கம்ப ராமாயணப் பாடல்களில் 20 கேள்விகள் (Post.16,284)

Written by London Swaminathan

Post No. 16,284

Date uploaded in London – 8 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

11

கம்பன் சொல்லும் அதிசய மூலிகைகள் எவை ?

12

தூக்கணாங் குருவிகள்தான் மனிதனுக்கு வீட்டில் விளக்கு ஏற்றுவதைச் சொல்லிக் கொடுத்தன; அவை மின்மினிப் பூச்சிகளை பிடித்துக் கொண்டு போய் கூட்டில் வைத்து அழகு பார்க்கும்; இதைத் தற்கால தீபாவளி, நவராத்ரி, கிறிஸ்துமஸ் டெக்கரேஷன்களுடன் DECORATIONS ஒப்பிடலாம் ; இந்த அதிசயத்தைக் கம்பன் எங்கே குறிப்பிடுகிறான் ?

13

கோசல நாட்டுப் பெண்கள் நல்ல படித்த பணக்கார பெண்களாம்; ஆயினும் அவர்கள் ஆபீசுக்குப் போகாமல் வந்த விருத்தினர்களைக் கவனிப்பதே வேலையாகச் செய்தார்களாம்   ; கம்பனின் இந்த கற்பனை வளத்தை எங்கே காணலாம்?

14

வாலிபால் என்னும் விளையாட்டினைக் கண்டு பிடித்தவர்கள் தமிழ்ப் பெண்கள்தான் ! பிற்காலத்தில் பூப்பந்தாட்டம் துவங்குவதற்கு அவர்களே காரணம் ; இதைச் சங்க இலக்கியப்பாடல்களில் காண்கிறோம்; கம்பன் அவர்கள் தினசரி ட்ரெயினிங் எடுத்தத்தைச் சொல்கிறானே ! அது என்ன பாடல்?

15

தாலி பற்றி அடிக்கடி தாலி அறுக்க விரும்பும் பெண்கள் கட்டுரைகளை எழுதி அவர்களின் அறியாமைக்கு ஆயிரம் வாட் பல்ப் THOUSAND WATT BULB போட்டு காட்டுவதை  அவ்வப்போது படிக்கிறோம்; ஆனால் மு.சண்முகம் பிள்ளை , கம்பனும் மில்டனும் நூல் எழுதி டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் எஸ் ஆர் கே ஆகியோர் தாலி உண்டு என்று இலக்கியக் குறிப்புகளைக் காட்டினார்கள் !கம்பனும் தாலி உண்டு என்கிறான் ! அது எங்கே?

16

பட்டி மண்டபம் இன்று பட்டி மன்றமாகிவிட்டது ; பட்டி விக்ரமாதித்யன் என்ற மாபெரும் மன்னனும் அறிஞனும் உண்டாக்கிய விவாத சபை இது ! மாணிக்க வாசகரும் ஒன்றும் அறியாத என்னை பட்டி மண்டபம் ஏற்றினையே என்கிறார் ; ஏனெனில் அவரை புத்தர்களுடன் வாதிடும்படி சிதம்பரம் தீட்சிதர்கள் அழைத்துச் சென்றுவிட்டனர் ; அயோத்தியில் பல MANY HALLS ஹால்கள்;உண்டாம்; அதில் ஒன்று அறிஞர்கள் மோதும் பட்டி மண்டபம் என்கிறானே கம்பன் ; அதைச் செப்பிய இடம் யாதோ!

17

யுவான் சுவாங் என்னும் சீன யாத்ரீகன் அப்பர், மஹேந்திர பல்லவன் காலத்தில் வந்தான் ; அதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் குப்தர் காலத்தில் வந்த சீன யாத்ரீகன் பாஹியான்– குப்தர் காலத்தில் வீடுகளுக்கு கதவுகள் இல்லை; அந்த நாட்டில் திருடர்கள் இல்லை என்றான்; கம்பன் கண்ட அயோத்தியின் நிலை என்ன?

18

முதல் முதலாக கம்பன் ராவணனை அறிமுகப்படுத்தும் இடம்– தேவர்கள் அவன் செய்த அட்டூழியங்களை முறையிட்ட இடம் –ஆகும் . வால்மீகியில் இல்லாத அவதார விஷயத்தைக் கம்பன் இங்கே செப்பினானா ?

