
Written by London Swaminathan
Post No. 16,339
Date uploaded in London – 24 October 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
This is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கம்ப ராமாயணம் ரொம்ப – போர் அடிக்கும் ! முழுக்க படிக்க வேண்டாம் ; சுவையான பகுதிகளை மட்டும் படியுங்க!!
இப்பொழுது மூன்றாவது முறையாக கம்ப ராமாயணத்தைப் படிக்கிறேன் ; முதல் தடவை 25 ஆண்டுகளுக்கு முன்னர்; இரண்டாம் தடவை பிரிட்டனிலுள்ள என் நண்பர்களுக்கு ஞாயிறு காலைதோறும் ஆன் லைன் கிளாஸ் ON LINE CLASS எடுத்த போது; அப்போதும் கூட என் நோட்ஸிலிருந்து சுவையான பகுதிகளை மட்டுமே பகிர்ந்து கொண்டேன்; கம்பன் ஒவ்வொரு விஷயத்துக்கும் 10 அல்லது 15 பாடல்களை சொல்வதால் 10,000 பாடல்கள் கிடைக்கின்றன; அவைகளைப் படிக்க முடியாதோருக்கு சுவையான பகுதிகளை மட்டும் கேள்வி -பதில் வடிவில் தருகிறேன்; எப்போதும் என் பிளாக்குகளில் இலவசமாகக் கிடைக்கும் ; தொடர்ந்து படியுங்கள்:
இதற்கு முன்னர் வெளியிட்ட 170 கேள்விகளும், விடைகளும் எனது பிளாக்குகளில் எப்போதும் கிடைக்கும்.
xxxxxxxxxxxxxxxxxxx
171
RAVANA TRAVELLING BY CHARTERED FLIGHT ALL ALONE
ராவணன் சீதையைப் பிடிக்க எண்ணி மந்திரிமார்களைக் கலந்து ஆலோசித்தான் ; அவர்கள் சொன்ன சொல் அவன் மனதில் பதியவில்லை ; பின்னர்
ராவணன் தனி விமாமனத்தில் CHARTERED FLIGHT சார்ட்டர்ட் பிளைட்டில் எங்குசென்றான் என்று கம்பர் மொழிகிறார் ?
172
மன்னர் மன்னா ! என்னைக் காண வந்த காரணம் யாதோ என்றும் மாரீசன் வினவ, சீதையைக் கவர்ந்து வர உன் உதவியை நாடி வந்தேன் என்று உரைத்தனன் ராவணன் . உடனே தாய்மாமன் மாரீசன் என்ன சொன்னான் ?
173
நன்மையும் தீமை அன்றே, நாசம்
வந்து உற்ற போது?- விநாச காலே விபரீத புத்தி- என்று மாரீசன் சொன்னது என்ன ?
174
தங்க வர்ண மான் வடிவில் வந்த மாரீசனை மான் என்று கருதி ராமனிடம் சீதை செப்பியது என்ன ?
175
LAKSHMANA! THIS WORLD IS FULL OF MILLION NATURAL WONDERS- RAMA
உலகில் பல கோடி இயற்கை அதிசயங்கள் இருப்பதாக ராமன் வாயால் கம்பன் பாடியது எப்படி?
176
மாய மான் பற்றி மீண்டும் லெட்சுமணன் என்ன எச்சரிக்கை விடுத்தான்?
177
லெட்சுமணன் மாய மான் மாரீசன் என்று கண்டுபிடித்தது எப்படி ?
178
அடக் கடவுளே ; என் தம்பி சொன்னது சரியாப்போச்சே – என்று ராமன் உணர்ந்தது எப்போது ?
179
மாய மான் என்று தெரிந்து ராம பிரான் அம்பு எய்தியவுடன் மாரீசன் செய்த தந்திரம் என்ன ?
180
மாரீசன் செய்கையால் ராமபிரானுக்கு மனதில் எழுந்த அச்சம் என்ன ?
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


விடைகள்
171.வந்த மந்திரிகளோடு மாசு அற
மனத்தின் எண்ணி,
சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன்,
தெளிவு இல் நெஞ்சன்,
அந்தரம் செல்வது ஆண்டு ஓர்
விமானத்தில், ஆரும் இன்றி,
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன்
இருக்கை சேர்ந்தான்.
