கம்ப ராமாயணத்தில் 80 கேள்விகள் (Post No.16,305)

Written by London Swaminathan

Post No. 16,305

Date uploaded in London – 14 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இதற்கு முன்னர் வெளியிட்ட 70 கேள்விகளும், விடைகளும்  எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.

பால காண்டம் முடிந்தது; அயோத்தியா காண்டத்திலுள்ள அற்புதச் செய்திகளைக் காண்போம்

71

தசரதனின் அமைச்சர்களை டாக்டர்கள் என்று கம்பன் வருணித்தது ஏன்?

72

தசரதன் என்ற பெயர் அவனுக்கு ஏன் ஏற்பட்டது என்பதைக் கம்பன் எப்படி போகிற போக்கில் சொல்கிறான் ?

73

வள்ளுவர் சொன்ன பிறவிப்பெருங்கடல் குறளை கம்பன் எப்படிப் பயன்படுத்துகிறான் ?

74

தசரதன் கருத்துக்கு, வசிட்டனின் வாய்மொழி மூலம், ஆமாம்சாமி போட்ட கம்பன், சீதா தேவியை அலை மகள், கலை மகள், மலை மகள் என்று புகழ்ந்துவிட்டு ராமன் பற்றி என்ன செப்பினான் ?

75

அரசாட்சி என்பது சிறைச்சாலை என்று சொல்லிவிட்டு , விடுதலை பெற உதவு என்று ராமனிடம் தசரதன் வேண்டியது எப்படி ?

76

வள்ளுவன் குறள்களை முடிந்த இடமெல்லாம் கம்பன் பயன்படுத்துகிறான் ஊருணி நீர் ,பழுத்த மரம் பற்றிய வள்ளுவன் வாக்கினை கம்பன் பயன்பத்தும் அழகு என்ன ?

77

ராமனுக்கு முடிசூட்டப்போகும் செய்தியை அறிந்த கோசலையும் சுமித்திரையும் (கைகேயியைக் கூப்பிடாமல்) எந்தக் கோவிலிலுக்குப் போனார்கள் ? கம்பன் பொடிவைத்துப் பேசுகிறானோ ?

78

ஐயா ! வசிட்டரே? என் மகனுக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லு என்றவுடன் பிராமணாளுக்கு ஸலாம் போடு ; அவாள் பிரம்மா விஷ்ணு சிவனுக்கும் மேல் என்று சொன்னாராம் ! கம்பன் பார்ப்பான் இல்லையே ! ஏன் அப்படிப் புகன்றான் ?

79

அடுத்த அட்வைஸ் என்ன? இது நம் எல்லோருக்கும் பொருந்தும் புத்திமதி !

80

காபினெட் என்னும் மந்திரிசபை முக்கியம் என்பதை பிரம்மா- விஷ்ணு -சிவன் ஆகியோர் பெயரை எல்லாம் வம்புக்கு இழுத்து செப்பியது என்ன ?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

விடைகள் 

71.நல்லவும் தீயவும் நாடி, நாயகற்கு,

எல்லை இல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார் ;

ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின்,

தொல்லை நல்வினை என உதவும் சூழ்ச்சியார்.

தன் அரசனுக்கு நன்மை தருவனவற்றையும், தீமை பயப்பனவற்றையும் ஆராய்ந்து ; 

முடிவில்; நோயாளிகளின் விருப்பு வெறுப்புகளை நோக்காது அவர்களது நலத்தைநோக்கிச் செயற்படும் மருத்துவர்களின்

தன்மைபோல தலைவனுக்கு நன்மையையே கருதுவர் ;அன்றியும் விரைவில் வந்து சேரும்தீங்குகள் நேர்ந்த இடத்து ; 

முன்னர்ச் செய்த புண்ணியம் வந்து உதவுவது போல; அத்தீங்குகளைப் போக்கத் துணைபுரியும் சிந்தனைத்திறம்

உடையவர்களும் ஆவர். ஒரே பாட்டில் இரண்டு உவமைகள் : டாக்டர்கள் நோயாளிகளுக்கு உதவுவது போல ; கெட்டது வரும் காலத்தில் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியம் உதவுவது போல !

