

WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,226
Date uploaded in London – 23 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
20-8-26 மங்கையர் மலர் இதழில் வெளியான கட்டுரை!
அதிசயத் தாய் மகனுக்கு ஆற்றிய உதவி!
ச. நாகராஜன்
Times News Service (TNN) 10-7-26 அன்று தரும் அதிசயச் செய்தி இது.
பாட்னாவில் நிகழ்ந்த சம்பவம் இது.
பீஹாரில் சிதாமர்ஹியில் உள்ள குஞ்சன் குமார் என்ற இளைஞனுக்கு பாதிக்கப்பட்ட நுரையீரல். அவன் படுத்த படுக்கையாகக் கிடக்க வேண்டியிருந்தது. உடல் முழுவதும் பேண்டேஜ். 70 சதவிகித பார்வை போய் விட்டது. 9.5 என்ற பவர் கிளாஸ் இருந்தால் தான் பார்க்க முடியும்.
ஆனால் அவன் எதிர்நோக்கி இருப்பதோ இந்தியாவின் கடினமான தேர்வான JEE. அதற்காக அவன் தன்னைத் தயாரிக்க வேண்டிய நிர்பந்தம்!
அவனது தாயார் ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்து எழுத ஆரம்பித்தார் – அவனுக்கான நோட்ஸ் அது.
தனது மகனின் கனவு பாழாய் போக அந்தத் தாயின் மனம் அனுமதிக்கவில்லை.
சில மாதங்களுக்குப் பிறகு பதினேழே வயதான குஞ்சன் டெல்லி ஐ ஐ டியின் அபுதாபி காம்பஸில் கம்ப்யூட்டர் ஸயின்ஸில் சேர அனுமதியைப் பெற்றான். அவனது வலியெல்லாம் ஒளிமயமான எதிர்காலமாக மாறியது.
குஞ்சன் ராஜஸ்தானின் மிகப் பிரபலமான கோச்சிங் செண்டரான கோடாவிற்கு ஜே ஈ ஈ தேர்வுக்காக தன்னைத் தயார்படுத்திக் கொள்ள 2023ல் சேர்ந்தான், ஆனால் அதே ஆண்டு அக்டோபர் மாதம் அவனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
மூன்று மாதங்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தான் குஞ்சன். நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. எப்படி அவனால் படிக்க முடியும்?
முதலில் படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டுமே!
பாதிக்கப்பட்ட நுரையீரலைச் சரி செய்வதற்காக அவனுக்கு நியுமோதோரக்ஸ் (Pneumothorax) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது தான் அவனது தாயார் குஞ்ச குமாரி ஒரு முடிவுக்கு வந்தார். தன் மகன் படிப்பில் வெற்றி பெற வேண்டும் என்பதே அவரது ஒரே குறிக்கோள் ஆனது.
அவர் ஒரு பட்டதாரி – பி.எட். -இல் சோஷியல் சயின்ஸில் தேர்வு பெற்றவர். ஆன் லைன் கோச்சிங் வகுப்பில் அவர் சேர்ந்தார் கடினமான சமன்பாடுகளை பேப்பரில் எழுதிக் கொண்டார். தன் மகன் அருகே உட்கார்ந்து அனைத்துப் பாடங்களையும் அவனுடன் பகிர்ந்து கொண்டார்.
ரிகார்ட் செய்யப்பட்ட உரைகளை அவர் கேட்க ஆரம்பித்தார். ஒரு மணி நேர வகுப்பு சொற்பொழிவை அவர் நோட்ஸ் எடுக்க இரண்டரை மணி நேரம் ஆனது. தான் படித்ததை எல்லாம் சொல்லிக் கொடுத்த பின்னர் அம்மா மகனிடம் கேள்வி கேட்க ஆரம்பிப்பார். மகன் குஞ்சன் பதில் சொல்வான்.
ஒரு வழியாக டிசம்பர் மாதம் குஞ்சன் தேறினான். ஜனவரியில் ஜே ஈ ஈ தேர்வு.
“எனது அம்மா தயாரித்த நோட்ஸ் தான் எனக்கு உதவியது” என்று உருக்கமாகக் கூறினான் குஞ்சன் பின்னால்.
91.8% மார்க் எடுத்து அபாரமாகத் தேறினான் குஞ்சன். 2026ம் ஆண்டு PwD- OBCஇல் அவனது ரேங்க் 50. பொது PwD இல் அவனது ரேங்க் 120!
ஐ ஐ டி டெல்லி அவனை அழைத்தது. அவனும் அங்கு சென்று UAE காம்பஸில் சேர்ந்தான்! அப்போது அவனுக்கு வயது 17.
“எனது வீட்டு வேலைகளைச் செய்தவாறே நோட்ஸ்களையும் எடுத்தேன். பெரிய சவால் தான். ஆனால் என் மகன் மனம் தளராமல் தேர்வை எதிர்கொள்ள கடுமையாக உழைத்தேன்” என்றார் அவனது அம்மா!
செல்வ வளத்தின் அதி தேவதையான லக்ஷ்மி, சிங்கம் போல் வலிமையாக இருப்பவரிடமே வருவாள் என்கிறது நமது சாஸ்திரங்கள்.
அதிர்ஷ்டமா, விடாமுயற்சியுடன் கூடிய புத்திசாலித்தனமான உழைப்பா?
குஞ்ச குமாரி தன் மகனுக்கான உழைத்த உழைப்பே அவனை உயர்த்தியது.
யார் ஒருவர் விடாமுயற்சியுடன் உழைக்கிறாரோ அவரை ஒருபோதும் கடவுள் கைவிடமாட்டான் என்பதே நியதி.
இந்த நியதிக்கு இன்னுமோர் உதாரணம் குஞ்ச குமாரியும், அவர் மகன் குஞ்சனும்!
**