அங்கு வந்து சேர்ந்த அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தபின், தெளிவு பிறக்காத நெஞ்சம் உடையவனாய், (இறுதியில் தான்) மனத்தில் கருதியதையே செய்யும் எண்ணத்துடன் இராவணன் எவர் துணையும் இல்லாமல் ,விண்ணில் செல்லும் ஒரு
விமானத்தில் ஏறி, புலன்களை அடக்கித் தவம் செய்கின்ற, மாரீசன் என்பானது இருப்பிடத்தை அடைந்தான்.
மாரீசன்
இராவணனுக்குத் தாய் வழி மாமன் ஆவான். விசுவாமித்திரர் செய்த வேள்வியைக் காக்கச் சென்ற இராமபிரானது கணைக்குத் தப்பி ஓடிப் பிழைத்தவன் இவன். இராமபாண தீட்சையால் பழி நெறி மாறித் தவநெறி மேற்கொண்டவன் இவன். ஆதலால், ‘இந்தியம் அடக்கி நின்ற மாரீசன்’ என்றார்.
*******************************
172. ராவணன் பேச்சைக்கேட்டு மாரீசன் சீச் சீ என்று சொல்லிக் காதை மூடிக்கொண்டு நிறைய அறிவுரைகளை வழங்கினான் ; அதில் ஒன்று :
‘மாண்டார், மாண்டார்; நீ இனி
மாள்வார் தொழில் செய்ய
வேண்டா, வேண்டா; செய்திடின்,
உய்வான் விதி உண்டோ?
ஆண்டார் ஆண்டார் எத்தனை
என்கேன்? அறம் நோனார்,
ஈண்டார்; ஈண்டு ஆர் நின்றவர்?
எல்லாம் இலர் அன்றோ?
ஏற்கெனவே இறந்தவர்கள் இறந்து போயினர்; இனிமேல் நீ மரணமுறப் போகின்றவர்கள் செயத் தக்க செயலைச் செய்ய
வேண்டாம்; நீ அவ்வாறு செய்வாயானால் தப்பிப் பிழைக்க
வழியும் உண்டோ? (இல்லை); உனக்கு முன்னே
இவ்வுலகை ஆண்டு சென்றோர் எத்தனையென்று
கணக்குரைக்க முடியாது; தர்மத்தைக் கடைப்பிடிக்காதவன்
வாழ்ந்ததில்லை ;இவ்வுலகில் அழியாது நிலைத்தாரும் யாரும் இல்லை . எல்லாரும் இல்லாமல் மறைந்தவர்கள் தானே?
ராமன் அம்பினால் இறந்த விராதன், கரன் முதலிய பெயர்களை சொல்லிவிட்டு உனக்கும் அதே கத்தி வரும் என்று மாரீசன் எச்சரித்தான்.
********************
173.ராவணன் கோபப்பட்டு பேசியவுடன் மீண்டும் மாரீசன் அறிவுரை வழங்கியும் கேளாது போகவே விநாச காலே விபரீத புத்தி; நான் என்ன செய்யவேண்டும் சொல்லித் தொலை என்றான்
உன்வயின் உறுதி நோக்கி, உண்மையின்
உணர்த்தினேன்; மற்று,
என்வயின் இறுதி நோக்கி, அச்சத்தால்
இசைத்தேன் அல்லேன்;
நன்மையும் தீமை அன்றே, நாசம்
வந்து உற்ற போது?
புன்மையின் நின்ற நீராய்!
செய்வது புகல்தி’ என்றான்.
(இராவணனாகிய) உன் நலத்தினை நாடி, உண்மையைச் சொன்னேன்
எனக்கு அழிவு நேரும் என்று பயம் காரணமாக சொல்லவில்லை;
அழிவு நெருங்கி வரும் நேரத்தில் நல்லது சொன்னாலும் அது தீமையாகவே கருதப்படும் அல்லவா? கெட்ட பயலே ! நான் என்ன செய்ய வேண்டும் ; செப்புடா செப்பு
*********************
174.போர் செய்து சீதையை எடுத்துக்கொள் என்று மாரீசன் சொன்ன யோசனையை ஏற்காது ஏமாற்றித்தான் சீதையைப்பிடிக்க வேண்டும் என்று ராவணன் சொன்னவுடன் விதியை யாரே தடுக்கவல்லார் என்று நொந்து அவன் சொன்னபடி தங்க நிற மான் போல மாரீசன் சென்றான்
ஆணிப் பொனின் ஆகியது;
ஆய் கதிரால்
சேணில் சுடர்கின்றது; திண்
செவி, கால்,
மாணிக்க மயத்து ஒரு
மான் உளதால்;
காணத் தகும்’ என்றனள்,
கை தொழுவாள்.
