கடைசி பகுதி: HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-130; இந்து மத கலைச்சொல் அகராதி-130 (Post.16,315)


SMRITI IRANI WITH HER PARSI HUSBAND

Written by London Swaminathan

Post No. 16,315

Date uploaded in London – 17 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

PARSI  WOMEN CELEBRATING NEW YEAR.

கடைசி பகுதி: HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-130; இந்து மத கலைச்சொல் அகராதி-130 (Post.16,315)

இந்தப்பகுதியுடன் இந்து மத கலைச்சொல் அகராதி நிறைவு அடைகிறது. இசட் Z என்னும் எழுத்தில் இந்துமதத்துடன் தொடர்புடைய சொல் ஜொராஸ்தர் ஆகும்; அவர் ஸ்தாபித்த பார்சி மதமும் இதில் அடங்கும்.

****

ஜராதுஷ்ட்ரர் (ZOROASTER= ZARA THUSHTRA)

ஜொராஸ்டர் / ஜராதுஷ்ட்ரர் என்பவர் பார்ஸி (PARSI= PARSEE) மத ஸ்தாபகர் . அவர் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியான ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரானுக்கு குடியேறி ஒரு புது மதத்தை ஸ்தாபித்தார். அவர்களுக்கு முக்கிய வழிபாடு அக்னீ வளர்த்தல். (FIRE WORSHIP) எப்படி வேத கால பிராமணர்கள் வீட்டில் மூன்று வகை அணையாத அக்னீ இருந்ததோ அது போல இவர்கள் எங்கு சென்றாலும் தீயுடன் செல்வர். அவர்களுடைய மதச் சின்னமே அக்கினி (FIRE ALTAR) குண்டம்தான்.

பார்சி மத சொற்கள் அனைத்திலும் சம்ஸ்க்ருதம் கலந்திருப்பதை, வேத கால சம்ஸ்க்ருதம் அறிந்தவர்கள், காணலாம்.

வெள்ளைக்காரர்கள் பார்ஸி மதம் அல்லது ஜொராஷ்ட்ரியன் மதம்  பற்றி எழுதிய எல்லாம் ஆயிரம் குழப்பம் உடையவை. அவர் பெயரில் குழப்பம், அவர் பிறந்த இடத்தில் குழப்பம்; அவர் சொன்ன சொற்களை வியாக்கியானம் செய்வதில் குழப்பம். அவர் வாழ்ந்த காலம் பற்றிக் குழப்பம். ஆயினும் வேதம் படித்தவர்கள் பல குழப்பங்களை எளிதில் தீர்க்கிறார்கள் ‘ போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம் என்ற பழமொழிக்கு ஏற்ப கிரேக்கர்கள் பெயர்களிலும் அவர் வாழ்ந்த காலத்திலும் மகா குழப்பம் செய்தனர். ஜரா துஷ்ட்ரா என்பதை ஜொராஸ்டர் என்று மாற்றினார்கள். ஒரு கிரேக்கர், இவர் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என்று எழுதினார் . உடனே அத்தனை பேரும் அதைத் திருப்பி எழுதினர் . பிறந்த இடத்தையும் அவர்கள் குழப்பினர் . பிளினி (Pliny)  என்பவர் இரண்டு ஜொராஸ்டர் உண்டு என்று ஒரு வெடி குண்டையும் வீசினார்.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் , ஜராதுஷ்ட்ரர் பற்றிச் சொன்ன உண்மைகளை எவரும் கண்டுகொள்ள வில்லை. ஜராதுஷ்ட்ரா  என்றால் ஸெளராஷ்ட்ர என்பதன் மரூஉ என்று விளக்கினார் காஞ்சி சுவாமிகள்.

ஜராத் + உஷ்ட்ர = ஹர + உஷ்ட்ர = ஒட்டகத்தை விரும்புவோர் LOVER OR RAISER OF CAMELS , வளர்ப்போர் என்பது வெள்ளக்கார மொழி ஆராய்சசியாளர் சொல்லுவது.. இது இரண்டும் ஸம்ஸ்க்ருதம் தான் . ஆகையால் வேத காலத்துக்கும் பாரசீக மதத்துக்கும் உள்ள தொடர்பை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

***

PICTURE OF FIRE TEMPLE

செண்ட் அவஸ்தா

அவர்களுடைய மத நூலுக்கு பெயர் செண்ட் அவஸ்த்தா ZEND AVESTA.

இதில் செண்ட் என்பது சந்தஸ் ZEND = CHANDAS ( வேத இலக்கணம் உடைய கவிதை) என்பதன் மருவு என்பது காஞ்சி சுவாமிகள் சொன்னது.

அவஸ்தா AVESTA என்பது பழங்க கால கிழக்கு ஈரானில் (பாரசீகரத்தில்) பேசப்பட்ட மொழி.

அவர்கள் பாடல்களை காதா GATHA  என்பர்; இதுவும் வேத காலம் முதல் இன்றுவரை புழக்கத்தில் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொல்.

பார்சி மதத்தினரின் மற்றோரு சொல் யாஸ்ன ; இது யக்ஞ (YASNA= YAGNA)  என்பதன் திரிபு.

அவர்கள் வணங்கும் பெரிய கடவுள் அசுர மஸ்தா AZURA MAZDA (MAHAT ASURA= BIG AND POWERFUL= SUPREME) .

அசுர என்பது சக்தி வாய்ந்த பலமான என்ற பொருளில் பயன்படும் ஸம்ஸ்க்ருதச் சொல். பல வேத கால கடவுளரின் அடை மொழி அசுர ; பின்னர் இதை மற்ற எதிரிகளுக்கு பயன்படுத்தினர். அஸீரிய (AYYRIAN = ASURA DYNASTY) நாகரீகம் அசுரர் என்ற பெயரை பெருமையுடன் பயன்படுத்தியது. இன்றும் நாம் ஒரு கார் CAR  வெகு வேகத்தில் வந்தால் அது அசுர வேகத்தில் வந்தது என்கிறோம் .

அசுரர் என்பதை பார்சீ மக்களும் எதிரி/ கெட்டவன் என்றும் பயன்படுத்தினர் (E.G DORA ASURAN= ENEMY OF ZARA THUSHTRA).

