
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,327
Date uploaded in London – 21 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
17-10-26 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
ராகு கேது தோஷம் போக்கும் தலம்: திருப்பாம்புரம்!
ச. நாகராஜன்
தேவாரத் திருத்தலங்கள் 276ல் சோழநாட்டில் உள்ள தென்கரைத் தலங்களில் 59வது தலமாக அமைந்துள்ளது பழம் பெரும் திருத்தலமான திருப்பாம்புரம். இத்தலத்தில் திருஞானசம்பந்தர் ஒரு பதிகத்தை அருளியுள்ளார்.
மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து
மலரவற்கு ஒருமுகம் ஒழித்து
ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி
அனல் அது ஆடும் எம் அடிகள்
காலனைக் காய்ந்து தம் கழல் அடியால்
காமனைப் பொடிபட நோக்கிப்
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள்
பாம்புர நன் நகராரே
– திருஞானசம்பந்தர்
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம்.
இறைவன் : பாம்புரேசுவரர், பாம்புரநாதர், சேஷபுரீஸ்வரர்
இறைவி : வண்டார்பூங்குழலி, வண்டுசேர் குழலி
தல விருட்சம் : வன்னி
தீர்த்தம்: ஆதிசேஷ தீர்த்தம்’
பாம்பு தொழுத தலமாதலால் இது பாம்புரம் என்ற பெயரைப் பெற்றது. ஆதி சேஷன் இத்தலத்தில் வழிபட்டதால் ராகு, தோஷம் நீங்கும் என்பதும் நாக தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம்.
முன்பொரு சமயம் விநாயகர் கைலாயத்தில் சிவபிரானை வழிபட்டார். அப்போது சிவபிரானில் கழுத்தில் இருந்த பாம்பு தன்னையும் வணங்குவதாக நினைத்து கர்வம் கொண்டது. இதனால் கோபமுற்ற சிவபிரான் அனைத்து பாம்புகளும் தங்கள் சக்தியை இழக்குமாறு சாபம் தந்தார். பாம்புகள் இறைவனிடம் சாபநிவர்த்தி வேண்ட அவர் பூலோகத்தில் சேஷபுரம் எனப்படும் திருப்பாம்புரத்தில் சிவராத்திரி நன்னாளன்று தன்னை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்று அருள் பாலித்தார். அப்படியே அனைத்து பாம்புகளும் சிவராத்திரி தினத்தன்று இங்கு சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றன.
நாகராஜனான வாசுகியும் இன்னும் பல பாம்புகளும் சிவராத்திரி நன்னாளில் இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும் மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும் நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலனை அடைந்ததாகப் புராண வரலாறுகள் கூறுகின்றன.
அனந்தன், வாசுகி, தக்ஷன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு நாகங்கள் இங்கு வழிபட்டு இறைவனின் அருளைப் பெற்றன.
ராகுவும், கேதுவும் இங்கு தனித்தனியாக இல்லாமல் ஏகசரீரியாக இருந்து இறைவனை தங்கள் நெஞ்சில் வைத்து வழிபட்டனர்.
கோவிலில், நுழைவாயிலை அடுத்து உள்ளே விநாயகர், நந்தி, பலிபீடம் உள்ளன. அடுத்து ராஜகோபுரம் அமைந்துள்ளது. லிங்கத்திருமேனியாக மூலவர் சேஷபுரீஸ்வரர் காட்சி அளிக்கிறார். இந்த சந்நிதியை அடுத்து வண்டார்குழலி சந்நிதி உள்ளது. மூலவருக்கு வலது புறம் விநாயகரும் இடதுபுறம் சுப்ரமண்யரும் உள்ளனர்.
ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி காட்சி தர, அதன் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் அமைந்துள்ளது.
இங்கு பாம்புகள் யாரையும் தீண்டுவதில்லை என்றும் இது விஷம் தீண்டாப் பதி என்றும் சொல்லப்படுகிறது.
2002ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி இங்கு சந்நிதியைக் காலையில் திறந்த போது சுமார் ஏழரை அடி நீளமுள்ள பாம்புச் சட்டை இறைவன் திருமேனியில் காணப்பட்டது. அது இப்போது இறைவனின் பிரகாரத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சர்ப்பதோஷம் உள்ளவர்களும், பிள்ளைப் பேறு இல்லாதவர்களும் இங்கு வந்து வழிபட்டால் தோஷம் நீங்கி அனைத்து நலன்களும் பெறுவார்கள் என்றும், பிள்ளைப் பேறு கிடைக்கும் என்பதும் பக்தர்களின் அனுபவபூர்வமான நம்பிக்கை.
இத்தலத்தைப் பற்றி திருநாவுக்கரசர் திருநாகைக்காரோணப் பதிகத்தில் ‘பாம்புரமே காதலானை’ என்று பாடிச் சிறப்பிக்கிறார்.
சுந்தரர் திருநாட்டுத் தொகையில் சோழ நாட்டுத் தலங்களை வரிசைப் படுத்திப் பாடுகையில் ‘பாம்பணி பாம்புரம்’ என்று கூறிச் சிறப்பிக்கிறார்.
அருணகிரிநாதர் இங்குள்ள முருகனை வழிபட்டு ‘அமரிடமாகப் பாடிய’ என்று தொடங்கும் திருப்புகழில் இத்தலச் சிறப்பை போற்றிப் பாடுகிறார்.
இந்தியாவெங்குமுள்ள ராகு, கேது தோஷம் போக்கும் பரிகாரத் தலங்களில் சிறப்பிடத்தைப் பெறுகிறது திருப்பாம்புரம் தலம்!
***