(இராமனிடம் சென்று சீதை); மாற்றுயர்ந்த பொன்னால் ஆனதும்,
பளபளக்கின்றதும், வலிய காதுகளும் கால்களும் சிவந்த
மாணிக்கங்களால் ஆகியதுமான ஒரு மான் வந்திருக்கிறது காண்பதற்கு இனிதானது என்று கூறி கையால் வணங்கி நின்றாள்;
அம் மான் வேண்டுமென வாயால் கூறாது உணர்த்திக் காட்டினாள்.
************************************
175. லெட்சுமணன் இது மாய மான் என்றவுடன் ராமன் சொல்கிறான்:
மாய மானக் கண்டு முதலில் ஏமாந்த ராமன் உலகம் பல கோடி அதிசயங்களை உடையது லெட்சுமணா ! நீ சின்னப் பையன் உனக்குத் தெரியாது – என்றான்
நில்லா உலகின் நிலை, நேர்மையினால்
வல்லாரும் உணர்ந்திலர்; மன் உயிர்தாம்
பல் ஆயிரம்கோடி பரந்துளதால்;
இல்லாதன இல்லை-இளங்குமரா!
தம்பி! பெரிய பெரிய அறிவாளிகளும் நிலையில்லா உலகின் தன்மை முற்றும் அறிந்ததில்லை; இந்த உலகில் வாழும் உயிரினங்கள் எண்ணிலாக் கோடிகளாய் விரிந்து பரந்து உள்ளன; இவ்வுலகில் இல்லாதவை என்று (நம் அறிவை மட்டும் வைத்து) எவற்றையும் விலக்கிக் கூற முடியாது’ (என்றான் இராமன்).
உயிரினங்களின் வகைகள் 84 லட்சம் என்று பிற்காலப் பக்திப் பாடல்களில் வருகிறது ; விஞ்ஞானிகளும் அதையே கூறுகின்றனர்!
*************************
176.மாய மான் பற்றி மீண்டும் லெட்சுமணன் எச்சரிக்கை விடுத்தான்: தங்க மான் என்றாலும் நமக்கு என்ன பயன்? என்று கேட்டான்
‘பின் நின்றார் இனையர் என்றும்
உணர்கிலம்; பிடித்த மாயம்
என் என்றும் தெளிதல்
தேற்றாம்; யாவது ஈது என்றும் ஓராம்;
முன் நின்ற முறையின்
நின்றார் முனிந்துள வேட்டம் முற்றல்,
பொன் நின்ற வயிரத் தோளாய்! புகழ்
உடைத்தாம் அன்று’ என்றான்.
பொன் போல் அழகிய வைரம் பாய்ந்த தோள்களை உடையவனே; இம் மாயமானை ஏவிப் பின்னே நிற்பவர் யாவர் என்றும் தெரியவில்லை; அவர்கள் கைக்கொண்டுள்ள மாயை எத்தகையது என்றும் உணர இயலவில்லை; இம் மான் தான் எத்தகையது என்றும் எண்ணிப் பார்க்க முடியவில்லை (அதனால்); நமக்கு
முன்னே நீதி நெறியில் நின்ற பெரியோர்கள் வெறுத்து ஒதுக்கிய வேட்டைத் தொழிலில் ஈடுபடுதல்புகழ் தரும் செயல் அன்று
என்று (இலக்குவன்) கூறினான்.
(வேறு காரணங்களுக்கு இசையாத இராமனிடம் முன்னோர்வெறுத்தவேட்டைத் தொழில் வேண்டாம் என்று புதிய உத்தியைஇலக்குவன் கையாளுகின்றான். சாது விலங்குகளை வேட்டையாடுதல் பெரியோர்களால் விலக்கப்பட்டது; ஆதலின் இலக்குவன் இம்மானுக்கு இடர் செய்ய வேண்டா என்று பேசிப் பார்க்கிறான்.)
********************************
177.லெட்சுமணன் நானே மானைப்பிடிக்கிறேன் என்று சொன்னபோது சீதை ராமனைக் கொஞ்சத் தொடங்குகிறாள்; அன்பே ஆருயிரே! நீதான் பிடிச்சுத் தரணும் -என்று ஊடல் கொள்கிறாள்
‘முன்னமும் மக வாய் வந்த மூவரில்
ஒருவன் போனான்;
அன்ன மாரீசன் என்றே
அயிர்த்தனன், இதனை; ஐய!
