
Written by London Swaminathan
Post No. 16,319
Date uploaded in London – 18 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இதற்கு முன்னர் வெளியிட்ட 110 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.
xxxxxx
111
மையோ! மரகதமோ! மறிகடலோ!
மழை முகிலோ!
ஐயோ! இவன் வடிவு என்பது ஒர்
அழியா அழகு உடையான்- அய்யய்யோ! ராமனின் அழகை வருணிக்கவே முடியாது என்று ஒரு பாட்டினை ஆச்சர்யக் குறியுடன் முடித்த கம்பன், அடுத்த பாட்டில் சீதை பற்றி என்ன சொன்னான் ?
112
கங்கையை தெய்வ நதி என்று கம்பன், முத்திரை குத்தியது ஏன்?
113
கங்கை நதியில் குளித்தால் பாவம் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ; ராமனும் சீதையும் குளித்ததால் என்ன விளைவு ஏற்பட்டது ?
114
கங்கைக் கரை வேடர் தலைவனாகிய குகன் காலில் என்ன (நைக்கி -அடிடாஸ் -பூமா ???) பூட்ஸ் அணிந்திருந்தான் ?
115
ராமனும் லெட்சுமணனும் சீதையுடன் தண்டகாரண்ய காட்டுக்குள் நுழைந்தவுடன் விராதன் என்னும் அரக்கன் தோன்றினான் ; அவனுடைய பூதாகார உடலை கம்பன் எவ்வாறு நமக்கு சித்தரிக்கிறான் ?
116
ராமனால் வதம் செய்யப்பட விராதனின் பூர்வீகக் கதை என்ன ?
117
ஓம்! ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்
ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அத்யதிஷ்டத் தசாங்குலம்- என்று ரிக் வேதத்தில் புருஷ சூக்தத் துதியில் இறைவனின் விஸ்வரூபம் வருகிறது ; அதை விராதன் வாய் மொழியாகக் கேட்போமா ?
118
நாம் எல்லோரும் பார்த்து வியக்கக்கூடிய விஷயம்: எப்படி ஒவ்வொரு கன்றும் அதன் தாய்ப்பசுவைக் கண்டுபிடிக்கிறது? நமக்கோ எல்லாம் ஒன்றுபோலவே தோன்றுகிறதே ! இதைக் கம்பன் எவ்வாறு சாதுர்யமாகப் பயன்படுத்துகிறான் ? நாலடியாரில் உள்ள சமணர் பாடலுக்கு கம்பன் மறுப்பு சொல்வது எங்ஙனம் ?
119
ஐரோப்பிய நாடு ஒன்றில் இந்து சந்நியாசி தீப்புகுந்து உயிர்விட்டு எல்லோரையும் விய ப்பில் ஆழ்த்தினார் ; அலெக்ஸ்சாண்டர் முன்னிலையில் ஒரு இந்து சந்நியாசி தீக்குளித்து அவனை வியப்பில் ஆழ்த்தினார் ; புகழ் பெற்ற தமிழ்ச் சங்கப்புலவர் கபிலர், திருக்கோவிலூர் அருகில் தீப்புகுந்து உயிர் நீத்த இடம் கபிலர் கல் என்ற பெயரில் உள்ளது ; ஆதி சங்கரர் வாதம் புரிய வந்தபோது குமாரில பட்டர் உமி யைக் குவித்து, தீ மூட்டி அதன் நடுவே இருந்து உயிர் நீத்துக் கொண்டிருந்தார் ; ராமன் வரவுக்காகக் காத்திருந்த சரபங்க முனிவரும் தீயில் புகுவதற்கு ராமனிடம் அனுமதி கேட்டது எப்படி?
120
சரபங்க முனிவர் தீக்குளிக்க ராமன் அனுமதி கொடுத்தானா ? முனிவர் மனைவியுடன் தீயில் புகுந்தாரா ? மோட்சம் கிடைத்ததா ? கம்பனின் கருத்து என்ன?
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

விடைகள்

111.அளி அன்னது ஓர் அறல் துன்னிய
குழலாள், கடல் அமுதின்
தெளிவு அன்னது ஓர் மொழியாள்,
நிறை தவம் அன்னது ஓர் செயலாள்
வெளி அன்னது ஓர் இடையாளொடும் –
விடை அன்னது ஓர் நடையான் –
களி அன்னமும் மட அன்னமும்
நடம் ஆடுவ கண்டான்.