வேத கால கடவுளரின் பெயர்களும் அரக்கர் பெயர்களும் அவர்கள் வேதப் புஸ்தகமான செண்ட்  அவெஸ்தாவில் உளது. அவர்கள் அக்கினியை வணங்காமல் ஒரு நாளையும் கழிக்கமாட்டார்கள் ஆயினும் இந்திரனை பின்னுக்குத் தள்ளி , வருணனை முன்னதாக்கியதும் தேவர்களை மட்டம்தட்டி, அசுரர் என்ற சொல்லை உயர்த்திக் காட்டியதும் ஜராதுஷ்ட்ரர்  ஒரு புரட்சிக் கொடி தூக்கிய பாரசீகன் என்பதைக் காட்டுகிறது. அவர் வாய் மொழியாக வந்ததைவிட பிற விஷயங்களும் அவர்களுடைய மதப் புஸ்தகத்தில் இருக்கின்றன.

வேத கால சாப மந்திரங்கள் போல அவரும் சாபம் இடும் சம்பவங்களும் அவர் வாழ்க்கையில் உண்டு தனக்கு புகலிடம் கொடுக்க மறுத்த ஒருவனுக்கு அவர் சாபம் இடுகிறார். எதிரிகளை ஒழிப்பது பற்றிப் பாடுகிறார்.

எல்லா மதப் புஸ்தகங்களிலும், தமிழ் உள்பட எல்லா இலக்கியங்களிலும், எதிரிப் படை உள்ளது உண்டு. வெள்ளைக்கார, மார்க்சீய அயோக்கியர்கள் வேத புஸ்தகத்தில் உள்ள எதிரிகளை மட்டும் ‘பூர்வ குடி மக்கள்’ என்று முத்திரை குத்தி, வரலாற்றையே திசை திருப்பினார்கள். அதை நாம் மாற்றி எழுதி உண்மையை உரைக்கவேண்டும்.

****

PICTURE OF ZOROASTER

1. குஜராத்துக்கே ‘திரும்பி’ வந்ததன் பின்னணி

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு, பார்சி மக்கள் ஈரானில் இருந்து தப்பித்துக் கப்பல்கள் மூலம் குஜராத்தின் சஞ்சான் (Sanjan) கடற்கரையை வந்தடைந்தனர். அப்போது அந்தப் பகுதியை ஜதி ராணா (Jadi Rana) என்ற இந்து மன்னர் ஆண்டு வந்தார்.

தங்கள் நாட்டிற்குள் இவ்வளவு புதிய மக்கள் நுழைவதைக் கண்டு கவலைகொண்ட மன்னர், பார்சி மத குருமார்களை அழைத்து, விளிம்பு வரை நிறைந்த ஒரு கிண்ணம் பாலைக் காண்பித்தார். “என் வசம் ஏற்கனவே மக்கள் தொகை நிறைந்துள்ளது, உங்களுக்குப் புகலிடம் தர இங்கு இடமில்லை” என்பதை அவர் சைகையால் உணர்த்தினார்.

இதனைப் புரிந்துகொண்ட புத்திசாலியான பார்சி மதகுரு, சற்றும் பதற்றமடையாமல் ஒரு கைப்பிடி சர்க்கரையை எடுத்து அந்தப் பாலில் கரைத்தார். பால் கிண்ணத்தில் இருந்து ஒரு சொட்டு கூட கீழே சிந்தாமல் சர்க்கரை பாலோடு கலந்தது. பின்னர் அவர் மன்னரைப் பார்த்து, “மன்னரே! நாங்கள் இந்தப் பாலில் கலந்த சர்க்கரையைப் போல, உங்கள் மக்களின் கலாச்சாரத்தோடு இரண்டறக் கலந்து, அதனை மேலும் இனிமையாக்குவோமே தவிர, உங்களுக்கு எந்தவிதப் பாரமாகவும் இருக்க மாட்டோம்” என்று உறுதியளித்தார்.

பார்சி குருவின் புத்திசாலித்தனத்தைக் கண்டு வியந்த ஜாதி ராணா மன்னர், அவர்களுக்குப் புகலிடம் அளிக்க முன்வந்து சில  நிபந்தனைகளை விதித்தார்; இந்த நிபந்தனைகளுக்கு முழுமனதுடன் உடன்பட்டு, குஜராத் மண்ணில் தங்களின் புனிதத் தீயை (Holy Fire – Atash Behram) ஏற்றி வழிபடத் தொடங்கினர்.

இன்று பார்ஸி சமய மக்கள், குஜராத்திலும் பம்பாயிலும் வசிக்கக் காரணமே அவர்களின் மூதாதையர்கள் செளராஷ்டிர தேசத்தில் இருந்து சென்றதே . முஸ்லீம்கள் அவர்களை படுகொலை செய்தவுடன் அவர்கள் செளராஷ்டிரத்துக்கே திரும்பி வந்தனர். இன்று ஈரான் எனப்படும் பாரசீகம் (IRAN= PERSIA) முஸ்லீம்களலின் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஈரான் என்ற சொல்லே ஆர்யன் (ARYAN = IRAN) என்பதிலிருந்து வந்ததுதான்.

அன்று அகதிகளாக வந்த பார்சி மக்கள், குஜராத் மண்ணில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி, இன்று இந்தியாவின் மிக உன்னதமான குடிமக்களாகத் திகழ்கிறார்கள் . இந்தியாவிற்கு அவர்கள் தந்த டாடா குடும்பம் (Tata Family), ஹோமி பாபா (Homi Bhabha), ஃபீல்டு மார்ஷல் சாம் மானேக்சா (Sam Manekshaw) போன்ற புகழ்மிகு தலைவர்கள், பாலில் கலந்த சர்க்கரையாய் இந்திய வரலாற்றை இனிமையாக்கினார்கள் .

****

ஜராதுஷ்டிரர்

ஜராதுஷ்டிரர் வாழ்வில் நடந்த சுவை மிகு அற்புதங்களை தமிழ் அற்புதங்களுடன் ஒப்பிட்டுக் காண்போம்.

கிருஷ்ண பரமாத்மாவைக் கொல்ல வந்த அத்தனை எதிரிகளுக்கும் ஒவ்வொரு அசுரன் பெயர் கொடுத்தோம். அதே போல ஒட்டகம் வளர்த்த ஜராத் உஷ்ட்ரர் – ஐக் கொல்லவந்தவனும் ஒரு அசுரன்தான் . அவன் செய்த செயல்கள் கந்த சஷ்டிக் கவசத்தில் வருவது வியப்புக்குரியதாகும்.

ஒட்டகம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் வருகிறது; இது உஷ்டிர என்ற (USHTRA= OTTAKA IN TAMIL) ஸம்ஸ்க்ருதச் சொல்லின் மருவு.

