
Written by London Swaminathan
Post No. 16,312
Date uploaded in London – 16 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இதற்கு முன்னர் வெளியிட்ட 90 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.

91
அயோத்தி முழுதும் கொண்டாட்டம் ; தெருவெல்லாம் மக்கள் கூட்டம்; மண்டபம் முழுதும் மன்னர் கூட்டம் ; அந்த சூழ்நிலையில் கைகேயியை இரும்பு நெஞ்சம் IRON HEARTED என்று கம்பன் சாடியது எப்படி?
92
பதினான்கு வருஷம் காட்டில் தவம் செய்; பரதன் இந்த நாட்டினை ஆளட்டும் என்று தசரதன் சொன்னான் என்று கைகேயி வீசிய அணுகுண்டு எப்படி இருந்தது ?
93
தாயே என் அப்பாவின் பெயரை ஏன் சொல்கிறாய்; நீ கட்டளையிட்டால் நான் செய்வேனே — என்று சொல்லி ராமனை உலகத்திலேயே அழியாத புகழுடையோன் என்ற நிலைக்கு கம்பன் உயர்த்துவது எப்படி?
94
விதி முன்னால் போக, தருமம் பின்னால் போனது – என்று ராமனின் பயணத்தை எவ்வாறு கம்பன் வர்ணித்தான்? ஸ்ருதியை ஸ்ம்ருதி (வேதத்தை அற நூல்கள் ) பின்பற்றுகிறது என்ற காளிதாசன் வருணனையை கம்பன் எப்படி மாற்றினான் ?
95
செய்தி கேட்டு பரதன் வாழ்க என்று சொன்ன கோசலை, காட்டுக்கு 14 ஆண்டுகள் போக தசரதன் கட்டளையிட்டான் என்ற அடுத்த வாக்கியத்தைக் கேட்டவுடன் குமுறுகிறாள்; பதறுகிறாள் ; நானும் காட்டுக்கு வருவேன் என்கிறாள் கோசலை ; அப்போது ராமன் என்ன செப்பினான் ? MUM! IT IS ONLY 14 DAYS FOR ME! DON’T WORRY- SAID RAMA TO KAUSALYA.
96
A blessing in disguise is an English idiom that means something seems bad, unlucky, or troublesome at first, but later results in something good or beneficial. தசரதனுக்கு முனிவன் கொடுத்த சாபம் A blessing in disguise என்று கம்பன் சொல்கிறான்; சரிதானே ?
97
ராமன் காட்டுக்குப் போகிறான் என்று பத்திரிகைகள் கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்தி போட்டு தெருத் தெருவாக SPECIAL EDITION NEWS PAPERS ஸ்பெஷல் எடிஷன் நியூஸ் பேப்பர்களை விற்றவுடன் அயோத்தி முழுதும் நடந்ததை கம்பன் வருணிக்கும் அழகு என்னே !
98
கைகேயி ஆட்களை எல்லாம் கொன்று குவிப்பேன் ; அடிக் கபர்தார் ! வாங்கடா, ஒரு கை பார்க்கிறேன்! என்று லெட்சுமணன் சொன்னது என்ன ?
99
என்ன லெட்சுமணா ; ஒரே கடு, கடுன்னு இருக்கே ? என்ன ஆச்சு உனக்கு? என்று ராமன் கேட்டவுடன் லெட்சுமணன் என்ன சொன்னான் ?
100
சீறி எழுந்த தம்பியின் கோபத்தை அடக்க ராமன் சொன்ன இந்த அற்புதமான பதிலுக்கு விளக்கம் என்ன ?
நதியின் பிழை அன்று
நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று;
பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;
மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு
என்னை வெகுண்டது?’ என்றான்.
**********


விடைகள்
91. நின்றவன்தன்னை நோக்கி,
இரும்பினால் இயன்ற நெஞ்சின்
கொன்று உழல் கூற்றம் என்னும்
பெயர்இன்றிக் கொடுமை பூண்டாள்,
‘இன்று எனக்கு உணர்த்தல் ஆவது
ஏயதே என்னின், ஆகும்:
ஒன்று உனக்கு உந்தை, மைந்த!