********

72.‘பஞ்சி மென்தளிர் அடிப்

     பாவை கோல் கொள,

வெஞ் சினத்து அவுணர்

     தேர் பத்தும் வென்றுளேற்கு,

எஞ்சல் இல் மனம்

     எனும் இழுதை ஏறிய

அஞ்சு தேர் வெல்லும்

     ஈது அருமை ஆவதோ?

 செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட மென்மையான தளிர்போலும் பாதங்களையுடைய கைகேயி

சாட்டைகொண்டு தோரோட்ட ; கொடிய கோபத்தையுடைய அசுரர்களின் பத்துத் தேர்களையும் ;

 வென்றுள்ளவனாகிய எனக்கு ; குறைவு அற்ற மனம் என்னும்  பேய் ஏறிச்செலுத்துகிற ;  பொறியாகியஐந்து

தேர்களை ;   வெல்லும் தொழிலாகிய இது ; அருமைப்பாடு உடையது ஆகுமோ? (ஆகாது)’

 பத்துத் தேர்களைவென்றவனுக்கு ஐந்து தேர்களை வெல்லுவது அரிதாவதோ என்றது நயம். 

 மனத்தைக் குரங்கு என்று பலர் பாடினர்; கம்பனோ மனத்தைப் பேய் என்கிறான்!  (இழுதை= பேய்)

*******                  

73.‘இறப்பு எனும் மெய்ம்மையை,

    இம்மை யாவர்க்கும்,

மறப்பு எனும் அதனின்மேல் கேடு

    மற்று உண்டோ?

துறப்பு எனும் தெப்பமே

    துணை செய்யாவிடின்,

பிறப்பு எனும் பெருங் கடல்

     பிழைக்கல் ஆகுமோ?

இப்பிறப்பிலே எவர்க்கும் சாவு உண்டு என்னும் உண்மையை   

மறைப்பதை விட  பெரிய கேடு உண்டா ?

துறத்தல் என்னும் மிதவையே உதவி செய்யாவிட்டால்,  பிறப்புஎனும் பெருங்கடல் – பிறப்பு என்னும்

பெரிய கடலினின்று ;  தப்புதல் இயலாது.

 “பிறவிப் பெருங்கடல்” (குறள், 10) என்பர் திருவள்ளுவரும்.

 ‘ஆதலால், இராமனுக்கு அரசை நல்கி, இப்

பேதைமைத்தாய் வரும் பிறப்பை நீக்குறு

மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன் ;

யாது நும் கருத்து?’ என, இனைய கூறினான்.

ஆகையால் இராமனுக்கு அரசாட்சியை அளித்துவிட்டு

இந்த அறியாமை உடைய பிறவி நோயை நீக்குகின்ற பெரிய தவத்தைத்

தொடங்குவதற்காக -கானகத்தை அடையப் போகிறேன் ;  உங்கள் எண்ணம் யாது?

என்று தசரதன் அமைச்சர்களை வினவுகிறான்

***

74.‘மண்ணினும் நல்லள் ;

     மலர்மகள், கலைமகள், கலை ஊர்

பெண்ணினும் நல்லள் ;

     பெரும் புகழ்ச் சனகியோ நல்லள்-

கண்ணினும் நல்லன் ;

     கற்றவர் கற்றிலா தவரும்,

உண்ணும் நீரினும்,

     உயிரினும், அவனையே உவப்பார்.

பெரும் கீர்த்தியையுடைய சானகியோ என்றால்  பொறுமையில் நிலமகளினும் சிறந்தவள்; அழகில் திருமகளையும், அறிவில்கலைமகளையும், ஆற்றலில் கலைமானை வாகனமாகக் கொண்ட துர்க்கையையும்விடச் சிறந்தவள் ; அவளுக்குக் கணவனான இராமனோ கண்ணைவிடச் சிறந்தவன்; அவன் ஒருவனையே படித்தவர்களும்,சிறிதும் படிக்காதவரும்  உயிர் இருப்பதற்குக் காரணமானபருகும் நீரைவிடவும் உடம்பு இயங்குதற்குக் காரணமானஉயிரைவிடவும் விரும்புவர்.’ 