இன்னமும் காண்டி; வாழி, ஏகு’
என, இரு கை கூப்பி,
பொன் அனாள் புக்க சாலை
காத்தனன், புறத்து நின்றே.
விசுவாமித்திர முனிவனது யாகத்தில் முன்னர் வந்த மூன்று
அரக்கருள் ஒருவன் ஆகிய மாரீசன் தப்பிப் போனான் ;அந்த மாரீசனாக (இம்மான்) இருத்தல் கூடுமோ என்று ஐயம் கொண்டேன்; (அதனால்) என் ஐயா, மேலும் சிந்தித்துப் பாராய்; செல்வாயாக; (தீங்கு நேராது) வாழ்க; என்று இரண்டு கரங்களையும் எடுத்து வணங்கி;
திருமகளான சீதை புகுந்த பர்ண சாலையை வாசலில் நின்றவாறு காவல் காக்கத் தொடங்கினான்.
************************************
178.மான் போல ஒடாது வளைந்தும், நெளிந்தும் போனதைக் கண்டவுடன் ராமனுக்குப் புரிந்து விட்டது:
‘காயம் வேறு ஆகி, செய்யும் கருமம்
வேறு ஆகிற்று அன்றே?
ஏயுமே; என்னின் முன்னம்
எண்ணமே இளவற்கு உண்டே;
ஆயுமேல் உறுதல் செல்லாம்;
ஆதலால், அரக்கர் செய்த
மாயமே ஆயதே; நான் வருந்தியது’
என்றான் – வள்ளல்.
இந்த மானின் செயல்களோ மானின் இயல்பிலிருந்து மாறுபட்டதாய்த் தோன்றுகின்றன; எனக்கு முன்னே; தம்பி இலக்குவனுக்கு இது குறித்த சிந்தனை தோன்றியதில் நியாயம் உண்டு – (அவன் எண்ணம்) சரிதான் . நானும்நன்றாக ஆராய்ந்திருந்தால் இங்கு வந்திருக்க மாட்டேன்; எனக்கு இப்போது தெரிகிறது இது இராக்கதர் மாயம் தான் என்பது ; இவ்வாறு வள்ளலாகிய இராமன் எண்ணினான்.
***********************
179.மாரீசன் குரலை மாற்றி ராமன் கூப்பிடுவது லெட்சுமணா, லெட்சுமணா அலறினான் :
நெட்டிலைச் சரம் வஞ்சனை நெஞ்சுறப்
பட்டது; அப்பொழுதே, பகு வாயினால்,
அட்ட திக்கினும், அப்புறமும் புக
விட்டு அழைத்து, ஒரு குன்று என வீழ்ந்தனன்.
நெடிய இலை வடிவம் கொண்ட அவ்வம்பு, வஞ்சகம் நிரம்பிய (மாரீசன்) நெஞ்சில் சென்று தாக்கியது. அந்தக் கணமே,
பிளவுபட்ட வாயினால் எட்டுத் திசைகளிலும், அதற்கு அப்பாலும் செல்லும்படி (சீதா லட்சுமணா) என்று இராமன் குரலில் கூவி
மலை விழுவது போல (தன் இயற்கை வடிவம் கொண்டு) வீழ்ந்தான்.
தன் குரலை இராமன் குரலாக மாற்றி அழைத்து மடிந்தான்.
***************************************
180. மாரீசன் செய்கையால் ராமபிரானுக்கு மனதில் எழுந்த அச்சம்
புழைத்த வாளி உரம்
புக, புல்லியோன்,
இழைத்த மாயையின், என்
குரலால் இசைத்து
அழைத்தது உண்டு; அது கேட்டு
அயர்வு எய்துமால்,
மழைக் கண் ஏழை’ என்று,
உள்ளம் வருந்தினான்.
ஊடுருவிச் செல்லும் அம்பு தன் மார்பில் பட்டதும், புல்லியோன் – இழிந்தவனாகிய மாரீசன் செய்த மாயத்தினால் என் குரலால்
என் குரல் போன்ற குரலால் (சீதையையும்
இலக்குவனையும்) கூவி அழைத்துள்ளான் அல்லவா?; அக்குரலைப் பிறழ உணர்ந்து மழை போல் குளிர்ந்த கண்களை உடைய
பேதை ஆகிய சீதை துன்பம் உறுவாள்’ என்று மனம் நொந்தான் இராமன்.
–SUBHAM—
TAGS- கம்ப ராமாயணத்தில் 180 கேள்விகள் , மாரீசன் வாதம் , மாய மான், லெட்சுமணன் எச்சரிக்கை