XXX

அற்புதம் 1

குழந்தைகள் பிறந்தவுடன் அழும் ; இதை எல்லா ஆஸ்பத்திரிகளில் இன்றும் காணலாம் . ஆனால் ஜராதுஷ்ட்ரர் பிறந்தவுடன் சிரித்தாராம் . அவர் பிறந்தவுடன் இயற்கையில் உள்ள செடி, கொடி, மரங்கள் ஆனந்தம் அடைந்தன அவருடைய தலை மிகவும் அதிர்ந்து ஆடியதால் யாரும் அவர் தலையைப் பிடிக்க முடியவில்லை என்று பிளினி ( PLINY 23-79 CE) கி.பி. 23- 79 — இயற்கை வரலாறு NATURAL HISTORY  என்னும் நூலில் எழுதியுள்ளார்.

XXX

அற்புதம் 2

துராஸுரன் என்ற மந்திரவாதியும் அவனுடைய அடியாட்களும் ஜராதுஷ்டிரரைக் கொல்ல  பல தாக்குதல்களை நடத்தினர்.இதை கிருஷ்ணர் மீது கம்சன் நடத்த்திய தாக்குதலுடன் ஒப்பிடலாம்

தராசுரன் அல்லது துர் அசுரன் (DORASURAN= DUR+ ASURA)  என்பதில் வரும் அசுரன் என்ற சொல் முக்கியமானது . அவனுடைய அடியாட்கள், குழந் தையாக இருந்த ஜராதுஷ்டிரரை மாடுகளுக்கு இடையே  மிதிபட்டு சாகட்டும் என்பதற்காக தூக்கி எறிந்தார்கள் . ஆனால் பலம் வாய்ந்த ஒரு பசுமாடு அந்தக் குழந்தைக்கு பாதுகாப்பாக அதன்மீதுகுடை போல நின்றது. பின்னர் குழந்தையைத் த்தேடி வந்த தாய் அதை மீட்டுச் சென்றாள்

இதைக் கன்றால் விளா எறிந்த கிருஷ்ணனின் லீலையுடன் ஒப்பிடலாம்

ஜராதுஷ்ட்ரரின் தாயார் பெயர் பால்காரி; ஸம்ஸ்க்ருதத்தில் துக்தோவா. அவரை யசோதாவுடன் ஒப்பிடலாம்

XXX

அற்புதம் 3

பின்னர் தராசுரன் ஆட்கள், ஒரு ஓநாய் வசிக்கும் இடத்தில் இருந்த குட்டி ஓநாய்களைக் கொன்றுவிட்டு அதன் நடுவே குழந்தை ஜராதுஷ்ட்ரனை வைத்தனர். ஒநாய்க் குட்டிகளின் பெற்றோர்கள் திரும்பிவந்தவுடன் கோபத்தோடு குழந்தையை விழுங்க வாயைத் திறந்த பொழுது அவை அப்படியே அசைக்க முடியாதபடி ஸ்தம்பித்தது PARALYSED. பின்னர் அந்தப் பகுதியில் வந்த பெண் ஆடுகள் குழந்தையைத் தூக்கிச் சென்றன துக்தோவா தன் மகனை மீட்டாள் .

XXXXX

அற்புதம் 4

கடைசி தாக்குதலில் துராசுரனே வருகிறான். ஜராதுஷ்ட்ரர் தூங்கிக்கொண்டு இருந்த படுக்கை அறைக்குள் குழந்தையைக் கொல்வதற்காக வேல் கம்புடன் நுழைகிறான். அவன் அதைத் தூக்கிய அடுத்த நொடியில் அவன் கைகள் பக்கவாதத்தால் தாக்குண்டு அசையாமல் நின்றன. ; கையில் இருந்த வேல்கம்பு  விழுந்து சப்தம் உண்டாக்கவே பயந்து ஓடிவிட்டான்.

அஸுர = சக்தி வாய்ந்த

மஸ்தா = மஹதா / பெரிய  MAHAT= MAZDA; ASURA= STRONG, BOLD

இருபது வயதான போது ஜராதுஷ்ட்ரர் ஒரு குகைக்குள் தியானம் செய்யச் சென்றார் . இது அவர் ஒரு இந்து என்பதைக் காட்டுகிறது . அங்கு ஒளி மிகுந்த ‘ஞான ஒளி’ அசுர மாஸ்தாவைக் கண்டார். அப்போது அவருக்கு வயது 30. மொத்தம் ஏழு முறை இப்படி தரிசனம் கிடைத்தது அவரிடமிருந்து ஆறு செய்திகள் கிடைத்தன  இதை அமேஷா ஸ்பென்ட என்பர்; இதன் மொழி பெயர்ப்பு  அமரத்துவம் மிக்க நன்மொழிகள்.

அமேஷா என்பது அமிர்த என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் போலும்.

AMESHA = AMIRTA IN TAMIL AMUTHA

அற்புதம் 5

அவருடைய முதல் சீடரின் பெயர் மைத்யோமாவோங்க

வைத்ய மஹாதுங்க அல்லது வித்யா மகத் துங்க = அறிவின் சிகரம்

அவர்கள் இருவரும் கிராமம் கிராமமாகச் சென்று பிரசாரம் செய்தனர் எவரும் கேட்கவில்லை.

அவர்களுடைய நல்லதிர்ஷ்டம் ஆப்கானிஸ்தானை ஆண்ட கவி விஸ்டாஸ்பா (SVASTI ASVA) அவர்களை அழைத்து உபதேச மொழிகளை    கேட்டான். மூன்று நாட்களுக்கு ஜராதுஷ்ட்ரர் உபதேசம் செய்தார் ; அரசவையில் இருந்த பொறாமைக்காரர்கள் ஒரு சதி செய்தனர் அவர்கள் எலும்பு, மனித முடி/ரோமம், மாமிசம், அழுகிய நகம்  ஆகியவற்றை ஜராதுஷ்ட்ரர் தங்கியிருந்த சத்திரத்தின் அறைக்குள் ரகசியமாக வைத்தனர் . வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என்று சத்திரக் காவலனை மிரட்டிவிட்டுச் சென்றனர் . பின்னர் அரசனிடம் சென்று, ஜராதுஷ்ட்ரர்  ஒரு ‘மந்திரவாதி’ ‘சூனியக்காரன்’ என்று குற்றம் சாட்டி சத்திர அறைக்குள் இருந்த பில்லி சூன்ய பொருட்களைக் காட்டினார்கள் . உடனே மன்னன் வெகுண்டு எழுந்து,  ஜராதுஷ்ட்ரரை பாதாள சிறைக்குள் அடைக்க உத்தரவிட்டான். அப்போது மன்னனின் அபிமான குதிரை அஸ்ப சீஹா ASVA SEEHA  , தரையில் விழுந்து வலி தாங்க முடியாமல் அலறியது. அதன் நான்கு கால்களும் வயிற்றை நோக்கி வளைந்தது. யார் வந்தும் அதை மீட்க முடியவில்லை. அப் போது கூன் பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக திருஞான சம்பந்தர் மாற்றியது போல ஒரு அற்புதம் நடந்தது

