
WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,324
Date uploaded in London – 20 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பதினான்கு லோகங்களில் பாவம் செய்தாலும் அனைத்து பாவங்களையும் போக்கும் ஒரே ஒரு அபூர்வ நாமம்!
ச. நாகராஜன்
“இதனுடைய ஒரு நாமத்திற்கு இருக்கக்கூடிய பாபஹரண சக்திக்குப் போதுமான பாவம் செய்ய பதினாலு லோகங்களாலும் முடியாது.”
(அத்ரைகநாம்னோ யா சக்தி: பாதகானாம் நிவர்த்தனே |
தன்னிவர்த்யம் அகம் கர்த்தும் நாலம் லோகாச்சதுர்தச ||)
“எவ்வளவு பாவத்தை ஒரு நாமத்தைச் சொன்னால் போக்கடிக்கலாமோ அவ்வளவு பாவத்தை பதினாலு லோகங்களிலும் உள்ள ப்ராணிகள் சேர்ந்து செய்தாலும் செய்ய முடியாது”
இந்த அற்புதமான பொருள் பொதிந்த வாக்கியத்தைப் படித்துத் திகைக்கிறோம்.
லலிதா சஹஸ்ர நாமத்தில் உத்தரபாகத்தில் பல்ச்ருதியில் வரும் ஸ்லோகம் (எண் 16) இது.
அப்படி என்ன நாமம் அது? லலிதாம்பிகையின் ஒரு நாமம் தான் அது!
அன்னை லலிதாம்பிகையின் ஆயிரம் நாமங்களைச் சொல்வதால் ஏற்படும் பலன்களை விஸ்தாரமாகக் கூறும் பலச்ருதி ஸ்லோகங்களில் பதினாறாவது ஸ்லோகம் இது.
மனம் எவ்வளவு பெரிய ஆறுதலை அடைகிறது!
லலிதா சஹஸ்ரநாமம் எதில் வருகிறது?
மஹரிஷி வேத வியாஸரால் இயற்றப்பட்ட பதினெட்டு புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில், உத்தர காண்டத்தில் அகத்தியருக்கும் ஶ்ரீ ஹயக்ரீவருக்கும் நடந்த உரையாடல் ரூபமான லலிதோபாக்கியானத்தில் உள்ள ஸ்தோத்திரமே லலிதா சஹஸ்ர நாமம்.
சர்வ வல்லமை பொருந்திய இந்த சஹஸ்ரநாமத்தை நல்ல குருவானவர் மூலம் அறிந்து சொல்வது உத்தமமானது.
சுலபாகதி – சுலபமாக உபாசிக்கப்படக் கூடியவள் என்ற பெயரை உடைய அன்னையைத் துதிப்பது உடல் வருத்தமில்லாமல் சொல்லக் கூடியது. நியம நிர்பந்தங்கள் இல்லாதது. நான்கு வருணத்தார்களும் ஜாதி பேதமின்றி சொல்லக் கூடியது.
இதை தினமும் சொல்லக் கூடிய நல்ல பாக்கியம் உடையவர்களின் புண்ணியத்தைப் பற்றி சொல்வதற்கு முடியுமா, என்ன?
இந்த சஹஸ்ரநாமத்தின் பெருமையைப் புரிந்து கொள்ள ஶ்ரீ பாஸ்கரராயரின் பாஷ்யம் நமக்கு உதவும்.
பாஸ்கரராயரின் காலம் கி.பி.1690 முதல் 1785 முடிய என்று தீர்மானிக்கப்படுகிறது. இவரது மகிமையை வெளிப்படுத்தும் ஏராளமான சம்பவங்கள் உண்டு. ஒரு சமயம் காசியில் ஒரு மஹாயாகம் செய்யப்போவதாக இவர் அறிவித்தார். யாகம் மிக அருமையாக நடந்து முடிந்தது. இவரைக் கண்டு பொறாமை கொண்ட பண்டிதர்கள் பலர், மந்திர சாஸ்திரம் சம்பந்தமான சிக்கலான பல கேள்விகளைக் கேட்டனர். இவர் உடனுக்குடன் தக்க பதிலைக் கூறிக் கொண்டே வந்தார். அச்சமயம் அங்கு வந்த மகானான குங்குமானந்த ஸ்வாமிகள் பண்டிதர்களை நோக்கி, “இவரை உங்களால் ஜெயிக்க முடியாது. இவரது தோள்களில் அம்பாள் ஆரூடையாக இருந்து உங்களது கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறாள்’ என்றார். உடனே பண்டிதர்களில் முக்கியமானவராக இருந்த நாராயண பட்டர் என்பவர், “அது உண்மையானால் நான் அம்பாளை தரிசிக்க வேண்டும்” என்று வேண்டினார். உடனே குங்குமானந்த ஸ்வாமிகள் அம்பாளுக்கு செய்யப்பட்ட அபிஷேக ஜலத்தை எடுத்து அவர் கண்களைத் துடைத்தார். அவருக்கு சரியான திருஷ்டி ஏற்பட்டு அவர் அம்பாளை தரிசித்து ஆனந்தம் அடைந்தார்.
இப்படி ஏராளமான சம்பவங்கள் உண்டு.
