டாக்ஸி டிரைவர்களும் ஆம்புலன்ஸ் டிரைவர்களும் ஆல்ஜைமர் வியாதியால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை! ஏன்?(Post.16,314)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,314

Date uploaded in London – 17 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

18-9-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

டாக்ஸி டிரைவர்களும் ஆம்புலன்ஸ் டிரைவர்களும் ஆல்ஜைமர் வியாதியால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை! ஏன்?

ச. நாகராஜன்

உலகின் மிக மோசமான வியாதிகளுள் ஒன்று ஆல்ஜைமர் நோய்.

(Alzheimer disease). நரம்பியல் சிதைவுகளில் ஆரம்பித்து மறதியில் கொண்டு போய் விடும் இந்த நோய் அறிவாற்றல் இழப்பிற்கும் காரணமாகி விடுகிறது.

ஜெர்மானிய மனநோய் மருத்துவரான அலோயிஸ் ஆல்ஜைமர்  என்பவர் இதை 1906ம் ஆண்டு முதன்முதலில் கண்டுபிடித்து விளக்கினார். ஆகவே அவர் பெயரால் இந்த நோய் அழைக்கப்படுகிறது. 65 வயதுக்கும் மேல் உள்ளவர்களுக்கு வரும் இந்த நோய், வயது அதிகமாக அதிகமாக பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

2024ம் ஆண்டில் மேற்கொண்ட ஒரு பெரிய ஆய்வில் ஒரு அதிசயமான கண்டுபிடிப்பை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

ஜனவரி 2020 முதல் டிசம்பர் 2022 முடிய 90 லட்சம் பேர்களை ஆய்வு செய்ததில் டாக்ஸி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டும் டிரைவர்களுக்கு இந்த ஆல்ஜைமர் நோய் வருவது அரிது என்பதை அவர்கள் கண்டனர்.

வெவ்வேறு விதமான 443 தொழில்களைச் செய்வோரில்  இவர்களுக்கு இந்த நோய் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக அறியப்பட்டது. வயது, பால், இனம், கல்வி உள்ளிட்ட பல காரணங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.நூறு பேருக்கு ஒருவருக்குத் தான் இந்த தொழிலை மேற்கொள்பவர்களுக்கு வருகிறது.

மற்ற ஓட்டுநர்களுக்கு இந்த முடிவு பொருந்தவில்லை என்பது தான் அதிசயம்!

ஆய்வாளர்கள் இதற்கான காரணம் ஆம்புலன்ஸ் மற்றும் டாக்ஸியை ஓட்டும் ஓட்டுநர்கள் தொடர்ந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி அந்த இடம் எங்கிருக்கிறது என்பதைத் தொடர்ந்து ஆராய்ந்து பின்பற்றி ஒரு மேப்பைப் பார்த்தவாறே ஓட்டுவது தான் காரணம் என்கின்றனர்.

இது குறிப்பிட்ட இடத்தை ஏற்கனவே தெரிந்து கொண்டு அதை நோக்கி ஓட்டும் பஸ் டிரைவர்களுக்கோ விமான பைலட்டுகளுக்கோ பொருந்தவில்லை.

ஹிப்போகாம்பஸ் (Hippocampus) எனப்படும் மூளையின் பின்மேடு பகுதியே நினைவாற்றலுக்கும் ஒரு இடத்தை நோக்கிச் செல்வதற்கும் காரணமாக அமையும் பகுதி.

ஆல்ஜைமர் நோய் வருபவர்களுக்கு முதன்முதலில் ஏற்படும் பாதிப்பு இந்த இரு காரணங்களாலேயே அமைகிறது.

2000ம் ஆண்டு மூளையியல் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய ஆய்வில் லண்டன் டாக்ஸி டிரைவர்கள் பன்னிரெண்டு மைல் குறுக்களவிற்குள் சுமார் 25000 தெருக்களை அடையாளம் கண்டு கொள்ளும் திறன் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது தெரியவந்தது. இதை அறிய அவர்கள் குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் டாக்ஸியை ஓட்ட வேண்டும்.

இந்த விசேஷ அறிவை மூளை அறிவாற்றல் பற்றிய விஞ்ஞானிகள் அல்லொசெண்ட்ரிக் ரீசனிங் (Allocentric Reasoning) என்ற பெயரால் குறிக்கின்றனர்.

இதனால் அவர்களது ஹிப்போகாம்பஸ் பகுதி அதிக க்ரே மேட்டர் என்னும் சாம்பல் நிறப் பொருளைக் கொண்டிருப்பது அறியப்பட்டது.  நாட்கள் அதிகமாக அதிகமாக இந்தப் பகுதியும் சாம்பல் நிறப் பொருளை அதிகமாக்குகிறது.

அதிக சந்து பொந்துகளிலும் சிக்கலான நகர்ப் பகுதிகளிலும் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ஆல்ஜைமர் நோய் குறைவாகவே வருகிறது என்பதை 2023ம் ஆண்டு மேற்கொண்ட ஒரு ஆய்வு கண்டறிந்தது.

இந்த ஆய்வுகளால் தொடர்ந்து இடம் குறித்த அறிவானது ஒருவருக்கு ஆல்ஜைமர் நோய் வருவதைத் தடுக்குமா என்ற கேள்வியை ஆய்வாளர்கள் எழுப்புகின்றனர்.

ஒரே நோயைக் கொண்டுள்ள இரு நோயாளிகளின் அறிவாற்றல் ஏன் வேறுபடுகிறது என்பதற்கு ‘இடம் குறித்த இந்த அறிவு’ தான் காரணம் என்றால் அதை பயிற்சி மூலம் அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்!

நிலப் படங்களை வரைவோர், நகர் சார்ந்த பகுதிகளைத் திட்டமிடுவோர் மற்றும் இடம் சார் பதுப்பாய்வாளர்கள் (Cartographer, Urban Planners, Geospatial analysts) ஆகியோர் தொடர்ந்து தங்கள் மூளையை இதில் ஈடுபடுத்துவதால் அவர்களுக்கு ஹிப்போகாம்பஸ் பகுதி வலுப்படும் வாய்ப்பு உண்டு.

ஆகவே ஆய்வாளர்கள் தொடர்ந்து இப்படி இடம் சார்ந்த தொழில்களை மேற்கொள்வோர் மீது ஆய்வுகளைத் தொடரத் தீர்மானித்துள்ளனர்.

டாக்ஸி டிரைவர்களும் ஆம்புலன்ஸ் டிரைவர்களும் தங்கள் தொழில் பற்றி இனி அதிகமாக கர்வம் கொள்ளலாம்.

அவர்களுக்குத் தான் மறதி நோயே வராதே!

**

Leave a comment

Leave a Reply