உரைப்பது ஒர் உரை உண்டு’ என்றாள்.
இரும்பினால் இயன்ற நெஞ்சின்- இரும்பினால் ஆகிய மனத்தோடு;
கொன்று உழல்கூற்றம் என்னும் பெயர் இன்றி – உயிர்களைக் கொன்று
திரியும் எமன் என்னும்பெயர்மட்டும் இல்லாமல்; கொடுமை பூண்டாள் –
அவனுடைய கொடுந்தன்மையை மேற்கொண்டவளாகிய கைகேயி; ‘மைந்த – மகனே; உந்தை உனக்கு உரைப்பது -உன் தந்தை உனக்குச்
சொல்வதாகிய; ஓர் உரை ஒன்று உண்டு – சொல் ஒன்று உள்ளது;
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயது என்னில் – இப்பொழுது
எனக்கு (உன்னிடம் அதைச்)சொல்வது பொருத்தமானது என்று நீ
கருதினால்; ஆகும் என்றாள் – நான் அதனைத்தெரிவிக்கலாம் என்றாள்.
கைகேயி நயமாகப் பேசுகிறாள். இது கைகேயியின் வஞ்சக மனத்தைக்காட்டுகிறது.
****
92.ஆழி சூழ் உலகம் எல்லாம்
பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கி,
தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
பூழி வெங் கானம் நண்ணி,
புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ் – இரண்டு ஆண்டின் வா” என்று,
இயம்பினன் அரசன்’ என்றாள்.
‘ஆழி சூழ் உலகம் எல்லாம் – கடலால் சூழப்பட்ட உலகம்
முழுவதையும்; பரதனே ஆள- பரதனே முடிசூடி ஆண்டுகொண்டிருக்க; நீபோய் – நீ நாட்டை விட்டுச் சென்று; தாழ் இருஞ் சடைகள் தாங்கி – தொங்குகின்ற பெரிய சடைகளைத் தாங்கிக்கொண்டு; தாங்க அருந் தவம் மேற்கொண்டு – தாங்குவதற்கரிய தவத்தை ஏற்று; பூழி வெம் கானம்
நண்ணி – புழுதி நிறைந்த கொடிய காட்டை அடைந்து; புண்ணியத்
துறைகள் ஆடி – புண்ணியத் தீர்த்தங்களில் நீராடி; ஏழ் இரண்டு
ஆண்டின் வா என்று – பதினான்குஆண்டுகள் கழித்த பின்பு திரும்பி
வருவாய் என்று; அரசன் இயம்பினன் என்றாள் – அரசன்கொன்னான்
என்றாள்.
தாழ்இருஞ் சடை தாங்குதல், தவம்
மேற்கொள்ளல், கானம் சேர்தல், புண்ணியத் துறைகள் ஆடுதல் முதலிய நற்பயன்கள் கிட்டவேஅரசன் இவ்வாறு பணித்தான் என்று கூறித் தான் வரங்கேட்டதை மறைத்தலின் அவளது வஞ்சகம்தெரிகிறது. பதினான்கு ஆண்டுகள் என்னாது ‘ஏழ் இரண்டு ஆண்டு’ என்று சுருக்கிக் கூறுதல் அவளது கரவுப் பேச்சைப் புலப்படுத்துகிறது. தான் பழியற்றவள் என்பதைக் காட்டுவதற்காக ‘இயம்பினன்அரசன்’ என்றாள். மேலும் தந்தை என்னாது
அரசன் கூறினான் என்பதால் அரசு ஆணை இது மீறுதற்கு அரிது.
****
93.மன்னவன் பணி அன்றாகின்,
நும் பணி மறுப்பெனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்?
இப் பணி தலைமேல் கொண்டேன்;
மின் ஒளிர் கானம் இன்றே
போகின்றேன்; விடையும் கொண்டேன்.’
