

Written by London Swaminathan
Post No. 16,326
Date uploaded in London – 20 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இதற்கு முன்னர் வெளியிட்ட 130 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.
131
ராமன் கங்கையைக் கடந்தான், பின்னர் காளிந்தி என்னும் யமுனை நதியைக் கடந்தான் ; சித்திர கூடம் சென்றான்; அதன் பின், தண்டக வனத்தில் நுழைந்தான்; அங்கு அவனைக் கண்ட வினோதமான முனிவர்கள் யார் ?
132
அரக்கர்கள் கொடுமையால் அந்தணர் செய்யும் அறுதொழிகளைச் செய்ய முடியவில்லை என்று தண்டகாரண்ய முனிவர்கள் புகார் மனு கொடுத்தவுடன் ராமன் என்ன ப்ராமிஸ் PROMISE தந்தான் / சத்தியம் செய்தான் ?
133
ராமனுக்கு 14 ஆண்டுகள் வனவாசம் ; அதில் எத்தனை ஆண்டுகள் தண்டகாரண்யத்தில் ராமன் இருந்ததாக கம்பன் கணக்குச் சொல்கிறான் ?
134
முன்னொரு பாட்டில் தமிழ் எனும் கடல் தந்தவன் என்று அகத்தியனைப் புகழ்ந்த கம்பன் இப்போது ராமரை வரவேற்கையில் நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் – என்று போற்றக் காரணம் என்ன ?
135
“ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன்
கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.” என்று பாரதியார் சொன்னது சரியா? சிவபெருமான்தான் தமிழ் மொழியை உண்டாக்கினார் என்று கம்பனும் சொன்னானா ?
136
அகத்தியர் வருவதற்கு முன்னரே தமிழ் மொழியைத் தமிழ்நாட்டு மக்கள் பேசினார்கள் என்பதைக் கம்பன் எப்படிக் குறிப்பிடுகிறான் ?
137
ராம பிரானுக்கு அகத்தியன் கொடுத்த அற்புத ஆயுதங்களின் சக்தி என்ன? அவை சிவனிடமிருந்து வந்தனவா? விஷ்ணுவிடமிருந்து வந்தனவா? சுவையான வாதப்பிரதி வாதங்கள் என்ன ?
138
GOOD BYE, RAMA! CHALO, CHALO ! PANCHAVATI CHALO! குட் பை! ராமா; பஞ்ச வடி சலோ! ஜல்தி சலோ! என்று அகத்தியன் சொன்னபோது கம்பன் எப்படி, தான் பிறந்த காவிரி நதி தீரத்துக்கு தேங்க்ஸ் THANKS சொன்னான் ?
139
ராமனும் லட்சுமணனும் ஜடாயுவைச் சந்த்திக்கின்றனர் ; அந்தப் பறவை யமனுக்கு தினமும் விருந்து படைக்கும் என்கிறானே கம்பன் !
140
ராம லட்சுமணர், சீதையுடன் வருவதைக் கண்டவுடன் ஜடாயு மனதில் தோன்றிய எண்ணம் என்ன ?
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


விடைகள்
131.பண்டைய அயன்
தரு பாலகில்லரும்,
முண்டரும், மோனரும்,
முதலினோர்கள் அத்
தண்டக வனத்து உறை
தவத்துளோர் எலாம்
கண்டனர் இராமனை,
களிக்கும் சிந்தையார்.
முதன் முதலில் தோன்றிய பழமையான பிரமதேவன் பெற்றவர்களாகிய பாலகில்லரும்; முண்டரும் -மழித்த தலையை உடையவர்களும்; மோனரும் – மௌன விரதம் பூண்டவர்களும்; முதலியவர்களாகிய அந்தத் தண்டகாரணியம் எனும் காட்டில் வாழ்கின்ற முனிவர்கள் இராமனைக் கண்டனர்; ஆனந்தம் அடைந்தார்கள்
பாலகில்லர் – வாலகில்யர் பிரமனது மயிரிலிருந்து தோன்றியவர்கள்; அவனுடைய மானச புத்திரர்கள்; இவர்கள் அறுபதினாயிரவர் என்பர்; பெருந்தவம் புரிந்தவர்கள்; இவர்கள் கட்டைவிரல் அளவுள்ள குறுவடிவினர்; நாளும் கதிரவனின் இரதத்தை வலம் வந்து கொண்டிருப்பவர்.
