மாறி வரும் தொழில் யுகம்! போட்டியிட்டு முன்னேறுவது எப்படி? (Post.16,193)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,193

Date uploaded in London – 13 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

12-9-26 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! 

மாறி வரும் தொழில் யுகம்! போட்டியிட்டு முன்னேறுவது எப்படி?

                       ச. நாகராஜன் 

மாறும் யுகம்! 

மாறிக்கொண்டே இருக்கும் வேக யுகத்தில் மாறாதது மாற்றம் ஒன்றே தான். 

இந்த மாற்றத்தை விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டும்.

சில எடுத்துக்காட்டுகளை நினைத்தால் உண்மை புலப்படும்.

பழைய காலத்தில் போட்டோ ஸ்டுடியோவிற்குச் சென்று போட்டோ எடுத்தால், அடுத்த நாள் வெள்ளை- கறுப்பு நிறத்தில் நமது படம் கிடைக்கும். அதற்கான கட்டணமோ மிக அதிகம். பின்னர் ஒரே மணி நேரத்தில் வண்ணப் படத்தை ஒரே ஒரு ரூபாய் கொடுத்து ஸ்டுடியோவில் பெற்றோம். பின்னர் நாமே நமது மொபைலில் போட்டோ எடுத்து கண நேரத்தில் வாட்ஸ் ஆப் மூலமாக உலகெங்கும் அனுப்பலானோம்.

அடுத்ததாக, வழி விசாரித்து விசாரித்து நொந்து போய் சேர வேண்டிய இடத்திற்குத் தாமதமாகச் சேர்ந்த காலம் போய், கையில் கூகிள் மேப் இருக்க உல்லாசமாக சேரும் இடத்தைக் குறித்த நேரத்தில் இப்போது அடைகிறோம்.

சைக்கிள் காலம் போய் ட்ரோன் காலமாக இது ஆகி விட்டது.

கட்டுரை எழுத வேண்டுமா? கூகிளில் சில கருத்துகளைப் பதிவிட்டால்

அற்புதமாக மலர்கிறது ஒரு கட்டுரை!!

எழுதிய கட்டுரையை நல்ல குரலில் கேட்க வேண்டுமா? கூகிள் மூலம் அற்புதமாக ஒரே நிமிடத்தில் அதை நல்ல இனிய குரலில் கேட்க முடிகிறது.

மண்ணில் தான் இந்த முன்னேற்றம் என்றால் விண்ணிலும் முன்னேற்றம் உண்டு!

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் நடக்கும் சாடலைட் போட்டி பல விசித்திரங்களை நம் முன் காட்டுகிறது. தென் கொரியாவின் சாம் சங் சாடலைட் பாகங்களின் தயாரிப்பில் முன்னேறி அமெரிக்காவை அதிர வைக்கிறது.

வானமெங்கும் குறுங்கோளாக பவனி வரும் வைரக் குறுங்கோள்களை முதலில் பிடிப்பவர் பல நூறு ஆண்டுகள் பூமியில் முன்னணியில் இருப்பார்கள்.

பூமி அருகே சுற்றும் வைரக் கோள்களில் ஒன்றை யார் முதலில் பிடிக்கப் போகிறார்கள்? வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

ஜப்பானிலோ இது ரொபாட் யுகம்.

ரொபாட்டுகள் வீட்டைச் சுத்தம் செய்கின்றன. உணவு விடுதிகளில் ஆர்டரை எடுத்து அவற்றை பரிமாறுகின்றன. பெரிய கட்டிடங்களின் காவல் பொறுப்பை மேற்கொள்கின்றன. இது மட்டுமா? மின்னணுக் கருவிகளில் இசையை இசைக்கின்றன; மருத்துவ மனைகளில் அனைத்து நர்ஸ் வேலைகளையும் பார்க்கின்றன!

கன்ஸ்யூமர் எனப்படும் நுகர்வோர் தமக்கு வேண்டிய பொருள்களை கடைக்குச் சென்று வாழும் முறை போய் பத்தே நிமிடங்களில் வீட்டு வாசலில் கேட்டது கிடைக்கும் நிலை வந்து விட்டது. பெரிய கடைகள் மூடப்பட்டு வருகின்றன!

ஆட்டோ ரிக்‌ஷாக்களில் முதல் சவாரி இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்து வியக்கும் போது இன்னொரு வண்டியில் முதல் மூன்று சவாரிகள் இலவசம் என்பதைப் பார்த்து மலைக்கிறோம்.

