கம்ப ராமாயணத்தில் 70 கேள்விகள் (ஜோதிடச் செய்திகள்) Post.16,302

Written by London Swaminathan

Post No. 16,302

Date uploaded in London – 13 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இதற்கு முன்னர் வெளியிட்ட 60 கேள்விகளும், விடைகளும்  எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.

61

பெண்கள் தவம் செய்து அழகு பெறுவார்களாம் ; ஆனால் சீதையை அடைய அழகு தவம் செய்ததாம்! இது முன்னொரு பாடலில் கம்பன் சொன்ன செய்தி ; இப்போது சீதையை அலங்கரித்து, அழைத்து வரச் சென்ற பெண்கள் என்ன செய்தனாராம்?

62

சீதைக்கு உவமை சொல்லப் பெண் குலத்தில் யாரும் இல்லையாம் ! ஆகையால் ராமனையே உவமை சொல்ல வேண்டும் ; அதுதான் பொருத்தம் என்கிறான் கம்பன் ! நாம் அதை ஏற்கலாமா? நீங்களே  முடிவு செய்யுங்கள்

63

சீதையை மணக்கோலத்தில் கண்ட ராமனுக்கு என்ன சந்தேகம் ஏற்பட்டது?

64

சீதாராமன் திருமணத்துக்குத் துலுக்கர்களும், சீனர்களும் வந்தார்களா ?

65

சீதா-ராமன் திருமணம் எந்த முகூர்த்தத்தில் நடந்ததாக நம்ம ஜோதிடன் கம்பன் சொல்கிறான் ?

66

பரசுராமனும் ராமனும் மோதப்போவதைக் காட்டும் கெட்ட சகுனங்கள் பற்றி நம்ம ஜோதிடன் கம்பன் என்ன  புகல்கிறான் ?

67

ஒன்பது பாடல்களில் பரசுராமனை வருணிக்கும் கம்பன், பரசுராமனை சிவ பெருமானுடன் ஒப்பிட்டது ஏன் ?

68

ராமனுக்கு பரசுராமன் என்ன சவால் விட்டான் ?

69

ராமன் சொன்ன பதில் என்ன ?

70

பரசுராமன் ALL THE BEST!  GOODBYE!! ஆல் தி பெஸ்ட்! என்று வாழ்த்தி  குட் பை சொன்னது எப்படி?

*************************************************************************

விடைகள்

61.அமிழ் இமைத் துணைகள். கண்ணுக்கு

   அணி என அமைக்குமாபோல்.

உமிழ் சுடர்க் கலன்கள். நங்கை

   உருவினை மறைப்பது ஓரார்.

அமிழ்தினைச் சுவை செய்தென்ன.

   அழகினுக்கு அழகு செய்தார்-

இமிழ் திரைப் பரவை ஞாலம்

   ஏழைமை உடைத்து மாதோ!

 அந்தப் பெண்கள் முட்டாள்கள்! சர்க்கரைப் பாகுக்குச் சுவையூயூட்ட வெல்லம் சேர்ப்பவர்களைப்போல

சீதைக்கு அழகு செய்ய என்னென்னெமோ பூசினார்கள்!

(கண்கள்) மறைதற்குக் காரணமான இரண்டு  இமைகளும்

அக்கண்களுக்கு  அழகென்று  (இறைவனால்)   அமைக்கப்பட்டிருப்பது

போல;  (சீதைக்கு  அணிசெய்யும்  மகளிர்) ஒளிவீசும் ஆபரணங்கள்

சீதையின் (அழகிய)  வடிவத்தை   மறைக்கும் என்னும்   உண்மையை

உணராதவர்களாய்;  (இயல்பாகவே) (அத்துணைச்  சுவைகளையும்  பெற்றிருக்கிற)

அமிழ்துக்கு. (கற்கண்டு சர்க்கரை முதலியவை  கொண்டு) மேலும் சுவை

கூட்டும்   முயற்சியைப்   போல; (இயற்கையிலேயே)  பேர்  அழகுவாய்ந்த 

(சீதையின்  உறுப்புகளுக்கு) (மேலும் புதிதாக) அழகு செய்யத் தொடங்கினார்கள்;

அலை ஒலிக்கும் கடல்சூழ்ந்த இந்நிலவுலகத்து  மக்கள் (நன்மை புரிவதாக

நினைத்துப் பிழைபுரியும்) அறியாமையுடையவர்கள்!  