அரசன் கட்டளையிடவேண்டும் என்பதில்லை; உங்கள் கட்டளையே
போதும். கானகம் செல்வேன் ; உங்கள் கட்டளையை நான் மறுப்பேனா? என் தம்பி பரதன் அடைந்த பேறு நான்
அடைந்தது அன்றோ? இதற்கும் மேலான நன்மை வேறுயாது? இக்கட்டளையைத் தலையின்மேல் ஏற்றுக்கொண்டேன்; மின்னல் போல வெயிலொளி வீசும் காட்டிற்கு இன்றே போகின்றேன் ; நும்மிடம் விடையும் பெற்றுக்கொண்டேன்.Good Bye, Mrs.Kaikeyi!
********
94.உலகத்திலேயே அதிக உவமைகளை, பொருத்தமான உவமைகளை, பயன்படுத்தியவன் காளிதாசன்; அவன் வேதத்தை எப்படி இந்து மத சட்ட நூல்கள் பின்பற்றுகின்றனவோ அது போல –என்ற உவமையை ரகு வம்சத்தில் பயன்படுத்தினான் ; இந்தக் காட்சியை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) சொற்பொழிவில் மிக அற்புதமாக விளக்கினார்; கம்பனும் காளிதாசனைப் பயின்றவன் என்பதைப் பல இடங்களில் காண முடிகிறது .
குழைக்கின்ற கவரி இன்றி,
கொற்ற வெண்குடையும் இன்றி,
இழைக்கின்ற விதி முன் செல்ல,
தருமம் பின் இரங்கி ஏக,
‘மழைக்குன்றம் அனையான் மௌலி
கவித்தனன் வரும்’ என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன்,
ஒரு தமியன் சென்றான்.
அரசர் முன்னர்ச் சாமரை வீச, பின்னர் வெண்கொற்றக்
குடைபிடிக்க வருவர் ஆதலின் தன் மகனும் அவ்வாறு மகுடம் சூடி
வருவான் என்று தாய் கோசலை எண்ணி மகிழ்ந்திருந்தாள். அவனோ தன்னந் தனியனாய் வருகிறான். ஆயினும், அவனுக்கு முன்னால் விதி செல்கிறது. பின்னால் தருமம் இரங்கி அழுதுகொண்டே வருகிறது; சாமரையும் குடையும் போல என்கிறார் கவிஞர்.
***************
95.என்னை நீங்கி இடர்க் கடல் வைகுறும்
மன்னர் மன்னனை வற்புறுத்தாது, உடன்
துன்னு கானம் தொடரத் துணிவதோ?
அன்னையே! அறம் பார்க்கிலை ஆம்’ என்றான்.
தாயே! என்னைப் பிரிந்து, துன்பக்கடலில் தங்கியுள்ள
சக்கரவர்த்தியை தைரியப்படுத்தாமல், என்னோடு
காட்டிற்கு வர, மனத்தில் நினைப்பது மனைவிக்குள்ள தருமம் இல்லையே.
சித்தம் நீ திகைக்கின்றது என்? தேவரும்
ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே?
எத்தனைக்கு உள ஆண்டுகள்? ஈண்டு, அவை
பத்தும் நாலும் பகல் அலவோ?’ என்றான்.
தாயே ! ஏன் கவலைப்படுகிறீர்கள்? தேவர்களும் தவம் செய்து உயர்ந்த நிலையை அடைந்தார்கள் அல்லவா ?
(நான் பிரிந்து செல்கிற)ஆண்டுகள் எவ்வளவு உள்ளன; அந்தப் பதினான்கு ஆண்டுகளும், பதினான்கு நாள்கள் அல்லவா? (இதற்கு வருந்துவானேன்.)
