WRITTEN BY R. SESHADRINATHAN
Post No. 16,261
Date uploaded in London – 2 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கிஷ்கிந்தா காண்டம். ஓர் ஆய்வு – 31 வாலியின் கோபம்
(ஆர், சேஷாத்ரிநாதன்)
बाली ताहि मारि गृह आवा। देखि मोहि जियँ भेद बढ़ावा॥5॥
रिपु सम मोहि मारेसि अति भारी। हरि लीन्हसि सर्बसु अरु नारी॥
ताकें भय रघुबीर कृपाला सकल भुवन मैं फिरेउँ बिहाला॥6
“வாலி மாயாவியைக் கொன்று விட்டு திரும்பி வந்தான். நான் அரியணையில் அமர்ந்திருப்பதைக் கண்டதும் அவனுக்கு வெகுவாகக் கோபம் வந்தது. நாட்டை அடைய வேண்டும் என்ற ஆசையால் குகையை விட்டு அவன் வெளியே வர இயலாத வகையில் குகை வாயிலை அடைத்து விட்டு வந்து நான் அரசனாகி விட்டதாக அவன் கருதினான் அவன் என்னை ஒரு விரோதியைப் போல் அடித்து நொறுக்கினான். என்னுடைய சொத்துக்களைப் பிடுங்கிக் கொண்டதுடன் என் மனைவியையும் அபகரித்துக் கொண்டான்; நான் அவனுக்கு அஞ்சி செய்வதறியாமல் உலகெங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தேன்.
வாலிக்கு சுக்ரீவனின் மீது கோபத்திற்கு முக்கிய காரணம் சுக்ரீவன் குகையின் வாசலை மலைபோன்ற ஒரு பாறையை வைத்து அடைத்துவிட்டது தான். அதனால் வாலியால் எளிதில் வெளிவரமுடியவில்லை.. வாலி தான் வெளியே வரக்கூடாது என்று சுக்ரீவன் தான் இந்த நாட்டை ஆளவேண்டும் என்ற தீய எண்ணத்தில் தான் குகையிலிருந்து தான் வெளியே வராதபடி குகையின் வாயிலை அடைத்துவிட்டான் என்று வாலி கருதியதாக வால்மீகி இராமாயணத்தில் வால்மீகி சொல்கிறார், இதைத்தான் வாலி தனது அரச சபையில் சொல்கிறான்
तत्र अनेन अस्मि सम्रुद्धः राज्यम् मृगयत आत्मनः |
सुग्रीवेण नृशंसेन विस्मृत्य भ्रातृ सौहृदम् || ४-१०-२५
“உடன்பிறந்த அன்பை மறந்து, தனக்கு ராஜ்ஜியத்தை விரும்பி, கற்பனையில் ஆழ்ந்தக் கொடியவனான இந்த சுக்ரீவனால் நான் அங்கே அடைக்கப்பட்டிருந்தேன்” என்றான் வாலி. இரண்டாவது அரசவாரீசான அங்கதன் இருக்கும்போது சுக்ரீவன் எப்படி அரசை ஏற்றுக் கொண்டா,ன்? மூன்றாவது வாலியின் மனைவியான தாரையுடன் சுகமாக வாழ்கிறான்” என்று நினைத்தான் வாலி.
‘हारि लीनहेसि सर्बसु अरु नारी” என்னை எதிரியாக நினைத்து என்னிடமிருந்து அரசு மற்றும் எனது மனைவியையும் அபஹரித்துக் கொண்டான் வாலி. அவர் மீது இருந்த பயத்தால் तद्धयाच्च महीं सर्वा क्रान्तवान्सवनार्णवाम्’ உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து இந்த ரிஷ்முக மலையில் வந்து தங்கிவிட்டேன்”
इहाँ साप बस आवत नाहीं। तदपि सभीत रहउँ मन माहीं॥
“அவன் ஒரு சாபத்தின் காரணமாக இங்கு வருவதில்லை. இருப்பினும் மனதில் ஒரு பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்றான் சுக்ரீவன்.
மதங்க முனிவரின் சாபம்
இங்கு சுக்ரீவன் சாபம் என்று சொன்னது மதங்க முனிவரின் சாபம் ஆகும்.
मतंगेन तदा शप्तो हि अस्मिन् आश्रम मण्डले |
प्रविशेत् यदि वै वाली मूर्धा अस्य शतधा भवेत् || ४-४६-२२
வாலி அந்த ரிஷிய முக மலைக்குள் வந்தால் அவனது தலை நூறு துண்டங்களாகச் சிதறிப் போகும் என்பது மதங்க முனிவரின் சாபம். அது என்ன சாபம்?