***

62.சங்கம் கை உடைமையாலும்.

   தாமரைக் கோயிலாலும்.

எங்கு எங்கும் பரந்து வெவ்வேறு

   உள்ளத்தின் எழுதிற்றென்ன.

அங்கு அங்கே தோன்றலாலும்.

   அருந்ததி அனைய கற்பின்

நங்கையும் நம்பி ஒத்தாள்;

   நாம் இனிப் புகல்வது என்னோ?

 பாஞ்ச   சன்னியம்  என்னும் சங்கினை  அழகிய   (இடக்)   கையில்  ஏந்தியுள்ளமையாலும்.   (சங்கு

வளையல்களைக்    கைகளிற்   கொண்டுள்ளமையாலும்);     (நினைப்பவர்)  (உள்ளத்)  தாமரையை   இடமாகக்

கொண்டிருத்தலாலும்);   –  எல்லா இடங்களிலும்  பரவி.   தனித்தனியாக.  அவரவர்  மனத்தில்  எழுதியது

போல. அவ்வவ்விடங்களில்  தோன்றுவதாலும்;  அருந்ததி  தேவியைப்  போன்ற கற்பினையுடைய

பிராட்டியும்;  ஆடவரிற்   சிறந்த  இராமன் ஆகிய திருமாலுக்குச்  சமமானாள்; 

(இதனினும்  சிறப்பாக)  நாம்  இனிப்  பிராட்டிக்கு   உவமை  கூறுவது எவ்வாறு?  

சீதைக்குப்    பெண்குலத்தில்   உவமை    இல்லாமையால்   புருட

உத்தமனாகியவனையே  தம்  சாதுரியத்தால்  உவமையாக்கி  நிறுவினார்.

திருமாலுக்கு  மட்டுமின்றி.  இராமனுக்கும்  திருக்கையில்  இரேகையாகச்

சங்கு  உள்ளதை. “சங்கு சக்கரக்  குறியுள  தடக்கையின்”  (கம்ப. 3859)

எனச்   சுட்டுவார்  பின்னும்.  உள்ளத்  தாமரையைக்  கோயிலாக  உடைமை  “மலர்மிசை ஏகினான்”

(திருக்3)  எனும் திருக்குறளாலும். அதன்   பரிமேலழகர்   உரையாலும்

உணரலாம்.  சங்குவளை  அணிந்தகை;  தாமரைப்  பூவில்   இருக்கை.

எல்லார்  உள்ளத்திலும்   நினைக்கப்படுதல்  ஆகியன  சீதைக்கும் இராமனுக்கும் உள்ள பொருத்தங்கள் ஆகும்

***          

63.அன்னவளை. ‘அல்லள்’ என

   ‘ஆம்’ என. அயிர்ப்பான்

கன்னி அமிழ்தத்தை எதிர்

   கண்ட கடல் வண்ணன்

உன் உயிர் நிலைப்பது ஒர்

   அருத்தியொடு உழைத்துஆண்டு.

இன் அமிழ்து எழ. களி கொள்

   இந்திரனை ஒத்தான்.

கடல் கடைந்தபோது அமிர்தம் வெளிவந்தவுடன் இந்திரனுக்கு எவ்வளவு மகிழ்சசி உண்டானதோ அவ்வளவு மகிழ்ச்சி சீதையைக் கண்டவுடன் ராமனுக்கு ஏற்பட்டதாம் ; ஆனால் முதலில் கன்னிமாடத்தில் வாள் வலி வீசினாள் அவள்தான் இவளா என்ற சந்தேகம் ஏற்பட்டதாம் அவள் இவளேதான் என்று ஊதியானவுடன் உயிர் பறந்து போகாமல் இருக்கக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டானாம் ராமன்!

****

64.ஆமாம் ! கம்பன் தரும் நீண்ட பட்டியலில் சீனர்களும் துலுக்கர்களும் உள்ளனர் !

1109.      கங்கர். கொங்கர். கலிங்கர். குலிங்கர்கள்.

சிங்களாதிபர். சேரலர். தென்னவர்.

அங்க ராசர். குலிந்தர். அவந்திகர்.

வங்கர். மாளவர். சோளர். மராடரே.

1110.      மான மாகதர். மச்சர். மிலேச்சர்கள்.

ஏனை வீர இலாடர். விதர்ப்பர்கள்.

சீனர். தெங்கணர். செஞ் சகர். சோமகர்.

