கம்ப ராமாயணத்தில் 160 கேள்விகள் (Post No.16,332)

Written by London Swaminathan

Post No. 16,332

Date uploaded in London – 22 October 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

இதற்கு முன்னர் வெளியிட்ட 150 கேள்விகளும், விடைகளும்  எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.

சீதையைப் பார்த்த சூர்ப்பணகை, அவளைக் கற்பின் கனலி என்று மனதில் நினைத்து, வெளிப்படையாக ராமனிடம் சீதை ஒரு அரக்கி உன்னிடம் மாயத்தோற்றத்துடன் வந்திருக்கிறாள் என்றாள். ராமன் அதைக்கேட்டு நகைத்தான்

151

சீதையைப் பார்த்து சூர்ப்பணகை என்ன சொன்னாள்?

152

ராமனும் சீதையும் பர்ணசாலைக்குள் சென்ற பின்னர் சீதை தனியே வெளியே வந்தாள்; சூர்ப்பணகை  அவளைப்பிடிக்க வந்த போது லட்சுமணன்  என்ன செய்தான்?

153

பேடிப்பயல்கள் அசுரர்கள் ; அவர்களை ஒழிக்க யாம் வந்துள்ளோம்; ஓடிப்போடி , சூர்ப்பணகை! என்ற பாட்டின் பொருள் என்ன ?

154

மூக்கறுபட்ட பின்னரும் என் மூக்கை வளர்த்துக் கொள்வேன்; என்னை ஏற்றுக்கொள்; நீ பிரம்மா விஷ்ணு சிவன் இந்திரன் ஆகியோரின் ஒட்டுமொத்த வடிவம் என்று சூர்ப்பணகை இராமனைப் புகழந்த அழகு என்ன ?

155

புலிக்குட்டி பற்றிய பழமொழியை சூர்ப்பணகை  சொன்னது ஏன் ?

156

எவ்வளவு சொல்லியும் ராமன்,  சூர்ப்பணகையின் காதல் வலையில் சிக்காதபோது , யமனை அழைத்துக்கொண்டு வந்து உனக்கு முடிவு கட்டுகிறேன் என்று சூளுரைத்தாள்; யார் அந்த யமன்?

157

கரனிடம் மூக்கறுபட்டகதையைச் சொல்லி, சூர்ப்பணகை அழுது புரண்டவுடன் அவன் 14 வீரர்களை அனுப்பவே ராமன் அவர்களுடைய 28 கைகளை துண்டித்த பாடலைக் காண்போமா ?

158

வள்ளுவன் ஒரு குறளில் 70 கோடிப் பேரைக் குறிப்பிடுகிறன் ; அப்போது இந்தியாவின் ஒட்டுமொத்த ஜனத்தொகையே லட்சக்கணணக்கில்தான் ! ரிக் வேதத்தில் இந்திரன் கொன்ற அசுரர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு துதியிலும்  லட்சக் கணக்கில் உள்ளது !  நான் என்ன சளைத்தவனா ? வள்ளுவனுக்கு இளைத்தவனா? என்று கம்பன் சொல்லும் வியப்புறும் படைக் கணக்கு என்ன ?

159

ராமாயணம் முழுதும், அரக்கர்கள் நினைத்த உருவினை எடுக்க வல்லவர்கள் என்ற செய்தி வருகிறது. முன் பகுதியில் சூர்ப்பனகை , பேரழகி ரூபத்தில் வந்தவுடன் ராமனே அவளை ஏ சுந்தரி ( ஹலோ பியூட்டி ) என்று அழைத்ததைக் கண்டோம் ; கரனுடைய படைகள் என்ன என்ன மாஸ்க்/  முகமூடி  அணிந்து வந்தனர் ?