வண்டைப் போன்ற (கரிய) ஒப்பற்ற, கருமணல் நெருங்கி இருப்பது போன்ற கூந்தலை உடையவளும், கடலைக் கடைந்து எடுத்த அமிழ்தம் போன்ற ஒப்பற்ற பேச்சினை உடையவளும்,
நிறைந்த தவத்தைப் போன்ற ஒப்பற்ற தூய செயலை உடையவளும்,
ஆகாயம் போன்ற ஒப்பற்ற இடையினை உடையவளுமாகிய சீதையோடும், காளை மாட்டினைப் போன்ற ஒப்பற்ற நடையினை உடைய இராமன், செருக்கினை உடைய ஆண் அன்னமும், மடப்பத்தை உடைய பெண் அன்னமும் சேர்ந்து உலாவிடுவதைக்
கண்டான்.
தானும் சீதையும் நடப்பது போன்ற குறிப்பினை அவற்றின்பால் கண்டான் இராமன் என்க. அன்னங்கள் நடப்பது நடனம் ஆடுதல் போல உள்ளது என்ற பொருளும் உண்டு
***********
112.மூவரும் நடந்து கங்கை நதியை அடைந்தனர் ; அந்த ஆறு சிவன் தலை முடியில் விழுந்து, ஹரித்வாரில் விஷ்ணுவின் பாதங்களை வருடி வந்ததோடு, தவம் புரியும் முனிவர்கள் வசிக்கும் இடம் என்பதைச் சுட்டி, தெய்வ ஆறு என்றான் கம்பன் :
கங்கை என்னும் கடவுள் திரு நதி
தங்கி வைகும் தபோதனர் யாவரும்,
‘எங்கள் செல் கதி வந்தது’ என்று ஏமுறா,
அம் கண் நாயகற் காண, வந்து அண்மினார்.
கங்கை என்ற தெய்வத்தன்மைஉடைய அழகிய ஆற்றின் கரையில்,
தங்கி இருக்கின்ற முனிவர்கள் எல்லாரும், எங்களுக்கு மோட்ச மாகிய செல்வம் நல்கும் தெய்வம் எதிர்ப்பட்டது என்று இன்பம் அடைந்து, அருளுடைய கண்களை உடைய இராமனைக் காண்பதற்கு
வந்து அணுகினார்கள்.
பரம்பொருளே இராமனாக அவதரித்துள்ளமை உணர்ந்தவர் ஆதலின்,‘எங்கள் செல்கதி வந்தது’என்று முனிவரர் இன்புற்றனர் என்க. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது ! எனலாம் .
***********
113.ராமனுக்கும் கூட வந்த இருவருக்கும் காட்டில் விளைந்த வெஜிட்டேரியன் பண்டங்களை முனிவர்கள் கொணர்ந்தனர்; அவர்களை நீராடச் சொன்னார்கள் ; அதனால் பாவம் நீக்கும் கங்கையின் சக்தி அதிகரித்ததாம் !
செய்ய தாமரைத் தாள் பண்டு தீண்டலால்
வெய்ய பாதகம் தீர்த்து விளங்குவாள்
ஐயன் மேனி எலாம் அளைந்தாள், இனி,
வையம் மா நரகத்திடை வைகுமே?
சிவந்த செந்தாமரை போலும், திருமாலின் (இராமனின்) திருவடிகள் பண்டு தொடப்பெறுதலால், உலகோரது கொடிய பாவங்களை
எல்லாம் போக்கி விளங்குபவளாகிய கங்கை, இப்போது இராமனாகிய
திருமால் நீராடலால், இனிமேல்,கங்கையில் முழுகும் இவ் உலகம்;
கொடிய நரகத்தில் தங்கவே தங்காது.
ஹரித்வார் என்னும் புனிதத் தலத்தில் விஷ்ணுவின் காலடி மட்டுமே பட்டது; அதற்கே பிரம்மாண்ட சக்தி கங்கை நதிக்கு கிடைத்தது; இப்போது விஷ்ணுவின் அவதாரமாகிய இராமனின் உடல் முழுதும் கங்கையில் பட்டதால் இனிமேல் நரகத்துப் போவார் இல்லை ( கங்கையில் குளித்தால்)
**********
114. குகனின் தோற்றம்
துடியன், நாயினன், தோற் செருப்பு ஆர்த்த பேர் –
அடியன், அல செறிந்தன்ன நிறத்தினான்,
நெடிய தானை நெருங்கலின், நீர் முகில்
இடியினோடு எழுந்தாலன்ன ஈட்டினான்.