சோனகேசர். துருக்கர். குருக்களே.

1111.ஏதி யாதவர். ஏழ் திறல் கொங்கணர்.

சேதி ராசர். தெலுங்கர். கருநடர்.

ஆதி வானம் கவித்த அவனி வாழ்

சோதி நீள் முடி மன்னரும் துன்னினார்.

ஏதி  யாதவர்.   ஏழ்திறல் கொங்கணர்  – ஆயுதங்கள்  ஏந்திய

யாதவ  அரசரும்.  ஏழு  பகுப்பினையுடைய  கொங்கண  அரசர்களும்;

இதில் 7 பிரிவுகளுடைய கொங்கண அரசர்கள் யார் என்பது வரலாற்று அறிஞர்கள் ஆராய வேண்டிய விஷயம் ஆகும் யவனர்களைக் கம்பன் விட்டுவிட்டான்!

***

65.பங்குனி உத்தரம் ஆன பகற்போது.

அங்க இருக்கினில். ஆயிர நாமச்

சிங்கம் மணத் தொழில் செய்த திறத்தால்.

மங்கல அங்கி. வசிட்டன் வகுத்தான்.

 பங்குனி மாதத்து உத்திரநட்சத்திரம்  கூடியுள்ள  பகற்  பொழுதிலே;  ஆயிரந்திருப்பெயர்களையுடைய சிங்கமே  போன்ற   இராமனது   திருமணச்   சடங்குகளைச்   செய்து முடித்ததிறங்கூடிய   வசிட்டன் ,உப அங்கங்களையுடைய வேதவிதிப்படி. மங்கலகரமான ஓமாக்கினியை வளர்த்தான்.

 உத்திர  நாளோடு  கூடிய பௌர்ணமியன்று   திருமணம்  நிகழ்ந்து  முடிந்தபின் மணவேள்வியைத்

தொடங்கிய வசிட்டபகவானே அதனை மங்கலமாக  முடித்து  வைத்தான் என்க. இராம நாமம் ஒன்றே. திருமாலின் ஆயிரம்  நாமங்கட்கும்  சமம்

என்பது   விஷ்ணு சஹஸ்ர   நாமத்தின்   இறுதித்    துதியாதலால்.    “ஆயிர நாமச்சிங்கம்” என்றார் .

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!

ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே– என்ற பலச்ருதி ராமன் என்ற பெயருக்கு, ஆயிரம் நாமமும் சமம்  என்கிறது அதாவது முழு சஹஸ்ரநாமத்தையும் படிக்க இயலாதவர்கள் இந்த இரண்டு வரிகளை சொன்னால் போதும்

***

66.ஏகும் அளவையின் வந்தன

   வலமும் மயில் இடமும்

காகம் முதலிய முந்திய

   தடை செய்வன; கண்டான்;

நாகம் அனன் ‘இடை இங்கு உளது

   இடையூறு’ என நடவான்;

மாகம் மணி அணி தேரொடு

   நின்றான் நெறி வந்தான்.

தசரதன் அயோத்தி நகருக்குத் திரும்பிச் செல்கையில் தோன்றிய சகுனங்கள் : மயில் – மயில்

(முதலிய   சில  பறவைகள்)  வலமும்  வந்தன  –   (சுபசகுனமாக); காகம்  முதலான சில

பறவைகள்;  இடமும் –  (தீய சகுனமாக)  இடப்புறமாகவும்;  முற்பட்டுச்  சென்றனவாகி;   

தடை   செய்வனவற்றைக்  கண்டான்;    பெருமித நடையழகால்  யானையைப்  போன்றவனான தசரத  வேந்தன்;  

‘இவ் வழியில் ஏதோ தடை ஏற்பட உள்ளது’ என்று;   (மேலும்)  செல்லாதவனானான்;

அறநெறியின் வழி வந்தனாகிய தசரதன்;   விண்  அளாவிய  அழகிய தேரோடு அங்கேயே  நின்று

விட்டான்.