எங்கும் போட்டி; எதிலும் போட்டி!

இதற்கு காரணமாக முதலில் இருந்த கம்ப்யூட்டர் யுகம் போய் இப்போது செயற்கை நுண்ணறிவு என்னும் ஆர்டிஃபிஷியல் யுகம் வந்து விட்டது.

இந்த ஏ ஐ யுகத்தில் தொழிலை நடத்த முடியுமா?

முடியும்!

வெல்லும் வழி!

மக்கென்ஸியின் 2026ம் ஆண்டு அறிக்கையில் 100 சிறப்புக் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. இந்த நுண்ணறிவு யுகத்தில் இயந்திரத்தை  மனிதன் வெல்லும் வழிகளையும் படிக்க வேண்டிய புத்தகங்களின் விவரங்களையும் அதில் காணலாம்.

மனித மூளை நுட்பமானது. அது உணரும் சக்தி உள்ளது. நிலைமைக்கு ஏற்ப கண நேரத்தில் புதிய முடிவுகளை எடுக்க வல்லது. அவசர யுகத்தில் எதையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டது.

இதை எந்தத் தொழிலும் ஈடுபடுத்தி வெற்றி பெற முடியும்!

மூன்று நிலைகளில் முன்னேற்றம்!

முதலில் சாதாரணமாக போட்டி மிகுந்த தொழில் துறையில் – அது எந்தத் தொழிலாகத் தான் இருக்கட்டுமே வெற்றி பெறவும், அதைத் தக்க வைக்கவும் மூன்று நிலைகள் உள்ளன.

முதலில் மற்றவர் ஓடும் ஓட்டத்தின் வேகத்தைக் கண்டுபிடித்து அதே வேகத்தில் ஓட வேண்டும். இது தங்கள் தொழிலில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்கான முதல் நிலை.

அதாவது முன்னணியில் இருப்போரின் செயல்முறை, கருவிகள், வழிமுறைகள், வேலைத் திறம், நிதி நிலைமை, தொடர்பு உத்திகள், விளம்பரம் உள்ளிட்டவற்றை கூர்ந்து கவனித்து அதன்படி நடந்து நம்மை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த நிலை ஓட்டத்தின் வேகத்தை நமது புத்திகூர்மையால் அதிகரித்து முன்னேற வேண்டும். இந்த இரண்டாவது நிலையை அடைய முழு உழைப்பும் நிபுணத்துவமும் வேண்டும்.

அடுத்த மூன்றாவது நிலை நம்மைப் பார்த்து மலைத்து நமது வேகத்திற்கு ஈடு கொடுத்து முன்னேற நினைக்கும் அல்லது முன்னேறி வருவோருக்கு ஒரு தடைக் கல்லை வைக்க வேண்டும். தகாத வழியில் அவர்களை முடக்க வேண்டும் என்பதல்ல இதன் பொருள். இதன் பொருள் என்னவெனில் மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாதபடி, யுக மாறுதலுக்கு ஏற்ப ஏற்படும் நவீன தொழில்நுட்ப உத்திகளை முதலில் கைக்கொள்ள வேண்டும்.

முதலில் கம்ப்யூட்டர், அடுத்து ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடுத்து ரோபாட், அடுத்து விண்வெளி – என இப்படி மாறிக் கொண்டே இருக்கும் தொழில் யுகத்தில் மாறுதலுக்கு ஏற்ப முதலில் நாம் மாற வேண்டும்.

மளிகைக் கடை விற்பனையாக இருந்தாலும் சரி மாளிகை கட்டும் கட்டுமானத் தொழிலாக இருந்தாலும் சரி மாறி வரும் உத்திகளைக் கவனித்து அதைக் கடைப்பிடிப்பவரே இன்று தொழிலில் நிலை நிற்க முடியும்; லாபத்தைச் சம்பாதிக்க முடியும்!

சில துறைகளின் எடுத்துக்காட்டுகள்!

இப்படி நிலைமைக்கு ஏற்ப தம்மை மாற்றி கொண்டு முன்னேறி வந்துள்ள அமெரிக்க நிறுவனங்கள் நூறு உள்ளன.

அவை எப்படிப்பட்ட துறைகளில் முன்னேறி வருகின்றன? சில துறைகளைப் பார்ப்போம்; நமக்குத் தக அவற்றைக் கடைப்பிடித்து முன்னேறலாம்!