(ஒரு அற்புதமான ஒற்றுமை! பில்லி சூனியம் வைப்போர் என்ன செய்வதாக தேவராய சுவாமிகள் கந்த சஷ்டிக் கவசத்தில் சொன்னாரோ அது ஜராதுஷ்ட்ரர் காலத்தில் ஆப்கானிஸ்தானத்தில் நடந்தது எனக்கு வியப்பைத் தந்தது) அரசனின் குதிரை, வலி தாங்க முடியாமல் தரையில் விழுந்து கதறியது  நாட்டிலுள்ள பிரபல மிருக மருத்துவர்கள் வந்து குணப்படுத்த முயன்றனர். அது பலன் தரவில்லை. ZARATHUHSTRA ஜராதுஷ்ட்ரர் நான் குணப்படுத்துகிறேன். ஆனால் குதிரையின் நான்கு கால்களையும்  குணப்படுத்த 4 நிபந்தனைகள் என்றார் . மன்னனும் ஒப்புக்கொண்டான்.

ஆப்கானிஸ்தானில் நடத்திய அற்புதம் இது.

பாதாள சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜராதுஷ்ட்ரர் அழைத்து வரப்பட்டார். சத்திரக் காவலனும் , அரசவை பொறாமைக்காரர்கள் ஜராதுஷ்டிரருக்கு அவப் பெயர் ஏற்படுத்த படுக்கைக்கு அடியில் எலும்பு, மயிர், மாமிசம், நகம் இவைகளை மறை   த்து வைத்த உண்மையைக் கக்கினான். ஜராதுஷ்ட்ரர் , நிரபராதி என்பது உறுதியானது.

அவர் குளித்துவிட்டு, குதிரையை ஒரு சுத்தமான துணியில் கிடத்தி மந்திரங்களை உச்சரித்து குதிரையின் ஒரு காலைத் தொட்டார். அது நிமிர்ந்து உறுதியாக நின்றது. இதற்கு நீ எனக்கு நிறைவேற்ற வேண்டிய என் முதல் நிபந்தனை இதோ – “மன்னன் விஸ்தஸ்பா என் மதத்தை- என் கொள்கைகளை ஒப்புக்கொள்ளவேண்டும்”.

அவனும் தலை அசைத்து குதிரையின் மற்ற கால்களையும் குணப்படுத்த வேண்டினான்.இரண்டாவது நிபந்தனையை ஜராதுஷ்ட்ரர் சொன்னார் – “என்னை ராணி ஹுதோக்ஷி  வசிக்கும்  அறைக்கு அழைத்துச் செல். நான் என் உபதேசத்தை அருளுவேன். அவள் விருப்பப்பட்டால் அதை ஏற்கட்டும் என்றான். மன்னனும் அவரை தன மனைவி வசிக்கும் அந்தப்புர அறைக்கு அழைத்து செல்ல, அவளும் உபதேசத்தைக் கேட்டு மனம் மகிழ்ந்து, அகம் குளிர்ந்து, அந்த மதத்தைத் தழுவினாள் ; சபைக்குத் திரும்பி வந்த ஜராதுஷ்ட்ரர்  குதிரையின் இரண்டாவது காலை  பிடித்து மந்திரத்தை ஜெபித்தார். அதுவும் குணமாகி காலை நீட்டியது.

குதிரையின் மூன்றாவது கால் இன்னும் வயிற்றை நோக்கி மடித்து கிடந்தது. இப்பொழுது ஜராதுஷ்ட்ரர் மூன்றாவது நிபந்தையை உரைத்தார் – பட்டத்து இளவரசன் ஆகிய அஸ்வந்தியார் என் மதத்தை, நாடு முழுதும் பரப்புவேன்  என்று வாளின் மீது ஆணை – சத்தியம் செய்யவேண்டும் .

அவனும் அதற்கு இசையவே மூன்றவது காலையும் குணப்படுத்தினார் ஜராதுஷ்ட்ரர்.

எனது வியாக்கியானம்

ராணியின் பெயர் சங்க இலக்கியத்தில் உள்ளது. சுத்த அக்ஷி – நல்ல கண் நாயகி = அதாவது நக்கண்ணை= இதன் மற்றோரு ஸம்ஸ்க்ருதப் பெயர் – சுலோசனா.

இலவசனின் பெயர் – அஸ்வ தேவன் என்பதன் திரிபு = அஸ்பந்திய

இப்போது நாலாவது காலை நிமிர்த்த கடைசி நிபந்தனையை ஜராதுஷ்ட்ரர் புகன்றார்.

சத்திரக் காவலனை அழையுங்கள் எப்படி, யார்  பில்லி சூனிய நகம், மயிர், எலும்பு , மாமிசம் முதலியவற்றை என் படுக்கையில் வைத்தது என்ற உண்மையைச் சொல்லட்டும் என்றார் ; அவன் அழைத்து வரப்பட்டான் ; அவன் முழு உண்மைகளையும் கக்கினான். அவன் அரசவையில் அமர்ந்திருந்த பொறாமைக்கார மந்திரி, பிரபுக்களை சுட்டிக்காட்டி இவர்கள்தான் இந்த பில்லி சூனிய, மாந்த்ரீகப் பொருட்களைக் கொண்டு வந்தவர்கள் என்று காட்டினான். உடனே அவர்களைச் சிரச் சேதம் BEHEAD செய்ய மன்னன் உத்தரவிட்டான். ஜராதுஷ்ட்ரர் , மிகவும் கருணையுடன் அவர்களைக் கொல்ல வேண்டாம்; நாடு கடத்தினால் போதும் என்றார். மன்னனும் அப்படியே செய்த்தான் .

குதிரையின் நாலாவது காலையும், மந்திரம் ஜபித்து குணப்படுத்தினார் ஜராதுஷ்ட்ரர் .இளைஞரான ஜராதுஷ்ட்ரர்  அந்த அரசவையின் மூத்த அதிகாரியான பிரசாஸ்திராவின் மகளை மணந்தார் ; அவருக்கு 3 மனைவிகள்; அவர்கள் மூலம் 3 மகன்களும் 3 மகள்களும் பிறந்தனர். 77 வயது வரை வாழ்ந்தார். ஆனால் அவரது கொள்கை பிடிக்காத ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார்.

