
Written by London Swaminathan
Post No. 16,316
Date uploaded in London – 17 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இதற்கு முன்னர் வெளியிட்ட 100 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.

101
ராமன் இருக்கும் இடம் அயோத்தி என்பது தமிழ்ப்பழமொழி ; இதை முதலில் கூறியவர் யார்?
102
நீர் இருந்தால் தானே மீன் இருக்க முடியும் என்ற உவமையை லெட்சுமணன் பயன்படுத்தியது எப்போது ?
103
சம்மதமா ? சம்மதமா? நான் உன்கூட வர சம்மதமா – என்று நாடோடி மன்னன் படத்தில் பானுமதி பாடிய திரைப்படப்பாடலை நினைவு படுத்தும் வாக்கியத்தை சீதை சொன்னவுடன், என்ன சொல்லி, ராமன் அவளைப் பயமுறுத்தினான் ?
104
ராம லட்சுமணர் நடந்து செல்லுகையில் யார் முன்னால் சென்றார் என்பதை கம்பன் எப்படி மாற்றிச் சொல்கிறான் ? (படங்களில் கம்பன் சொன்ன முறை இல்லை?)
105
ராமன் கானகம் செல்வதைக் கண்டு மக்கள் எப்படி தங்களுடைய துன்பத்தை வெளிப்படுத்தினார்கள் ?
106
மக்களையும் சுமந்திரன் தேரினையும் திரும்பிச் செல்லுமாறு ராமன் வேண்டினான்; அப்போது சுமந்திரன் அயோத்திக்குத் திரும்புவதற்கு எவ்வளவு நேரம் ஆயிற்று?
107
ராமன் கானகத்துக்குப் போய்விட்டான் என்ற செய்தி கேட்ட அடுத்த நொடியில் தசரதனுக்கு HEART ATTACK ஹார்ட் அட்டாக் / மாரடைப்பு வைத்தது எப்படி?
108
இறந்த உடல்களை நீண்ட நாள் கெடாமல் காக்க, இப்போதெல்லாம் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள்; வசிட்டன் கையாண்ட டெக்னீக்/ உத்தி என்ன ? தையல் கடலும் தைலக் கடலும் என்று கம்பன் சொற் சிலம்பம் ஆடும் அழகு என்னே !
109
மன்னன் இல்லாத நாட்டை வெளிநாட்டுப் படைகள் தாக்கும் அபாயம் உண்டு ; இதைத்தடுக்க வசிட்டன் என்ன செய்தான் ?
110
கானகத்துக்குள் நுழைந்த மூவரின் அழகினை கம்பன் வருணிக்கும் கீழ்கண்ட பாடலின் பொருள் என்ன ?
வெய்யோன் ஒளி தன் மேனியின்
விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
இளையானொடும் போனான் –
‘மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
அழியா அழகு உடையான்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


விடைகள்
101.காட்டுக்குப் போகும் ராம லட்சுமணர்கள் சுமித்திரையிடம் விடைபெற்றுக்கொள்ளச் சென்றனர் ; போகாதே போகாதே என் மகனே ! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்(வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்) என்று அவள் சினிமாப் பாட்டுப் பாடவில்லை ! போய்வா மகனே போய்வா ! ராமன் இருக்கும் இடமே இனி அயோத்தி; அவனே உனக்குத் தந்தை; சீதையே உன் தாய் ; ராமன் அயோத்திக்கு வந்தால் திரும்பி வா ! இல்லாவிடில் உன் கதையை முடித்துக்கொள் !-என்று லெட்சுமணனுக்கு அவன் தாய் அறிவுரை பகன்றாள் இது சுமித்திரைக்கு, ராமன் மீதுள்ள நம்பிக் கையையும் மதிப்பையும் காட்டுகிறது :
சுமித்திரை இலக்குவனுக்குச் சொல்லியது
ஆகாதது அன்றால் உனக்கு அவ் வனம்
இவ் அயோத்தி ;
மா காதல் இராமன் நம் மன்னவன் ;
வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம் பூ குழல்
சீதை என்றே
ஏகாய் ; இனி , இவ் வயின் நிற்றலும்
ஏதம் என்றாள் .
XX
பின்னும் பகர்வாள் , ‘மகனே ! இவன்
பின் செல் ; தம்பி
என்னும்படி அன்று ; அடியாரினில்
ஏவல் செய்தி ;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின்
வா ; அது அன்றேல்
முன்னம் முடி ; ‘ என்றனள் பால் முலை
சோர நின்றாள் .