xxx
இவர்களைப்பற்றி 2012-ல் இதே பிளாக்கில் எழுதிய அதிசய விஷயங்கள் இதோ:
“நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர் கனலி வெம்மை தாங்கிக்
கால் உணவாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருள கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீ இத்
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்”
—புறம் 43 தாமப் பல் கண்ணனார் (இது நரசிம்மன் என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு; நரசிம்ம காயத்ரியில் அவருடைய பெயர் தம் ஸ்ட்ர தந்த= தாமப் பல் )
“செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு
வண்புகழ் இறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள்
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியத்
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை”
——திருமுருகாற்றுப்படை 106-109
“சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்
அடல் வலி எயினர் நின் அடிதொடு கடனிது”
—-சிலப்பதிகாரம் (வேட்டுவ வரி 15.அவிப் பலி)
“வசை தவிர் ககன சரசிவ கரண
மகாவ்ருத சீல சால வரமுனி சித்தரை
அஞ்சல் என்று வாழ்வித்து நின்றன”
—அருணகிரிநாதர் (புயவகுப்பு)
வாலகியர்கள் எனப்படும் 60,000 குள்ள முனிவர்கள் பற்றி ரிக் வேதமும் தமிழ் நூல்களும் சுவையான பல செய்திகளைத் தருகின்றன. ரிக் வேதத்தின் எட்டாவது மண்டலத்தில் பிற்சேர்க்கையாக 11 பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவைகளைப் பிற்சேர்க்கை என்பதால் வேதத்துக்கு உரை எழுதிய சாயணர் இந்தப் பகுதிக்கு உரை எழுதவில்லை. ஆனால் ராமாயணம், மஹாபாரதம் மற்றும் புராணங்களில் இவர்களுடைய வரலாறு உள்ளது.இவர்களுடைய வரலாற்றில் பல வியப்பூட்டும் விஷயங்கள் இருக்கின்றன.
ஆங்கிலத்தில் ஜோனதன் ஸ்விப்ட்(Gulliver’s Travels by Jonathan Swift) என்பவர் கல்லிவரின் பயணம் என்ற ஒரு நாவலைப் படைத்தார். கல்லிவர் தனது பயணத்தில் லில்லிபுட் என்ற நாட்டுக்குப் போனபோது எல்லோரும் விரல் அளவுக்கே இருந்ததால் அந்த இடத்தில் கல்லிவர் என்ன என்ன சாஹசங்கள் செய்தார் என்று கதை மிக சுவையாகப் போகும். அந்தக் கதைக்கான கருத்தை ஜோனதன் ஸ்விப்ட் நமது வேதத்திலிருந்தும் இதிஹாசங்களிலிருந்தும் எடுத்தார் என்றே தோன்றுகிறது. அந்தக் காலத்தில் இந்தியாவைப் பற்றி ஆங்கில நாளேடுகள் நிறைய செய்திகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு சுவையான விஷயம் பூமியிலுள்ள மக்களைக் கதிரவனின் கடுமையான கதிர்களிலிருந்து காப்பது இந்த முனிவர்கள்தான் என்று படிக்கும்போது சில அறிவியல் உண்மைகள் தெரியவருகின்றது. சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் மனிதன் மீது அதிகமாகப் பட்டால் தோலில் புற்று நோய் உள்பட பல நோய்கள் ஏற்படும். ஆக சூரிய வெம்மை மனிதன் மீது அதிகம் படக்கூடாது என்பதை அவர்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதியதே வியப்பான விஷயம்தான். அத்தோடு நிற்காமல் இந்த முனிவர்கள் 60,000 பேர் வெம்மையை தாங்களே வாங்கிக் கொண்டு நம்மைக் காப்பதற்காக தினமும் சூரியனுடன் சுற்றிவருவதாக எழுதியிருப்பது இன்னும் அதிசயமாக இருக்கிறது. இவர்களை நம்மை புற ஊதாக் (ultra violet rays) கதிர்களிலிருந்து பாதுகாக்கும் ஓசோன் வளையத்துக்கு (ozone layer) ஒப்பிட்டால் அது மிகையாகாது
வடமொழி நூல்களில் சுவையான புராணக் கதைகள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் தமிழில் சில பாட்டுகளுக்கு உரை எழுதியோர் அறிவியல் உண்மைகளை மிகத் தெளிவாக எழுதியுள்ளனர்.