19

கம்பன் கருத்துப்படி வானரங்கள் – குரங்குப்படை யார் ?

20

துளசிதாஸ் எழுதிய ஹனுமான் சாலீஸாவில் அனுமன், சிவ பெருமானின் அவதாரம் என்கிறார் ; கம்பன் என்ன சொன்னான் ?

****************************************

விடைகள்

11.சித்தஆயுர்வேத மருத்துவர்களுக்குத் தெரியாத மூலிகைகளை சரயு நதி வெள்ளத்தில் கம்பன் காண்கிறான்; அவை :

 கொடிச்சியர்‌ இடித்த சுண்ணம்‌. குங்குமம்‌. கோட்டம்‌. ஏலம்‌.

நடுக்குறு சந்தம்‌. சிந்தூ ரத்தொடு நரந்தம்‌. நாகம்‌.

கடுக்கை. ஆர்‌ வேங்கை. கோங்கு. பச்சிலை. கண்டில்‌ வெண்ணெய்‌

அடுக்கலின்‌ அடுத்த தீந தேன்‌. அகிலொடு நாறும்‌ அன்றே.

குறிஞ்சி நிலத்துப்‌ பெண்கள்‌ இடித்த மணப்‌ பொடியினையும்‌; குங்குமப்பூ. கோட்டம்‌. ஏலக்காய்‌;

தன்‌ குளிர்ச்சியால்‌ உடலை நடுங்கச்‌ செய்கின்ற சந்தனம்‌; வெட்சிப்‌ பூ. நரந்தம்‌. புல்‌. சுரபுன்னைப்‌; கொன்றை. ஆத்தி. வேங்கை. கோங்கம்‌; பல்வகைப்‌ பச்சிலைகள்‌. கண்டில்‌ வெண்ணெய்‌ என்னும்‌ பூண்டு; மலையில்‌ கட்டப்பட்ட இனிய தேன்கூடு; அகில்‌ கட்டை ஆகியவற்றையும்‌ இழுத்து வருவதால்‌; சரயுவின்‌ வெள்ள நீர்‌ மேற்குறித்த பொருள்களின்‌ மணத்தைக்‌ கொண்டு இயங்கும்‌.

 கோட்டம் என்பது ஒரு வகை வாசனை வேர்; கடுக்கை-கொன்றைமரம் ; சரக்கொன்றை, கண்டில் வெண்ணெய்: இது ஒரு வகையான பூண்டு வகையைக் குறிக்கும். சிந்தூரம் -வெட்சி பூச்செடி, மற்றும் புளியமரம்

இதில் கண்டில் வெண்ணெய் பற்றி யாருக்குத் தெரியும்?

***

12.சூட்டுடைத் துணை தூ நிற வாரணம்

தாள்-துணைக் குடைய, தலை சால் மணி

மேட்டு இமைப்பன; ‘மின்மினி ஆம்’ எனக்

கூட்டின் உய்க்கும, குரீஇயின் குழாம்அரோ.

 உச்சிக்  கொண்டை  உடையதும் துணையானதுமான; தூய நிறத்தையுடைய சேவல்கள்;

தம் கால்களால்  (குப்பைகளைக்) குடைவதால்;தகுதி மிக்க  மாணிக்கங்கள்;

(அந்தக்  குப்பை)  மேடுகளில்  ஒளிரும்; குருவிக்

கூட்டம்;  ‘அந்த  மணிகளை)  மின்மினிப்

பூச்சிகள்   என்று  நினைத்து;  தம்  கூடுகளில்

கொண்டு போய் வைக்கும்.

கோழிகள்      குப்பையைக்   கிளறும்போது  அக் குப்பைமேட்டில்

ஒளிர்கின்ற  மணிகளை  மின்மினிப்  பூச்சி  எனத்    தவறாக எண்ணி,

அவற்றை  ஒளி  தருவதற்காகக்  குருவிகள்   தம்  கூட்டில்  கொண்டு

சேர்க்கின்றனவாம். 

