
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,285
Date uploaded in London – 9 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5-10-26 மங்கையர் மலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
ஊதியம் முதல் சுகாதாரம் வரை: இன்னும் தீராத பெண்களின் 20 பிரச்சினைகள்!
ச. நாகராஜன்
“ஆணும் பெண்ணும் நிகர் எனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்.”
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”
இப்படி, மகாகவி பாரதியாரின் பெண்ணுரிமைக் குரலோசை முழங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாகக் கடந்து விட்டன.
ஆனால் இன்னும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை.
முதலில் பிரச்சினைகள் எவை எவை என்பதை இனம் கண்டு கொண்டால் தீர்வைப் பற்றி சமுகத்தில் உள்ள அனைவரும் யோசிக்கலாம்.
இப்போது பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் பட்டியல் இதோ:
1. ஒரே மாதிரியான ஊதியம் இல்லை. ஒரே நிறுவனத்தில் ஒரே மாதிரியான வேலையை ஒரே மாதிரி தகுதி கொண்ட பெண்கள் பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் ஊதியம் மட்டும் குறைவாகத் தரப்படுகிறது.
2. இனப் பாகுபாடு: மதம், இனம், ஜாதி இவற்றால் பல்வேறு நாடுகளிலும் பெண்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே நடத்தப்படுகின்றனர்.
3. பெண்கள் மீதான வன்முறை” : வோர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷனின் பார்வையின் படி மூன்றில் ஒரு பெண் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள். பெண் என்ற ஒரே காரணத்தால் தான் இது நிகழ்கிறது.
4. மருத்துவ சேவை குறைவாக உள்ளது. பெண்களுக்கே உரித்தான பல வியாதிகளுக்கான சிகிச்சை உலகெங்கும் குறைவாகவே உள்ளது. உலகின் மருத்துவ சேவையில் 67% பங்கைத் தரும் பெண்கள் 25% க்கும் குறைவாகவே உயர் பதவிகளைப் பெற்றுள்ளனர்.
5. கருத்தரிக்கும் உரிமை: 80 கோடி பெண்களுக்கு, தான் கருத்தரிப்பதில் எந்த நிலையை மேற்கொள்வது என்பது பற்றி முடிவெடுக்க எந்த வித உரிமையும் கிடையாது. இதில் 6% பெண்கள் கருக்கலைப்பு தடை செய்யப்பட்ட நாடுகளில் வாழ்கின்றனர். நவீன குடும்பக் கட்டுப்பாடு வழிமுறைகள் பெரும்பாலானோரை இதுவரை சேரவில்லை.
6. கல்வியில் சம உரிமை இல்லை: யூனிசெஃப் -ன் அறிக்கையின் படி 12 கோடி சிறுமிகள் பள்ளியில் சேரவே இல்லை. கல்வியில் எந்தத் துறையிலும் அவர்களுக்கு சம உரிமை இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
7. உணவு பற்றாக்குறை: ஆண்களை விட பெண்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை. இதற்கான காரணம் சொல்ல முடியாத அளவு உள்ள வறுமை தான். பிரசவ காலத்தில் அவர்களுக்குத் தேவையான ஊட்டச் சத்து கிடைப்பதே இல்லை.
8. பருவ நிலை மாற்றம்: அடிக்கடி ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் உடனடியாகப் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே.
9. அரசியலில் சம உரிமை இல்லை. உலகெங்கும் உள்ள பாராளுமன்றங்களில் 27.5% சதவிகிதம் தான் பெண்கள் அங்கம் வகிக்கின்றனர். இன்றைய போக்கு நீடித்தால் 50% என்ற சம உரிமை, இன்னும் 130 ஆண்டுகள் கழித்துத் தான் வரும்.