****
102.’நீர் உள எனின் உள , மீனும் நீலமும் ;
பார் உள எனின் உள , யாவும் ; பார்ப்பு உறின் ,
நார் உள தனு உளாய் ! நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளம் ? அருளுவாய் ‘ என்றான்
“நாணை உடைய வில்லை ஏந்தியவனே! தண்ணீர் இருக்குமானால் மீன்களும், கருங்குவளையும் அதில் உள்ளனவாகும். இந்தப்பூமி இருக்கும் எனில் எல்லாப் பொருளும் உள்ளனவாகும். அவை போலவே, நானும், சீதையும் யார் இருந்தால் இருக்கின்றவர்கள் ஆவோம்? கூறுவாயாக!” என்றான்.
அதாவது ராமன் இருந்தால்தான் மற்றவர்கள் இருக்க முடியும்; ஆகையால் எங்களை விட்டுவிட்டு நீ மட்டும் காட்டுக்குப் போகாதே என்பதே கருத்து .
******
103.நானும் உன் கூட வருவேன் என்று சீதை சொன்னபோது , ராமன் சொன்னான் “சம்மதமா…..சம்மதமா நான் உங்கள் கூட வர சம்மதமா?
சரி சமமாக நிழல் போலே நான் கூட வர… சம்மதமா?- பானுமதி பாடியது) அதையே சீதையும் பாடினாள் போலும் !
`’வல் அரக்கரின் மால் வரை ஊடு எழும் ,
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர்க்
கல் அரக்கும் , கடுமைய அல்ல நின்
சில் அரக்கு உண்ட சேவடிப் போது ” என்றான்
“சீதையே! கொடிய அரக்கர்களைப் போல அச்சுறுத்தும் பெரிய மலைகளுக்கு நடுவே, உருகிய அரக்கைப் போல நெருப்பைக் கக்கும் கற்கள் நிறைந்த பாதைகள் உள்ளது காட்டு; பாதைகள் மிகவும் கொடூரமானவை. செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பட்ட உன்னுடைய மென்மையான தாமரை மலர் போன்ற பாதங்களால் அந்தப் பாதைகளின் கடுமையான வெப்பத்தையும், கூர்மையான கற்களையும் தாங்கிக் கொள்ள முடியாது” என்று இராமன் கூறினான்.
***********
104. மூவரும் போகும் முறை
சீரை சுற்றித் திரு மகள் பின் செல ,
மூரி வில் கை இளையவன் முன் செலக்
காரை ஒத்தவன் போம்படி கண்ட அவ்
ஊரை உற்றது , உணர்த்தவும் ஒண்ணும் ஓ ?
சீரைச் சுற்றித் திருமகள் பின்செல: மரவுரியைத் (மரப்பட்டையாலான ஆடை) தரித்துக்கொண்டு, இலக்குமி தேவியின் அவதாரமான சீதை இராமனுக்குப் பின்னால் நடந்து சென்றாள்.
• மூரி வில்லன் முன்செல்ல: பெரிய வில்லை ஏந்தியவனாகிய இலக்குவன் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் முன்னால் நடந்து சென்றான்.
• முறைமையால் காரைப்பற்றிய அண்ணல் நடுச்செல: முறைப்படி, கார்மேகம் போன்ற நிறமுடைய அண்ணலாகிய இராமர் இருவருக்கும் நடுவே நடந்து சென்றார்.
********
105.விழுந்தனர் சிலர்; சிலர் விம்மி விம்மி மேல்
எழுந்தனர்; சிலர் முகத்து இழி கண்ணீரிடை
அழுந்தினர்; சிலர் பதைத்து, அளகவல்லியின்
கொழுந்து எரி உற்றென, துயரம் கூர்கின்றார்.
சிலர் விழுந்தனர் ; சிலர் மேல் விம்மி விம்மி எழுந்தனர் –
சிலர் மேலும்மேலும் அழுதழுது எழுந்தார்கள்; சிலர் -; முகத்து இழி கண்ணீரிடை அழுந்தினர் -முகத்திலிருந்து இறங்குகின்ற கண்ணீரினிடத்து அழுந்திப் போனார்கள்; சிலர்-; பதைத்து- துடித்து; அனகவல்லியின் -மயிர்க் கொடியின்; கொழுந்து எரி உற்றென – நுனிதீப்பற்றியது போல; துயரம் கூர்கின்றார் – துன்பம் மிகுகின்றார்.