யார் இந்தக் குள்ளர்கள்?
இவர்கள் க்ரது என்பவருக்குப் பிறந்தவர்கள். தாயின் பெயர் கிரியை.பிரம்மாவின் மானச புத்திரர்கள் என்றும் அழைக்கப் படுவர். இவர்கள் கட்டை விரல் உயரம் தான் இருப்பார்கள். ஆனால் தேஜோ (ஒளி) மயமானவர்கள். முற்றும் துறந்த இவர்கள் மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டே தவம் செய்வார்கள். 60,000 எண்ணிக்கையுடைய இவர்கள் சூரியனுக்கு முன் அவனுடன் பயணம் செய்வார்கள்.
ஒரு முறை காச்யப முனிவர் தனது 2 மனைவிகளுக்கு குழந்தைப் பேறு கிடைக்க ஒரு யாகம் ஏற்பாடு செய்தார். அதில் இந்திரன் உள்பட அனைத்து தேவர்களும் முனிவர்களும் உதவிக்கு அழைக்கப் பட்டனர். இந்திரன் முதலானோர் வேகம் வேகமாக பெரிய விறகுகளை யாகத்தீக்கு கொண்டுவந்தனர். ஆனால் குட்டை வாலகில்யர்களோ ஒவ்வொரு இலை இலையாகக் கொண்டுவந்தனர். அத்தோடு சிறு சிறு குழிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் விழுந்தும் புரண்டும் வந்தனர். இதைப் பார்த்த இந்திரனுக்கு சிரிப்பு தாங்கவில்லை. சத்தம் போட்டு சிரித்து விட்டான்.
(இதுபோன்ற நகைச்சுவைக் கருப்பொருளை ‘காப்பி’ அடித்துதான் ஒரு கற்பனை நாவலை எழுதிவிட்டார் ஜோனதன் ஸ்விப்ட்).
வாலகீல்யர்களுக்கு பயங்கரக் கோபம் வந்தது. நாம் ஒரு புதிய இந்திரனைப் படைப்போம் என்று முடிவு எடுத்தனர். இந்திரன் நடு நடுங்கிப் போய் விட்டான். ஓடிப்போய் காஸ்யபரிடம் நடந்த அனைத்தையும் கூறினான். “வாலகீல்யர்கள் சக்தி வாய்ந்த தவசீலர்கள் அவர்கள். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது. ஆனால் ஏதேனும் சமாதானம் செய்து மாற்று வழி கண்டுபிடிக்கிறேன்“ என்று காஸ்யபர் பதில் சொன்னார். பின்னர் வாலகீல்யர்களிடம் போய் இந்திரன் பயந்து நடுங்குகிறான் என்று கூறி புது இந்திரனைப் படைக்காதீர்கள் என்றும் நீங்கள் பறவைகளுக்கு இந்திரனான கருடனைப் படையுங்கள் என்றும் மன்றாடினார். வேறு ஒரு நேரத்தில் இந்திரனைத் தோற்கடிக்க வகை செய்வதாகவும் சொல்லி சமாதானப் படுத்தினார்.வாலகில்யர்கள் தனியாக யாகம் செய்தனர்.