1)      உடல்நலப் பராமரிப்பு (ஹெல்த் கேர்) மற்றும் நிதி பற்றி உள்ள ஏஐ சாதனங்களைக் கொண்டு முன்னேறி வரும் நிறுவனங்கள்.

2)      டாக்ஸி சேவையில் செல்ஃப் டிரைவிங் எனப்படும் தானியங்கி கார்களை அறிமுகப்படுத்தும் நிறுவனங்கள்

3)      ட்ரோன் மூலம் டெலிவரி என்று எந்தப் பொருளையும் உடனுக்குடன் வீட்டில் விநியோகம் செய்யும் நிறுவனங்கள்

4)      மருத்துவ சிகிச்சையில் ஏராளமான ரொபாட்களை நர்ஸ் வேலைக்கு அமர்த்தும் மருத்துவ மனைகள்

5)      உணவு விடுதிகளில் பரிமாற ரொபாட்டுகளைக் கொண்டுள்ள உணவு விடுதிகள்

6)      திரைபடக்காட்சிகளை பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைத்து கோடிக் கணக்கில் பணத்தை அள்ளும் திரை தயாரிப்பு நிறுவனங்கள். இவற்றில் உள்ள ஸ்டண்ட் காட்சிகளைப் பார்த்து பிரமிக்கிறோம். ஆனால் இவற்றின் தொழில்நுட்பத்தை ‘உள்ளே நுழைந்து” பார்த்தால் பூ, இவ்வளவு தானா என்று நினைப்போம்.

7)      கோடிக்கணக்கான தகவல்களைப் பெற்று அலசி ஆராய்ந்து நமக்கு உகந்த தகவலைத் தரும் நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள்  மக்களின் மனப்பான்மையை அறிந்து தக்க வாசகங்களை அமைத்து தங்கள் பொருள்களை விளம்பரப்படுத்தி முன்னேறுகின்றன.

8)      எந்த இடத்திற்கும் நேரில் போகாமல் தொலைதூரத்தில் உள்ளோரையும் தொடர்பு கொண்டு காரியத்தைச் சாதிக்கும் நிறுவனங்கள். (ஜூம் மீட் உள்ளிட்டவற்றைச் சொல்லலாம்)

9)      தங்களை நன்கு விளம்பரப்படுத்தி இரண்டு லட்சம் பார்வையாளர்களைப் பெற்று பிரபலமாகும் நபர்களும் நிறுவனங்களும் இப்போது உண்டு. யூ டியூபர்களை நினவில் கொள்ளலாம்.

10)   ராணுவத்தில் போர்க்களத்தில் வீரர்கள் நேரில் போய் சண்டையிடாமல் இயந்திர வீரர்களை அனுப்பி வெற்றி பெறல். உளவுத் துறையில் முன்னேறுதல்.

11)   கழிவுப் பொருள்களைச் சேகரித்து மறு சுழற்சி செய்து கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள். கொலொரோடா நிறுவனம் ஒன்று ஆண்டுக்கு பத்து லட்சம் டன் கழிவுப் பொருளை சுத்திகரித்து மறு சுழற்சி செய்து கோடி கோடி டாலர்களை சம்பாதிக்கிறது.

12)   சந்தையில் உள்ள நிறுவனங்களின் தரத்தை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு நலல நிறுவனங்களின் பங்குகளை வாங்க உதவி செய்யும் ஷேர் மார்க்கெட் நிறுவனங்கள்

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் – வெற்றியாளர்களின் பட்டியலை.

முதலில் நாம் இருக்கும் நிலையை அலசி ஆராய்ந்து எதில் எப்படி முன்னேற வேண்டும் என்பதை நிர்ணயிக்க வேண்டும்.

தகுந்தவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.

படிப்படியாக நமது உழைப்பால் முன்னேற வேண்டும். அத்துடன் அந்த முன்னேற்றத்திலும் காலத்திற்கேற்ற மாற்றங்களை முதலில் கடைப்பிடிப்பவராக ஆக வேண்டும்.

இதுவே இன்றைய தொழில் போட்டியில் தொழில் செய்ய நினைப்போர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை.

இதைச் சொல்லித் தரும் நல்ல நூல்கள் குறைந்த பட்சம் நூறு (ஆங்கிலத்தில்) வெளி வந்து விட்டன. முன்னேறும் மனமே தேவை.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

**

Leave a comment

Leave a comment