160

கர தூஷணர்களின் படை ராமர் இருக்கும்  இடத்துக்கு வந்தபோது, வெகுண்டு எழுந்த லெட்சுமணனிடம் ராமன் சொன்னது என்ன ?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

விடைகள்

151.     ஆயிடை, அமுதின் வந்த, அருந்ததிக்

கற்பின் அம் சொல்

வேய் இடை தோளினாளும், வீரனைச்

சேரும் வேலை,

‘நீ இடை வந்தது என்னை? நிருதர்தம்

பாவை!’ என்னா,

காய் எரி அனைய கள்ள

உள்ளத்தாள் கதித்த லோடும்.

அந்த நேரத்தில்,  தேவரமுது போல, அருந்ததிபோல வந்த

சீதை இராமனை அணுகும் போது, அரக்கர் பெண்ணே! எங்களுக்கு

இடையில் நீ குறுக்கிட்டது ஏன்? என்று கூறி தீப் போன்ற

வஞ்சக எண்ணத்தாளாம் சூர்ப்பணகை சினந்து வேகமாக வந்ததும் ராமன் கோபமுற்றான்

**********************************

152.நில் அடீஇ’ என, கடுகினன்,

பெண் என நினைத்தான்;

வில் எடாது அவள் வயங்கு எரி

ஆம் என விரிந்த

சில் வல் ஓதியைச் செங் கையில்

திருகுறப் பற்றி,

ஒல்லை ஈர்த்து, உதைத்து, ஒளி

கிளர் சுற்று-வாள் உருவி,

     சூர்ப்பணகை சீதையைப் பின் தொடரும் நோக்கத்தை அறிந்த

இலக்குவனின் சினம் பொங்க ‘நில் அடீ இ’ என அவளைத் தடுத்தான். அவள் கூந்தளைப் பி டித்துக்கொண்டு வாளை உருவினான்…………..

ஊக்கித் தாங்கி, விண் படர்வென்

என்று உருத்து எழுவாளை,

நூக்கி, நொய்தினில், ‘வெய்து

இழையேல்’ என நுவலா,

மூக்கும், காதும், வெம் முரண்

முலைக் கண்களும், முறையால

போக்கி, போக்கிய சினத்தொடும்,

புரி குழல் விட்டான்.

சீதையைத் தூக்கிக் கொண்டு செல்வேன் என்று

கோபித்து மேற்கிளம்பிய சூர்ப்பணகையை –

(இலக்குவன்) எளிதில் கீழே தள்ளி –

கொடுந்தொழிலைச் செய்யாதே என்று கூறி

மூக்கையும் காதுகளையும்

கொடிய வலிய முலைக் காம்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாய்

அறுத்தெறிந்து – சினத்தை

விட்டு முறுக்கிப் பிடித்த அவள் கூந்தலையும் விட்டான்.

மூக்கும் காதும் அறுத்தது அவளுக்கு அவலட்சணம்

உண்டாக்குதற்காம். முலையை அறுத்தது அவள் பெண்மை நலம்

சிதைத்தற்காம்

***************************

153.’பேடிப் போர் வல் அரக்கர்

பெருங் குலத்தை ஒருங்கு அவிப்பான்

தேடிப் போந்தனம்; இன்று,

தீ மாற்றம் சில விளம்பி,

வீடிப் போகாதே; இம்

மெய் வனத்தை விட்டு அகல

ஓடிப் போ’ என்று உரைத்த

உரைகள் தந்தாற்கு, அவள் உரைப்பாள்:

(சூர்ப்பணகை சொற்களைக் கேட்டு இராமன்)

பேடித் தன்மையுள்ள மாயப் போர்கள் செய்வதில் வல்ல இராக்கதர்களின் பெரிய குலத்தை முற்றிலும் அழிக்க அவர்களைத் தேடி இங்கு வந்தோம்; இப்போது தீய சொற்களில் சிலவற்றைக் கூறி அழிந்து போகாதே;  – இந்தக் காட்டிலிருந்து ஓடிப் போ;  எனக் கூறிய சொற்களைச் சொன்ன இராமனிடம்

சூர்ப்பணகை கூறலானாள்……………………………

******************************

154.     ‘சிவனும், மலர்த் திசைமுகனும்;

திருமாலும், தெறு குலிசத்து-

அவனும், அடுத்து ஒன்றாகி

நின்றன்ன உருவோனே!