இந்த சமாதான உடன்படிக்கையின்படி காஸ்யபரின் ஒரு மனைவீக்கு வாலகீல்யர்களின் யாகப் பிரசாதம் கொடுக்கப்பட்டது. அதைச் சாப்பிட்ட வினதை என்னும் மனைவி அருணனையும் கருடனையும் பெற்றெடுத்தாள். மற்றொரு மனைவியான கத்ரு வேறு ஒரு யாகப் பிரசாதத்தை சாப்பிட்டு நாகர்களைப் பெற்றெடுத்தாள். மற்றொரு தருணத்தில் கருடன் இந்திரனைத் தோற்கடித்து அமிர்தத்தைக் கொண்டுவந்து பழி தீர்த்துக் கொண்டான்.
திருமுருகாற்றுப் படைக்கு உரை எழுதிய கி.வா.ஜகந்நாதன் அவர்கள் வேறு ஒரு விஷயத்தையும் கூறுகிறார். மந்தோகருணர் என்று அழைக்கப்படும் அசுரர்கள் சூரியனுக்கு தினமும் தீங்கு செய்வதாகவும் அந்தணர்கள் நாள்தோரும் மூன்று வேளைச் சந்தியாவந்தனத்தில் கொடுக்கும் அர்க்யம் (நீர்) இந்த அசுரர்களை வீழ்த்த சூரியனுக்குத் துணைசெய்கிறது என்றும் கூறுகிறார். இந்த மந்தோகருண அசுரர்கள் சூரியன் வீசும் புற ஊதாக் கதிர்களா (ultra violet rays) அல்லது காந்த அலைகளா (magnetic storms and solar flares) என்பதை மேலும் ஆராயவேண்டும்.
******************
132.முருகனே வந்தாலும் சிவனும் திருமாலுமே வந்தாலும் அவர்களை எதிர்த்துப் போரிட்டு உங்களைக் காப்பேன் பசுவுவையும் பார்ப்பானையும் காப்பாற்றத வாழ்க்கை என்ன வாழ்க்கை? நான் செத்தாலும் பரவாயில்லை என்கிறான் ராமன்.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். (குறள் எண்: 560)- என்னும் குறளை மனதில் வைத்துக்கொண்டு கம்பன் இதைப் பாடுகிறான்:
அறம் தவா நெறி
அந்தணர் தன்மையை
மறந்த புல்லர் வலி
தொலையேன் எனின்,
இறந்துபோகினும் நன்று;
இது அல்லது,
பிறந்து யான் பெறும்
பேறு என்பது யாவதோ?
XXXX
உங்களைக் காக்கும்பொருட்டு மரணத்தையும் சந்திக்கத் தயார்.
ஆவுக்கு ஆயினும்
அந்தணர்க்கு ஆயினும்,
யாவர்க்கு ஆயினும்,
எளியவர்க்கு ஆயினும்,
சாவப்பெற்றவரே, தகை
வான் உறை
தேவர்க்கும் தொழும்
தேவர்கள் ஆகுவார்.
வள்ளுவர் குறளின் (560) எதிரொலி இந்தப்பாடல்
xxx
‘சூர் அறுத்தவனும்,
சுடர் நேமியும்,
ஊர் அறுத்த
ஒருவனும், ஓம்பினும்,
ஆர் அறத்தினொடு அன்றி
நின்றார் அவர்
வேர் அறுப்பென்; வெருவன்மின்
நீர்’ என்றான்.
சூர் அறுத்தவனும் – சூரபன்மனை வேல் கொண்டழித்த முருகக் கடவுளும்; சுடர் நேமியும் – பகைவரை சுதர்சன சக்கரத்தால் அழிக்கும் திருமாலும்; ஊர் அறுத்த ஒருவனும் – திரிபுரர் ஊர்களை எரித்தழித்த சிவபெருமானும் துணையாக நின்று காத்தாலும், யார் தருமத்தொடு பொருந்தாமல் பாவ வழிகளில் நின்றார்களோ; அக்கொடியவர்களை வேரோடு அழிப்பேன். நீங்கள் அஞ்சாதீர்கள் என்று இராமன் PROMISE உறுதிமொழிந்தான்.
******************
133. இராம, லக்குவர்கள், அவ்விடத்தில் பத்துஆண்டுகள் ஒரு துன்பமுமில்லாமல் தங்கியிருந்தனர்.