அவரது மனைவி, மகள் , மகன் — ஆகிய அனைவரின் பெயர்களும் ஸம் ஸ்க்ருதப் பெயர்கள் ‘ எப்படி வெள்ளைக்காரர்களும் கிரேக்கர்களும் தமிழ்ப் பெயர்களை உருக்குலைத்தார்களோ அதே போல அவஸ்தன் மொழியில் ஸம்ஸ்க்ருதத்தை எழுதும் போது அவையும் உருமாறிப் போயின

****

அஸ்வ என்ற சஸ்க்ருதச் சொல்லின் பொருள் குதிரை வ= ப (வங்கம் = பெங்கால்)

ASPA= ASVA

முதலில் அஸ்வ பின்னர் அதன் பெயர் வரும். இது ஜராதுஷ்ட்ரர்  கதை முழுதும் வருகிறது. அவருடைய தந்தை குடும்பப் பெயரில் வெள்ளைக் குதிரை உண்டு. ஸ்வேத அஸ்வ SPITASVA .

SVETA ASVA = SPITASPA

*******

தமிழ்- அவஸ்தன் மொழி (கி.மு.1000) தொடர்பு

அவஸ்தன் (Avestan) மொழி என்பது ஒரு காலத்தில் ஈரான் (பாரசீக Persia) நாட்டில் பேசப்பட்டது. இப்பொழுது அழிந்துவிட்டது. பல புதிய மொழிகளாக உருவெடுத்து ஈரானிலும் ஆப்கானிஸ்தானிலும் வழங்கி வருகின்றன. அவஸ்தன் மொழியில் உள்ள ஒரே இலக்கியம் ஜராதுஷ்டிரரின் (ஜொராஸ்டர்) பார்சி மத நூலான ஜெண்ட் அவஸ்தா (Zend Avesta) ஆகும். இதில் பிற்கால துதிகளும் சேர்ந்துள்ளன . காதா (Gatha) எனப்படும் பழைய பகுதிக்கு, கி.மு 600 முதல் 1000 வரை தேதி குறிப்பிடப்படுகிறது.

தமிழ் மொழியில் காணப்படும் பல சொல் இலக்கணம் இதிலும் காணப்படுவதால், பழைய மொழிக்கொள்கைகள் தவிடுபொடி ஆகின்றன. ஸம்ஸ்க்ருதத்தையும் அவஸ்தன் மொழியையும் ஆராய்ந்த பலருக்கு தமிழ் மொழி பற்றிய ஞானமே இல்லாததால் புளுகு மூட்டைகளை அவி ழ்த்துவிட்டனர் ; கால்டுவெல்  கும்பல், திராவிடர்கள் வந்தேறு குடி ; அது மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து வந்தது என்றது; மாக்ஸ்முல்லர் கும்பல் ஆரியர்கள், காஸ்பியன் கடல் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்றது. இரண்டு கும்பல்களும் இந்தியாவையும் இந்து மதத்தையும் துண்டாட வந்ததால் பல உண்மைகளைக் காணாதது போல நடித்தன.

தமிழில் மிகப்பழைய நூல் தொல்காப்பியம் என்று பெரும்பாலோர் நம்புகின்றனர் . சங்க இலக்கியங்களில் உள்ள 18 மேல் கணக்கு நூல்களில் இகவும் பழமையானது புறநானூறு. இந்த இரண்டிலும் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஈரான் என்னும் பாரசீக நாட்டில் தமிழுக்கும் 1000 ஆண்டுகளுக்கு முந்திய அவஸ்தன் மொழியில் எப்படி மாறியதோ அப்படியே தமிழிலும் மாறி இருக்கின்றன. இந்தத்துறையில் எவரும் இதுவரை ஆராய்சசி செய்யவில்லை. இவை அனைத்துக்கும் மூலம் அவஸ்தன் மொழிக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய ரிக் வேத சம்ஸ்க்ருதத்தில் உள்ளன.

ஒரு மிகப்பெரிய அதிசயம் என்ன வென்றால்  யார் அவஸ்தன் மொழிக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் செய்தார் ? எப்படி அவை ஒரே இலக்கணத்தைப் பின்பற்றுகின்றன? என்பதே. ஒரு சில எடுத்துக்கட்டுகளால் இவற்றை விளக்குகிறேன்.

xxxx

சில விஷயங்களை மட்டும் இங்கே காண்போம்

சங்க காலத்தில் ‘வண்டி’ என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. ‘பண்டி’ , ‘பாண்டில்’ என்று சொன்னால்தான் தெரியும். ‘பாண்டில்’ என்பது பண் டம் ஏற்றிவரும் வாஹனம். பண்டம் என்பதும் சம்ஸ்க்ருதம். சீவக சிந்தாமணியில் ‘பண்டி’ என்ற சொல்லைக் காண்கிறோம் இப்போது ப= வ ஆக மாறிவிட்டது.

இதே போல ரிக் வேதம், காளிதாசன் நூல்களில் உபமா  என்ற சொல்லைக் காண்கிறோம். இதை தொல்காப்பியரும் புறநானூற்றுப் புலவர்களும் உ/வ/மை ஆக்கிவிட்டனர். அதாவது ‘ப= வ’ ஆகிவிட்டது.

இதே ‘ப= வ’ மாற்றம் அவஸ்தன் மொழியிலும் உள்ளது. ரிக் வேதம் ‘அஸ்/வ’ என்று குதிரைக்குச் சொன்னால் அவர்கள் ‘அஸ்/ப’ என்றனர். அதாவது  ‘வ= ப’ ஆகிவிட்டது.

ப=வ ஆனாலும் வ= ப ஆனாலும் சரி; யார் இவர்களுக்கு இப்படி ஒரே இலக்கணத்தைச் சொல்லிக்கொடுத்தனர் ; தமிழை விட 1000 ஆண்டு பழமையானது அவஸ்தன். தமிழை விட 2000, 3000 ஆண்டு பழமை உடையது ஸம்ஸ்க்ருதம் . ஆனால் ஈரான் வரை கன்யாகுமரி வரை ஒரே மாற்றம்!! இன்றும் பங்களா தேஷ் என்பதை வங்க தேசம் என்கிறோம்.

இந்த மாற்றத்துக்கு காரணம் நாம் அறியாத ஒரு இலக்கணம் (அகத்தியம், ஐந்திரம்) இருந்ததைக் காட்டுகிறது .

இது  ஒன்றை  வைத்து மட்டும் நான்  சொல்லவில்லை. பரி / குதிரை வரை  பல பாரசீக சொற்கள் சங்கத் தமிழ் நூல்களிலேயே உள்ளன.

xxxx

வஜ்ராயுதம்  என்பது இந்திரனின் ஆயுதம்  என்பதை எல்லோரும் அறிவோம்.