***********
96.தசரதனுக்கு முன்னிவன் இட்ட சாபம் வரப்பிரசாதமாக வந்ததாம்; ஒரு காலத்தில் தசரதன் வேட்டையாட காட்டுக்குப் போனான்; யானை தண்ணீர் குடி கிறது என்று எண்ணி அம்பு எய்தான்; ஆனால் அது ஒரு முனிவரின் மகன்; அவன் இறந்தும் போனான்; அந்த முதியவரிடம் சென்று மன்னிப்பு கேட்டதோடு உன் மகனைப்போல எல்லா பணிவிடையும் செய்வேன்; என்னை மன்னிப்பாயாக என்று கெஞ்சினான்; உடனே உலகாளும் மன்னனாகிய நீ என்னைச் சரண் அடைந்ததால் உனக்கு 50 % சாபம் போடுகிறேன்; நான் மகனை இழந்து வருந்துவது போல நீயும் வருந்தக்கடவது! என்று ; இதைக் கேட்ட தசரதனுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல இருந்தது ; ஏனெனில் சாபங்கள் கட்டாயம் பலிக்கும்; மகனே இல்லாமல் வருந்திய எனக்கு மகன் பிறக்கப் போவதை முனிவன் சொல்லிவிட்டான் என்று மகிழ்ந்தான்; அந்தக் கதையை இப்போது பத்து பாடல்களில் நினைவு கூறுகிறான்; இதோ சாம்பிளுக்கு ஒரு பாடல்
தாவாது ஒளிரும் குடையாய்!
‘தவறு இங்கு இது; நின் சரணம்,
காவாய்’ என்றாய்; அதனால்,
கடிய சாபம் கருதேம்;
ஏவா மகவைப் பிரிந்து, இன்று
எம்போல் இடர் உற்றனை நீ
போவாய், அகல் வான்” என்னா,
பொன் நாட்டிடை போயினரால்.
ஒளிவீசும் வெண்குடைவேந்தே! நான் செய்த இச்செயல் என் தவறே,நின் திருவடியைப் புகலாக அடைந்தேன், என்னைக் காப்பாற்று என்று சொன்னாய்; (குற்றத்தை ஒப்புக்கொண்டு) சரணம் அடைந்தமையால், கொடிய சாபம் கொடுக்கக் கருதவில்லை; நன்மகனைப் பிரிந்து , இன்று நாங்கள் துன்பப்படுவதுபோல், துன்பம் அடைவாய்.–என்று சாபம் தந்து; விண்ணுலகம் சென்றார்கள்
‘கடிய சாபம்’ என்பது ‘பிள்ளை இறக்க’ என்று சொல்லாமல், நாங்கள் உயிர்துறப்பது போல் நீயும் உயிரிழப்பாய் என்று சுட்டும் அளவில் நின்றது. நாங்கள் = முனிவனும் அவன் மகனும்
***************
97.உண்மையில் வசிட்டன்தான் அறிவித்தான்: உடனே நாடே அழுதது!
கிள்ளையொடு பூவை
அழுத; கிளர் மாடத்து –
உள் உறையும் பூசை
அழுத; உரு அறியாப்
பிள்ளை அழுத;
பெரியோரை என் சொல்ல? –
‘வள்ளல் வனம் புகுவான் ’
என்று, உரைத்த மாற்றத்தால்.
வள்ளல் – இராமன்; ‘வனம் புகுவான் – காடு செல்வான்;’ என்று
உரைத்த மாற்றத்தால் – என்று சொல்லிய சொல்லால்; கிள்ளையொடு
பூவை அழுத –கிளியும், நாகணவாய்ப் பறவையும் அழுதன; கிளர்
மாடத்து உள் உறையும் பூசை அழுத -விளங்குகின்ற மாளிகையின் உள்ளே வசிக்கின்ற வீட்டுப் பூனைகள் அழுதன; உரு அறியாப்பிள்ளை அழுத – வடிவத்தைப் பார்த்து அறிய மாட்டாத சிறு குழந்தைகள் அழுதன; பெரியோரை என் சொல்ல? – பெரியோர்கள் அழுதமைமையப் பற்றி என்னவென்று சொல்வது?
ஆவும் அழுத; அதன் கன்று
அழுத; அன்று அலர்ந்த
பூவும் அழுத; புனல் புள்
அழுத; கள் ஒழுகும்
காவும் அழுத; களிறு அழுத;
கால் வயப் போர்
மாவும் அழுத; – அம்
மன்னவனை மானவே.