10. சமூக நிறுவனங்களில் பின் தங்கிய நிலை: சமூகம் எப்படி செயலாற்ற வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் நிறுவனங்களில் பெண்களின் பங்கு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
11. பெண்களைக் கடத்தல் : பாலியல் வன்முறைகளுக்காக பெண்கள் கடத்தப்படுவது அதிகமாகி வருகிறது. 2021ம் ஆண்டு நிலவரப்படி கடத்தல் சம்பவங்களில் 61% பெண்களின் கடத்தலாகவே இருக்கிறது.
12. நடமாடத் தடை: நினைத்த இடத்திற்குப் பெண்கள் இன்று உலகின் எந்த பாகத்திலும் போக முடியாது. வீட்டில் உள்ளோர், சமூகப் பெரியோர்களின் கட்டுப்பாடு மிக அதிகம்.
13. இடம் மாறும் பெண்களின் அவல நிலை: ஏதோ ஒரு காரணத்திறாக நாடு விட்டு நாடோ அல்லது இடம் விட்டு இடமோ மாறும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை.
14. ஊனமுள்ள பெண்களின் அவல நிலை: உலகில் ஐந்தில் ஒரு பெண்ணுக்கு உடலில் ஏதோ ஒரு சின்ன கோளாறு இருக்கிறது. ஐ.நாவின் அறிக்கையின் படி இவர்கள் உடல் நலமுள்ள பெண்களை விட மூன்று மடங்கு அதிகமாகக் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.
15. மன நலம் பாதிப்பு: ஆண்களை விட மன அழுத்தம். ஏமாற்றம், மனச்சோர்வு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. அமெரிக்காவில் மட்டும் 2025ல் 34% அதிக பெண்கள் மனநலம் குன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
16. டிஜிடல் உலகத்தில் ஏமாற்றம்: டிஜிடல் உலகில் இன்னும் சம உரிமையும் வேலை வாய்ப்பும் பெண்களுக்குத் தரப்படவில்லை. இதனால் உலகின் பொருளாதாரமே நினைக்க முடியாத அளவிற்குப் பாதிக்கப்படுகிறது.
17. ஆன் லைன் தாக்குதல் : நவீன தொழில்நுட்பம் பெண்களைத் தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் நொடி நேரத்தில் சித்தரித்து விடுகிறது. இதைத் தடுப்பதற்கான போதுமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
18. கூலி இல்லா வேலை: சம்பளமே இல்லாமல் பெண்களை வேலை வாங்குவது தவறு. ஆனால் பன்னாட்டு தொழிலாளர் சங்கத்தின் அறிக்கையின் படி 71 கோடி பெண்கள் சம்பளமே இல்லாமல் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஜப்பானில் இது மிக அதிகம்.
19. பிரசவ கால பராமரிப்பு : பிரசவ காலத்தில் பெண்கள் படும் வேதனையை நீக்க முயற்சிகள் போதுமானதாக இல்லை. 75% மரணங்கள் அதிக இரத்தப் போக்கு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் ஏற்படுகின்றன. மருத்துவக் கண்காணிப்பு அதிகம் தேவை.
20. மாதவிலக்கில் பராமரிப்பின்மை: 50 கோடி பெண்களுக்கு உலகெங்கும் மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் சிரமங்களுக்கு நிவாரணம் இதுவரை இல்லை.
ஆக இப்படி வாழ்க்கையின் முக்கியமான எல்லா அம்சங்களிலும் பெண்கள் இன்னும் பிரச்சினைகளை எதிர் கொண்டு தான் இருக்கின்றனர்.
இந்தப் பட்டியலில் உள்ள பிரச்சினைகளை ஆண்களும், பெண்களும் தங்கள் இருப்பிடத்தில் இருக்கும் நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
உண்மை புரியும்.
பெண்கள் விழிப்புணர்வோடும் தைரியத்தோடும் செயலாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது.
ஆண்களோ எனில் அவர்கள் தங்கள் போக்கை மாற்றி சம உரிமையை பெண்களுக்கு வழங்க முன்வர வேண்டுகம்;
அனைவரும் இணைந்து உலக நிலைமையை மாற்றி சம உரிமையைப் பெண்களுக்கு அளிப்போம்!
***