உலகில்’ ஜ’ J என்னும் எழுத்து சம்ஸ்க்ருதம் தவிர வேறு எந்த மொழியிலும் கிடையாது ; அவஸ்தன் மொழியிலும் கிடையாது. ஆக இந்த ஜ J – எழுத்து செல்லும் பாதையை ஆராய்ந்தால் இந்துக்கள் உலகம் முழுதும் குடியேறிய காலமும் பாதையும் தெரிந்து விடும். இன்று ஜ வர்க்க எழுத்துக்கள் காணப்படும் எல்லா சொற்களையும் அவர்கள் ‘ய’ என்றே உச்சரிக்கின்றனர்

ஜோசப் = யூசூப் ; ஜு= யூத, ஜீசஸ் = ஏசு

வஜ்ர என்ற எழுத்தை பழைய அவஸ்தன் பாரசீக மொழிகளில் ‘வஸ் ஸ ர’ (Wassara)   என்றே உச்சரிப்பர்; ஜ  -வர்க இல்லாத குறை ; தமிழிலும் அவஸ்தன் போல ‘ ஜ ‘ கிடையாது. ஆகையால் புறநானூற்றுப் புலவர் வச் சிர தடக்கையோன் என்றே பாடுகிறார் ; அவஸ்தன், சங்கத் தமிழ் இரண்டிலும் ஒரே அணுகுமுறை.

ஆர்ய என்பது ப்ராக்ருதத்தில் அஜ்ஜ ஆனது; தமிழில் அது ‘ஐயர்’ ஆனது

ர்ய =ஜ்ஜ= ய்ய  (ஜ=ய )

யார் இப்படி தமிழுக்கும் அவஸ்தனுக்கும் ப்ராக்ருதத்துக்கும் இலக்கணம் செய்தனர்?

எனது பதில் – ஸம்ஸ்க்ருதம் மூல மொழி; அது பேச்சு வழக்கில் எப்படி ப்ராக்ருதத்தில் மாறுகிறதோ அப்படியே அவஸ்தனிலும் மாறுகிறது . இவை எல்லாம் காலத்தால் பிந்தியவை.

xxx

அஹம் (நான்) என்ற சொல் அஸம் (Aham- Azam) என்று அவஸ்தனில் மாறுகிறது . இது அஹம் /நான் என்ற சொல்லிலும் பிரதிபலிக்கிறது

 அஹம் என்பது நம்மைப் பற்றியது Personal; குடும்ப விஷயம் ; தமிழில் அக த் துறைப் பாடல்களே அதிகம். புறம் என்பது வெளி உலக (external)  விஷயம்.

 xxxx 

தழிழ் மொழியில் ர அல்லது ல எழுத்துக்களில் சொற்கள் துவங்காது. உடனே ஒரு உயிர் எழுத்தைச் சேர்த்து , 

அ +ரங்கம், உ+லோகம் , இ + லண்டன், இ+ ராமாயணம் என்கிறோம். இதே போல அவஸ்தன் மொழியிலும் அ – என்ற எழுத்தைச் சேர்க்கின்றனர்.

 xxxxx

ஆயிரம் இல்லை!!

அவஸ்தன் மொழியில் சம்ஸ்க்ருத எண்களை அப்படியே காணலாம். ஆயிரம் என்பது இல்லை; பத்து நூறு என்று சொல்லுவார்கள். தமிழில் ஆயிரம் என்பது, சஹஸ்ரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் திரிபு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவஸ்தன் மொழி போல ‘பத்து நூறு’ உண்டு

xxxx

வாய்மை , மெய்மை, உண்மை

உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது உண்மை

சொல்லால் பொய்யாது ஒழுகுவது வாய்மை

உடலால் பொய்யாது ஒழுகுவது மெய்மை!

தமிழர்களைப் போல இவ்வளவு தெளிவாக மனம், மொழி, மெய் ஆகியவற்றின் தூய்மையை விளக்கியவர் எவருளர்?

காயேன, வாசா, மனஸேந்த்ரியைர்வா என்று சொல்வதை – த்ரிகரண சுத்தியை – மிக அழகாக விளக்கிவிட்டனர் தமிழர்கள்!

இதை பார்சி மதத்தினர், பின்வருமாறு சொன்னார்கள்

சு மத = நல்ல மனம்/புத்தி

சு உக்த = நல்ல சொல்/ சூக்தம்

சு வ்ரஷ்ட = சு வரிஷ்ட/ நல்ல செயல்

பாரசீக மொழியில் தமிழ் போலவே துவக்கத்தில் ‘ச ‘ இல்லை. அது  ‘ஹ’ ஆகிவிடும். அதனால்தான் ‘சிந்து’ வெளி மக்களை ‘ஹிந்து’க்கள் என்று அழைத்தனர்.

HUMATA= SU MATHI IN SANSKRIT (H=S)

HUKHTA= SU UKTA IN SANSKRIT

HVRASHTA = SU VARISHTA IN SANSKRIT

VOHU MANO or  BAHMAN = GOOD MIND

இது பகவத் கீதையின் 17 ஆவது அத்தியாயத்தில் 4 ஸ்லோகங்களில் உள்ளது (14-17)

ஆக இரண்டு ஒற்றுமைகள்- 1. தமிழ் போலவே ‘ச’ எழுத்து இல்லை. தொல்காப்பியருக்கு ‘ச’- எழுத்தைக் கண்டால் பிடிக்காது. அதனால் தடை போட்டார். அதையும் மீறி தமிழர்கள் தமிழ் “சங்கம்” வைத்தனர். இது பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய சொல். அதை தமிழர்கள் ‘காப்பி’ அடித்தனர். புத்தர்களும் ஜைனர்களும் பாணினி இறந்து 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் இதைப் பயன்படுத்தினர். ஆண்டாளும் (திருப்பாவை) அப்பரும் (தேவாரம் கி.பி.600) சங்கம் பற்றிப் பாடியுள்ளனர்; அப்பர், தருமி என்ற பிராமணப் புலவன் , நக்கீரனுடன் போட்ட சண்டை பற்றிப் படியிருப்பதால் சமணர்களுக்கும் முன்னதாகவே தமிழ்ச் சங்கம் இருந்தது தெரிகிறது. இது தெரியாத அரை வேக்காடுகள் வஜ்ர நந்தியின் கி.பி.470 சமண சங்கத்தை மட்டும் குறிப்பிடுவர்.

xxxx

குதிரை, பரி , புரவி என்பன தமிழ்ச் சொற்கள் இல்லை. பாரசீக, ஸம்ஸ்க்ருதச் சொற்களைத் தழுவியவை.