அம் மன்னவனை மான – (இராமன் பிரிவால் துயர் உறும்)
தசரதனை ஒப்ப; ஆவும்அழுத – பசுக்கள் அழுதன; அதன் கன்று
அழுத – அப் பசுக்களின் கன்றுகள் அழுதன; அன்று அலர்ந்த பூவும்
அழுத – அப்போது மலர்ந்த பூக்களும் அழுதன; புனல் புள் அழுத-
நீர்வாழ் பறவை இனங்கள் அழுதன; கள் ஒழுகும் காவும் அழுத – தேன் சிந்தும் மலர்ச்சோலைகள் அழுதன; களிறு அழுத – யானைகள் அழுதன; கால் வயப் போர் மாவும் அழுத- காற்றை ஒத்த வலிய போர் வல்ல குதிரைகளும் அழுதன.
ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் வரை அனைத்தும் இராமனது பிரிவால் அழுதன .
**********
98.புவிப் பாவை பரம் கெட,
போரில் வந்தோரை எல்லாம்
அவிப்பானும், அவித்து அவர்
ஆக்கையை அண்டம் முற்றக்
குவிப்பானும், எனக்கு ஒரு
கோவினைக் கொற்ற மௌலி
கவிப்பானும், நின்றேன்; இது
காக்குநர் காமின்’ என்றான்.
டேய் பசங்களா ! அவங்க அவங்க உயிரைக் காப்பாத்திக் கொள்ளுங்க ! இதோ புறப்பட்டு விட்டேன்; ராமனுக்கு மணிமகுடம் சூட்டும் வரை ஓயமாட்டேன்; பூமாதேவியின் சுமையைக் குறைக்க, எதிரிகளைக் கொன்று மலைபோலக் குவிக்கப்போகிறேன் ; வாங்கடா : ஒரு கை பார்க்கிறேன் — என்று குமுறினான் இளவல் லெட்சுமணன் !
இது கைகேயியையும் அவளைச் சார்ந்தோரையும் நோக்கிக் கூறியதாகக் கொள்க.
*****************
99. ‘மெய்யைச் சிதைவித்து, நின்மேல்
முறை நீத்த நெஞ்சம்
மையின் கரியாள் எதிர், நின்னை அம்
மௌலி சூட்டல்
செய்யக் கருதி, தடை செய்குநர்
தேவரேனும்,
துய்யைச் சுடு வெங் கனலின்
சுடுவான் துணிந்தேன்.
அண்ணே ; நீங்க சும்மா இருங்க ! நான் செப்புறத்தை கேளு ! அந்தக் கரிய மனத்துடைய கைகேயிக்கு முன்னரே உட்கார வச்சு உனக்குப் பட்டம் சூட்டப் போறேன்; எவன் வந்தாலும் கவலை இல்ல ; தேவேர்களே வரட்டுமே ;பஞ்சினை நெருப்பு எரிப்பது போல எரித்து சாம்பலாலாக்கப் போறேன் என்றான் லெட்சுமணன் !
********
100.‘நதியின் பிழை அன்று
நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று;
பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று;
மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு
என்னை வெகுண்டது?’ என்றான்.
மகனே! (என்றும் நீர் உள்ள ஆற்றிலே ஒரு சில காலங்களில்) நல்ல நீர் இல்லாமல் வற்றிப் போவது அவ் ஆற்றின் குற்றம் இல்லை; அது போலவ (என்னைக் காடு செல்லும்படி சொன்னது) தந்தையின் குற்றம் இல்லை;
(காடு செல்லும்படி வரம் வாங்கியது) பெற்று நம்மைக் காப்பாற்றி வளர்த்தவள் ஆகிய கைகேயியின் அறிவினது குற்றமும் இல்லை, அவள் மகனாகிய பரதனது குற்றம் இல்லை; விதியால் (நமது ஊழ்வினையால்) விளைந்த குற்றமே ஆகும். இதனை ஆராயாது நீ கோபித்தது ஏன்?’ என்றான் இராமன்
TO BE CONTINUED………………………………………
–SUBHAM—
TAGS- கம்ப ராமாயணம்,100 கேள்விகள், கைகேயி வரம், தசரதன் பெற்ற சாபம், இதை முன்னே செல்ல, நதியின் பிழை அன்று