உச்சநிலையைத் தொட்ட ஒரு சமுதாயம் இயற்றியது. உலக அமைதி, மனித நேயம் பற்றிப் பாடுகிறது. அவர்களுக்கெல்லாம் மூத்தவர் நம் கவி – உசனா கவி. வேத இண்டெக்ஸ் தொகுத்த கீத், மக்டொனால்டு ஆகிய இருவரும், இந்தப் பெயர் வேத காலத்திலேயே, புராதனப் பெயராகிவிட்டது என்று பகர்வர். கண்ண பிரானும் பகவத் கீதையில் இவரைப் புகழ்வதால் கி.மு 3102 க்கு முன் அவர் வாழ்ந்தது உறுதியாகிறது.
மூத்தவர் என்ற தகுதி நரைமுடியாலோ, செல்வத்தாலோ, பரம்பரையாலோ வருவதில்லை. இது ரிஷிகள் வகுத்த சட்டம்; வேதங்களையும் வேதத்தின் அங்கங்களையும் கற்றவனே நம்மில் உயர்ந்தோன் (2-154 மனு).
பிராமணர்களில் மூத்தவன் வேதம் கற்றோன்;
க்ஷத்ரியர்களில் மூத்தவன், வீரம் மிக்கவன்;
வைஸ்யர்களில் மூத்தவன், அதிக தானியம் வைத்திருப்பவன்.
சூத்திரர்களில் மூத்தவன், வயதில் பெரியவன்! (மனு 2-155)
வேதத்தைப் படித்தவன், இளைஞனாக இருந்தாலும் அவனே பெரியவன் (2-156).
சங்க இலக்கியமான புறநானூற்றிலும் இதுவே வலியுறுத்தப்படுகிறது:
“ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” – (புறம் 183)
கவி என்றாலேயே அறிஞன் என்று பொருள்!
தொல்காப்பியர் , காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் சங்கப் புலவர் ஆகியோர் இந்தப் பழைய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்; இதனால்தான் தொல் என்ற அடைமொழியை தொல்காப்பியர் பெயரில் சேர்த்தனர் ; கவிதை, கவி, காவியம், கவிஞன் என்று நாம் பயன்படுத்தும் எல்லா சொற்களும் உசனா கவியிடமிருந்து வந்தவையே.
***
உஷா
உஷா – அநிருத்தன் காதல் கதை
(புராணம்)பாகவத புராணம் மற்றும் மகாபாரதத்தில் வரும் புகழ்பெற்ற காதல் மற்றும் வீரக் கதை இதுவாகும்.
கனவில் வந்த காதல்: அசுர குல மன்னனான பாணாசூரனின் மகள் உஷா. அவள் ஒரு இரவு தன் கனவில் ஒரு அழகான இளைஞனைக் கண்டு அவன் மீது காதல் கொள்கிறாள். உஷாவின் தோழியான சித்திரலேகா, தன் அபூர்வ சக்தியால் பல தேவர்கள் மற்றும் மனிதர்களின் படங்களை வரைந்து காட்டுகிறாள். ஸ்ரீ கிருஷ்ணரின் பேரனும், பிரத்யும்னனின் மகனுமான அநிருத்தனின் படத்தைக் கண்டதும் உஷா அவன்தான் தன் கனவு நாயகன் என அடையாளம் காட்டுகிறாள். சித்திரலேகா வான்வழியாகச் சென்று துவாரகையிலிருந்த அநிருத்தனை இரகசியமாகக் கடத்தி வந்து உஷாவின் அந்தப்புரத்தில் சேர்க்கிறாள். இதனையறிந்த பாணாசூரன் அநிருத்தனைச் சிறையிலடைக்கிறான். தன் பேரனைக் காக்க ஸ்ரீ கிருஷ்ணர் பாணாசூரனுடன் பெரும் போர் புரிந்து, இறுதியில் பாணாசூரனின் அகந்தையை அடக்கி, உஷா – அநிருத்தன் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
***
உஷஸ்
உஷா என்பது விடியற் காலம் ஆகும்; இதை வருணிக்கும் ரிக் வேதக் கவிதைகள் உலகிலேயே மிகப் பழமையான அழகுக் கவிதைகளாகக் கருதப்படுகிறது
உஷா (Ushas) அல்லது விடியற்காலை தேவதையே ரிக் வேதத்தில் “வானத்தின் மகள், இரவின் சகோதரி” என்று வர்ணிக்கப்படுகிறாள். உஷா தேவி ஆகாயத்தின் (Dyaus Pita / Sky) மகளாகக் கருதப்படுகிறாள்.இரவின் சகோதரி: அவள் இரவு தேவதையான ராத்ரியின் (Ratri / Night) சகோதரி ஆவாள். ரிக் வேதத்தில் உள்ள மிக அழகான, கவித்துவமான பாடல்கள் பல இந்த உஷா தேவியின் அழகைப் போற்றிப் பாடுபவையாக அமைந்துள்ளன. சிவந்த ஆடைகளை உடுத்தி, இருளை விரட்டி, உயிரினங்களை விழித்தெழச் செய்யும் என்றும் இளமை மாறாத கன்னியாக அவள் வர்ணிக்கப்படுகிறாள்.