(அனகம் என்று பாடங்கொண்டு நீர் எனப் பொரு படுமாதலின் தண்ணீரில் உள்ள கொடியின் கொழுந்து தீப்பற்றியது போல என உரைப்பினும் பொருந்தும்).
*******************
106.வால்மீகி ராமாயணத்திலும், கம்ப ராமாயணத்திலும் நேரம்– நாட்கள்- மாதங்கள்- பற்றிய குறிப்புகள் நிறைய உள. அயோத்திக்கு சுமந்திரனின் தேர் திரும்பிவர இரண்டு மணி நேரம் ஆயிற்று; கங்கைக் கரையில் விட்டுவிட்டு சுமந்திரன் திரும்பினான் ; இதைக் கேட்ட வசிட்டன் அடக் கடவுளே! DASARATHAN FINITO! தசரதன் கதை முடிந்தது! என்று ஆரூடம் கூறுகிறார்.
கடிகை ஓர் இரண்டு மூன்றில்,
கடி மதில் அயோத்தி கண்டான்;
அடி இணை தொழுதான், ஆதி
முனிவனை; அவனும், உற்ற
படி எல்லாம் கேட்டு, நெஞ்சில்
பருவரல் உழந்தான்; முன்னே
முடிவு எலாம் உணர்ந்தான், ‘அந்தோ!
முடிந்தனன், மன்னன்’ என்றான்.
ஐந்து நாழிகைப் போதில் மதிலையுடைய அயோத்தி நகரத்தை அடைந்து வசிட்டனை பாதத்தில் வணங்கினான்; வசிட்ட முனிவனும்
வனத்தில் நடந்தவையெல்லாம் கேட்டறிந்து மனத்தில் துக்கம் கொண்டு வருந்தி, இனி வரப் போவதை எல்லாம் உணர்ந்தவனாய், ‘அந்தோ முடிந்தனன் மன்னன்’ என்றான் – ஐயோ!=அரசன் இறந்து போனான் என்றான்.
‘இனி அரசன் இறந்து போவது உறுதி’ என்கின்ற கருத்தில்‘முடிந்தனன் மன்னன்’ என்றான். ஐந்து நாழிகை = இரண்டு மணி. கடிகை = நாழிகை.
*********************
107.DASARATHA HAD AN HEART ATTACK!
நாயகன் பின்னும் தன் தேர்ப் பாகனை நோக்கி , ‘நம்பி
சேயனோ ? அணியனோ ? ‘ என்று உரைத்தலும் , தேர் வலான் உம்
‘வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்
போயினன் ‘ என்றான் ; என்ற போழ்து அத்து ஏ ஆவி போனான் .
தசரதன், தன்னுடைய சாரதியாகிய சுமந்திரனைப் பார்த்து
இராமன் தொலைவில் உள்ளானோ அண்மையில் உள்ளானோ என்று கேட்க சுமந்திரனும், இராமனும், இலக்குவனும், மிதிலைப்
பொன் மைதிலியுமாக, மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ள காட்டுக்குள் சென்றார்கள் என்றான். என்று அவன் கூறிய அப்பொழுதே (தசரதன்) உயிர் நீத்தான்.
**********
108.வசிட்டன் தசரதன் உடலை எண்ணெய்க்கொப்பரையில் இடல்
‘செய்யக்கடவ செயற்கு உரிய
சிறுவர் ஈண்டையார் அல்லர் ,
எய்தக் கடவ பொருள் எய்தாது
இகவா , என்ன இயல்பு ? ‘ என்னா ,
‘மையல் கொடியாள் மகன் , ஈண்டு
வந்தால் முடித்தும் மற்று ‘ என்னாத்
தையல் கடல் நின்று எடுத்து அவனைத்
தயிலக் கடலின் தலை உய்த்தான் .
தையல் கடலும் தைலக் கடலும் = பெண்கள் அழுது அழுது உண்டான கண்ணீர்க் கடலில் மிதந்த தசரதன் உடலை பாக்டீரியாக்கள் தாக்காமல் இருக்க தைலம் என்னும் எண்ணெய்க் கடலில் இட்டான் வசிட்ட முனிவன் .