ஐந்தும் ஐந்தும் அமைதியின்
ஆண்டு, அவண்,
மைந்தர் தீது இலர்
வைகினர்; மா தவர்
சிந்தை எண்ணி, ‘அகத்தியற்
சேர்க’ என,
இந்து-நன்னுதல்
தன்னொடும் ஏகினார்.
இராம, லக்குவர்கள், அவ்விடத்தில் பத்துஆண்டுகள் ஒரு துன்பமுமில்லாமல் தங்கியிருந்தனர்; முனிவர்கள்
மனத்தில் ஆலோசித்து, அகத்திய முனிவரைச்
சேர் வீராக என்று சொல்ல, சீதையுடன் புறப்பட்டனர்.
ஒவ்வொரு முனிவர்கள் ஆச்சிரமத்திலும் சிலசில திங்கள்கள்
தங்கியிருக்கப் பத்தாண்டுகள் கழிந்தன. வான்மீகத்தில் ஆச்சிரமங்களில் முறையே 13, 12, 4, 5, 7, 1, 1/4,3/4, 3, 8 ஆகிய மாதங்கள் என்று பத்து ஆச்சிரமங்களில் ஐந்து ஆண்டுகளை ஒரு வட்டத்தில்கழித்துப் பின் அதேபடி இரண்டாம் வட்டத்தையும் கழித்தனன் எனக் காணப்பெறும்.
பத்து ஆண்டுக் காலச் செய்தியை ஒரே பாடலில் காட்டிக் காப்பியத்தில் கால விரைவுணர்த்தும் பாங்கைக் காணமுடிகிறது.
******************

134. நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்.
ஆண்தகையர் அவ் வயின்
அடைந்தமை அறிந்தான்;
ஈண்டு, உவகை வேலை துணை
ஏழ் உலகம் எய்த,
மாண்ட வரதன் சரண் வணங்க,
எதிர் வந்தான்-
நீண்ட தமிழால் உலகை
நேமியின் அளந்தான்.
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் – நீண்ட காலம்
உள்ள தமிழ்மொழியால் திருமால் மூவுலகை அளந்தது போல உலகை அளந்தவனாகியஅகத்திய முனிவர்;
இராமலக்குவர்கள் அந்த இடத்துக்கு வந்ததை அறிந்து
ஆனந்தம் அடைந்து, (பதினான்கு) உலகங்களையும்அடையும்
வரங்களை அருளும் இராமன் திருவடிகளில் வீழ்ந்து வணங்க எதிரே வந்தார்.
சிவபெருமான் அகத்தியற்கு அருளியதாலும் தொன்று தொட்டு அடியார் பலர் இறைவனைத் துதித்ததுஇம்மொழியினால் ஆதலாலும் ‘நீண்ட தமிழ்’என்றார். சிவபெருமான் இலக்கணம் உபதேசித்துத்தெற்கே அதை வளர்க்கச் செய்ததால் அகத்தியன் தமிழால் உலகை அளந்தான் என்றார். அகத்தியனைத் திருமாலுடன்ஒப்பிட்டார்.
******************

135.ஆமாம்! சிவன்தான் தமிழ் மொழியைத் தந்தார்! என்று கம்பனும் தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறான் :
.உழக்கும் மறை நாலினும், உயர்ந்து
உலகம் ஓதும்
வழக்கினும், மதிக் கவியினும்,
மரபின் நாடி,-
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி
உமிழ் செங் கண்
தழல் புரை சுடர்க் கடவுள்
தந்த தமிழ்-தந்தான்.
ஒளி விளங்கும் மழுவாயுதத்தையும் அழகிய நெற்றியில் நெருப்பைக் கக்கும் சிவந்த கண்ணையும்உடைய, நெருப்பை ஒத்த
ஒளிவடிவான சிவபெருமான், அருளிய தமிழ் மொழியை
வருந்தி ஓதி அறியக்கூடிய வழக்கினாலும், உயர்ந்தோராகியஉலகம் கூறுகின்ற உலக வழக்காலும் , அறிவாலும் செய்யுள்
வழக்காலும் மரபு நெறியாலும் முறைப்பட ஆராய்ந்து,
உலகினர்க்கு அருளினான்.
