நவ திருப்பதிகள்! (Post No.16,260)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,260

Date uploaded in London – 2 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நவ திருப்பதிகள்!

ச. நாகராஜன் 

25-9-2026 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! 

நம்மை ஆளுகின்ற நாயகர்கள் நவ கிரகங்கள். வினைப்பயனை அனுபவித்தே தீர வேண்டும் என்பது இயற்கை நியதி.

என்றாலும் இவற்றால் ஏற்படும் கடும் விளைவுகளில் மாற்றக் கூடியதை மாற்றவும், தீய பலன்களின் கடுமையைக் குறைக்கவும் நல்ல பலன்களின் வலிமையைக் கூட்டித் தரவும் நவ கிரக வழிபாட்டைச் செய்து வருகிறோம்.

ஆனால் இந்த நவ நாயகர்களுக்கும் நாயகனாக இருக்கும் நாராயணனைத் துதித்தால் அனைத்துத் தீமைகளும் போய் எல்லா நலன்களும் ஒருங்கே அமையும் என்பது அறநூல்களின் முடிவாகும். இதை வாழ்ந்து காட்டி அனைவரையும் ஆசீர்வதிப்பவர்கள் பெரும் ரிஷிகளும் மகான்களும் ஆவர்.

மனித குலத்தின் நன்மையைக் கருதி அவர்களிடையே எம்பிரானை வழிபட ஊக்குவித்து ஆசீர்வதித்து வழிகாட்ட பன்னிரெண்டு ஆழ்வார்கள் பூமியில் அவதரித்தனர்.

அவர்களுள் நம்மாழ்வாரின் பெருமை எல்லையற்றது.

அவர் தனது பாசுரங்களில் கடுமையான தோஷங்களைப் போக்க மிக மிக எளிய வழி காட்டி அருளியவர்.

அவர் கூறிய வழிகளுள் நவ திருப்பதி தரிசனம் எளிமையானது; மேன்மையானது. தீமைகளை அகற்ற வல்லது.

நவ திருப்பதிகள் நவகிரக நாயகர்களை அடிப்படையாகக் கொண்டது.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணிக் கரையோரம் அமைந்துள்ள ஒன்பது திருப்பதிகளே நம்மை

உயரத் தூக்கும் திருப்பதிகளாகும்.

இவற்றில் ஶ்ரீ வைகுண்டம் – சூரிய தலம்

நத்தம் எனப்படும் வரகுணமங்கை – சந்திர தலம்

திருக்கோளூர் – செவ்வாய் தலம்

திருப்புளியங்குடி – புதன் தலம்

ஆழ்வார் திருநகரி – குரு தலம்

தென் திருப்பேரை – சுக்ரன் தலம்

பெருங்குளம் – சனி தலம்

தேவர் பிரான் (இரட்டைத் திருப்பதி) – ராகு தலம்

அரவிந்தலோசனர் (இரட்டைத் திருப்பதி) – கேது தலம்

இந்தத் தலங்களை மங்களாசாஸனம் செய்துள்ள ஆழ்வார் நம்மாழ்வார்.

ஶ்ரீ வைகுண்டம் (சூரிய தலம்)

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள சூரிய தலம் இது.

எங்கள் கண்முகப்பே உலகர் களெல்லாம்

   இணையடி தொழுதெழுதிறைஞ்சி

தங்கள் அன்பாரத் தமது சொல்வளத்தால்

   தலைத்தலைச் சிறந்து புசிப்ப

திங்கள் சேர் மாடத் திருப்புளிங்குடியாய்

   திருவைகுந்தத்துள்ளாய்! தேவா!

இங்கண் மாஞாலத்து இதனுளும் ஒருநாள்

   இருந்திடாய் வீற்றிடங் கொண்டே                             – நம்மாழ்வார் திருவாய்மொழி 9-2-8

இங்கு பெருமாள் எழுந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இத்திருக்கோலத்தில் எழுந்து  பக்தர்களுக்கு

அருள் பாலிக்க வேண்டும் என்று பிரம்மா வேண்டியதால் இந்தத் தலம் ஶ்ரீ வைகுண்டம் என்ற பெயரைப்

பெற்றது.

மூலவர் – ஶ்ரீ வைகுண்ட நாதர், கள்ளபிரான்

தாயார் – வைகுந்தவல்லி, பூதேவி

இங்கு பெருமாளை தரிசித்தால் புண்யம் பெருகும். அனைத்து பகையும் ஒழியும். எதிலும் வெற்றி கிடைக்கும். பரம மங்களத்தை பகவான்

அருள்வார். கவலைகள் விலகும். ஆயுள் அதிகரிக்கும். ஆரோக்கிய வாழ்வு சித்திக்கும். செல்வம் பெருகும்.

வரகுணமங்கை (சந்திர தலம்)

ஶ்ரீ வைகுண்டத்திலிருந்து கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது. நத்தம் என்று குறிப்பிட்டாலேயே அனைவரும் புரிந்து

கொள்வர்.

புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கையிருந்து

   வைகுந்தத்துள் நின்று

தெளிந்த என் சிந்தையகங் கழியாதே

   என்னை ஆள்வாய்! எனக்கருளி

நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப

   நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப

பளிங்கு நீர் முகிலின் பவளம் போல்

  கனிவாய் சிவப்ப நீ காண வாராயே                                   – நம்மாழ்வார், திருவாய்மொழி, 9-2-4

மூலவர்: விஜயாஸனப் பெருமாள் (ஆதிசேஷன் குடைபிடிக்க அமர்ந்திருக்கும் திருக்கோலம்)

தாயார்: வரகுணவல்லித் தாயார், வரகுண மங்கைத் தாயார்

மனதிற்கு அதிபதியான சந்திரனின் தலம் இது. இங்கு பெருமாளை தரிசித்தால் அலைபாயும் மனம் ஒரு நிலைப்படும். மனோசக்தி அதிகரிக்கும். அனைவரையும் கவரும் ஆற்றல் அதிகரிக்கும்.

திருக்கோளூர் – செவ்வாய் தலம்

இத்தலம் ஆழ்வார் திருநகரியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்

கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி

மண்ணினுள் அவன்சீர் வளம் மிக்க அவனூர் வினவி

திண்ணம் என இளமான் புகுமூர் திருகோளூரே

–    நம்மாழ்வார், திருவாய்மொழி 6-7-1

ஒரு சமயம் பார்வதியால் குபேரன் சபிக்கப்பட அவனது நவ நிதிகளும் அவனை விட்டு அகன்றன. அவன் இத்தலத்தில்

பகவானை வழிபட அவன் காட்சி தந்து அருள்பாளித்தான். நவநிதிகளின் பிரார்த்தனையின் படி ‘நிக்ஷேபவித்தன்’ எனப்படும் ‘வைத்தநிதி’ என்ற திருநாமத்தைப் பெற்றான். நவநிதிகளும் இங்கு நீராடியதால் இங்ள்ள தீர்த்தம் ‘நிதித்தீர்த்தம்’ என்ற பெயரைப் பெற்றது.

மூலவர்: வைத்தநிதிப் பெருமாள் (இங்கு பெருமாள் மரக்கால் வைத்து பள்ளி கொண்டுள்ளார்.

தாயார்: குமுதவல்லி

அனைத்து செவ்வாய் தோஷங்களையும் போக்கும் அற்புதத் தலம் இது.

இங்கு மதுரகவி ஆழ்வார் அவதாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

திருப்புளியங்குடி – புதன் தலம்

இத்தலம் வரகுணமங்கையிலிருந்து கிழக்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வந்து

  நின் பல் நிலா முத்தம்

தவழ்கதிர் முறுவல் செய்து

 நின் திருக்கண் தாமரை தயங்க நின்றருளால்

பவளநன் படர்க்கீழ்ச் சங்குறை பொருநல்

   தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய்!

கவள மா களிற்றின் இடர் கெடத் தடத்துக்

  காய்சினப் பறவை ஊர்ந்தானே!

–    நம்மாழ்வார் திருவாய்மொழி, 9-2-5

–     

மூலவர்: – காய்சின வேந்தன் – புஜங்க சயனம்

தாயார்: மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார்

அனைத்து நலன்களையும் அளிக்க வல்ல இந்தத் தலத்தில் தான் இந்திரன் தனது ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றான்.

திருமாலின் பாதங்களை ஒரு ஜன்னல் வழியே வெளி பிரகாரத்திலிருந்து தரிசிக்கலாம்.

ஆழ்வார் திருநகரி – குரு தலம்              

இத்தலம் திருநெல்வேலி-திருச்செந்தூர் ரயில் தடத்தில் உள்ளது. ஸ்டேஷனிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் ஆலயம் உள்ளது.

விளம்பும் ஆறு சமயமும் அவையாகியும் மற்றும்தன்பால்

அளந்து காண்டற்கரியனாகிய ஆதிப்பிரான் அமரும்

வளங்கொள் தண்பணை சூழந்தழகாய திருக்கூரதனை

உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே

–    நம்மாழ்வார், திருவாய்மொழி, 4-10-9

பிரம்மா திருமாலை நோக்கிக் கடும் தவம் புரிய அவரே குருவாக வந்து உபதேசித்த அருள் தலம் இது. ‘குருகாத்தர மதர்ச்சனம்’ என்று பிரம்மா அருளியதால் இந்த ஊர் குருகூர் என்ற பெயரைப் பெற்றது.

மூலவர்: ஆதிநாதன் – கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார்: ஆதிநாதவல்லி, குருகூர் வல்லி

சுயம்புவாகத் தோன்றிய பெரிய திருமேனியை உடைய பெருமாளின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம்.

மிகவும் பிரசித்தி பெற்ற தலமான இதில் பக்தர்களுக்கு அனைத்து நலன்களையும் ஆதிப்பிரான் அருளுகிறார்.

நம்மாழ்வார் சடகோபனாக அவதரித்த திருத்தலம் இதுவே. இங்கு புளியமரப் பொந்தில் அவர் தவம் புரிந்தார்.  அந்தப் புளியமரம் இங்கு

காட்சி தருகிறது. நம்மாழ்வார் ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளுகிறார்.  இங்குள்ள ஆதிப்பிரான் சந்நிதிக்கு முன் கருட மண்டபத்தை மணவாள

மாமுனிகள் நிறுவினார்.