புவனம் அனைத்தையும், ஒரு தன்

பூங் கணையால் உயிர் வாங்கும்

அவனும், உனக்கு இளையானோ?

இவனேபோல் அருள் இலனால்.

சிவபெருமானும்,  தாமரை மலர்

மீது இருக்கும் பிரமனும்,  மகாவிட்டுணுவும்; தெறு  பகைவரை அழிக்கும் வச்சிரப் படையுடைய இந்திரனும்; சேர்ந்து ஒன்றாகி நின்றது போன்ற அழகிய உருவம் உடையவனே!உலகங்கள்

எல்லாவற்றையும் ஒப்பற்ற தன் மலர் அம்புகளால் எல்லா உயிர்களையும் வருத்தும் அம் மன்மதனும் உன் தம்பி இலக்குவனைப் போல இரக்கமற்றவனாய்

இருப்பதால் அவனும் உனக்குத் தம்பியோ?

( இராமனைப் பாராட்டிவிட்டு  இலக்குவனின் குறையைக் கூறுகின்றாள்).

****************************

155. தன்னைப் புலிக்குட்டியாகவும் ராவணனைப் புலியாகவும் உருவகித்துக்கொண்டு சூர்ப்பனகை கதறினாள ; புலி பக்கத்தில் குட்டி இருந்தால், அதற்கு எந்த ஆபத்தும் வராது என்று உலகில் ஒரு பமொழி உண்டே ! அது பொய்யாகிப் போய்விட்டதே! கற்ப முடிவிலும் ஆற்றல் தளராத மும் மூர்த்திகளுக்கும் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் மேலான  வலிமை கொண்ட இராவணனே! நான் அடைந்த கொடும் துன்பத்தைப் பார்க்க வரமாட்டாயா? என்றாள் .

“புலிதானே புறத்து ஆக, குட்டி

கோட்படாது” என்ன,

ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை

பொய்யோ? ஊழியினும்

சலி யாத மூவர்க்கும்,

தானவர்க்கும், வானவர்க்கும்,

வலியானே! யான் பட்ட வலி

காண வாராயோ?

****************************

156.ஏற்ற நெடுங் கொடி மூக்கும், இரு காதும்,

முலை இரண்டும், இழந்தும், வாழ

ஆற்றுவனே? வஞ்சனையால், உமை உள்ள

பரிசு அறிவான் அமைந்தது அன்றோ?

காற்றினிலும் கனலினிலும் கடியானை,

கொடியானை, கரனை, உங்கள்

கூற்றுவனை, இப்பொழுதே கொணர்கின்றேன்’

என்று, சலம்கொண்டு போனாள்.

என் அழகுக்குப் பொருத்தமாயிருந்த மூக்கும் இரண்டு செவிகளும் இரு கொங்கைகளும் அறுக்கப் பெற்றும் உயிரோடு வாழ்வதைப் பொறுத்து இருப்பேனோ (மாட்டேன்);கபடமாய் (ஆதலால்) காற்றையும் தீயையும் விட ஆற்றலுடையானை, கொடியவனை,கரன் எனும் பெயருடையவனை, உங்களை அழிக்கும் யமனை இக்கணத்தே கூட்டி வருகிறேன்எனக் கூறித் தணியாத கோபத்துடன்  சென்றாள்.

இப்படலம் முழுதும் ‘கம்ப நாடகம்‘ என்ற பெயர்க்கு ஏற்பப் பொருத்தமான உரையாடல்கள் உடையது .

*********************

157.     மழுவும், வாளும், வயங்கு

ஒளி முச் சிகைக்

கழுவும், கால வெந் தீ

அன்ன காட்சியார்,

எழுவின் நீள் தடக்

கை எழு நான்கையும்,

தழுவும் வாளிகளால், தலம்

சார்த் தினான்.