உழக்கும் மறை என்பது கனம் முதலிய முறையே பயின்று ஓசை தவறாமல் ஓதி உணரத்தக்க வேதம் என்பதாம். இதனால் வேதம் ஓதுதலிலுள்ள கடின நிலை புலப்படும். ஆதியில் தமிழ் நூல்
அகத்தியற்குணர்த்திய மாதொரு பாகனை வழுத்துதும் எனச் சேனாவரையர் கூற்றையும் இதனோடுஒப்பிடலாம்.
அகத்தியர் அருளிய இலக்கணம்- சிற்றகத்தியம், பேரகத்தியம் எனப்படும். வடமொழி, தென்மொழிகளுக்கு இறைவன் சிவபெருமானே முதல் என்ற கருத்தை இது புலப்படுத்தும்.
அகத்தியர் செய்த அருஞ் செயல்கள் அனைத்தையும் ஒவ்வொரு பாடலில் செப்பிவிட்டு அதற்கு முத்தாய்ப்பாக தமிழ் பற்றிக் கூறுகிறான் கம்பன் ;இப்பாடல்களால் கடலை
உண்டது, வாதாபி வலம் அழித்தது, விந்தத்தை அடக்கியது. தென்திசை வட திசையைச் சமனாக்கியது. முதலிய அகத்தியரின் அருஞ்செயல்களை அறிய முடிகிறது.
நீண்ட தமிழால்அளந்ததில் (2666) தொடங்கி இங்குத் தமிழ்
தந்தான் எனக் கூறுவதால் அகத்தியரின் பெருமையில் தமிழே முதலும் முடிவுமாய் விளங்குவது புலனாம். *************
என்றும் உள தென் தமிழ்!
136. என்றும் உள தென் தமிழ்!
நின்றவனை, வந்த நெடியோன்
அடி பணிந்தான்;
அன்று, அவனும் அன்பொடு தழீஇ,
அழுத கண்ணால்,
‘நன்று வரவு’ என்று, பல நல்
உரை பகர்ந்தான்-
என்றும் உள தென் தமிழ் இயம்பி
இசை கொண்டான்.
அகத்தியரை அங்கே வந்த இராமன் அவர் திருவடிகளில் விழுந்து
வணங்கினான் ;அப்பொழுது; என்றும் உள தென் தமிழ் இயம்பி
இசை கொண்டான் – எக்காலத்தும் உள்ளதாகிய இனிய தமிழின்
இலக்கணங்களைக் கூறிப்புகழ் பெற்ற அகத்தியராகிய–
அம்முனிவரும் இன்பக் கண்ணீர் விட்டவராய் அன்பினால் தழுவிக் கொண்டு; வரவு நன்று WELCOME !WELCOME; GOOD DAY! என்ற நல்ல சொற்களைச் சொன்னார்.
குட்டையான குறுமுனியாம் அகத்தியர், நெட்டையான
நெடியோனாம் இராமன் முன்னால் வந்து
வணங்கினான். மாவலியிடத்து உலகனைத்தும் அளக்க எடுத்த
திரிவிக்கிரமனை இது நினைவூட்டும்.
. தமிழ் மொழி என்றுமுள்ளது என்பதைச் சுட்டியதால்
முன்னரே இருந்த மொழிக்கு அகத்தியர் இலக்கணம் அமைத்தார் என்ற வரலாறு இத்தொடரால் புலப்படும்.
***********************
137.அகத்தியன் இராமனுக்குப் வில்லும் வாளும் வழங்கிப் பஞ்சவடிக்கு அனுப்புதல் (2776-2779)
விழுமியது சொற்றனை; இவ் வில் இது
இவண், மேல்நாள்
முழுமுதல்வன் வைத்துளது;
மூஉலகும், யானும்,
வழிபட இருப்பது; இதுதன்னை
வடி வாளிக்
குழு, வழு இல் புட்டிலொடு கோடி’
என, நல்கி,
(அது கேட்ட அகத்தியன்) நன்றாகச் சொன்னாய் ராமா! இந்த வில், முற்காலத்தில் திருமால் வைத்திருந்தது; மூன்று உலகங்களும் நானும் வணங்கிப் பூசை செய்யும் வில் இது; இவ் வில்லை அம்புப் புட்டிலொடு கொள்வாயாக என்று கொடுத்து,
(இதில் முழுமுதல்வன் என்று கம்பன் செப்பியது யார்?