அவெஸ்தன் (AVESTAN LANGUAGE) மொழி என்பது வழக்கொழிந்த மொழி. ஈரான் (IRAN= PERSIA) நாட்டில் பேசப்பட்ட மொழி. இதை நன்கு ஆராய்ந்த சம்ஸ்க்ருத அறிஞர் மார்ட்டின் ஹாக் (MARTIN HAUG)  என்ற ஜெர்மானியர் கி.மு. 1000 என்று இதற்கு முத்திரை குத்தியுள்ளார். அவரது முத்திரையை ‘அக்மார்க் முத்திரை’ போல மதிக்கலாம். ஏனெனில் ரிக்வேதம் தொடர்புடைய ஐதரேய பிராமண நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர். ஆகையால் அவர் சொல்லும் எல்லா விஷயங்களையும் ஏற்காவிடினும் மொழி தொடர்பான விஷயங்களுக்கு ஆதாரம் தருவதால் ஏற்புடைத்தே.

ஒரு குடியானவருக்கு மகனாகப் பிறந்தும் நிலத்தை உழுவதற்கு மறுத்துவிட்டு, சம்ஸ்க்ருதம், லத்தீன், கிரேக்கம்,எபிரேய, அவெஸ்தன் மொழிகளை உழுதார். நல்ல அறுவடையும் கண்டார் .சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதிய விஷயங்கள், நூல்கள் முதலியன மீண்டும் மீண்டும் அச்சாகி வருகின்றன. பார்ஸி மதம் என்றும் ஜொராஸ்டர் ஸ்தாபித்ததால் ஜொராஷ்ட்ரியன் ( Parsi or Zoroastrianism) மதம் என்றும் அழைக்கப்படும் மதத்தின் வேத நூலான ZEND AVESTA ஸ்செண்ட் அவஸ்தா நூலைக் கரைத்துக்குடித்தவர் என்றாலும் மிகையாகாது. அவர் தமிழ் மொழியையும் கற்று இருந்தால் இன்னும் பல அதிசய விஷயங்களை நமக்கு அளித்து இருப்பார்.

அவர் அவெஸ்தன்- மொழி -ஸம்ஸ்க்ருத மொழி பற்றி நிறைய (AVESTAN- SANSKRIT LINK) எழுதியுள்ளார். அதைப் படித்த எனக்கு சில அபூர்வ விஷயங்கள் கிடைத்தன.

2000 ஆண்டு பழமையான தமிழ் மொழியில் சங்க இலக்கியத்தில் ஒரு சில அபூர்வ மொழியியல் விஷயங்களைக் காண்கிறோம். அதாவது ‘ப’ என்னும் ஒலியும் ‘வ’ என்னும் ஒலியும்  இடம் மாறக்கூடியவை .

இன்று வங்காளி மொழியில் பெங்கால், பங்களாதேஷ் BENGAL, BANGLADESH என்று சொல்லக்கூடிய பிரதேசங்களை நாம் வங்கம், வங்காள தேசம் என்றே சொல்கிறோம். அவர்களும் ‘வ’ என்னும் எழுத்து வரும் இடம் எல்லாவற்றையும் ‘ப’ என்று மாற்றுகின்றனர். விபூதி பூஷன் வந்தோபாத்யாய என்ற பிரபல எழுத்தாளரின் பெயரை பிபூதி பூஷன் ப ந்தோபாத்யாய என்றே எழுதுவர் ..

ஆனால் இந்த வ=ப மாற்றம் சங்க இலக்கியத்திலேயே இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. வேதத்தில் ‘தபஸ்’ என்று எழுதியதை திருவள்ளுவரும் அவருக்கு முந்தைய சங்க காலப்புலவர்களும்  ‘தவம்’ என்றே எழுதுகின்றனர். இது ஒரு இடத்தில் மட்டும் அல்ல. பல இடங்களில் வருகிறது .

தமிழில் ‘ச’ எழுத்தில் சொற்களை துவக்கக் கூடாது என்று தொல்காப்பியர் தடை விதித்தார்.ஏன் என்றே தெரியவில்லை. ஆனால் அதிசயம் என்னவென்றால் பழைய கிரேக்கத்திலும் அவஸ்தம் மொழியிலும் ‘ச’ ஒலி கிடையாது. சிந்து நதிக்கப்பால் வாழ்ந்த நம் எல்லோரையும் ‘ச’ எழுத்து இல்லாததால் ஹிந்து இரு சொன்னார்கள். இது அவஸ்தன் மொழியிலும் மன்னர் DARIUS டேரியஸ் கால பெஹிட்ஸன் BEHITSUN  க்யூனிபார்ம் லிபி கல்வெட்டிலும் உள்ளது அதாவது ‘ச’ என்று நாம் சொன்னால் அவர்கள் ‘ஹ’ என்பர்!

ஸபா= அவை

ஆக தமிழர்களைப் போலவே அவர்களும் ச- வை பயன்படுத்தவில்லை; குறைந்தபட்சம் முதல் எழுத்தாக பயன்படுத்தவில்லை

இதை நாம் சங்க இலக்கியத்திலும் காண்கிறோம். ‘ஸபா’ என்பது ரிக் வேத சொல். அதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது தமிழ் மொழி.

’ஸபா’ என்பதை இன்றும் லோக் ஸபா, ராஜ்ய ஸபா என்பதில் பயன்படுத்துகிறோம் தமிழிலும் சட்ட மேலவை என்பதில் பயன்படுத்துகிறோம் ஸபா= அவை .

ச எழுத்தில் சொற்கள் வராது என்பதால் அ – வைப் போட்டோம்.

தபஸ்= தவம் என்னு மாறியது போல ப- வுக்குப் பதில் வ- வைப் போட்டோம் ; ஆக சபா= அவை ஆனது.

இதில் இன்னொரு விந்தையும் உள்ளது.

ஸம்ஸ்க்ருதத்தில் எங்கெங்கு எல்லாம் ‘ஆ’ வருகிறதோ  அவை எல்லாம் தமிழில் ‘ஐ’ ஆகிவிடும்

கீதா= கீதை; ஸபா = அவை ; சீதா = சீதை.

ஆக சபா என்ற சொல்லை தமிழர்கள் சங்க காலத்திலேயே அவை என்று மாற்றியதில் மூன்று விதிகளைப் பின்பற்றியுள்ளனர்.!!!!

இந்த ப= வ அதிசயம் இத்தோடு நிற்கவில்லை. அவஸ்த்ன்  மொழி தமிழை விட சுமார் 1000 ஆண்டுப் பழமையானது. அஙகும் பல சொற்களில் இதைக் காணலாம். அஸ்வ ASVA என்றால் குதிரை என்பது பலருக்கும் தெரியும். ராமாயணத்தில் கூட அஸ்வ மேத யாகம் பற்றிக் கேள்விப்படுகிறோம்.