ஒரு காலத்தில் எருமை வடிவம் பெற்ற துந்துபி என்ற அசுரன் தவம் செய்து, தான் பெற்ற வரத்தினால் ஆயிரம் யானைகளின் பலத்தை அடைந்தான். பெற்ற வரத்தை எப்படி பயன் படுத்துவது என்று தெரியாமல் கடல் ராஜனிடம் சென்று சண்டைக்கு அழைத்தான். கடல் ராஜனோ “உனக்குச் சமமான எதிரியுடன் சண்டை போட வேண்டும் என்னிடம் அல்ல. உனக்குச் சமமான எதிரி வடக்கே ஹிமவான் என்ற இமயமலை இருக்கிறது. அதனுடன் சண்டையிட்டு உனது வீரத்தை காட்டு” என்று அனுப்பி வைத்தார். இமயமலை வந்த துந்துபி அங்கிருந்த மலைகளை உடைத்து பாறைகளை கொம்பால் தள்ளி அட்டகாசம் செய்தான்.அதனைப் பார்த்த ஹிமவான் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு “நீ ஏன் என்னுடன் சண்டைக்கு நிற்கிறாய்?. யுத்தத்தில் எனக்கு பயிற்சி கிடையாது. முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் சாதுக்களுக்கும் இடம் கொடுத்து அவர்களுடன் காலம் கழித்து வருகிறேன். உனக்குச் சமமான எதிரியுடன் சண்டையிடு” என்றார். “அப்படியானால் எனக்குச் சமமான எதிரி யார் என்று கூறு இப்போதே சண்டையிட்டு அவனை வெற்றி கொள்ள வேண்டும்” என்று மூர்க்கமாகக் கத்தினான் அசுரன். இதனைக் கேட்ட ஹிமவான் “தெற்கே வாலி என்ற வானரராஜன் இருக்கிறான். அவன் தான் உனது பலத்துக்கு சமமான வீரன் அவனை யுத்தத்திற்கு அழைத்துச் சண்டையிட்டு வெற்றி பெற்று உனது பராக்கிரமத்தை காட்டு” என்றான்.
ஹிமவான் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட துந்துபி வாலியுடன் சண்டையிட கிஷ்கிந்தைக்கு வந்தான். மரங்களைத் தள்ளியும் அரண்மனைக் கோட்டையை இடித்தும் “வானரத்தின் அரசனே வாலியே! வெளியே வா! என்னுடன் யுத்தம் செய்!” என்று வாலியைச் சண்டைக்கு அழைத்து கர்ஜனை செய்தான். அந்தப்புரத்தில் உற்சாகப் பானம் அருந்திக் கொண்டிருந்த வாலி வெளியே வந்து துந்துபியிடம் {உயிரோடு இருக்க உனக்கு ஆசையிருந்தால் ஓடிப்போய் விடு” என்று எச்சரித்தான். வாலி அலட்சியமாகப் பேசியதக் கேட்ட துந்துபி கோபமாக :உனக்கு வீரியமிருந்தால் என்னுடன் யுத்தம் செய். வீண் விவாதம் வேண்டாம் நீ இப்போது அந்தப்புரத்தில் இருந்து வந்திருக்கிறாய். உற்சாக பானம் அருந்தி களைப்பாக இருக்கிறாய். களைப்பாக இருப்பவனுடன் சண்டையிடுவது பாவமாகும். காலை வரை உனக்காக காத்திருக்கிறேன். உன்னுடைய களைப்பை விட்டுப் புத்துணர்ச்சி அடைந்ததும் வா சண்டையிடுவோம் “என்றான் துந்துபி.
வாலி துந்துபியின் வார்த்தைகளைக் கேட்டுச் சிரிந்தான். “நான் உற்சாக பானம் அருந்திருக்கிறேன் அது உண்மை தான். சண்டையிட நீ விரும்பினால் இப்போதே சண்டையிடலாம் வா!” என்று அசுரனைப் பிடித்துத் தூக்கித் தரையில் எறிந்தான். ரத்தம் கக்கி விழுந்த அசுரன் மீண்டும் எழுந்து சண்டைக்கு வர சில கணத்தில் அடித்தே கொன்றான் வாலி. ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட அசுரனை சில கனங்களில் கொன்று விட்டான் வாலி. அவ்வளவு பெரிய பராக்கிரமசாலி. செத்து விழுந்த துந்துபி அசுரனை தூக்கி வீசினான் வாலி. அசுரன் ஒரு யோசனை தூரம் போய் விழுந்தான். அசுரன் விழுந்த இடத்திலிருந்து தெறித்த ரத்தத் துளிகள் காற்றில் பரவி அருகில் இருந்த மதங்க முனிவரின் ஆசிரமத்தில் விழுந்தது. இதனைக் கண்ட முனிவர் இதனைச் செய்தது யார் என்று அறிந்து கோபம் கொண்டார். இந்த ஆசிரமம் இருக்கும் காட்டிற்குள் வாலி வந்தால் இறந்து விடுவான் என்று வாலியைச் சபித்து விட்டார் மதங்க முனிவர். அருகில் தான் மதங்க முனிவரின் ஆசிரமம் இருக்கிறது. முனிவர் சாபமிட்ட இடமே இது. முனிவரின் சாபத்தினால் வாலி பயந்து இங்கு வரமாட்டான். அதனால் இந்த இடத்தில் நாங்கள் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..”ஆனால் வாலி அவனது ஆட்களை இங்கு என்னைக் கொல்ல அனுப்புகிறான். அவர்களை நான் கொன்றுவிடுகிறேன்.” என்றான் சுக்ரீவன்.
**