குகன் துடி என்னும் பறை உடையவன்;
வேட்டைநாய்களை உடையவன்; தோலாற் செய்த மிதியடிஇறுக்கிய பெரிய பாதங்களை
உடையவன் இருள்நெருங்கித்
திரண்டால் ஒத்த கருநிறம்(காக்கா கருப்பு) உடையவன்
தன்னுடையமிகப்பெரிய சேனை நெருங்கி் வருதலின்
பெய்யும் மேகம், இடியோடு கூடி மேற் கிளம்பினாற் போன்ற தன்மைகொண்டவன்.
**********
115.விராதன் என்னும் அரக்கனின் தோற்றம் :
பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்டு, புதிது என்று
ஓத ஒத்த உருவத்தன்; உரும் ஒத்த குரலன்;
சீத உத்தமியை, ‘இப் பொழுது தின்பென்’ என, வாரிப்
பாதபத்தோடு எழு விந்த நல் வரைப் பான்மையன் வந்தான்
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து மகாபூதங்களும் தங்களின் தனித்தனித் தன்மைகளை விடுத்து, ஒன்றாகச் சேர்ந்து ஒரு புதிய வடிவத்தை எடுத்தது போல மிக பிரம்மாண்டமான உடலமைப்பைக் கொண்டவன். இடி முழக்கத்தைப் போன்ற பயங்கரமான குரலை உடையவன்.
கற்புக்கரசியான சீதாப்பிராட்டியை “இப்போதே பிடித்துத் தின்றுவிடுவேன்” என்று கூறித் தன் கைகளால் அள்ளி எடுத்தான்.
மரங்களோடு சேர்த்துப் பெயர்த்துக் கொண்டு மேலே எழுகின்ற மலை போன்ற தோற்றத்துடன் அந்த அரக்கன் வந்தான்.
**********
116.குபேரனின் சாபத்தால் அரக்கனாக மாறிய ‘தும்புரு’ என்ற கந்தர்வன் (விராதன்), ராமபிரானின் கரங்களால் வதம் செய்யப்படுபோது சாபவிமோசனம் பெற்று மீண்டும் தனது பழைய திவ்ய வடிவத்துடன் விண்ணுலகில் தோன்றுகிறான் :
விராதன் சாபம் நீங்கி விண்ணில் எழும் காட்சியை விவரிக்கும் பாடல் இதோ:
பட்ட தன்மையும் உணர்ந்து, படர் சாபம் இடர் தீர,
முட்ட வந்த விதியால், முரண் அரக்கன் வடிவு நீங்கி,
வட்ட வான் முகடு உகப்ப, ஒளி மல்கு திசை விளங்க,
நட்ட நல் நடன நாதன் என, விண்மிசை நவிற்றா.
இராம லட்சுமணர்களால் தன் தோள்கள் வெட்டப்பட்டு, பள்ளத்தில் புதைக்கப்படும் போது விராதன் தன் அரக்க உடலின் பிணிப்பு நீங்குவதை உணர்கிறான். தனக்கு நேர்ந்த துன்பங்கள் நிறைந்த சாபம் முடிவுக்கு வந்ததையும், அதற்குத் தன் விதிப்பயனே காரணம் என்பதையும் அறிகிறான்.
அடுத்த கணமே அவனது கொடிய அரக்க வடிவம் மறைந்து, வானுலகமே மகிழும்படியும் திசைகள் யாவும் ஒளிரும்படியும், நடனமாடும் சிவபெருமானைப் போன்ற பேரொளியோடு கந்தர்வ வடிவம் பெற்று விராதன் விண்ணுலகில் (வானில்) தோன்றினான்.
**********
117. இராமா, உன்னுடைய திருவடியே இப்படி என்றால், உன் பெருமை எப்படியோ இருக்குமோ என்று சிலிர்க்கிறார் கம்பர்.
“வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னின், படிவங்கள் எப்படியோ?
ஓதம் கொள் கடல் அன்றி, ஒன்றினோடு ஒன்று ஒவ்வாப்
பூதங்கள்தொறும் உறைந்தால், அவை உன்னைப் பொறுக்குமோ?”
எல்லையற்ற உலகங்கள் உள்ளன என்று வேதங்கள் உரக்கக் கூறுகின்றன. அத்தகைய உலகங்கள் முழுவதிலும் பரந்து விரிந்திருப்பது உன்னுடைய திருவடிகளாகும். உனது பாதங்களே இவ்வளவு பிரம்மாண்டமாகப் பரவியிருக்கிறது என்றால், உனது முழு வடிவமும் (படிவமும்) எப்படியோ?