முழுமுதல்வன் என்பதற்குச் சிவபெருமான் என்பாரும் உளர். ஆயினும் இவ்வில்லின் வரலாறு பற்றிக் கூறும் போது இதனை விசுவகருமா செய்து திருமாலிடம் அளித்தான். அது பரசுராமனிடம் வந்து பின்னர் இராமனிடம்கொடுக்கப்பட்டது. அதனை இராமன் வருணனிடம் கொடுக்க (1307) அவன் அரக்கர் வதம் குறித்து இராமனிடமே அளிக்குமாறு அகத்தியரிடம்
அளித்தான் என்பர். கரன் வதைப்படலத்தில் ‘வில்லை வருணன் கொடுத்தனன்’ என வருவதால் (3052) இப்போது அகத்தியர் அளித்த வில் வேறு என்பர்சிலர்! )
XXX
இப் புவனம் முற்றும் ஒரு
தட்டினிடை இட்டால்
ஒப்பு வரவிற்று என உரைப்ப
அரிய வாளும்,
வெப்பு உருவு பெற்ற அரன்
மேரு வரை வில்லாய்
முப்புரம் எரித்த தனி மொய்க்
கணையும், நல்கா,
அடுத்ததாக அகத்தியன் ஒரு வாளினைக் கொடுத்தான் .
இவ்வுலக முழுவதையும் ஒரு தராசுத் தட்டில் வைத்து
நிறுத்தாலும்ஒப்பாகாத வாள் இதோ! தீ வடிவு கொண்ட சிவபெருமான் மேரு மலையை வில்லாகக் கொண்டு திரிபுரங்களை எரித்த ஒப்பில்லாத வலிய அம்பையும் எடுத்துக்கொள் என்றான் குறு முனி.
இதிலுள்ள இன்னொரு சர்ச்சை ! வால் மீகி சொல்லுவது வேறுவிதமாக உள்ளது
இந்த வில் விசுவகருமாவினால் செய்யப் பெற்றுத் திருமாலிடம் அளித்தது என்றும், அந்த அம்பு பிரமனால் அளிக்கப் பெற்றதென்றும், அவ்வம்புப் புட்டிலும் வாளும் இந்திரனால்
கொடுக்கப் பெற்றவை என்றும் அகத்தியர் கூறி இராமனிடம் அளித்ததாக வான்மீகம் கூறும். ‘மொய்க்கவச நல்கா’ என்ற பாடம் கொண்டு அகத்தியர் இராமனுக்குக் கவசமும் அளித்தார் என்பர். இதற்குப் பிற நூல்களில் சான்றில்லை.
****************************
தெய்வப் பொன்னி
138.‘கன்னி இள வாழை கனி
ஈவ; கதிர் வாலின்
செந்நெல் உள; தேன் ஒழுகு
போதும் உள; தெய்வப்
பொன்னி எனல் ஆய புனல்
ஆறும் உள; போதா,
அன்னம் உள, பொன் இவளொடு
அன்பின் விளையாட.
(பஞ்சவடியில்) பழங்களைத் தரும் மிக இளமையான வாழை மரங்களும் செந்நெற்பயிர்களும் உள்ளன; தேன் வழிகின்ற மலர்களும் உள்ளன; தெய்வப் பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள – தெய்வத் தன்மை பொருந்திய ‘காவிரி என்று கூறத்தக்க நீர் வெள்ளம் பாயும் நதிகளும்’ உள்ளன; சீதையுடன் விளையாடுவதற்கு; பெருநாரைகளும் அன்னங்களும் உள்ளன.
(நீர்வளம் உள்ளது என்று சொல்லி நிறுத்திக்கொள்ளாமல் , தெய்வீக காவிரி நதி போன்ற என்றும் சொல்லி தான் பிறந்த நாட்டுக்கு நன்றி தெரிவிக்கிறான் கம்பன்.)