***
உத்தரா
Uttarā (उत्तरा).—விராட மஹா ராஜாவின் புதல்வி ; அர்ஜுனனின் புதல்வனான அபிமன்யுவின் மனைவி; முதலில் விராட ராஜன் அர்ஜுனனைக் கல்யாணம் செய்யும்படி வேண்டினான்; ஆனால் அர்ஜுனன் தன்னுடைய மகனுக்கு அவளைக் கல்யாணம் செய்து வைப்பதே பொருத்தம் என்றவுடன் அபிமன்யு- உத்தரா கல்யாணம் நடைபெறுகிறது; துரோணரின் மகனான அஸ்வத்தாமன், போர் முடிந்த நாளன்று இரவில், பாண்டவர்கள் கூடாரத்துக்கு தீ வைத்த போது ஆண்கள் அனைவரும் அழிகின்றனர். பாண்டவர் வம்சத்தை, உத்தராவின் கர்ப்பத்தில் இருந்த குழநதை காப்பாற்றியது; அவளுடைய கர்ப்பத்தைக் காத்து, பரீட்சித் என்னும் மகன் பிறக்க கிருஷ்ணன் உதவுகிறான் . பின்னர் உத்த்ராவின் மகன் மூலம் சந்திர வம்சம் என்னும் பாண்டவர் வம்சம் உலகினை ஆள்கிறது .
உத்தர என்பது நட்சத்திரத்துக்கும் வீட்டின் உத்தரம் என்னும் அமைப்பினையும் குறிக்கும்; சங்க இலக்கியத்தில் இது வருகிறது.
***

உத்தர காண்டம் – ராமாயணத்தின் ஏழாவது காண்டம் . இதில் ராமர் அயோத்தி திரிரும்பி வைத்து ஆட்சி செய்த விஷயங்கள் வருகின்றன .
ராம பிரானுடன் புஷ்பக விமானத்தில் வந்த அனுமன் சுக்ரீவன் ஆகியோருக்கு ராமன் பரிசுகளைக் கொடுத்து திருப்பி அனுப்புகிறான். சீதா தேவியின் கர்ப்பம் குறித்து ஒரு சலவைத் தொழிலாளி பேசிய அபவாதம் ராமர் காதில் விழுகிறது; மக்களின் சந்தேகத்தை அகற்ற, லட்சுமணனின் ரதத்தில் சீதா தேவியை ஏற்றி வால்மீகி ஆஸ்ரமத்தின் அரு கில் இறக்கிவிட ராமன் உத்தரவிடுகிறான்; அங்கே வசித்த சீதைக்கு லவ குசன் என்ற இரட்டையர் பிறக்கின்றனர்; அவர்கள் சிறு வயதில் ராம பிரான் அவைக்குச் சென்று ராமனின் கதையைப் பாடியவுடன் அவர்கள் தன்னுடைய பிள்ளை என்பதை அறிந்து ஆட்சிப்பொறுப்பினை ஒப்படைக்கிறார். இதன் மூலம் சூரிய வம்சம் பாரினை ஆள்கிறது தொடர்ச்சியாக 143 தலைமுறைகள் உள்ளதால் இந்தியாவின் 5000 ஆண்டுப்பழமை உறுதியாகிறது; சீதா தேவி தனது பணி முடிந்ததை அறிந்து பூமா தேவியை வேண்டவே பூமி திறக்கிறது. அவள் பூமிக்குள் புகுகிறாள்; ராமனும் தனது அவதாரப்பணி முடிந்ததை அறிந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் புடை சூழ சரயு நதியில் இறங்கி அனைவருடன் வைகுந்தம் அடைகிறான் ; அற்புதமான பல பழைய கதைகள் நிறைந்த இந்தப்பகுதி பிற்காலத்தில் வால்மீகி அல்லது அவர்களின் சீடர்கள் மூலம் இணைக்கப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து.
***
உத்தரகுரு
வேத கால இலக்கியம் முதல் இதிஹாச, புராண, தமிழ் இலக்கியம் வரை குறிப்பிடப்படும் மர்மமான நிலப்பரப்பு இது ஆனந்த மயமான வாழ்வும் செல்வமும் நிறைந்த பூமி. இமயமலைக்கு அப்பால் உள்ள பகுதியாக இது விவரிக்கப்படுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் இதை காஷ்மீர் அல்லது காஷ்மீருக்கு கிழக்கே உள்ள பகுதியாக அடையாளம் காண்கின்றனர்.: ஐதரேய பிராமணம், மகாபாரதம், ராமாயணம் மற்றும் சமண, பௌத்த நூல்களில் உத்தரகுரு குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கத் தமிழ் இலக்கியம்: பதிற்றுப்பத்து (9-14) மற்றும் சிலப்பதிகாரம் (2-10) ஆகிய நூல்களில் உத்தரகுரு பற்றிய குறிப்புகள் உள்ளன. பூம்புகார் நகரைச் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் உத்தரகுருவுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். போகபூமி: இது நிலையான இன்பமும் செல்வமும் நிறைந்த ஒரு பூமியாகவும், தவப்பேறுடையோர் வாழும் இடமாகவும் தமிழ்ப் புலவர்களால் வர்ணிக்கப்பட்டுள்ளது. யுதிஷ்டிரன் என்னும் தர்மபுத்ரன் ராஜசூயம் நடத்தியபொழுது , அர்ஜுனன், உத்தர குருவுக்குச் சென்று பொன்னையும் ரத்தினங்களையும் பெற்று வந்த செய்தி மஹாபாரதத்தில் காணப்படுகிறது..
-subham—
Tags- உத்தரகுரு ,ஊர்மிளா, ஊர்வசி , HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 112; இந்து மத கலைச்சொல் அகராதி-112