அலைகளைக் கொண்ட கடலோடு மட்டுமல்லாமல், ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட பஞ்சபூதங்களிலும் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) நீ கலந்து வாழ்கிறாய். அப்படிப்பட்ட உன்னுடைய பேராற்றலை அந்தப் பூதங்கள் எவ்வாறு தாங்கிக் கொள்கின்றனவோ? என்று விராதன் இராமபிரானின் விஸ்வரூபத்தை வியந்து துதிக்கிறான்.
முதலையால் பிடிக்கப்பட்ட கஜேந்திரன் என்னும் யானைக்குதவிய கதையையும் சொல்லி விராதன் துதிக்கிறான்.
*************
118.’தாய் தன்னை அறியாத கன்று இல்லை; தன் கன்றை
ஆயும் அறியும்; உலகின் தாய் ஆகின், ஐய!
நீ அறிதி எப் பொருளும்; அவை உன்னை நிலை அறியா;
மாயை இது என்கொலோ?-வாராதே வர வல்லாய்!
• தாய் தன்னை அறியாத கன்று இல்லை: எந்தவொரு கன்றும் தன் தாயை அடையாளம் காணாமல் இருந்ததில்லை.
• தன் கன்றை ஆயும் அறியும்: அதுபோலவே, தாய் பசுவும் தன் கன்றை அறிந்து கொள்ளும்.
• உலகின் தாய் ஆகின், ஐய! நீ அறிதி எப்பொருளும்: ஆனால் ஐயனே, நீயே இந்த உலகமனைத்திற்கும் தாயாக விளங்குபவன்; ஆதலால் நீ அறியாத பொருள் உலகில் ஏதுமில்லை.
• அவை உன்னை நிலை அறியா; மாயை இது என்கொலோ?: ஆனால் உன்னைப் படைத்த அந்த உலகப் பொருள்களோ உனது உண்மையான நிலையை அறியாமல் இருக்கின்றன; இது என்ன வியப்புக்குரிய மாயையோ!
• வாராதே வர வல்லாய்: அடியார்களுக்கு எட்டாதவராகத் தோன்றினாலும், மிக எளியவராக அவர்கள் முன் வந்து அருளும் வல்லமை கொண்டவனே
நாலடியார் செய்யுளில் சமண மதக்கொள்கைகளை வலியுறுத்த ஒரு புலவர் கன்று- தாய்ப் பசு உவமையைப் பயன்படுத்துகிறார் ; விதி என்பது தானாக அப்படி ஒவ்வொருவனையும் கண்டுபிடிக்கும் (சமண மதத்தில் இறைவன் இல்லை) என்பது சமணர் கொள்கை; இங்கு விராதன் இறைவன் பேரில் அதைச் சொல்கிறான் ; ஒருவேளை கம்பன், நாலடியார் பாட்டுக்கு மறுப்பு சொல்கிறான் என்றும் கருதலாம்!
*************
119.ஆயிடை, அறிஞனும், அவன் எதிர் அழுவத்
தீயிடை நுழைவது ஒர் தெளிவினை உடையான்,
‘நீ விடை தருக!’ என, நிருபனை உரை நேரா,
சேயிடை நின்ற தன் அருந் தவம் சிதையாமுன்
இராமபிரான் தன் முன்னே வந்து நிற்பதைக் கண்ட சரபங்க முனிவர் (அறிஞன்), தான் எண்ணியபடியே அவனுக்கு எதிரே எரியும் வளர்த்திய வேள்வித் தீயினுள் இறங்கித் தன் உடலை நீக்கப் போகும் தெளிந்த முடிவை உடையவரானார்.நெடுங்காலமாகத் தான் செய்து வந்த அரிய தவம் அழிந்து போவதற்கு முன்னதாகவே, தன் உடலைத் தீயில் மாய்த்துக்கொண்டு உயர் பதம் அடைய நினைத்த அவர், உலகாளும் வேந்தனான இராமனை நோக்கி, “எனக்குத் தீயில் புக விடை தந்து அருளுவாயாக!” என்று வேண்டினார்.
*************
120. ராமன் கேட்கிறான்: நான் வரும்போது நீவீர் தீயில் புகுவதற்குக் காரணம் என்ன ? உடனே சரபங்க முனிவர் நான் நீண்ட தவம் செய்தென்; இந்திரன் வந்து தேவலோகத்துக்கு அழைத்தான் ; நான் செல்ல மறுத்துவிட்டேன் ; உன்னைக் கண்டவுடன் என் இரு வினைகளும் போயின ; ஆகையால்தான் இந்த முடிவு ; ராமனும் இணங்கினான் ; சரபங்கன் மோட்சம் அடைந்தான் ; கம்பனும் முனிவர் தீப்புகுந்ததை சரி என்கிறான் இதைவிட பெரும்பேறு யாருக்குக்கிட்டும் என்று வியக்கிறான்
இராமன் வினாவும் முனிவன் விடையும் (2716-2718)
‘யான் வரும் அமைதியின் இது செயல் எவனோ ?