இதே     கற்பனைக் காட்சியைக்    கம்பரே  பின்னரும் தருகிறார்:

“எரியும்   மின்மினி   மணி   விளக்கின்  இன்துணைக்  குரீஇயினம்

பெடையொடு துயில்வ” (4234)

***

13.பெருந் தடங் கண் பிறைநுதலார்க்கு எலாம்,

பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,

வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்,

விருந்தும், அன்றி, விளைவன யாவையே?

பெரிய அகலமான கண்களை உடைய;  பிறை   வடிவமான   நெற்றியை  உடைய

பெண்களுக்கெல்லாம்; பொருட்  செல்வமும்;    நூலறிவும் நிறைந்திருப்பதால்;  வறுமையால் உதவி நாடி வந்தோர்க்கு வழங்குதலும்;

நாள்தோறும்   விருந்து  ஓம்புதலும்  அல்லாது;  (பெற்ற  செல்வத்தாலும் சேர்த்த கல்வி  அறிவாலும்

விளைவன வேறு யாவை?  

***

14.பந்தினை இளையவர் பயில் இடம், – மயில் ஊர்

கந்தனை அனையவர் கலை தெரி கழகம், –

சந்தன வனம் அல, சண்பக வனம் ஆம்;

நந்தன வனம் அல, நறை விரி புறவம்;

பந்தினை  இயையவர் பயில் இடம்- அந்நாட்டு இளம் பெண்கள்

பந்து  விளையாட பயிற்சி செய்யும்  இடங்கள்;  சந்தன  வனம் அல சண்பக வனம்

ஆம்- சந்தனச் சோலைகளே;ஆயினும் அவர்களது மேனி மணத்தால்

சண்பகச் சோலைகளாகும்;  கந்தனை அனையவர் கலை தெரி கழகம்-

முருகனை  ஒத்த ஆடவர்கள்  வில் முதலிய   கலைகளைப்

பயிலுமிடங்கள்; நந்தன வனம் அல நறை விரிபுறவம்- பல மலர்களை

உடைய  நந்தனவனங்களே  ஆயினும்    ‘அவர்தம்’ மேனி மணத்தால்

முல்லைக்காடுகளாக விளங்கும். (புறவம்- காடு)

இதில் வியப்பான விஷயம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடலில் தனித்தனி மணம் உண்டு என்ற செய்தியாகும்!

பெண்களின்  மேனி சண்பக மணமும், ஆடவர் மேனி  முல்லை

மணமும்  உடையராதலின்  மகளிர்  பந்தாடுமிடம்  சண்பகச்   சோலை

ஆயின.  ஆடவர்  கலை  பயிலுமிடம்  முல்லைக்  காடாக   மணந்தன

என்பர்.  “ஆண்கள்  மேனிக்கு  முல்லை  மணம்”   இயல் பென்பதை

“மன்னொடும் தோளே முல்லை முகை நாறும்மே” என்று குறுந்தொகை

(193)  வரிகளால் அறியலாம்.  இளையவர்  என்பது இளம்   வயதினர்

என்ற    பொருள்   உடையதாயினும்  பந்தாடுதல் பாவையர்க்கே

உரியதாதலின் ‘இளையவர்’ இளம் பெண்கள் .  

****

15.நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ!

   நிறை நெடு மங்கல நாணோ!

இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின்

   இருக்கையோ! திருமகட்கு இனிய

மலர்கொலோ! மாயோன் மார்பில் நன் மணிகள்

   வைத்த பொற் பெட்டியோ! வானோர்

உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி

   உறையுளோ! யாது என உரைப்பாம்?

நிலமகள் முகமோ திலகமோ கண்ணோ- (அயோத்தி நகரமானது)

நிலமகளது   முகமோ!    முகத்திலணிந்த   திலகமோ!    அவளுடைய

கண்களோ!:   நிறை  நெடுமங்கல   நாணோ-   நிறைவான   நெடிய

திருமாங்கலியக்   கயிறோ?;  இலகு   பூண்  முலைமேல்  ஆரமோ-

மார்பகங்களின்   மேலணிந்து   திகழும்  மணிமாலையோ!;   உயிரின்

இருக்கையோ-  அந்நில  மகளின்  உயிர்   இருக்கும்  இருப்பிடமோ?;