அஸ்வ ASVA என்பதை அவஸ்தன் மொழியில் அஸ்ப ASPA OR ASBA என்றே எழுதியுள்ளனர். வ= ப ஆக மாறிவிட்டது.

இதை அவெஸ்தன், தமிழ், தற்கால வங்காளி மொழி ஆகியவற்றில் காண்பதால் எனது கொள்கையும் உறுதி ஆகிறது. அதாவது உலகின் இரண்டு பழைய மொழிகளான சம்ஸ்க்ருதம்- தமிழ் ஆகியவற்றிலிருந்தே பழைய மொழிகள் தோன்றின.

இரண்டாவது கொள்கை- திராவிட மொழிக் குடும்பம் என்பது சம்ஸ்க்ருதத்தில் இருந்து வேறு குடும்பம் அல்ல. இரண்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையே. பிரித்தாளும் சூழ்ச்சிமிக்க வெள்ளையர் செய்த புரட்டு வேலை இரு மொழிக் குடும்ப கொள்கையாகும்.

தமிழ் ல,ர ஆகிய எழுத்துக்களில் சொற்களைத் துவக்க மாட்டோம். அதன் முன்னர் ஒரு உயிர் எழுத்தைச் சேர்த்து எழுதுவோம் –

ராமன் = இராமன்; லண்டன் = இலண்டன்; லோகம் = உலோகம்.

இதே போல மிக முக்கியமான ரிக்வேதச் சொல் ‘ருதம்’ என்பதற்கு முன்னர் அவெஸ்தன் மொழியிலும் அ- சேர்த்தே எழுதியுள்ளனர்

அ + ர்தம் = அர்த்த ஆகியுள்ளது . பல மன்னர் பெயர்களிலும் உண்டு.

RTM= RHYTHM= RUTH= TRUTH=ARDA

தமிழில் கோ என்றால் மன்னன் , பசு மாடு , இறைவன் என்று பொருள் ; ஆங்கிலத்தில் பசு = கவ் COW என்பதும் கோ என்பதிலிருந்தே வருகிறது  . அவெஸ்தன் மொழியிலும் கவ்ஸ் GAUS என்பதே மாட்டின் பொருள் .

கிரேக்கர்களைப் போல பல சொற்களுடன் ஸ் S ஒலி  சேர்க்கிறார்கள் .

தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் ஆண்பால் சொல்லை பெண்பாலாக்க இ – சப்தத்தை சேர்ப்பார்கள் பவ = பவானி ; சிவா = ஷிவானி; காலன் = காளி ; நரன் = நாரி

இது சம்ஸ்க்ருதத்திலும் அவெஸ்தனிலும் தமிழிலும் உளது

நர, நாரீ = சம்ஸ்க்ருதம், அவெஸ்தன்

தமிழில் குறவன்= குறத்தி ; இறைவன் – இறைவி, தேவன்- தேவி , ஆயர்- ஆய்ச்சி , கிழவன் = கிழவி, கிழத்தி

இஃது தமிழ் மொழிக்கு 700 ஆண்டுக்கு முந்தைய பாணினி இலக்கணத்தில் உள்ளது:-

பவ= பவானி, சிவா= ஷிவானி, வருண = வருணானி

புறநாநூறு , திருக்குறளில் உளது போலவே தேவன், தேவி அவெஸ்தானிலும் உள்ளது.

மாதேவன் = மஹாதேவன் , பூதப் பாண்டியன் தேவி

அவெஸ்தன் மொழியிலும் எட்டு வேற்றுமைகள்; தமிழ், ஸம்ஸ்க்ருதத்திலும் எட்டு வேற்றுமைகள்.

ஆயினும் ஸம்ஸ்ருதம் போல ஒருமை, இருமை DUAL , பன்மை அவெஸ்தன் மொழியில் உண்டு. தமிழில் இருமை DUAL  கிடையாது .

காதா GATHA என்னும் சொல்லை பிற்காலத்தில் தமிழில் ‘காதை’ என்றோம்.

(இராம காதை = கம்ப ராமாயணத்தின் ஒரிஜினல் பெயர் )

ஆனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பிராக்ருதத்தில் காதா சப்த சதீ GATHA SAPTA SATI என்னும் 700 காதல் கவிதைகளைக் காணலாம். அதாவது கோதாவரிக் கரை வரை காதா என்னும் சொல் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பரவிவிட்டது. இந்த ரிக்வேத காதா (பாடல்) அவெஸ்தனில் மிக முக்கியச் சொல் ஆகும். அதாவது ஈரான் முதல் கோதாவரி வரை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்ருதம் ஆட்சி செய்து இருக்கிறது அதே நேரத்தில் சம்பா என்னும் வியத்நாமில் CHAMPA= VIETNAM  ஸ்ரீ மாறன் என்ற பாண்டியன் கல்வெட்டும் கிடைக்கிறது. ஈரான் முதல் வியட்நாம் வரை ஸம்ஸ்க்ருதம்!!!

அவெஸ்தனில் 1 முதல் 100 வரை உள்ள எண்கள் சம்ஸ்க்ருதம்.

தமிழ் மொழியைப் போலவே ஆயிரம் என்ற சொல் அவெஸ்தானிலும் இல்லை! சதம்= 100 உண்டு; பத்தாயிரம் உண்டு.

தமிழில் உள்ள ‘ஆயிரம்’,  சஹஸ்ரம் என்ற ரிக் வேத சொல்லின் திரிபு ஆகும் (இது பற்றிய விரிவான கட்டுரையை இங்கு சென்ற வாரம் வெளியிட்டேன்)

தமிழில் பத்து நூறு = 1000 என்று சொல்லுவார்கள் .

நர்சரி பள்ளியில் கூட கணக்கு சொல்லிக் கொடுக்கையில் “பத்து நூறு ஆயிரம் பறந்து வா நீ சீக்கிரம்” என்ற நர்சரி ரைம் பாடலைப் பகர்வர்.

–SUBHAM—

TAGS-130, கடைசி பகுதி, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-130, இந்து மத கலைச்சொல் அகராதி-130, ஜொராஸ்தர், பார்சி மதம், லண்டன் சுவாமிநாதன், ஜராதுஷ்ட்ரர், ஜொராஸ்டர், பார்ஸி, அற்புதம், பில்லி சூனியம், செண்ட் அவஸ்தா, அவெஸ்தன் மொழி- தமிழ் மொழி தொடர்பு

Leave a comment

Leave a Reply