‘மனிதர், வானவர்,

     மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார்

இனிய மன்னுயிர்க்கு

     இராமனின் சிறந்தவர் இல்லை ;

அனையது ஆதலின்,

     அரச! நிற்கு உறு பொருள் அறியின்,

புனித மா தவம்

     அல்லது ஒன்று இல்’ எனப் புகன்றான்.

   மன்னனே !  மக்களும், தேவரும், நரகரும் ஆகிய  உயிர்களுக்கு கேடு வாராமல்பாதுகாத்து அருள்புரிபவர் ; இராமனைப் போலச்சிறந்தவர் மற்றொருவர் இல்லை ; இராமனது சிறப்பு இவ்வாறு  இருத்தலின்  உனக்கு தெய்வத் தன்மையுடைய துறவறம் அன்றி  மற்றொரு சிறந்த செயல் இல்லை என்று சொன்னான் (வசிட்ட முனிவன்).

******

75.ஐய ! சாலவும் அலசினென் ;

     அரும் பெரு மூப்பும்

மெய்யது ஆயது ; வியல் இடப்

     பெரும் பரம் விசித்த

தொய்யல் மா நிலச் சுமை உறு

     சிறை துறந்து, இனி யான்

உய்யல் ஆவது ஓர் நெறி புக,

     உதவிட வேண்டும்.

  ஐயனே !   மிகவும்  தளர்ந்து விட்டேன்; தாங்குதற்கு அரியதுமான வயோதிகமும் என் உடம்பில் தோன்றிவிட்டது ;  அகன்ற இடத்தைக் காக்கும் பெரிய பாரமான,   துன்பத்திற்குக் காரணமாகிய பெரிய அரசாட்சியை நடத்தும்  பொறுப்பாகிய மிக்க சிறையை விட்டுவிட்டு  இனி நான் பிழைக்க ஒப்பற்ற வழியில் செல்ல  உதவி செய்ய வேண்டும்.’

******

76.‘ஊருணி நிறையவும், உதவும் மாடு உயர்

பார் கெழு பயன்மரம் பழுத்தற்று ஆகவும்,

கார் மழை பொழியவும், கழனி பாய் நதி

வார் புனல் பெருகவும், மறுக்கின்றார்கள் யார்.?

நீர் கொடுக்கும் ஊற்றினையும் பழம் கொடுக்கும் பழுத்த மரத்தினையும் பருவத்தில் பெய்யும்  மழையையும் , பாசனத்துக்குத்தாவும் ஆற்றுவெள்ளத்தையும் எவரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள் இவ்வளவு குணங்களு ம் ராமனுக்கும் உண்டு ; இது மக்கள் கருத்து

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம், பேரறி வாளன் திரு” என்னும் குறளில் (215) வரும் உவமையினை

ஊருணி நிறையவும் என்றும், “பயன்மரம் உள்ளூர்ப்  பழுத்தற்றால் செல்வம்,

நயனுடையான்கண்படின்” (216) மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்,

பெருந்தகை யான்கண் படின்“(217) என்னும் குறட்பாக்களில் வரும் மரங்கள்

இரண்டினையும் சுட்டும் வகையில் “பார் கெழுபயன்மரம்” என்றும் சுருங்கச்

சொல்லியுள்ள திறம் எண்ணி மகிழ்தற்குரியது.   

******               

77.அன்னளாயும், அரும் பெறல் ஆரமும்,

நல் நதிக் குவையும், நனி நல்கி, தன்

துன்னு காதல் சுமித்திரையோடும் போய்,

மின்னும் நேமியன் மேவு இடம் மேவினான்.

நல்ல செய்தி சொன்ன மங்கையர்களுக்கு முத்து வடமும்,  உயர்ந்தசெல்வக் குவியல்களையும்

கொடுத்து, தன்னிடத்தில், நெருங்கிய அன்பினை உடைய சுமித்திரையுடனே, ஒளிவிடும் சக்கரப் படையை உடைய,

திருமால் கோயிலை அடைந்தாள். ( இப்பொழுதே கைகேயி வழி, தனி வழி என்பதைக் கம்பன் சொல்லாமல் சொல்லுகிறான்!)