கொடிய ஊழிக் காலத்துத் தீயைப் போன்ற;

தோற்றத்தையுடையவர்களாகிய அந்த அரக்கர்களின்;

மழுவென்னும் ஆயுதத்தையும்; வாள்களையும்;

முத்தலைகளையுடைய சூலங்களையும்;

(இவ்வாறான படைக்கலங்களை ஏந்திய) – தூண்களைப்

போன்று நீண்ட பெரிய கைகள் இருபத்தெட்டையும்

குறி தவறாமல் தாக்கும் அம்புகளால்; துணித்துத்

தரையில் வீழ்த்தினான்.

****************************

158.ஆறினோடு ஆயிரம்

அமைந்த ஆயிரம்

கூறின ஒரு படை;

குறித்த அப் படை

ஏறின ஏழினது

இரட்டி என்பரால்-

ஊறின சேனையின்

தொகுதி உன்னுவார்.

படையின் தொகையை எண்ணிக் கணக்கிடுபவர் சேனைகளுள் ஒரு சேனை அறுபது இலட்சமாகும்; அவ்வாறு கணக்கிடப்பட்ட அந்தப் படைகளின், ஏழின் இரு மடங்காகப் பெருக்கப்பட்ட பதினான்காகும்; என்று கூறுவர். (அங்குப் போருக்கு வந்த படை ஒன்றுக்கு அறுபது

இலட்சம் கொண்ட பதினான்கு படைகள் இருந்தன) !!.

***********************

159.‘குஞ்சரம், குதிரை, பேய்,

குரங்கு, கோள்அரி,

வெஞ் சினக் கரடி, நாய்,

வேங்கை, யாளி’ என்று,

அஞ்சுற, கனல் புரை

முகத்தர்; ஆர்கலி

நஞ்சு தொக்கெனப்

புரை நயனத்தார்களும்-

யானை, குதிரைகள், பேய்கள்,குரங்குகள்,சிங்கம், கொடிய  கரடி, நாய்கள், புலிகள் ,யாளிகள் என்னும்  முகவடிவங்களாக (காண்பவர்)

அஞ்சும்படி,நெருப்பைப் போன்ற முகத்தையுடையவர்களாகி

பாற்கடலில் தோன்றிய நஞ்சு திரண்டது போல விளங்கும் கண்களையுடையவர்களாக வந்தனர்.

***********************

160.இலக்குவனைத் தடுத்து இராமன் போருக்கு எழுதல்

2934.  மின் நின்ற சிலையன், வீரக்

கவசத்தன், விசித்த வாளன்,

பொன் நின்ற வடிம்பின் வாளிப்

புட்டிலன், புகையும் நெஞ்சன்,

‘நில்; நின்று காண்டி, யான் செய்

நிலை’ என விரும்பி நேரா

முன் நின்ற பின் வந்தோனை

நோக்கினன், மொழியலுற்றான்:

மின்னல் போன்று ஒளி பொருந்திய வில்லைத் தாங்கியவனும், அழியாத வலிமை வாய்ந்த

கவசத்தையுடையவனும்(இடையில்) கட்டிய

உடைவாளையுடையவனும் அழகு பொருந்திய நுனியுள்ள அம்புகளைக் கொண்ட அம்பறாத்

தூணியையுடையவனும் கோபத் தீ மூண்ட

மனமுடையவனுமாய் (இராமனை நோக்கி ‘நில் – (போர் தொடங்காது) நில்;  (அப்படி) நின்று, நான் செய்யக் கூடிய

போரின் திறமையை; காண்பாய் என்று சொல்லி;

(போர் செய்ய) விருப்பங் கொண்டு;  போருக்கு ஆயத்தமாகி; (தனக்கு) முன்னே வந்து நின்ற தம்பியான இலக்குவனை பார்த்து

(இராமன்) சொல்லத் தொடங்கினான்………………………………. தொடரும்

TAGS – சீதை,சூர்ப்பணகை, கற்பின் கனலி,  மூக்கறுபட்ட படலம் , கரன், கம்ப ராமாயணம்,  160 கேள்விகள்

Leave a comment

Leave a Reply