சகுன     நூலார்  கருடன், காடை, கழுகு,  ஆந்தை, உடும்பு, கீரி,குரங்கு  முதலியவை  வலமிருந்து  இடம் போயின்  உத்தமம்  என்றும்,

நாரை,  காக்கை,  செம்போத்து, கிளி, கொக்கு, மயில், கோழி,  ஓணான்,

புள்ளிமான்,   புனுகுப்பூனை,   புலி,   நரி,   முதலியவை   வலமிருந்து

இடமாயின   உத்தமம்   என்றும்   உரைப்பவர்    இவற்றுள்   இடம்

ஆகுபவை   வலமும்,    வலம்    ஆகுபவை    இடமும்    ஆயின்

சகுனத்தடையாம்   தசரதனுக்கு  உத்தம  சகுனமும்  தடைச்  சகுனமும்

ஒருங்கு  நிகழ்ந்தனவாதலின்  மேலே   பயணம்   தவிர்ந்து  நின்றான்.

****

67.பாழிப் புயம் உயர் திக்கிடை

   அடையப் புடை படர

சூழிச் சடைமுடி விண் தொட

   அயல் வெண் மதி தோற்ற

ஆழிப் புனல். எரி. கால் நிலம்

   ஆகாயமும். அழியும்

ஊழிக் கடை முடிவில் திரி

   உமை கேள்வனை ஒப்பான்;

உலகம் அழியப்போகும் காலத்தில் சிவ பெருமான் அதிபயங்கர டான்ஸ் ஆடுவார்; அவரைப்போல வந்தானாம் பரசுராமன்!

வலிமைவாய்ந்த  தோள்கள்;   உயர்ந்த  திக்குகளின்  எல்லையிடையே சென்றடையுமாறு  பக்கங்கள்  விரியவும்;    சடையை  முடித்துக்  கட்டிய  தன்  உச்சி   விண்ணின் முகட்டைத் தொடவும்; வெண்ணிறமுள்ள நிலா,  முடியின் அருகிலே தோன்றவும்; கடல் வடிவான நீரும், நெருப்பும்,  காற்றும்,  நிலமும்,  வானமும்  ஆகிய (பஞ்ச  பூதங்களும்) அழிகின்ற  ஊழியாகிய  யுகமுடிவுக் காலத்தில்;  நடம்புரிகின்ற   உமையம்மையின்    மணாளனாகிய சிவபெருமானைப்போல இருந்தான் 

 சிவபெருமான் சர்வ  சம்ஹாரம் செய்யும் பணியில்  ஊழிக் கூத்தாடுகையில்  ஐம்  பூதங்களும்  அழியும்;

அப்போது  அம்மைகாண நடமாடுவான்  என்பது புராணத் செய்தி .

***

68.டேய் ராமா ! நீ முறித்த சிவ தனுஷ் , ஏற்கனவே முறிந்த வில் ! நீ சரியான ஆம்பளையானா (ஆன் பிள்ளை என்றால்)

என் வில்லினை வாங்கி நாண் ஏற்று பார்க்கிறேன் ! நான் 21  தலை முறை மன்னர்களை வேரறுத்தவன் .

‘மூ-எழு முறைமை. பாரில்

   முடியுடை வேந்தை எல்லாம்.

வேவு எழு மழுவின் வாயால்.

   வேர் அறக் களைகட்டு. அன்னார்

தூ எழு குருதி வெள்ளத்

   துறையிடை. முறையின். எந்தைக்கு.

ஆவன கடன்கள் நேர்ந்தேன்;

   அருஞ் சினம் அடக்கி நின்றேன்.

இருபத் தொரு தலைமுறைகள், உலகத்தில் முடி சூடிய வேந்தர்கள்

அனைவரையும் பரசு  எனும் கருவியின் முனையால்; 

வேரோடு  நீங்கக் களையெடுத்துக் கொன்று, அவர்கள்

தசையிலிருந்து   பெருகிய   (குருதியினைக்  குளமாக்கி)    அக்குருதித்

துறையிலே; (இறந்தார்க்குச்    செய்ய   வேண்டிய)  முறைப்படி  என்  தந்தைக்குச்

செய்யத்தக்க  கடன்களைச் செய்து  முடித்தேன்; (அதன்  பிறகு)  என்  அரிய  வெகுளியை அடக்கி

வந்துள்ளேன்.

‘உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன்.

   உறு பகை ஒடுக்கிப் போந்தேன்.

அலகு இல் மா தவங்கள் செய்து. ஓர்

   அருவரை இருந்தேன்; ஆண்டை

சிலையை நீ இறுத்த ஓசை

   செவி உற. சீறி வந்தேன்;

மலைகுவென்; வல்லை ஆகின்.

   வாங்குதி. தனுவை!’ என்றான்.