******

78.கரிய மாலினும், கண்ணுத லானினும்,

உரிய தாமரை மேல் உரைவானினும்,

விரியும் பூதம் ஓர் ஐந்தினும், மெய்யினும்,

பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால்.

வேதம் வல்ல வேதியர் திருமாலைக் காட்டிலும் நெற்றிக் கண்ணுடைய சிவபெருமானைக் காட்டிலும் , தாமரை மேல்

வீற்றிருந்தருளும் பிரமனைக் காட்டிலும் , ஒப்பற்ற பஞ்ச பூதங்களைக் காட்டிலும்;

 சத்தியத்தைக் காட்டிலும் மேம்பட்டவர் ஆவர்; மனப்பூர்வமாக   போற்றுவாயாக .

அந்தணாளர் முனியவும், ஆங்கு அவர்

சிந்தையால் அருள் செய்யவும், தேவருள்

நொந்து உளாரையும், நொய்து உயர்ந்தாரையும்,

மைந்த! எண்ண, வரம்பும் உண்டாம்கொலோ?

 மகனே!;   வேதியர்கள் வெகுளவும்; அவர்  மனத்தோடு பொருந்தி;

கருணை புரியவும்;   தேவர்களுள்  வருத்தம்அடைந்தவர்களையும்,  எளிதாக மேம்பட்டவர்களையும் கணக்கிட;

அளவும் இருக்கின்றதோ?’ (இல்லை)

 (தேவர்களில் அந்தணர் சீற்றத்தால் நொந்தோர் பலர்;  அந்தணர் கருணையால் மேம்பட்டோர் பலர். எனவே தேவரினும் பெரியர் அந்தணர்.

‘நிறைமொழி மாந்தர் பெருமை’ என்னும் குறள்(குறள்.28.)  உரையில்; ‘நிறைமொழி – அருளிக்கூறினும், வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப்

பயந்தே விடும் மொழி’  என்று  பரிமேலழகர் எழுதிய உரையை இங்குக் கருதுக.  நொந்துளார்.  அகத்தியர் சபித்தலால் இந்திர பதவி பெற்ற நகுடன் பாம்பாயினமை காண்க.. மேம்பட்டார் – கௌசிக அரசன்,பிரம முனிவனாகி விசுவாமித்திரனாய்ப்  புகழ்பெற்றமை  வசிட்டன் அருளால் ஆயினமை காண்க.

*******

79.‘யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்,

போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்

தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்,

வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?

DON’T CREATE ENEMIES!

புதியதோர் உலகம்  செய்வோம்; கெட்ட போரிடும் உலகினை வேருடன் சாய்ப்போம்  என்றான் வசிட்டன்!

யார் ஒருவரோடும்;  பகை கொள்ளலன்  (அவனுக்குப்) போர்/ சண்டைஇல்லாமற்போகும்;  புகழ்

குன்றாது  நிறையும்;  அவனுடைய  படை கெடாது;  அவ்வாறு படைகெடாது வளருமானால்  பகைவர்கள் தானே அழிவார்கள்

“ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்”  கருத்தையும் நினைவு படுத்துகிறது இது .

******

80. ‘உமைக்கு நாதற்கும், ஓங்கு புள் ஊர்திக்கும்,

இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும்,

சமைத்த தோல் வலி தாங்கினர் ஆயினும்,

அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே,

உமாதேவியின் கணவனாகிய சிவபெருமானுக்கும், உயர்ந்த கருடனை

வாகனமாக உடைய திருமாலுக்கும், இமையாத கண்கள், எட்டு உடைய நான்முகனுக்கும்;

பொருந்திய தோள் ஆற்றலை  பெற்றுடைய அரசர்  ஆயினும்

மந்திரியரது ஆலோசனைவழியில், அரசாட்சியைச்

செய்தல்  ஆண்மையாகும்.’

     மும்மூர்த்திகளைப் போலத் தோள்வலி பெற்ற அரசரும்அமைச்சர்

சொற்கேட்டு ஆட்சி நடத்தல் வேண்டும் என்பதாம்.

—சுபம்—

TAGS- கம்ப ராமாயணத்தில், 80 கேள்விகள்,

Leave a comment

Leave a Reply