லலிதா சஹஸ்ர நாமம்! (Post No.16,300)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,300

Date uploaded in London – 13 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

நவராத்திரி சிறப்புக் கட்டுரை

லலிதா சஹஸ்ர நாமம்!

ச. நாகராஜன்

ஶ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் ஆயிரம் நாமங்களைக் கொண்ட அற்புதமான ஸ்தோத்திரமாகும்.

 வேத வியாஸர் இயற்றிய பிரம்மாண்ட புராணத்தில் உத்தர காண்டத்தில் ஶ்ரீ ஹயக்ரீவருக்கும் அகஸ்திய முனிவருக்கும் நடந்த ஸம்வாதமே லலிதோபாக்கியானம்.

இதில் வருவது லலிதா சஹஸ்ரநாமம். 

தேவியின் ஆணையின் பேரில் எட்டு வாக்தேவதைகள்  இந்த சஹஸ்ரநாமத்தை உலகிற்கு அளித்தன.

எட்டு வாக்தேவதைகள்:

வசினீ

அருணா

காமேஸ்வரி

கௌலினி

ஜயினி

மோதினி

விமலா

சர்வேஸ்வரி

கோடானு கோடி தேவதைகள் நிரம்பிய சபையில் வாக் தேவதைகள் சஹஸ்ர நாமத்தைக் கூற தேவி மனம் மகிழ்ந்து இதை அனைவரும் கூற வேண்டும் என்று ஆணையிட்டாள்.

 இதில் உள்ள ஆயிரம் நாமாக்களில் இத்தனை இத்தனை நாமாக்கள் இன்ன இன்ன அக்ஷரத்துடன் துவங்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.

 இதில் உள்ள ஆயிரம் நாமங்களும் 32 அக்ஷரங்களிலேயே ஆரம்பிக்கப்படுகின்றன.

 ஒவ்வொரு நாமாவும் மந்திர ஸ்வரூபம். ஒவ்வொரு மந்திரமும் இத்தனை இத்தனை எழுத்துக்களுடன் இருக்க வேண்டும் என்று சூத்திரங்கள் நிச்சயிக்கின்றன. 

இந்த முழு ஸ்தோத்திரமும் ஒரு பெரிய மாலையாகத் தொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஸ்தோத்திரத்திற்கு நான்கு வர்ணத்தாரும் அதிகாரிகளே.

இந்த நாமங்களின் அர்த்தத்தில் ஒரு தொடர்ச்சி உள்ளது. 

இதற்கு பல பாஷ்யங்கள் உள்ளன. 

முக்கியமானவை ஐந்து. 

1.   விமர்சாநந்தீயம்: இது ஶ்ரீ விமலானந்தரின் சிஷ்யரான ஶ்ரீ விமர்சானந்தரால் இயற்றப்பட்டது. இதுவரை அச்சிடப்படாத இந்த நூலின் கையெழுத்துப் பிரதி அடையாறு நூலகத்தில் உள்ளது.

2.   ஶ்ரீ வித்யாரண்ய ஸ்வாமிகளின் பாஷ்யம்: ஜம்முவில் உள்ள புத்தகசாலையில் இது உள்ளது.

3.   ஶ்ரீ பட்ட நாராயணரால் இயற்றப்பட்டது.

4.   ஶ்ரீ சங்கராசார்ய பரம்பரையில் வந்த ஒரு சங்கராசார்யரால் இயற்றப்பட்டது.

5.   ஶ்ரீ பாஸ்கர ராயரால் இயற்றப்பட்டது. இது அச்சில் உள்ள நூலாகும். தமிழில் இதை G.V. கணேச ஐயர் மொழி பெயர்த்திருக்கிறார்.

சக்தியும் சிவனும் இரண்டறக் கலந்து சமமாக இருந்தபோதிலும் ஜகத் கர்த்ருத்வ அம்சம் சக்தியைப் பொறுத்தே இருக்கிறது. ஆகவே கர்ம உபாஸனைகளுக்கு பலன் தரும் சாமர்த்தியம் சக்திக்கே உண்டு.

 ருத்ரனை இழந்தவன், சிவனை இழந்தவன் என்று யாரும் சொல்வதில்லை. சக்தியை இழந்தவன் என்பதே உலக வழக்காகும். ஆகவே இதன் முக்கியத்துவம் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

 இதில் உபாஸனைக்கான ஏராளமான ரகசியங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றை குரு மூலமாக மட்டுமே அறிய முடியும்.

லலிதா சஹஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்வதால் பதினான்கு லோகங்களில் புரிந்த பாவமும் தீரும் என்பதை இதன் பலச்ருதி மூலம் அறியலாம்.

 நவராத்திரி காலங்களிலும், பௌர்ணமி தினங்களிலும், பிறந்த நாட்கள் போன்ற சிறப்பான நாட்களிலும் இது பாராயணம் செய்யப்படுகிறது.

 தினமும் பாராயணம் செய்யும் பக்தர்களின் புண்ணியம் பற்றிச் சொல்லவும் முடியுமோ! 

அனைத்து பேறுகளையும் அருளும் அற்புதமான இந்த ஸ்தோத்திரத்தை அனைவரும் கூறி நலம் பெறுவோமாக!

**

Leave a comment

Leave a Reply