அதன்பின்பு (நான் வென்ற)

உலகங்களையெல்லாம்  காசிப  முனிவருக்குத்   தானமாகத்   தந்தேன்;

பெரும்பகைகள் அனைத்தையும் அடக்கி  வந்தேன்;  அளவற்ற

பெருந்தவங்களைப் புரிந்து; ஒப்பற்றதான

அரிய  மகேந்திர  மலையிலே  தங்கியிருந்தேன்;

நீ வில்லை முறித்ததனால் எழுந்த ஓசை;

அவ்விடத்தில் வந்து என் காதுகளில் மோதியதால்;

(அதுகேட்டு)  வெகுண்டு  (இங்கு) வந்தடைந்தேன்,

வலிமையுடையவன்  நீஎன்றால்;  (இந்த)  வில்லை

வளைத்திடு;  (உன்னோடு)  யான் போர்

செய்ய உள்ளேன் என்றான் (பரசுராமன்).

****

69.‘பூதலத்து அரசை எல்லாம்

   பொன்றுவித்தனை; என்றாலும்.

வேத வித்து ஆய மேலோன்

   மைந்தன் நீ; விரதம் பூண்டாய்;

ஆதலின் கொல்லல் ஆகாது;

   அம்பு இது பிழைப்பது அன்றால்.

யாது இதற்கு இலக்கம் ஆவது?

   இயம்புதி விரைவின்!’ என்றான்

நீ எல்லா அரசர்களையும் கொன்று குவித்தாய் ; உன்னை நான் கொல்லலாம் ஆயினும் வேதம் சொல்லும் அறிஞனின் மகன் நீ; மேலும் தவக்கோலத்தில் நிற்கிறாய்; உன்னைக்கொல்லக் கூடாது;  என் அம்புக்கு ஏதேனும் இலக்கினைக் காட்டு என்றான் ராமன். உடனே என் தவம் முழுதும் உன் அம்புக்கு இரையாகட்டும் என்றான் ; ராமன் விட்ட அம்பில் பரசுராமனின்  தவம் எல்லாம் பறந்தோடின

எய்த அம்பு இடை பழுது எய்திடாமல். என்

செய் தவம் யாவையும் சிதைக்கவே!’ என.

கை அவண் நெகிழ்தலும். கணையும் சென்று. அவன்

மை அறு தவம் எலாம் வாரி. மீண்டதே.

 இராமன்  அம்பு  பரசுராமன் தவத்தின்    பயனையெல்லாம்    கவர்ந்தது  என்பதனால்   உருவற்ற

அருவத்தையும்  அது  இலக்காகக்   கொள்ளும்   வன்மையது என்பது தெரிகிறது       

***

70.பரசுராமனும் ஆல் தி பெஸ்ட் ராமா; குட் பை என்று சொல்லிப் புறப்பட்டான் ; இதோ அந்தப் பாடல்:

‘எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக!

மண்ணிய மணி நிற வண்ண! வண் துழாய்க்

கண்ணிய! யாவர்க்கும் களைகண் ஆகிய

புண்ணிய! விடை’ எனத் தொழுது போயினான்.

தூய்மை செய்யப் பெற்றநீல  மணியின்  நிறமுடைய  இராமனே

அழகிய  துழாய் மாலையணிந்தவனே!   (மூவுலகங்களிலும்  வாழ்கின்ற)  அனைவர்க்கும்   புகல்

இடமாகிற புண்ணியனே!; நீ.  கருதி  வந்துள்ள  பொருள்கள்  எல்லாம்  (கருதியவாறே)  இனிதே

நிறைவேறுவனவாகுக; யான் விடை பெறுகின்றேன்” என்று கூறி வணங்கிச் சென்றான் (பரசுராமன்). 

நீல     மணி  வண்ணமும்  பைந்துழாய்க்  கண்ணியும்  உடைய நீ

சரணாகதி  வத்சலன்  ஆகிய  பரம்பொருளே. இனி.  உலகு  உன்னால்

நலம்  அனைத்தும்  பெறும்.  நான்  பெற  வேண்டியது  விடை  எனப்

பரசுராமன்   விடை   பெற்றனன்   என்க.   

—-SUBHAM—-

TAGS- கம்ப ராமாயணம், 70 கேள்விகள், பரசுராமன் சவால், சகுனம், பங்குனி உத்திரம், முகூர்த்தம்

Leave a comment

Leave a Reply