WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,242
Date uploaded in London – 27 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
23-9-26 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
திருவாட்டாறு திவ்ய தேசம்!
ச. நாகராஜன்
108 வைணவ திவ்ய தலங்களில் 87வது திவ்ய தலமாக அமைந்திருப்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாட்டாறு திருத்தலமாகும். இத்தலத்தில் நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்துள்ளார்.
வாட்டாற்றான் அடி வணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே! கேசவன் எம்பெருமானை
பாட்டாய பல பாடிப் பழவினைகள் பற்றறுத்து
நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினமே நம்மாழ்வார், திருவாய்மொழி, 10-6-2
பாடலின் பொருள் : பரந்த உலகில் பிறப்புடனான பிணைப்பை நீக்குவதற்காக திருவாட்டாற்றில் உள்ளவனின் தெய்வீக திருவடியில் சரணமடைந்து, கேசியை நீக்கி, நமது தடைகளையும் நீக்கி, நம்மைத் தொண்டில் ஈடுபடுத்தி நம் பழவினைகளை அழித்தவருக்குப் பலவிதமான பாடல்களைப் பாடி நாராயணனை அணுகினோம். ஓ, எனது இதயமே! எம்பெருமானின் இந்த அருட்கொடைகளைப் பற்றி நீ கேட்டிருக்கிறாய்!
இத்தலம் நாகர்கோவிலிலிருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திருவனந்தபுரம் – கன்னியாகுமரி ரயில் பாதையில் இத்தலம் அமைந்துள்ளது.
மூலவர்: ஆதிகேசவப் பெருமாள். புஜங்க சயனம்
தாயார்: மரகதவல்லித் தாயார்
தீர்த்தம்: கடல்வாய்த் தீர்த்தம், வாட்டாறு ராமதீர்த்தம்
இத்தலத்தில் உள்ள பெருமாள் 22 அடி நீளம் கொண்டவராகக் காட்சி அளிக்கிறார். கர்பக்ருஹத்தில் மூன்று நிலை வாயில்கள் உள்ளன. திருமுகம்,
திருக்கரம், திருப்பாதம் என மூன்று பகுதிகளை ஒவ்வொரு நுழைவாயிலின் வழியாகக் கண்டு தரிசிக்கலாம்.
இந்தக் கோவிலைப் பற்றிய சுவையான தல வரலாறு ஒன்று உண்டு.
முன்னொரு காலத்தில் கேசி என்ற அசுரன் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டனர். உடனே அவர் கேசியுடன் மலியுத்தம் செய்து கேசியைத் தள்ளி மேலே படுத்துக் கொண்டார். கேசியின் மனைவியான ஆஸூரி என்பவள் உடனே கங்கையைப் பிரார்த்தித்தாள். கங்கை தாமிரபரணியுடன் வெள்ளப் பெருக்கெடுத்து ஓட, திருமாலின் ஆணயின் படி பூமாதேவி அவர் இருக்கும் இடத்தை மேடாக்கினாள். இதனால் கங்கையும் தாமிரபரணியும் பகவானை வணங்கி மாலை போல இரண்டாகப் பிரிந்து அவரைச் சுற்றி வட்டமாக ஓடின.
இதனால் இந்தத் தலம் திருவட்டாறு என்ற பெயரைப் பெற்றது.
ஆதிகேசியை திருமால் வதை செய்ததால் இந்தத் தலத்தின் இறைவனுக்கு[s1] ஆதிகேசர் என்ற திருநாமம் ஏற்பட்டது. கேசியை அழித்ததால் கேசவப் பெருமாள் என்று இவர் அழைக்கப்படலானார்.
இங்கு நதிகள் பிரியும் இடம் மூவாத்து முகம் என்றும் தோதை பிரளி என்றும் அழைக்கப்படுகிறது. நதிகளை அனுக்ரகிக்க இங்கு தீர்த்தவாரி நடக்கிறது.
சந்திரனும், பரசுராமரும் இங்கு திருமாலை வழிபட்டுத் தவமியற்றினர்.
இங்கு மேற்கு பார்த்த நிலையில் இருக்கும் பெருமாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். சட்டை அணியாமல் கேரள முறைப்படி பக்தர்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்வது மரபாகும்.
இங்குள்ள ஒரு அதிசயம் என்னவெனில் கர்பக்ருஹத்தில் மூலவர் திருமுகத்தில் இயற்கையாக சூரிய ஒளி விழுகிறது. புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் ஆறு நாட்கள் சூரிய கதிர்கள் நேராக கர்பக்ருஹத்தில் விழுவதைப் பார்க்கலாம்.
வைகுண்ட ஏகாதசி திருநாள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆலயம் தரையிலிருந்து 16 அடி உயரத்தில் உள்ளது. பல கட்டிடச் சிறப்புகளை இங்கு காணலாம். கோவிலில் உள்ள தூண்கள், கதவுகள், மேற்கூரைகள் ஆகிய அனைத்தும் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் ஐந்து கலசங்கள் செம்பினால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
கர்பக்ருஹத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஒற்றைக்கல் மண்டபம் 18 அடி சதுரமும் மூன்று அடி உயரமும் கொண்ட ஒற்றைக் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள ஊர்த்துவ தாண்டவம், வேணுகோபாலர், ரதி, மன்மதன், லட்சுமணன், இந்திரஜித் உள்ளிட்ட சிலைகள் காண்பவரைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள சிலைகளாகும்.
இங்குள்ள பெருமாளின் சிலை கடு சர்க்கரை யோகம் என்ற முறையில் விசேஷமாக அமைக்கப்பட்டுள்ள ஒன்றாகும். 16008 சாளகிராம கற்கள் இணைக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள சிலை மீது கடுசர்க்கரை என்ற சாந்து பூசப்பட்டுள்ளது. ஆகவே இது கடுசர்க்கரை யோகம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சிலைக்கு அபிஷேகம் கிடையாது.
சுற்று பிரகாரத்தில் பாவை விளக்கு ஏந்திய மங்கையருடன் 224 தூண்கள் உள்ளன.
கோவிலில் உள்ள சுவரில் வண்ணச் சித்திரங்கள் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றன.
இக்கோவிலைப் பற்றிய இன்னொரு சுவையான செய்தியும் உண்டு.
கேசியின் மீது ஆதிகேசவப் பெருமாள் சயனித்த போது அவன் தனது 12 கைகளால் தப்ப முயற்சி செய்தான். திருமால் அவனது 12 கரங்களிலும் 12 ருத்ராட்சங்களை வைத்து அவன் தப்புவதைத் தடை செய்தார். இவையே திருவட்டாற்றைச் சுற்றி 12 சிவாலயங்களாக அமைந்தன. மஹாசிவராத்திரி நன்னாளன்று பக்தர்கள் ஓடியவாறு 12 சிவாலயங்களையும் தரிசித்து இறுதியாக ஆதிகேசவப் பெருமாளையும் அவர் பாதத்தின் கீழ் உள சிவனையும் தரிசிக்கின்றனர். முஞ்சிறை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பந்நிப்பாகம், பத்மநாபபுரம் (கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு. திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகியவையே 12 சிவாலயங்களாகும்.
வைணவ திவ்ய தலங்களில் சிறப்பான வரலாறைக் கொண்ட இந்தத் தலத்திற்கு பக்தர்கள் இடைவிடாது வந்து தரிசித்து திருமாலின் அருளைப் பெறுகின்றனர்.
**