ஒவ்வொரு நாமமும் எந்த அக்ஷரத்தில் (எழுத்தில்) ஆரம்பிக்க வேண்டும், ஒரு நாமத்தில் எத்தனை மந்திர அக்ஷரங்கள் இருக்க வேண்டும், அதற்கான பலன்கள் யாவை ஆகிய அனைத்தும் வேதோக்தமாகத் தீர்மானிக்கப்பட்டு ஒரு மாலையாக இந்த சஹஸ்ரநாமத்தில் தொடுக்கப்பட்டுள்ளன.
ஶ்ரீ மாதா என்ற முதல் நாமத்துடன் ஆரம்பிக்கும் ஆயிரம் நாமங்கள் லலிதாம்பிகா என்ற நாமத்துடன் முடிவடைகிறது,
அம்பிகா, அம்பா ஆகிய சொற்கள் தாயாரைக் குறிப்பவை. அனைத்து லோகங்களையும் படைத்தவள் என்பதோடு அவள் லலிதையாகவும் இருக்கிறாள்.
லலனம் செய்வதால் அவள் லலிதா எனப்படுகிறாள். லலனம் என்றால் செல்லமாக விளையாடுவது என்று பொருள். லோகத்திற்கு அதிபதியாக கிரீடித்துக் கொண்டிருப்பதாலும் அவள் லலிதா எனப்படுகிறாள். மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் அனைத்தும் லலிதம் என்ற சொல்லினால் குறிக்கப்படும்.
மஹா லாவண்ய சேவதி (நாமம் 48) என்பதால் அவள் அழகுக் களஞ்சியம் என்பது பெறப்படுகிறது. சௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரர் அவள் அழகை விரிவாகத் துதிப்பது குறிப்பிடத் தகுந்தது.
இது போன்ற ஏராளமான அர்த்தங்கள் ஒவ்வொரு நாமத்திற்கும் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்ள ஒவ்வொரு பக்தரும் முயல வேண்டும்.
ரஹஸ்தர்பண தர்பிதா (நாமம் 382) என்று அவள் துதிக்கப்படுகிறாள்,
தர்பணம் என்பது திருப்தியைக் கொடுக்கும் கர்மாவைக் குறிப்பிடும் சொல், மந்திரத்தின் அர்த்தத்தை நன்றாகத் தெரிந்து கொள்ளுதலே ரஹஸ்தர்பணமாகும்.
இப்படி முயன்று பக்தியுடன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு துதிக்கும் பக்தனிடம் அளவற்ற கருணையை அவள் பொழிகிறாள்.
நவராத்ரியில் கடைசி இரண்டு நாட்கள் மஹா நவமி என்று அழைக்கப்படுகிறது. இது சக்தி மயமானது. இந்த நாட்களில் ஜாதி வேறுபாடின்றி அனைவரும் அம்பிகையை பூஜிக்க வேண்டும் என்பது விதி.
பக்த சௌபாக்யதாயினி (நாமம் 117) என்ற நாமம் லலிதாம்பிகை பக்தர்களுக்கு சௌபாக்யத்தை அளிப்பவள் என்ற அர்த்தத்தைத் தருகிறது. பகம் என்ற சொல்லுக்கு ஶ்ரீ, காம, மாஹாத்ம்யம் வீர்யம், ஒளி, கீர்த்தி உள்ளிட்ட ஏராளமான அர்த்தங்கள் உண்டு. இவை அனைத்தையும் வழங்குபவள் லலிதாம்பிகை என்பது பெறப்படுகிறது.
பக்திப்ரியா (நாமம் 118) என்ற நாமம் பக்தியுடன் உபாசனை செய்தால் அவள் மகிழ்வாள் என்பதைக் குறிக்கிறது.
பக்தியைப் பற்றி சிவானந்த லஹரி குறிப்பிடுவதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“அழிஞ்சில் மரத்தின் விதையானது தாய் மரத்தையும், ஊசியானது காந்தத்தையும், பதிவிரதையானவள் தன் கணவனையும், கொடியானது மரத்தையும், நதியானது கடலையும், இயற்கையாகவே வந்து அடைவது போல மனதானது பரமாத்மாவை அடைவது தான் பக்தி!”
இந்த பக்திக்கு கட்டுப்பட்டவள் அன்னை என்பதை பக்திவச்யா (நாமம் 120) என்ற நாமத்தால் அறிகிறோம்.
ஆகவே லலிதா சஹஸ்ரநாமத்தை தினம்தோறுமோ, பௌர்ணமி, நவராத்ரி போன்ற முக்கிய தினங்களிலோ பக்தியுடன் துதிப்பவர்கள் அடையும் பேறைச் சொல்ல வார்த்தைகளே இல்லை!
**
குறிப்பு: லலிதா சஹஸ்ரநாம மஹிமையை முழுதுமாகத் தெரிந்து கொள்ள G.V. கணேச ஐயர் தமிழில் தந்துள்ள “ லலிதா சஹஸ்ர நாமம்- பாஸ்கர ராயர் பாஷ்யத்தை” இணையதளத்தில் archive.org உள்ளிட்ட பல தளங்களிலிருந்தும் இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்.
**