திருமகட்கு   இனிய  மலர்கொலோ-  திருமகளுக்கு  வாழ்வதற்கினிய

தாமரை மலரோ!; மாயோன் மார்பில்  நன்மணிகள்  வைத்த பொற்

பெட்டியோ- திருமாலின் மார்பிலணியும் நல்ல மணிகள்   வைக்கப்பட்ட

பொன்    பெட்டி   தானோ!;  வானோர்  உலகின்மேல்   உலகோ-

விண்ணுலகினும் மேலான வைகுந்தமோ; ஊழியின் இறுதி உறையுளோ-

யுகமுடிவில்   உயிர்களெல்லாம்  தங்கும்  திருமாலின்    திருவயிறோ?;

யாதென உரைப்பாம்- வேறு எதுவென கூறுவோம்?

நிலமகளின்     முகம்,  திலகம்,  கண்,    மங்கல  நாண்,   ஆரம்

முதலியனவாக அயோத்தி நகரத்தைப் புனைந்துரைத்தார்.

மங்கல  நாண்  பெருமை  தருவதாதலால்  “நிறைநெடு  மங்கல நாண்”

என்றார்.   

****

16.மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்.அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்.உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்.பன்ன அருங் கலை தெரி பட்டி மண்டபம். மன்னவர்  தரு   திறை   அளக்கும்   மண்டபம் –   (மன்னர்மன்னனாகிய   அயோத்தி  வேந்தனுக்கு   அடங்கிய)     சிற்றரசர்கள்செலுத்தும் கப்பத்தை எண்ணி  அளவிடும் மண்டபங்களும்;   அன்னம்மென்   நடையவர்   ஆடு   மண்டபம்   –   DANCE HALLS அன்னம்  போன்றநடையையுடைய நடன மாதர்கள்  நடனம்   ஆடும்    மண்டபங்களும்;உன்னரும்  அருமறை  ஓதும்  மண்டபம்   –   HALL FOR VEDIC SCHOLARS  நினைப்பதற்கும்அரியனவான சிறந்த வேதங்களை வல்லோர்  ஓதும்    மண்டபங்களும்;பன்னரும் கலைதெரிபட்டி மண்டபம் –  DEBATING HALLS சிறப்பித்துப்   பேசுவதற்கும்அரியனவான பல கலைகளையும்    அறிஞர்கள்    ஆராயும்    பட்டிமண்டபங்களும் (அயோத்தி நகரெங்கும் இருந்தன).பட்டிமண்டபம்  என்றாலே  கேலிக்கூத்தாகவும்   பொழுதுபோக்காகவும்கருதுகிறோம். அது சரியன்று. தணிகைப் புராணம்    பட்டிமண்டபத்தின்இயல்பினைக்  கூறுவது  காண்க:  “கரிசறு கவிக்குக்  கவி.  கமகனுக்குக்கமகன்.  வாதிக்கு  ஒரு வாதி- துரிசறு வாக்கி தனக்கொரு   வாக்கியாய்அவர்  தொன்று  தொட்டு  அமைந்து- வரிசையின் வந்த   வேள்வியர்பெறாது  வரும்இகல்  கடந்த  எஃகு உடையார்- பரிசில்   நூற் பயிற்சிஇன்பு  எனக்  கலை  தேர் பட்டி மண்டபம் பல வயங்கும்.   (தணிகை.திருநகரம் 106).      ****17.தெள் வார் மழையும். திரை ஆழியும் உட்க. நாளும்.வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள்-கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும்கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ. தெள்வார் மழையும் திரை ஆழியும்  உட்க  –  தெளிந்த நீரைத்தரும் மேகங்களும் அலைகளை உடைய கடலும்  அஞ்சும்படி;  நாளும்வள்வார்    முரசம் அதிர் மாநகர்- நாள்தோறும் தோல்  வாரினால்கட்டிய    பேரிகைகள்   எப்போதும்    ஒலித்துக்    கொண்டிருக்கும்அந்நகரில்; வாழும்   மாக்கள் –   வாழ்கின்ற   ஐயறிவே    உடையமாக்களிடையே  கூட;  கள்வார்  இலாமைப்   பொருள்   காவலும்இல்லை – களவு  செய்பவர்   இல்லாமையால் பொருள்களைக்  காவல்காப்பவரும் இல்லை; யாதும் கொள்வார் இலாமை  கொடுப்பார்களும்இல்லை- எதையும்  யாசிப்பவர்  இல்லையாதலால்   கொடையாளிகளும்அந்த நகரத்தில் இல்லை.***18.ஆமாம்; உடனே விஷ்ணு சொல்கிறார்‘மசரதம் அனையவர் வரமும். வாழ்வும். ஓர்நிசரத கணைகளால் நீறுசெய்ய. யாம்.கச ரத துரக மாக் கடல்கொள் காவலன்.தசரதன். மதலைவாய் வருதும் தாரணி. மசரதம்     அனையவர்  –  கானல்   நீரைப்போன்றவர்களாகியஅரக்கர்களுடைய;  வரமும்  வாழ்வும்-  வரபலத்தையும். வாழ்வையும்;நிசரத கணைகளால்  நீறு செய்ய-  எமது   குறிதவறாத அம்புகளால்சாம்பலாக்க (அழிக்க); யாம் கசரத துரகமாகக் கடல் கொள்காவலன்-யாமே.    யானை.   தேர்.   காலாள்   என்னும்   கடல்    போன்றநாற்பெருஞ்சேனைகளையுடைய  வேந்தனான;  தசரதன்   மதலையாய்தாரணிவருதும்-  தயரதன்    புத்திரனாக    உலகத்தில்     வந்துஅவதரிக்கின்றோம்.(பத்துத்  தேர்    கொண்டு.தன்னுடன் போர்புரிந்த சம்பரனை வென்றவன் என்பதால்   “தசரதன்”என்று  பெயர்  பெற்றான்  என்பர்.  தசம்:  பத்து.  ரதன்:   ரதங்களை வென்றவன்.)  