மான் வரு தனி உரி மார்பினை ! ‘எனலும் ,
மீன் வரு கொடியவன் விறல் அடு மறவோன் ,
ஊன் வரும் உவகையின் உரை நனி புரிவான் .
மான் தோலைப் போர்த்திய ஒப்பற்ற மார்பினை உடையவரே!நான் இங்கு வந்துள்ள இந்தத் தருணத்தில், நீர் (தீயில் புகுந்து) உயிர்விடும் இச்செயலைச் செய்வது ஏனோ? – இராமன்
xxx
2718 இந்திரன் அருளினன் இறுதிசெய் பகலா
வந்தனன் ,’மருவுதி மலர் அயன் உலகம்
தந்தனன் ‘என ,’அது சாரலென் ‘உரவோய் !
அந்தம் இல் உயர் பதம் அடைதலை முயல்வேன் .
இராமனே! சற்றுமுன் தேவர்களின் தலைவனான இந்திரன், என்னுடைய பூவுலக வாழ்வின் இறுதிநாளைக் கணித்து, எனக்கு அருள் செய்வதற்காக இங்கு வந்திருந்தான்.அவன் என்னிடம், ‘முனிவரே! தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனின் உலகத்தை (பிரம்ம லோகம்) உமக்கு நான் பரிசாகத் தருகிறேன்; நீர் அங்கு வந்து மகிழ்ந்திருப்பீராக!’ என்று கூறி என்னை அழைத்தான்;அவனிடம், ‘எனக்கு அந்தப் பிரம்ம லோகப் பதவி வேண்டாம்’ என்று கூறி மறுத்துவிட்டேன். ஏனெனில், உன்னை அடைவதன் மூலம் மட்டுமே கிடைக்கக்கூடிய, அழிவில்லாத, எல்லையற்ற உன்னதப் பதவியாகிய முக்தியை (வீடுபேற்றை) அடையவே நான் முயல்கிறேன்”
xxx
‘ஆதலின் இது பெற அருள் ‘என உரையாக்
காதலி அவளொடு கதழ் எரி முழுகிப்
போதலை மருவினன் ; ஒரு நெறி புகலா
வேதமும் அறிவரு மிகு பொருள் உணர்வோன் .
“ஆதலால் நான் வேண்டிய இந்த முக்தியைப் பெற நீ அருள் செய்வாயாக” என்று இராமபிரானிடம் வேண்டி, சரபங்க முனிவர் தனது அன்பான மனைவியோடு சேர்ந்து, வேகமாக எரியும் அக்கினியில் (தீயில்) மூழ்கி மறைந்தார். அவ்வாறு மறைந்த அவர், பொன்னிறமான அழகிய பிரம்மாவின் உலகத்தை அடைந்து பேரின்பப் பெருவாழ்வு பெற்றார்
கம்பர் வியப்பு!
‘அண்டமும் அகிலமும் அறிவரும் நெறியால்
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு
எண் தவ நெடிது ‘எனின் , இறுதியில் அவனைக்
கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ ?
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அண்டங்களையும், உலகங்களையும் யாரும் அறிய முடியாதபடி தன் வயிற்றுக்குள் அடக்கிக் காத்த பெருமான் (மகாவிஷ்ணுவின் அவதாரமான இராமன்).
அவனுடைய ஒப்பற்ற திருநாமத்தை (இராம நாமம்) வாயாரச் சொல்லி, மனதால் சிந்திப்பவர்கள் அடையும் நன்மைகளும் பேறுகளும் அளவிட முடியாதவை; அவை மிகப் பெரியவை.
அப்படியிருக்க, பிறவிப் பெருங்கடலின் இறுதியில் அந்தப் பரம்பொருளையே நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள் அடையும் முக்தி என்னும் பெரும்பேற்றை நம்மால் வார்த்தைகளால் விவரித்துவிட முடியுமா? (அது எவராலும் எளிதில் மதிப்பிட முடியாத பேரானந்தம்!)
–subham—
Tags- சரபங்க முனிவர், விராதன், கம்ப ராமாயணத்தில் 120 கேள்விகள்