***************************
வீட்டி வாள் அவுணரை,
விருந்து கூற்றினை
ஊட்டி, வீழ் மிச்சில்
தான் உண்டு, நாள்தொறும்
தீட்டி, மேல் இந்திரன்
சிறு கண் யானையின்
தோட்டிபோல் தேய்ந்து ஒளிர்
துண்டத்தான் தனை.
அவுணர்களைக்கொன்று எமனுக்கு விருந்து கொடுத்து மிச்சமுள்ளதை புசிப்பானாம் ஜடாய; இது தினமும் நடக்கிறதாம் !
******************
சிறந்த உத்தமப் புருட லட்சணங்கள்!
140. ‘உலகு ஒருமூன்றும் தம்
உடைமை ஆக்குறும்
அலகு அறும் இலக்கணம்
அமைந்த மெய்யினர்;
மலர்மகட்கு உவமையாேளாடும்
வந்த இச்
சிலை வலி வீரரைத்
தரெிகிலேன் ‘எனா,
மூன்று உலகங்களையும் (விண்ணுலகம், மண்ணுலகம், பாதாள உலகம்) தங்களுக்கே உரிய உடைமையாக மாற்றிக்கொள்ளும் பேராற்றல் வாய்ந்தவர்கள்.அளவில்லாத சிறந்த உத்தமப் புருட லட்சணங்கள் (இலக்கணங்கள்) பொருந்திய திருமேனியை உடையவர்கள்.தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமி தேவிக்கு ஒப்பான பெண்ணுடல் வந்திருக்கிறார்கள்.: இந்த வில் வீரர்களை யாரென்று என்னால் அறிந்து கொள்ள முடியவில்லையே என்று சடாயு வியக்கிறான்.
xxx
‘கருமலை செம்மலை அனைய காட்சியர்;
திரு மகிழ் மார்பினர்; செங்கண் வீரர்தாம்
அருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான்
ஒருவனை இருவரும் ஒத்துளார் அரோ.
• கருமலை கரிய நிறமுடைய ( இராமன்) நீல நிற மலையைப் (கருமலை) போலவும், சிவந்த பொன்னிறமுடைய (இலக்குவன்) மேரு மலையைப் (செம்மலை/பொன்மலை) போலவும் காட்சி தருகின்றனர்.
• திருமகிழ் மார்பினர்; செங்கண் வீரர்தாம்: திருமகள் (இலக்குமி) வீற்றிருக்கும் அழகிய மார்பையும், சிவந்த கணகளையும் உடைய வீரர்களாக விளங்குகிறார்கள்.
• அருமைசெய் தவம்உடை அத்தன்…: அரிய தவம் செய்த அவர்களின் தந்தையான (தசரத சக்கரவர்த்தி) யின் நல்வினையும், தேவர்கள் அனைவரும் ஒன்று கூடிச் செய்த பெரும் புண்ணியமும் சேர்ந்து, இந்த இரு வீரர்களின் வடிவமாக (உருவம் கொண்டு) நம் கண் முன்னே நிற்கிறார்களோ! என்று சடாயு வியக்கிறான்.
அவர்கள் யார் என்று தெரியாத நிலையில் ஜடாயுவின் மனதில் எழுந்த சந்தேகங்களை கம்பன் ராமனை விஷ்ணு என்று புகழ பயன்படுத்திக் கொள்கிறான்; வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ஒப்பற்ற, ஈடு இணையில்லாத, குணங்கள் உள்ள மனிதனாகவே ராமன் சித்தரிக்கப்படுகிறான் ; அவருக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் பாடிய கம்பன், ஆரம்பம் முதலே ராமனைக் கடவுளாகச் சித்தரிக்கிறான் அவனுக்கு முன்னர் வாழ்ந்த ஆழ்வார்களின் பாடல்களே அவனை இப்படி மாற்றியது தெரிகிறது .
–சுபம்—
கம்ப ராமாயணத்தில் 140 கேள்விகள், தமிழ் மொழி பற்றி, அகத்தியன் , ஆயுதங்கள்