***

19. திருமால். சொல்கிறார்:

‘வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய்.

கானினும். வரையினும். கடி தடத்தினும்.

சேனையோடு அவதரித்திடுமின் சென்று’ என.

ஆனனம் மலர்ந்தனன்- அருளின் ஆழியான்

வான் உளோர்  அனைவரும்   வானரங்களாய் –  விண்ணுலகில்

வாழும்  தேவர்கள்  ஆகிய  நீங்கள்  எல்லோரும்   குரங்கினங்களாக;

கானினும்.   வரையினும்  கடிதடத்தினும்  சென்று   சேனையோடு

அவதரித்திடுமின் – காடுகளிலும்.  மலைகளிலும்.   அம்மலைத்   தாழ்

வரைகளிலும்  சென்று.  பிறப்பீராக;   என.   அருளின்   ஆழியான்

ஆனனம்  மலர்ந்தனன்  –  என்று.  கருணைக்   கடலான  திருமகள்

நாயகன்   திருவாய் மலர்ந்தருளினான்.

இராவணன்   பிரமனிடம் வரம்பெறும் போது. மனிதர்.  குரங்குகளை

அற்பமாக  எண்ணி.  முனிவர். தேவர். அசுரர்களால்  தனக்கு  மரணம்

நேரக்கூடாது  என்று வரம்கேட்டு மனிதர்.  குரங்குகளை  நினைக்காமல்

விட்டான்.     திருமால்.     தான்     மனிதனாகவும்.     தேவர்கள்

வானரங்களாகவும்   செல்வதே   இராவணனை   அழிக்கும்வழி   என

எண்ணிக் கூறினார் என்பது கருத்து

***

20.கம்பனும் சிவபெருமான் என்றே சொன்னான்:

வாயு. ‘மற்று எனது கூறு மாருதி’ எனலும் மற்றோர்.

‘காயும் மற்கடங்கள் ஆகி. காசினி அதனின்மீது

போயிடத்துணிந்தோம்’ என்றார்; புராரி. ‘மற்றுயானும்

                                    காற்றின்

சேய் எனப்புகன்றான்; மற்றைத் திசையுளோர்க்கு

                               அவதிஉண்டோ.