தென் திருப்பேரை – சுக்ரன் தலம்

இந்தத் திருத்தலம் ஆழ்வார் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

செங்கனி வாயின் திறத்ததாயும்

   செஞ்சுடர் நீண்முடி தாழ்ந்ததாயும்

சங்கொடு சக்கரம் கண்டுகந்தும்

   தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்

திங்களும் நாளும் விழா அறாத

   தென் திருபேரெயில் வீற்றிருந்த

நங்கள் பிரானுக்கென நெஞ்சம் தோழீ!

   நாணும் நிறையும் இழந்ததுவே

        நம்மாழ்வார், திருவாய்மொழி 7-3-3

மூலவர்: மகர நெடுங்குழைக்காதன் – அமர்ந்த திருக்கோலம்

தாயார் குழைக்காதவல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார்

இங்கு ஶ்ரீ தேவி ஶ்ரீபேரை என்ற நாமத்தைத் தரித்ததனால் ‘ஶ்ரீபேரை’ என்ற பெயரை இத்தலம் பெற்றது.

சுக்ரனின் தலமாக இது விளங்குவதால் அனைத்துப் பேறுகளையும் அளிக்க வல்லதாகும்.

பெருங்குளம் (சனி தலம்)

குளந்தைத் திருத்தலம் என்று அறியப்படும் இது ஶ்ரீ வைகுண்டத்திலிருந்து வடகிழக்கில் 11 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

கூடச் சென்றேன் இனியென் கொடுக்கேன்?

  கோல்வளை நெஞ்சத் தொடக்கமெல்லாம்

பாடற்றொழிய இழந்து வைகல்

  பல் வளையார் முன் பரிசழிந்தேன்

மாடக்கொடி மதிள் தென்குளந்தை

  வண்குடபால்  நின்ற மாயக்கூத்தன்

ஆடற் பறவை உயர்த்த வெல்போர்

  ஆழிவலவனை ஆதரித்தே                                   – நம்மாழ்வார் பெரியதிருமொழி 8-2-4

மூலவர்: சோரநாதன், ஶ்ரீநிவாஸன், உற்சவர்: மாயக்கூத்தன்

தாயார்: குளந்தைவல்லி நாச்சியார்; அலர்மேல்மங்கைத் தாயார்

பெருமாள் ஶ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி சமேதராகக் காட்சியளிக்கிறார்.

வேதசாரன் என்ற அந்தணனின் மகளான கமலாவதி, மஹாவிஷ்ணுவையே கணவனாக அடையத் தவம் புரிந்து அவனையே

அடைந்த தலம் இது. பாலிகை தவம் செய்த இடமாதலால் இதற்கு பாலிகை வனம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.

இங்கு பெருமாளை தரிசித்தால் சனி தோஷம் விலகும்.

திருத்தொலைவில்லிமங்கலம்

ஆழ்வார்திருநகரியிலிருந்து மூன்று கிலோமீட்டர் கிழக்கே வந்து தாமிரபரணி ஆற்றைக் கடந்தால் இந்தத் தலத்தை அடையலாம்.

தேவர் பிரான் (இரட்டைத் திருப்பதி) – ராகு தலம்

அரவிந்தலோசனர் (இரட்டைத் திருப்பதி) – கேது தலம்

இங்குள்ள இரு கோவில்களும் சேர்ந்தே ஒரு திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. இவை இரட்டைத் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம்

மலிந்திருந்து வாழ் பொருநல்  வடகரை வண்தொலைவில்லிமங்கலம்

கருந்தடங்கண்ணி கைதொழுத அந்நாள் தொடங்கி இந்நாள்தொறும்

இருந்திருந்து அரவிந்த லோசன! என்றென்றே நைந்திரங்குமே.

                      நம்மாழ்வார், திருவாய்மொழி, 6-5-8

மூலவர்: முதல் கோயில் – ஶ்ரீநிவாஸன், தேவப்பிரான் – கிழக்கே நின்ற திருக்கோலம்

தாயார்: கருந்தடங்கண்ணி நாச்சியார்

இந்தக் கோவில்கள் காட்டில் அமைந்துள்ளன.

சோழமண்டலத்தில் அமைந்துள்ள நவகிரக கோவில்கள் போலவே பாண்டிய

மண்டலத்தில் இந்த நவதிருப்பதிகள் அமைந்துள்ளன.

கிரகங்களுக்கு அதிநாயகனாக விஷ்ணுவே விளங்குவதால் இங்கு வரும் பக்தர்களுக்கு நவகிரகங்களால் ஏற்படும்

தோஷங்கள் விலகி நலம் பல விளையும் என்பது ஐதீகம்.

பக்தர்கள் இடைவிடாது வந்து தரிசனம் செய்யும் இக்கோவில்கள் வைணவ திவ்ய தேசங்கள் நூற்றெட்டில் உள்ளடங்கியவையாகும்.

போற்றி போற்றி திருமாலே போற்றி!

***

Leave a comment

Leave a comment