‘மையல் கொடியாள் மகன் , ஈண்டு
வந்தால் முடித்தும் = தற்போது பரதனே கோசல நாட்டுக்கு அதிபதி ஆதலின்,சக்கரவர்த்தி வராமல் அரசாங்க சம்பந்தமான எதுவும் வேறு யாரும் செய்ய இயலாது என்பதும், அடுத்துச் செயற்குரிமை படைத்தவன் சத்ருக்கனன் ஆயினும் பரதன் வராமல் சத்துருக்கனன் வரமாட்டான் என்பதும் கருதியே வசிட்டன் அவ்வாறு கூறினான்.
****
109.போனார் அவரும், கேகயர்கோன்
பொன் மா நகரம் புகஎய்த;
ஆனா அறிவின் அருந் தவனும்,
அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான்;
சேனாபதியின் சுமந்திரனை,
‘செயற்பாற்கு உரிய செய்க’ என்றான்;
மேல் நாம் சொன்ன மாந்தர்க்கு
விளைந்தது இனி நாம் விளம்புவாம்;
தசரதனுக்கு ஈமக்கிரியைகளைச் செய்வதற்காக கேகய நாட்டிலுள்ள பரதனை அழைத்து வருவதற்கு, வசிட்டன் தூதர்களை அனுப்பிவிட்டு நாட்டின் செக்யூரிட்டியை உறுதி செய்யும்படி COMMANDER IN CHIEF சுமந்திரனுக்கு அறிவுரை வழங்குகிறார்.
அரசன் இல்லாக் காலத்து நாட்டில் கலவரமும், குழப்பமும் விளையக் கூடும் ஆதலின், அத்தகையநேரங்களில் நாட்டைக் கவனிக்கும் பொறுப்பு சேனாதிபதிகளுக்குரியது. ஆகவே, வசிட்டனும், சேனாபதியாகிய சுமந்திரனை அழைத்துச் ‘செய்ய வேண்டியவற்றைச் செய்க’ என்றான். அரசியல் நடந்தவாற்றை இதன்மூலம் அறிந்து மகிழ்கிறோம். மந்திரிமார்கள் பலர் பல துறையிலும்இருப்பர், அவருள் சேனாபதியரும் அமைச்சரே யாவர். சுமந்திரன் என்பது நல்லமந்திராலோசனையில் உள்ளவன் என்ற பொதுப்பொருளில் மந்திரியர்க்குள்ள சொல்லாகும்.பதவி முடிந்த அரசனுக்கும், புதிய அரசனுக்கும் இடையில் உள்ள காலத்தில் நாட்டைக் குழப்பத்திலிருந்து மீட்கும் பொறுப்பு சேனாபதியர்க்கு உள்ளது.
**************
110. கானகத்துக்குள் நுழைந்த மூவரின் அழகினை கம்பன் வருணிக்கும் பாடலின் பொருள் :
வெய்யோன் ஒளி தன் மேனியின்
விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
இளையானொடும் போனான் –
‘மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
அழியா அழகு உடையான்.
மையோ– (கண்ணுக்கு இடக்கூட்டிய) மையோ; மரகதமோ-
பச்சைநிறஒளிக்கல்லாகிய மரகதமோ; மறிகடலோ– (கரையின்கண்
அலைகளால்) மறிக்கின்றகடலோ; மழை முகிலோ -பெய்யும் கார்
மேசுமோ; ஐயோ – (உவமை சொல்லமாட்டாதநிலையாகிய) ஐயோ!; வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் இவன்? -தன்உருவம் என்று சொல்லப்படுவதாகிய ஒப்பற்ற அழியாத அழகினை உடையன் இந்த இராமன்; வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின்மறை – சூரியனது ஒளியானது தன்திருமேனியிலிருந்து வெளிப்படும் நீல ஒளியில்
மறைந்துவிடும்படி; பொய்யோஎனும் இடையாளொடும்–
இல்லையோ என்று சொல்லத்தக்க நுண்ணியஇடையினை உடைய
சீதையோடும்; இளையானொடும் – தம்பியாகியஇலக்குவனோடும்;
போனான் – (காட்டு வழியே) நடந்து செல்லலானான்.
(அதிசயித்து இனி உவமை சொல்ல மாட்டாமை தோன்றி ‘ஐயோ’ என முடித்தார். “அச்சோ ஐயோ என்னே எற்று எவன் எனுஞ்சொல் அதிசயம் உற இரங்கல்” என்பது சூடாமணி நிகண்டு.)
—SUBHAM—
TAGS- கம்ப ராமாயணம், 110 கேள்விகள், தையல் கடல், தைலக் கடல், வெய்யோன் ஒளி தன் மேனியின், ராமன் இருக்கும் இடமே அயோத்தி