வாயு மற்று எனது கூறு  மாருதி  எனலும் – காற்றுத்  தேவனான

வாயு எனது அம்சம்  மாருதி  என்று  சொல்லலும்;  மற்றோர் காயுமற்

கடங்களாகி  காசினி  அதனின்  மீது   போயிடத்  துணிந்தோம்

என்றார் –  மற்ற  தேவர்கள்   எல்லோரும்   பகைவரைச்   சினக்கும்

வானரங்கள்  ஆகி.  பூமியிலே சென்று பிறக்க  முடிவு செய்துவிட்டோம்

என்றார்கள்; புராரி மற்று யானும் காற்றின் சேய்  எனப் புகன்றான்-

திரிபுரத்தை  எரித்த  சிவபிரான் யானும் வாயுகுமாரனான  அனுமனாகப்

பிறக்கிறேன்  என்று கூறலானான்;  மற்றைத் திசையுளோர்க்கு அவதி

உண்டோ- எனவே.  மற்றுமுள்ள எல்லாத்திசைகளிலும்  வாழ்பவர்க்கும்

எந்தத் துன்பமும் உண்டோ (இல்லை என்பதாம்).

****

YESTERDAY’S TEN QUESTIONS; ANSWERS ARE IN MY BLOGS.

1

அஞ்சிலே ஒன்று பெற்றான் — என்னும் அருமையான கம்பன் பாடலின் பொருள் என்ன?

2

ராம என்ற இரண்டே எழுத்துக்கள் தரும் அற்புதப்  பலன்கள்  பற்றி  கம்ப இராமாயண சிறப்புப் பாயிரத்தில் ஒரு பாடல் உள்ளது. நினைவுக்கு வருகிறதா அந்தப்பாடல்?

3

எந்த ஒரு நூலினையும் மங்களச் சொற்களுடன் துவங்க வேண்டும் என்ற விதி சம்ஸ்க்ருத நூல்களிலும் தமிழ் நூல்களிலும் உள்ளது ; கம்பன், தனது ராமாயணத்தை, எந்தச் சொல்லுடன் துவங்குகிறான்?

4

கம்பனும் காளிதாசனும் என்ன சொல்லி நூலை எழுதத் துவங்கினார்கள் ?

5

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் ; போங்கடா போங்க! நான் சொல்வது தெய்வ மாக்கவி எழுதிய கவிதை என்று கம்பன் செப்பியது எங்கே ?

6

வால்மீகியைத் தவிர வேறு இருவர் ஸம்ஸ்க்ருதத்தில் ராமாயணம் எழுதினார்கள் என்று கம்பன் ஒரு புதிர் போடுகிறானே ! அந்தப் புதிருக்கு விடை கிடைத்ததா?

7

தெய்வ மாக்கவி, முதலில் ராமாயணம் சொன்னவர் என்றெல்லாம் வான்மீகி முனிவரைப் போற்றிய கம்பன் அவருடைய பெயரை எங்கேயாவது பகர்ந்தானா?

8

கம்பன் சர்வ சமய நோக்குள்ளவன்; சைவ, வைணவ பேதம் பாராட்டாதவன் ; முடிந்த அளவுக்கு சிவன் பெருமையை அவன் பாடுகிறான் ; சரயு நதிப் பாடலில் சிவனை அவன் எப்படிப் புகழ்கிறான்?

9

ஆகாசாத் பதிகம் தோயம் யதா கச்சதி சாகரம் சர்வ தேவ நமஸ்கார: கேசவம் பிரதி கச்சதி – என்று பிராமணர்கள் தினமும் மூன்று வேளை சந்தியா வந்தன மந்திரத்தில் சொல்கிறார்கள் ; இதைக் கம்பனும் சொல்லி, சர்வசமய பொதுநோக்கினைக் காட்டும் பாடல் எது?

10

கம்பன் போகிற போக்கில் Music மியூசிக் பற்றி ஒரு அருமையான உவமை சொல்கிறான் ; இந்தப்பாடலின் பொருள் விளங்குகிறதா?

பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும்,

பருந்தொடு நிழல் சென்றன்ன இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,

மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்,

விருந்தினர் முகம் கண்டன்ன விழா அணி விரும்புவாரும்.

–SUBHAM—

TAGS-கம்ப ராமாயணப் பாடல்களில், 20 கேள்விகள், அனுமன்= சிவன், வானரங்கள்= தேவர்கள் , திருமால்= ராமன்

Leave a comment

Leave a comment